The Knowledge of Soul! | Shanti-Parva-Section-250 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 77)
பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.(1)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "புராதானத் தோற்றுவாயைக் கொண்டவையும், முனிவர்களால் விதிக்கப்பட்டவையும், அனைத்திற்கும் மேலாகத் தனித்திருப்பவையுமான கடமைகளை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு தீய பழக்கங்களில் வீழக்கூடிய அனுபவமற்ற பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தந்தையைப் போல, பித்துக் கொள்ளச் செய்யும் புலன்களைப் புத்தியின் மூலம் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.(3) தகுதியற்ற அனைத்துப் பொருட்களில் இருந்து மனத்தையும், புலன்களையும் விலக்கிக் கொள்வதும், (தகுந்த பெருட்களில்) முறையாகக் கவனத்தைக் குவிப்பதுமே உயர்ந்த தவமாகும். அதுவே கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில் அதுவே உயர்ந்த கடமையாகச் சொல்லப்படுகிறது.(4)
ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களைப் புத்தியின் துணை கொண்டு, எண்ணற வகைச் சிந்தனைகளைத் தூண்டுந்தன்மை கொண்ட உலகப் பொருட்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஒருவன் தன்னிலேயே நிறைவை அடைந்து வாழ வேண்டும்.(5) புலன்களும் மனமும், வழக்கமாகத் தறிகெட்டு ஓடும் மேய்ச்சல் இடங்களில் இருந்து விலக்கப்பட்டு, தங்களுக்கு உரிய வசிப்பிடத்தில் அவற்றை வசிக்கச் செய்யும் போதுதான் நித்தியமானதையும், பரமாத்மாவையும் நீ உனக்குள்ளேயே காண்பாய்[1].(6) ஞானம் கொண்ட உயர் ஆன்ம பிராமணர்கள், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்பாகவும், உயர்ந்ததாகவும் அண்ட ஆன்மாவாகவும் இருக்கும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(7) எண்ணற்ற கிளைகளையும், பல மலர்கள் மற்றும் கனிகளையும் கொண்ட ஒரு பெரிய மரமானது, தன்னுடைய எந்தப் பகுதியில் மலர்களையும், எந்தப் பகுதியில் கனிகளையும் கொண்டிருக்கிறது என்பதை அறியாததைப் போலவே,(8) ஆன்மாவும் {புத்தியும்}, பிறப்பு மற்றும் பிற குணங்களால் மாற்றமடைந்து, அஃது எங்கிருந்து வந்தது? எங்குச் செல்லப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறது[2].(9) ஒருவன் ஞானம் எனும் விளக்கின் துணையால் தன் ஆன்மாவைக் காண்கிறான். எனவே, உன்னை உன்னிலேயே கண்டு, உனது உடலை நீ என்று கருதுவதை நிறுத்தி, அனைத்தையும் அறிந்த நிலையை அடைவாயாக.(10)
[1] "உண்மையில் மேய்ச்சல் நிலங்கள் என்ற பொருளில் இங்கே சொல்லப்படும் "கோச்சாரேப்யம்" Gocharebhyah என்பது, புலன்கள் மற்றும் மனம் ஆகியவை ஈடுபடும் புற மற்றும் அகப் பொருட்கள் அனைத்தையும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றின் முறையான இல்லம் அல்லது வசிப்பிடமானது பிரம்மம் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இத்தகைய ஸ்லோகங்களைக் கவனிக்கையில் மொழித்துல்லியம் இல்லையென்றால் குழப்பமேற்படும். முதல் வரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆத்மா என்ற வார்த்தை அறுதியற்றதாகும். அசேதன புத்தி, அஃதாவது அழியத்தக்க புத்தியை அது குறிக்கும் என உரையாசிரியர் கருதுகிறார். எனினும் நான் பிறப்பால் மாறுதலை அடையும் சித் எனும் பொருளைக் கொள்கிறேன். இறுதியில் ஒரே பொருளையே இது தருகிறது என நான் நினைக்கிறேன். இருந்தாலும், "உள் ஆன்மா" என்பது பிறப்பு மற்றும் குணங்களால் மாறுபாடு அடையாததே" ஆகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புஷ்பமும், பழமுள்ளதும், அனேக கிளைகளுடையதுமான பெரிய மரமானது (’எனது மலர் எங்கே? கனி எங்கே?’ என்று) தன்னுடைய மலர்களை அறிகிறதில்லை. அப்படியே புத்தியானது, "எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப்போகிறேன்?" என்று அறிகிறதில்லை" என்றிருக்கிறது. ஆன்மா மாற்றமடையாதது என்று சொல்லப்படுவது மேற்கண்டதை கும்பகோணம் பதிப்பில் உள்ளபடியே புத்தி எனக் கொள்க.
சட்டையை உரித்த பாம்பைப் போலப் பாவங்கள் அனைத்தையும் கழுவிய ஒருவன், இங்கேயே உயர்ந்த புத்தியை அடைந்து, ஒவ்வொரு கவலையில் இருந்தும், (மறுபிறவியில்} புதிய உடலை அடையும் கடப்பாட்டில் இருந்தும் வடுபடுகிறான்.(11) பல்வேறு திசைகளில் பரந்து விரிந்து ஓடும் நீரோட்டங்களைக் கொண்டதும், தன் போக்கில் இவ்வுலகைச் சுமந்து செல்வதுமான வாழ்வெனும் ஆறு அச்சம்நிறைந்ததாக இருக்கிறது. ஐம்புலன்களே அதன் முதலைகளாக இருக்கின்றன. மனமும், அதன் காரணமும் கரைகளாக இருக்கின்றன.(12) பேராசையும், தீர்மான மயக்கமும் அதை மறைத்து மிதக்கும் புல்லாகவும், துரும்பாகவும் இருக்கின்றன. காமமும், கோபமும், அதனில் வாழும் சீற்றமிகு பாம்புகளாக இருக்கின்றன. வாய்மை அதன் சேறுநிறைந்த கரைகளில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.(13) புலப்படாததிலிருந்து பிறக்கும் அதன் நீரோட்டம் வேகமானதாகவும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் கடக்க முடியாததாகவும் இருக்கிறது. நீ புத்தியின் துணை கொண்டு, ஆசைகளையே முதலைகளாகக் கொண்ட அந்த ஆற்றைக் கடப்பாயாக.(14) உலகமும், அதன் காரியங்களும் அந்த ஆறு எதை நோக்கி ஓடுமோ அந்தப் பெருங்கடலாக இருக்கிறது. உயிரினங்களும், பேருயிரினங்களும், ஒருவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத அதன் ஆழமாக இருக்கின்றன. ஓ குழந்தாய், அந்த ஓடையானது ஒருவனின் பிறப்பையே தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. வாக்கே அதன் சுழல்களாகும். கடப்பதற்கு அரிதான அதை,(15) கல்வி, ஞானம் மற்றும் புத்தியைக் கொண்ட மனிதர்களே கடக்கிறார்கள்.
அதைக் கடந்து, அமைதியான இதயத்தை அடைந்து, ஆன்மாவை அறிந்தவனாக, ஒவ்வொரு தன்மையிலும் தூய்மையடைந்தவனாக, ஒவ்வொரு பற்றில் இருந்தும் விடுபடுவதில் வெற்றியடைவாயாக.(16) தூய்மையடைந்த, மேன்மையான புத்தியைச் சார்ந்து, பிரம்மமாகவே ஆவதில் நீ வெல்வாயாக. ஒவ்வொரு உலகப் பற்றிலிருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவை அடைந்து, ஒவ்வொரு வகை பாவத்தையும் கடந்து,(17) மலையுச்சியில் இருந்து பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களைக் காணும் ஒருவனைப் போல நீ இந்த உலகைக் காண்பாயாக. கோபத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ வசப்படாமல், கொடூரமான ஆசை எதையும் அமைத்துக் கொள்ளாமல், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் காண்பதில் வெற்றியடைவாயாக.(18) ஞானம் கொண்ட மனிதர்கள், இத்தகைய செயலையே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறார்கள். உண்மையில், அறவோரில் முதன்மையானோராலும், உண்மையை அறிந்த தவசிகளாலும், வாழ்வெனும் ஆற்றைக் கடக்கும் இச்செயலே ஒருவன் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.(19) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மாவைக் குறித்த இந்த அறிவே, ஒருவனுடைய மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதெனக் கருதப்படுவதாகும். புலன்களைக் கட்டுப்படுத்தி, நேர்மையான நடத்தையுடனும், அடக்கம் அல்லது பணிவுடனும் இருக்கும் ஒருவனுக்கு இதை {இந்த அறிவை} மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(20)
ஓ! குழந்தாய், நான் இப்போது உன்னிடம் சொன்னதும், ஆன்மாவின் மூலமே உண்மையாகச் சாட்சி காணப்படுவதுமான இந்த ஆன்ம அறிவானது, புதிர்கள் அனைத்திலும் பெரியதும், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த அறிவுமாகும்.(21) ஆண், பெண், அலி என்ற பாலினமேதும் பிரம்மத்திற்குக் கிடையாது. அதற்குத் துன்பமோ இன்பமோ கிடையாது. அது தன் சாரமாகக் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைக் கொண்டிருக்கிறது.(22) பிரம்ம அறிவை அடைபவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, எந்தப் பாலினமாகவோ இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மறுபிறப்பை அடைய வேண்டியதில்லை. மறுபிறவியைத் தவிர்க்கும் நிலையை அடைவதற்காக இந்தக் கடமை (யோகக் கடமை) மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(23) இக்காரியத்தில் பல்வேறு தவசிகளின் சொன்ன பல்வேறு மேம்பட்ட கருத்துகள் வழிவகுக்கும் வகையிலேயே உன் கேள்விக்குப் பதிலளிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகளும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும். இக்காரியம் எவ்வாறு விளக்கப்பட வேண்டுமோ அவ்வகையிலேயே நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன். அக்கருத்துகள் சில வேளைகளில் கனியை உண்டாக்கின்றன, சில வேளைகளில் உண்டாக்குவதில்லை. (எனினும், நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வேறுவகையைச் சார்ந்தவை, ஏனெனில், இவை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்).(24) ஓ! நற்குழந்தாய், இந்தக் காரணத்தினாலேயே, நிறைவு, தகுதி மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மகன் அல்லது ஒரு சீடனால் கேட்கப்படும்போது, ஓர் ஆசான் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் மகனான உனது நன்மைக்காக என்னால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்ட இந்தப்போதனைகளை, உண்மையில் உள்ளது உள்ளபடியே அவனது மனத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும்" என்றார் {வியாசர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 250ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |