Brahma's fire of wrath! | Shanti-Parva-Section-256 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 83)
பதிவின் சுருக்கம் : மரணம் குறித்துப் பீஷ்மரிடம் வினவிய யுதிஷ்டிரன்; நாரத முனிவர் மன்னன் அனுகம்பகனுக்குச் சொன்ன கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பிரம்மன் தன் கோபத்தீயால் உயிரினங்களை எரித்தது; அத்தீயைத் தணிக்கப் பிரம்மனிடம் சென்ற ஸ்தாணு...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தங்கள் தங்கள் படைகளுக்கு மத்தியில் பூமியின் பரப்பில் கிடக்கும் பூமியின் தலைவர்களும், பெரும் வலிமையைக் கொண்டவர்களுமான இந்த இளவரசர்கள் இப்போது அசைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(1) இந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஐயோ, சம ஆற்றலும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) இந்த மனிதர்களைப் போரில் கொல்லக்கூடிய ஒருவரையும் நான் (இவ்வுலகத்தில்) காணவில்லை[1]. இவர்கள் அனைவரும் பேராற்றலையும், பெரும் சக்தியையும், பெரும்பலத்தையும் கொண்டவர்களாவர்.(3) பெரும் ஞானத்தைக் கொண்ட இவர்கள், இப்போது உயிரை இழந்து வெறுந்தரையில் கிடக்கிறார்கள். உயிரை இழந்து கிடக்கும் இந்த மனிதர்கள் அனைவரையும் குறிக்க இறந்தவர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.(4) பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் இறந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இக்காரியத்தில், என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. அசைவு எங்கே இருந்து வருகிறது? மரணம் {மிருத்யு} எங்கே இருந்து வருகிறது?(5) இறப்பவன் யார்? (இறப்பது திரள் உடலா? நுண்ணுடலா? அல்லது ஆத்மாவா?) மரணம் எங்கே இருந்து வருகிறது? எக்காரணத்தினால் (வாழும் உயிரினங்களை) மரணம் அபகரித்துச் செல்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)
[1] "அஃதாவது, அவர்களுடன் போரில் ஈடுபட்டவர்கும், சமபலத்தைக் கொண்டவர்களுமான மிக மேன்மையான மனிதர்களால் மட்டுமே அவர்களைக் கொல்லமுடியும். அவர்கள் எவருடன் போரிட்டு மடிந்தனரோ அவர்களைத் தவிர வேறு எவராலும் அவர்களைக் கொன்றிருக்க முடியாது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, பழங்காலத்தில், கிருத யுகத்தில் அனுகம்பகன்[2] என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். போரில் அவனது தேர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் அவனும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டான்.(7) ஹரி என்ற பெயரில், பலத்தில் நாராயணனுக்கு ஒப்பானவனாக இருந்த அவனது மகன், அந்தப் போரில் தனது பணியாட்கள் மற்றும் துருப்பினருடன் சேர்த்து தனது எதிரிகளால் கொல்லப்பட்டான்.(8) மகனின் மரணத்தால் உண்டான துயரால் பீடிக்கப்பட்டவனும், தானே எதிரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டவனுமான அந்த மன்னன் {அனுகம்பகன்}, அதுமுதல் அமைதியான வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஒருநாள் எக்காரியமும் இன்றி உலவிக் கொண்டிருந்தபோது, தவசியான நாரதரைப் பூமியில் சந்தித்தான்.(9) அந்த ஏகாதிபதி {அனுகம்பகன்}, போரில் நேர்ந்த தன் மகனின் மரணம் மற்றும் எதிரிகளால் தான் கைப்பற்றப்பட்டது என நடந்ததனைத்தையும் நாரதரிடம் சொன்னான்.(10) அவனது வார்த்தைகளைக் கேட்டவரும், தவமெனும் செல்வத்தைக் கொண்டவருமான நாரதர், மகனின் மரணத்தால் நேர்ந்த அவனது துயரை விலக்க பின்வரும் கதையை உரைத்தார்.(11)
[2] இப்பெயர் கும்பகோணம் பதிப்பில் அகம்பனன் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் அபிகம்பகன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நாரதர், "ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, நீண்ட விவரங்களைக் கொண்ட பின்வரும் கதையை அது நேர்ந்தவாறே இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, நானே இதை முன்பு கேட்டிருக்கிறேன்(12) பெரும் சக்தியைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, அண்டத்தைப் படைத்த வேளையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களைப் படைத்தான். அவை பல்கிப் பெருகின, அவற்றில் ஒன்றும் மரணமடையவில்லை.(13) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {அனுகம்பகா}, அண்டத்தில் உயிரினங்களால் நிரம்பாத எந்தப் பகுதியும் இருக்கவில்லை. உண்மையில், ஓ! மன்னா {அனுகம்பகா}, மூவுலகங்களும் உயிரினங்களால் நிறைந்து, மூச்சுவிடக் கூட இடமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.(14) அப்போது, ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, பல்கிப்பெருகியிருக்கும் உயிரினங்களின் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் உதித்தது.(15)
ஓ! மன்னா, அதன்பேரில் பிரம்மன் கோபமடைந்ததால், அந்தக் கோபத்தின் விளைவாக அவனது உடலில் இருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. ஓ! ஏகாதிபதி, பெரும்பாட்டன் {பிரம்மன்}, தனது கோபத்தில் பிறந்த நெருப்பைக் கொண்டு அண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எரித்தான்.(16) உண்மையில், ஓ! மன்னா, தெய்வீகத் தலைவனின் {பிரம்மனின்} கோபத்தில் பிறந்த அந்த நெருப்பானது, சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தையும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்துடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரித்தது.(17) உண்மையில், இவ்வாறு பெரும்பாட்டன் கோப வசப்பட்டபோது, அந்த ஆசையின் தடுக்கப்பட முடியாத சக்தியால் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கின.(18)
அப்போது, தெய்வீகமானவனும், மங்கலமானவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் தலைவனுமான ஸ்தாணு {சிவன்}, கருணையால் நிறைந்து, பிரம்மனை நிறைவு செய்ய முனைந்தான்.(19) ஸ்தாணு, நன்மைக்கான நோக்கங்களுடன் பிரம்மனிடம் வந்தபோது, சக்தியுடன் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} அவனிடம் {சிவனிடம்},(20) "என்னிடம் இருந்து வரங்களுக்குத் தகுந்தவன் நீ. உனது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்? உன் இதயத்தில் இருக்கும் எதையும் நிறைவேற்றுவதன் மூலம் நான் உனக்கு நன்மை செய்வேன்" என்றான் {பிரம்மன்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 256ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |