Fortitude! | Shanti-Parva-Section-251 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 78)
பதிவின் சுருக்கம் : எவன் பிராமணன்? பிராமண நிலையை அடைவதெவ்வாறு? முக்திக்கு வழிவகுக்கும் மனோவுறுதி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மணம், சுவை மற்றும் பிறவகை இன்பங்களில் ஒருவன் எந்தப் பற்றையும் வெளிக்காட்டக்கூடாது. மேலும் அவன் ஆபரணங்களையும், மணம் மற்றும் சுவைப் புலன்களால் நுகரும் பிற பொருட்களையும் ஏற்கக் கூடாது. அவன் கௌரவம், சாதனை மற்றும் புகழில் பேராசை கொள்ளக்கூடாது. கருத்துடைய பிராமணனின் ஒழுக்கம் இதுவேயாகும்.(1) வேதங்கள் அனைத்தையும் கற்று, தன் ஆசானிடம் கடமையுணர்வுடன் பணி செய்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனும், ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்கள் அனைத்தையும் அறிந்தவனுமான ஒருவன் மறுபிறப்பாளன் {பிராமணன்} ஆகமாட்டான்[1].(2) அனைத்து உயிரினங்களிடமும் சொந்தக்காரனைப் போல நடந்து கொள்பவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவனே வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஆசையற்றவனாக, (ஆத்ம ஞானத்தில் நிறைவடைந்தவனாக) இருக்கும் ஒருவன் ஒருபோதும் இறப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமும், இத்தகைய மனோநிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.(3) கருணையற்றவனாகவும், ஆசையைக் கைவிடாதவனாகவும் இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தக்ஷிணையுடன் கூடிய பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே பிராமண நிலையை அடைந்துவிடமுடியாது. அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும் ஒருவன் நிறுத்தும்போதும், எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் இருக்கும்போதும், அவன் பிராமண நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(5)
[1] "அதாவது, வேதங்களை மட்டுமே அறிந்து, பிரம்மச்சரிய நோன்பை நோற்றவன் மேன்மையான பிராமணனாக மாட்டான். அவ்வாறு ஆவதற்கு {ஒரு பிராமணனாவதற்கு} இன்னும் பல தேவைப்படுகின்றன." எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்,
எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் ஒருவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும்போது அவன் பிராமண நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(6) இவ்வுலகில் ஆசைப் பிணைப்பு என்ற ஒரே வகையின்றி வேறு பிணைப்பேதும் கிடையாது. அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் பிராமண நிலையை அடைகிறான்.(7) இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்ட ஞானியானவன், களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.(8) அனைத்து வகை ஆசைகளையும் மனத்துக்குள் நுழைத்துக் கொள்ளும் ஒருவனால் கூட, பல்வேறு ஆறுகள் பாய்ந்தும் தன் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ள இயலாத பெருங்கடலைப் போன்ற அமைதியை அடையலாம்; ஆனால் பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் ஆசையைப் பேணி வளர்த்துக் கொள்பவனால் அமைதியை அடையவே முடியாது.(9) அத்தகைய மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனிவதன் விளைவால் மகிழ்ச்சியை அடைகிறான்; ஆனால் பூமி சார்ந்த பொருட்களில் ஆசையைப் பேணி வளர்ப்பவனால் அம்மகிழ்ச்சியை அடையவே முடியாது. பின்னவன் சொர்க்கத்தையே அடைந்தாலும், அதனிலிருந்து வீழவே நேரிடும்.(10)
வேதங்கள், உண்மையைத் தங்கள் மறைபொருளாகக் கொண்டுள்ளன. உண்மை, புலனடக்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டிருக்கிறது. புலனடக்கம், ஈகையைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. ஈகை, தவத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது.(11) தவம், துறவைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. துறவு, மகிழ்ச்சியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. மகிழ்ச்சி, சொர்க்கத்தைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது. சொர்க்கம், அமைதியைத் தன் மறைபொருளாகக் கொண்டுள்ளது[2].(12) நீ மனநிறைவை அடைவதற்காக, மதிப்புமிக்க உடைமையும், விடுதலையை {முக்தியைச்} சுட்டுவதும், துன்பம் மற்றும் ஆவலுடன் {எதிர்பார்ப்புடன்} கூடிய ஐயங்கள் அல்லது நோக்கங்கள் அனைத்தையும் சுடுவதும் {எரிப்பதும்}, இறுதியில் அவற்றை முற்றாக அழிப்பதுமான அமைதியான புத்தியை அடைய விரும்ப வேண்டும்[3].(13) மனநிறைவு, துயரின்மை, பற்றிலிருந்து விடுதலை, அமைதி, உற்சாகம், பொறாமையில் இருந்து விடுதலை ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள், அல்லது நிறைவடைவார்கள்[4].(14) உடலின் நனவுநிலைகள் அனைத்தையும் கடந்தவர்கள், சத்வ குணத்தோடு இருக்கும்போது, உடலுக்குள் வசிப்பதும், (ஏற்கனவே சொல்லப்பட்ட வேதங்கள், உண்மை முதலிய) ஆறு காரியங்களின் துணையுடனும், (கல்வி, தியானம் மற்றும் யோகம் ஆகிய) இன்னும் மூன்று காரியங்களின் துணையுடனும் ஞானிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதுமான ஆன்மாவை அறிந்து, விடுதலையை அடைவதில் வெல்கிறார்கள்.(15)
[2] "சொர்க்கம் என்பது குணங்களுடன் கூடிய பிரம்மமாகும் {ஸகுன பிரம்மமாகும்}. ஆன்ம அமைதி என்பது குணங்களற்ற பிரம்மமாகும் {நிர்க்குண பிரம்மமாகும்}. உபநிஷத் Upanishat என்பது ரஹஸ்யம் rahasyam {அதாவது மறைபொருள்} என விளக்கப்படுகிறது. குறிப்பிடப்படும் ஒவ்வொரு பொருளும் அதற்கு அடுத்ததாக வரும் பொருள் இல்லையெனில் பயனற்றதாகும்; அமைதி அல்லது குணங்களற்ற பிரம்மமே இறுதியான கதி என்பதைப் போல, வேதங்கள், உண்மை முதலிவை அந்த அமைதிக்கு வழிவகுத்தால் மட்டுமே மதிப்புமிக்கவையாகும் என்பதே இந்தச் சுலோகத்தின் பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "வேதத்தினுடைய ரகஸ்யம் ஸத்யம்; ஸத்யத்தினுடைய ரகஸ்யம் அடக்கம். அடக்கத்தின் ரகஸ்யம் தானம்; தானத்தின் ரகஸ்யம் தவம்; தவத்தின் ரகஸ்யம் ஸந்யாஸம்; ஸந்யாஸத்தின் ரகஸ்யம் ஸுகம்; ஸுகத்தின் ரகஸ்யம் ஸகுணப்ரம்ம்பாவம்; அதன் ரகஸ்யம் நிர்க்குணப்ரம்ம்பாவம். ஆசை, சோகம், ஸங்கல்பம் இவைகளாலுண்டான ஸ்ரமத்தைத் தாண்டின புத்தியானது ஸந்தோஷத்தினால் உத்தமமான சாந்திலக்ஷணத்தை அடைகிறது" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "சோகமின்மை, மமதையின்மை, இந்திரியத்தின் அடக்கம், மனத்தின் ஒழிவு, ஆத்மஜ்ஞானம், சௌசம் இந்த ஆறு லக்ஷணங்களுள்ள மனிதன் மறுபடியும் பூர்ணனாவான்" என்றிருக்கிறது.
உடலுக்குள் தலைமை கொள்வதும், பிறப்பு மற்றும் இறப்பு எனும் பண்புகளற்றதும், தன்னியல்பிலேயே நிலைத்திருப்பதும், தூய்மைப்படுத்தும் எந்தச் செயலும் தேவைப்படாத குணங்களற்ற நிலையில் இருப்பதும், பிரம்மத்தைப் போன்றதுமான ஆன்மாவைப் புரிந்து கொள்வதன் மூலம் ஞானியானவன், முடிவை அறியாத பேரின்பத்தை அடைகிறான்.(16) அனைத்துத் திசைகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் மொத்தமாக நிலைக்கச் செய்வதன் மூலம் ஞானி அடையும் நிறைவானது, வேறு எந்த வழிமுறைகளினாலும் எவனாலும் அடையப்பட முடியாததாகும்.(17) வெறுமையான வயிற்றோடு இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, ஏழ்மையில் இருப்பவனை எது நிறைவடையச்செய்யுமோ, பசையற்ற அங்கங்களைக் கொண்டவனை எது பலமடையச் செய்யுமோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவனே உண்மையில் வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) தகுதியற்ற ஈடுபாட்டில் இருந்து முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தன் புலன்களை நிறுத்தி, தியான யோகத்தில் ஈடுபட்டு வாழும் ஒருவனே பிராமணனாகச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் பிறரைக் காட்டிலும் புகழ்பெற்றவன் எனச் சொல்லப்படுகிறான். அத்தகையவன் தன் ஆன்மாவில் இருந்து இன்பத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(19)
ஆசைகளைக் குறைத்து, இருப்பில் உள்ள உயர்ந்த காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனைப் பொறுத்தவரையில், அவனது மகிழ்ச்சியானது, (வளர்பிறைச்) சந்திரனைப் போலத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.(20) அந்தப் பேரின்ப நிலையானது, திரள் மற்றும் நுட்பமான இருவகைப் பூதங்களையும், மகத்தையும், புலப்படாததையும் {பிரகிருதி / அவ்யக்தத்தையும்} கடந்த யோகியின் துயரங்களை, இருளை விலக்கும் சூரியனைப் போல அகற்றும்[5].(21)செயல்களைக் கடந்தவனும், குண அழிவைக் கடந்தவனும், உலகம்சாந்த பொருட்களில் பற்றில்லாதவனுமான ஒரு பிராமணனை முதுமையும், மரணமும் அடைவதில்லை.(22) உண்மையில், யோகியானவன் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பற்று மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் கடந்த நிலையில் வாழும்போது, அவன் இவ்வாழ்விலேயே தன் புலன்களையும், அவற்றுக்குரிய பொருட்கள் அனைத்தையும் கடப்பதாகச் சொல்லப்படுகிறான்.(23) பிரகிருதியைக் கடந்து உயர்ந்த காரணத்தை அடைந்த யோகி, அந்த உயர்ந்ததை அடைந்ததன் விளைவால் இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடப்பாட்டில் இருந்து விடுபடுகிறான்" என்றார் {வியாசர்}.(24)
[5] கும்பகோணம் பதிப்பில், "ஐந்து பூதங்களின் தன்மாத்திரைகளையும், ஸத்வ முதலான குணங்களையும் விட்டவனான முனிக்கு ஸூர்யனால் இருள் நீங்குவது போல ஸுகத்தினால் துக்கமானது நீங்கிவிடுகிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 251ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |