The understanding and mind! | Shanti-Parva-Section-254 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 81)
பதிவின் சுருக்கம் : ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)
இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்ட பேராசை கொண்ட மனிதர்கள், கனிகொடுக்கும் அம்மரத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு, அதனிடமிருந்து கனியைப் பெறும் எதிர்பார்ப்பில் அதற்குத் தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றனர்.(4) எவன் அந்தச் சங்கிலிகளை வென்று, அம்மரத்தை வெட்டி, இன்ப துன்பம் இரண்டையும் கைவிட முயற்சிக்கிறானோ அவன் இரண்டு கதியையும் அடைவதில் வெல்கிறான்.(5) புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுவதன் மூலம் இம்மரத்தை வளர்க்கும் மூடன், விஷமுள்ள மருந்து நோயாளியை அழிப்பதைப் போலவே அவன் ஈடுபாடு காட்டும் {புலன் நுகர்} பொருட்களாலேயே அழிகிறான்.(6)
எனினும், கைத்திறன்மிக்க ஒருவன், யோகத்துணையின் மூலம் வலுவடைந்தவனாக, அடியாழம் வரை செல்லும் அம்மரத்தின் வேரை சமாதி எனும் வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.(7) கனியில் உள்ள விருப்பத்தால் மட்டுமே செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கதியையும் மறுபிறவி அல்லது கட்டும் சங்கிலி என அறிந்த ஒருவன், கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(8) உடல் ஒரு நகரமாகச் சொல்லப்படுகிறது. புத்தியே அதன் தலைவியாக {அரசியாகச்} சொல்லப்படுகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, தீர்மானிப்பதையே முக்கியச் செயலாகக் கொண்ட அந்தத் தலைவியின் அமைச்சராகச் சொல்லப்படுகிறது.(9)
மனத்தால் (தலைவியின் தொண்டில்) ஈடுபடுத்தப்படும் புலன்களே அதன் குடிகளாகும். அந்தக் குடிகளைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது பல்வேறு வகைச் செயல்களில் பலமான விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அச்செயல்களின் காரியத்தில் தமஸ், ரஜஸ் எனும் இரு பெரும்பிழைகள் காணக்கிடைக்கின்றன[1].(10) அச்செயல்களின் கனிகள், (மனம், புத்தி மற்றும் நனவுநிலை என்ற) அந்நகரின் தலைவர்களோடு கூடிய குடிகளிடமே இருக்கின்றன. (ஏற்கனவே சொல்லப்பட்ட) இரு பிழைகள், தடைசெய்யப்பட்ட வழிமுறைகளின் மூலம் நிறைவேறப்பட்டும் அச்செயல்களின் கனிகளிலேயே வாழ்கின்றன.(11) இவ்வாறிருக்கையில், (ரஜஸாலோ, தமஸாலோ) வெல்லப்படமுடியாத புத்தியானது, (தனக்குத் தொண்டாற்றும் மனத்தின் அளவுக்குக் களங்கமடைந்து அந்த) மனத்திற்கு இணையான ஒரு சமநிலைக்கு இறங்குகிறது. களங்கப்பட்ட மனத்தால் கலக்கமடையும் புலன்களும் தங்கள் நிலையுறுதியை இழக்கின்றன.(12)
[1] "உடல் நகரமாகும். புத்தி அதன் தலைவியாகும். மனம் அவளது முக்கியத் தொண்டனாகும். புலன்கள், மனத்தின் தலையில் செயல்படும் குடிமக்களாகும். அந்தப் புலன்களைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது வீடுகள், தோட்டங்கள், வேள்விகள் மற்றும் கொடைகள் முதலிய புலப்படும் மற்றும் புலப்படாத கனிகளைத் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுகிறது. அந்தச் செயல்கள் ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு பிழைகளைக் கொள்ளத்தக்கனவாகும். புலன்கள் அச்செயல்களின் (இன்ப அல்லது துன்பக்) கனிகளையே (இப்பிறப்பிலும் அடுத்தடுத்த பிறவிகளிலும்) சார்ந்திருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புத்தியானது (நன்மையெனக் கருதி) அடைய விரும்பும் பொருட்கள் துன்பத்தை உண்டாக்குவதாக அமைந்து இறுதியில் அழிவைக் கொண்டு வருகிறது. அழிவடைந்த பிறகு, மனத்தால் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் அப்பொருட்கள், அவ்வாறே அழிந்த பிறகும் மனத்தைப் பீடிக்கின்றன.(13) மனமானது, தீர்மானிக்க முடியாத நிச்சயத்தன்மையற்ற உணர்வுகளை அடையும் தன் முக்கியச் செயல்பாட்டைச் செய்யும்வரையில் மட்டுமே புத்தியில் இருந்து வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையில் மனமும் புத்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. புத்தியில் (துன்பத்தையும், அனைத்து வகைத் தீமைகளையும் மட்டுமே உண்டாக்கியபடி) இருக்கும் ரஜஸ், நிலைக்கண்ணாடியில் உள்ள பிம்பத்தைப்போல ரஜஸால் களங்கப்பட்ட புத்தியில் கிடக்கும் ஆன்மாவை அப்போது மறைக்கிறது[2].(14) மனமே ரஜஸுடன் முதலில் நட்பில் கலக்கிறது. அவ்வாறு தன்னைக் கலந்த பிறகு, (பகைவனுடன் சதியில் ஈடுபடும் போலி அமைச்சன் மன்னனையும் அதன் குடிமக்களையும் கைப்பற்றுவதைப் போல) ஆன்மா, புத்தி மற்றும் புலன்களைக் கைப்பற்றிப் பற்றி, அவற்றை (மனம் எதனுடன் கலந்ததோ அந்த) ரஜஸிடமே அளிக்கிறது" என்றார் {வியாசர்}".(15)
[2] "புத்தி களங்கப்படும்போது ஆன்மாவும் களங்கப்படுகிறது, அல்லது அதனால் பீடிக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 254ல் உள்ள் சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |