Seventy one entities! | Shanti-Parva-Section-255 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 82)
பதிவின் சுருக்கம் : ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)
அசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)
குளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)
தடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)
வெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)
ஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)
அறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)
[1] "முனிவர்கள் ஒரு பூதத்தைத் தாங்கள் அறிந்த குறிப்பிட்ட குணங்களை இயற்கூறுகளாகக் கொண்ட அறியப்படாத பொருளாக அல்லாமல், அக்குணங்களின் தொகையாகவே கருதுகின்றனர் என்பது இதில் தெளிவாகிறது. எனவே, மனித மனத்தைப் பொறுத்தவரையில், பருப்பொருளானது, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளைக் கொண்ட அறியப்படாத பொருள் என்ற கருத்துக்கு எந்தச் சான்றாணையும் கிடையாது; மறுபுறம் பருப்பொருளானது, நமக்குத் தோன்றுவதைப் போலவே, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளின் ஒருங்கிணைந்த நிலையே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(இப்படி) ஐம்பூதங்களிலும் கண்டறியப்பட்ட குணங்கள் ஐம்பதென்று சொல்லப்பட்டன" என்றிருக்கிறது.
பொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)
நல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்" என்றார் {பீஷ்மர்}.(10)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது? மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன? ஓ! பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ! மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ! மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக"[4] என்றார் {பீஷ்மர்}.(13)
[2] "பூதங்கள் எண்ணிக்கையில் ஐந்தாகும். அவற்றின் குண எண்ணிக்கை ஐம்பதாகும். புத்திக்கெனக் குறிப்பிட்ட சிறப்புக் குணங்களுடன் அந்த ஐந்தும், ஐம்பதும் சேர்க்கப்படுகிறது. எனவே, புத்தியின் குண எண்ணிக்கை அறுபதை அடைகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] பூதங்கள் ஐந்து, அவற்றின் குணங்கள் ஐம்பது, மனம், மனத்தின் குணங்கள் ஒன்பது, புத்தி, புத்தியின் குணங்கள் ஐந்து ஆக மொத்தம் எழுபத்தோரு தனியுருக்கள்[4] "இது மிகக் கடினமான சுலோகமாகும். அண்டத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கோட்பாடுகளை யுதிஷ்டிரன் கவனிப்பதை பீஷ்மர் விரும்பவில்லை, மாறாக, பிரம்மத்தை அடையும் வழிமுறைகளை மிகக் கவனமாகக் கவனிக்கச் சொல்கிறார். அமைதியான இதயம் கொள்வது என்பது நிர்விருத்திகா புத்தி Nirvrittikaa buddhi கொள்வதைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அஃது உனக்கு வேதவிருத்தமாகப் பிறரால் சொல்லப்பட்டது. ஆராயுமிடத்தில் அது குற்றமுள்ளது. ஆகையால் இப்பொழுது இவ்வுலகில் பிரம்மத்தவம் முழுமையையும் அடைந்து பிரம்மத்தின் பிரபாவத்தால் சாந்தமான புத்தியை உடையவனாகக் கடவாய்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 255ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |