The virtue of yoga! | Shanti-Parva-Section-253 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 80)
பதிவின் சுருக்கம் : யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)
[1] "சாத்திரங்களை அறிந்தோர், என்பது யோகிகளைக் குறிக்கும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் என்பது யோகத்தோடு தொடர்புடைய நடைமுறைகளைக் குறிக்கும். சரீரினம் என்பது நுட்பமான உடலைக் கொண்ட ஆன்மாவைக் குறிக்கும் என உரையாசிரியர் குறிப்பிடுகிறார். சரீரம் என்பது உடலையும், சரீரி என்பது சரீரத்தை உடைமையாகக் கொண்ட ஆன்மாவையும் குறிப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே இந்த வார்த்தையை லிங்க சரீரம் இல்லாத ஆன்மாவைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தூல சரீரத்தினின்றும் விடுபட்டதும், ஸூக்ஷ்மமாயிருக்கிற (லிங்க) சரீரியைச் சாஸ்திரத்தை அறிந்தவர்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட (யோகமுதலான) கர்மங்களால் நன்றாகப் பார்க்கிறார்கள்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "(நம்மால்) பார்க்கப்படுகிற ஸூர்யகிரணங்கள் சேர்ந்து ஸஞ்சரிக்கின்றன; போகின்றன; நிற்கவுஞ்செய்கின்றன. அப்படியே ஸ்தூலதேஹங்களால் விடப்பட்ட லிங்க சரீரங்கள் மனுஷ்யர்களுக்கு விஷயமில்லாதவைகளாக லோகங்களில் சஞ்சரிக்கின்றன" என்றிருக்கிறது.
மேலும் நுண்ணிய உடல்களில் பொதிந்திருக்கும் அந்த ஆன்மாக்கள் அனைத்தும், தாங்கள் வசித்த திரள் உடல்களில் இருந்து விடுபட்ட பிறகு, புலன்களை அடக்கியவர்களும், ஆன்ம அறிவைப் பெற்றவர்களுமான யோகிகளால் உணரத்தக்கனவாக இருக்கின்றன. உண்மையில் யோகிகள் தங்கள் ஆன்மாக்களின் துணையுடனே புலப்படாத அப்பொருட்களைக் காண்கின்றனர்.(4) பகலில் இரவு போலும், இரவில் பகலைப் போலும் உறங்கிக் கொண்டிருந்தாலும், விழித்துக் கொண்டிருந்தாலும், புத்தி, ரஜஸில் பிறந்த செயல்கள், யோகம் தரும் பலம் ஆகியவற்றால் உண்டான அனைத்தையும் கைவிட்டு யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்கள் லிங்க வடிவத்தை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறார்கள்.(5,6)
அத்தகைய யோகியரில் வசிப்பதும், எப்போதும் (மகத், நனவுநிலை {அகங்காரம்}, ஐந்து அடிப்படை புலன்களின் ஐந்து தன்மாத்திரைகள் உள்ளிட்ட) நுட்பமான ஏழு காரியங்களுடன் கூடியதுமான ஜீவனானது, முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டு, அருள் உலகங்கள் அனைத்திலும் உலவிக் கொண்டிருக்கிறது. "எப்போதும்" என்றும் "மரணத்தில் இருந்து விடுபட்டு" என்றும் பொதுவான பேச்சு வழக்கிலேயே நான் சொல்கிறேன். ஏனெனில் உண்மையில் அந்த லிங்க வடிவமும் தற்காலிகமானதே.(7) எனினும், (அவற்றைக் கடக்க இயலாமல்) மனம் மற்றும் புத்தியின் ஆதிக்கத்தில் இருக்கும் மனிதன், தன் கனவுகளில் கூடத் தன் உடலின் வடிவத்தையும், பிறவற்றையும் பகுத்துப்பார்த்து, இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.(8) ஆம், அவனது கனவுகளில் கூட அவன் இன்பத்தையும் துன்பத்தை அனுபவிக்கிறான்; கோபம் மற்றும் பேராசையின் வசப்பட்டு அவன் பல்வேறு வகைப் பேரிடர்களைச் சந்திக்கிறான்.(9)
அவனது கனவுகளில் அவன் பெருஞ்செல்வத்தை அடைந்து பெரும் நிறைவை உணர்கிறான்; விழித்திருக்கும் வேளைகளில் போலவே அவன் தகுதிமிக்கச் செயல்களைச் செய்கிறான், பார்க்கிறான் (கேட்கிறான், இன்னும் பிறவற்றையும் செய்கிறான்).(10) கருப்பைக்குள்ளும், அதிகமான உள் வெப்பத்துக்கு மத்தியிலும் கிடக்க வேண்டியதும், முழுமையாகப் பத்து மாதங்களை அவ்விடத்திலேயே கடத்த வேண்டியதுமான ஜீவனானது, வயிற்றுக்குள்ளேயே உணவைப் போலச் செரித்து அழியாமல் போவதைக் காண்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.(11) உயரொளியுடன் கூடிய பரமாத்மாவின் ஒரு பகுதியும், அனைத்து உயிரினங்களின் இதயங்களுக்குள் கிடப்பதுமான ஜீவாத்மாவானது, தங்கள் திரளுடலுக்குள் இருப்பதைக் காண்பதில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கிய மனிதர்கள் ஒருபோதும் வெல்வதில்லை.(12)
ஆன்மாவை (ஆன்மாவைக் குறித்த அறிவை) அடையும் நோக்கத்தில் யோக அறிவியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், உயிரற்ற திரள் உடலையும், உணரப்பட முடியாத லிங்க உடலையும், அண்ட அழிவின் போதும் அழியாத காரண உடலையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(13) நான்காவது வாழ்வுமுறை (அல்லது சந்நியாச{ஆசிரம}ம்) உள்ளிட்ட பல்வேறு வாழ்வுமுறைகளில் விதிக்கப்பட்ட கடமைகளில், யோகத்தைத் தங்களில் முதன்மையானதாகக் கொண்டவையும், மனம் மற்றும் புத்தியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறுத்துபவையுமான நான் சொன்ன இவை {இந்தக் கடமைகள்} (சாந்தோக்ய உபநிஷத்தில்) சாண்டில்யரால் விதிக்கப்பட்டவையாகும்[4].(14) (மனத்தின் பொருட்களான புலன்கள், மனம், புத்தி, மஹத், புலப்படாதது அல்லது பிரகிருதி மற்றும் புருஷன் உள்ளிட்ட) ஏழு நுட்பமான காரியங்களைப் புரிந்து கொண்டும், (அனைத்தின் அறிவு, மனநிறைவு, அளவற்ற அறிவு, சார்பற்ற நிலை {சுதந்திரம்}, நித்திய விழிப்புத்தன்மை, எல்லையற்ற ஆற்றல் என்ற) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த காரணத்தை {சகுன பிரம்மத்தைப்} புரிந்து கொண்டும், முக்குணங்களுடன் கூடிய அவித்யையின் மாறுபாடே அண்டம் என்பதையும் இறுதியாகப் புரிந்து கொள்ளும் ஒருவன், (சாத்திரத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு) உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைவதில் வெல்கிறார்" என்றார் {வியாசர்}.(15)
[3] "முற்பிறவியில் அந்த ஜீவனின் செயல்பாடுகளின் விளைவாக உண்டான பல்வேறு வகை லிங்க உடல்களாக அமைவனவும், அடிப்படைப் பொருட்களின் தன்மாத்திரைகளில் உள்ள நிகழும்தன்மைகளுமே இந்தக் காரண உடல்கள் என்பனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "யோகசாஸ்திரத்தில் ஸ்ரத்தையுடைவர்களாகி தம் ஆத்மாவை அடைய விருப்பமுள்ளவர்கள் தமஸ் ரஜஸுகளால் விடுபட்டு அறிவற்ற ஸ்தூலசரீரங்களும் ஸூக்ஷ்மசரீரங்களும் வைரம் போலுள்ள காரணச் சரீரங்களுமானவைகளில் அந்த ஆத்மாவைப் பார்க்கிறார்கள்" என்றிருக்கிறது.[4] "வியாசர் இங்கே சொல்லவருவது, தியானம் என்பது சந்நியாசிகளுக்காக மட்டுமே விதிக்கப்பட்டதல்ல, அனைவருக்காகவும் விதிக்கப்பட்டதே என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 253ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |