The penance of Mrityu! | Shanti-Parva-Section-258 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 85)
பதிவின் சுருக்கம் : பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்...
நாரதர் {அனுகம்பனிடம்}, "தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், "ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்?(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ!, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)
அன்பு மகன்களையும், அன்புக்குரிய நண்பர்கள், சகோதரர்கள், தாய்மார் மற்றும் தந்தைமாரையும் என்னால் அழிக்க முடியாது. (என் செயலின் மூலமாக) இவர்கள் அழிய நேர்ந்தால், அவர்களது உறவினர்களில் எஞ்சியிருப்போர் என்னை நிச்சயம் சபிப்பார்கள். இத்தன்மையில் நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன்.(5) உயிரோடு எஞ்சியவர்களின் கண்ணீர் என்னைக் காலத்திற்கும் எரித்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் (நான் கொல்ல வேண்டியவர்களின் உறவினர்களிடம்) நான் அச்சங்கொள்கிறேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(6) (என்னால் கொல்லப்படும்) பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் நரகலோகங்களில் மூழ்க வேண்டியிருக்கும்[1]. ஓ! வரமளிக்கும் தேவா, நான் உம்மை நிறைவு செய்ய முனைகிறேன். ஓ! பலமிக்கத் தலைவா, உமது கருணையை எனக்களிப்பீராக. ஓ! உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டா, என் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன். ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உமது அருளின் மூலம் கடுந்தவங்களைச் செய்யும் அனுமதியை நான் கோருகிறேன்" என்றாள் {மிருத்யு}.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "பாவச்செயல் உள்ளவர்கள் யமன் வீட்டில் வீழ்த்தப்படுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "பாவச்செயல்களைப் புரிவோர் யமனின் வசிப்பிடம் செல்கிறார்கள்" என்றிருக்கிறது.
பெரும்பாட்டன் {பிரம்மன்}, "ஓ! மரணமே {மிருத்யு}, அனைத்து உயிரினங்களின் அழிவுக்காகவே நீ என்னால் நினைக்கப்பட்டாய். செல்வாயாக, அனைத்தையும் கொல்லும் பணியில் உன்னை நிறுவிக் கொள்வாயாக. (இந்தச் செயலின் உரிமை அல்லது பிறவற்றைக் குறித்துச்) சிந்திக்காதே.(9) இது நிச்சயம் நடக்க வேண்டும். மாறாக இருக்க முடியாது. ஓ! பாவமற்றவளே, ஓ! பழுதற்ற அங்கங்களைக் கொண்டவளே, நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவாயாக" என்றான்.(10)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகை நகரங்களைக் கைப்பற்றுபவனே {அனுகம்பகா}, மரணம் {மிருத்யு} என்றழைக்கப்படும் அந்தப் பெண் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஒருவார்த்தையும் பேசாமல் உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனை} நோக்கிய கண்களுடன் பணிவுடன் அங்கே நின்றாள்.(11) பிரம்மன் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினாலும், அந்தப் பெண் உயிரற்றவளைப் போலத் தெரிந்தாள். அவளை இவ்வாறு கண்ட தேவர்களின் தேவனான அந்தத் தலைவர்களின் தலைவன் {பிரம்மன்} அமைதியடைந்தான்.(12) உண்மையில் அந்தச் சுயம்பு, தன் விருப்பத்தின் முயற்சியால் நிறைவடைந்தான். உலகங்கள் அனைத்தின் தலைவனான அவன் புன்னகைத்தபடியே அண்டத்தில் தன் கண்களைச் செலுத்தினான்.(13) வெல்லப்பட முடியாதவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தேவன் தன் கோபத்தை அடக்கிய போது, (மரணம் என்றழைக்கப்பட்ட) அந்தப் பெண் அவனருகில் இருந்து சென்றுவிட்டாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14) ஓ! மன்னா, உயிரினங்களை அழிப்பதாக உறுதிகூறாமலேயே பிரம்மனிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற மரணம் {மிருத்யு}, தேணுகம்[2] என்றழைக்கப்படும் ஒரு புனிதத்தலத்துக்குச் சென்றாள். அங்கே அந்தத் தேவி ஒற்றைக் காலில் நின்று கொண்டு ஆயிரத்தைநூறு கோடி ஆண்டுகளுக்குக் கடுந்தவத்தைப் பயின்றாள்[3].(16)
[2] கும்பகோணம் பதிப்பில் இந்த இடம், "கோதீர்த்தம்" என்றும், அதன் அடிக்குறிப்பில், "ஸப்தபுரிகளில் ஒன்றாகிய மாயா என்னும் ஸ்தலத்தில் உள்ளது" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்று தேணுகம் என்றே இருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "ஆயிரத்தைந்நூறு கோடி லக்கமுள்ள வருஷங்கள் ஒரு காலால் நின்றாள்" என்றிருக்கிறது.
அவ்விடத்தில் இத்தகைய கடுந்தவத்தைப் பயின்றபிறகு, பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் மீண்டும் அவளிடம்,(17) "ஓ! மரணமே, என் ஆணையை நிறைவேற்றுவாயாக" என்றான். அவனது {பிரம்மனது} கட்டளையை அலட்சியம் செய்த அந்தப் பெண், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மீண்டும் ஒற்றைக் காலில் நின்றபடியே இரண்டாயிரம் கோடி வருடங்கள் கடுந்தவம் இருந்தாள். ஓ! மகனே {அனுகம்பகா}, பிறகு அவள் பத்து லட்சம் கோடி வருடங்கள் அடங்கிய நீண்ட காலத்திற்கு மான்களோடு {விலங்குகளோடு விலங்காகக்} காட்டில் வாழ்ந்து வந்தாள்[4].(18,19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அனுகம்பகா}, மீண்டும் அவள் இருபதாயிரம் வருடங்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். ஓ! ஏகாதிபதி, பிறகு அவள் எட்டாயிரம் வருடங்கள் முழுமையாக நீரில் கழித்தபடியே சிறந்த அமைதி நோன்பை நோற்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {அனுகம்பகா}, அதன்பிறகு அந்தக் கன்னிகை {மிருத்யு} கௌசிகி ஆற்றுக்குச் சென்றாள்.(20,21) அங்கே நீர் மற்றும் காற்றை மட்டுமே உண்டபடி மற்றொரு நோன்பை நோற்று தன் நாட்களைக் கடத்தினாள். ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அந்த அருள்நிறைந்த கன்னிகை {மிருத்யு}, கங்கைக்கும், அதன் பிறகு மேரு மலைக்கும் சென்றாள்.(22) அங்கே அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தோடு ஒரு மரத்துண்டைப் போல முற்றிலும் அசையாத நிலையில் நின்றாள். அதன் பிறகு, தேவர்கள் பெருவேள்வி செய்யும் இமயச் சிகரத்திற்குச் சென்ற அவள், கடுந்தவத்தின் மூலம் பெரும்பாட்டனை {பிரம்மனை} நிறைவு செய்யும் நோக்குடன், தன் காலின் கட்டைவிரலால் மட்டுமே தன் கனத்தைத் தாங்கியபடி பத்தாயிரம் கோடி வருடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.(24)
[4] "காடுகளில் மான்களுடன், மான்போலவே வாழ்வது பெரும் தகுதியை {புண்ணியத்தை} அளிக்கக்கூடியதாகும். உத்யோக பர்வத்தில் வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை இங்கே நினைவுகூரத்தக்கத்து" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அண்டத்தைப் படைத்து அழிப்பவன் {பிரம்மன்} அங்கே சென்று மீண்டும் அவளிடம், "ஓ! மகளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் வார்த்தைகளை நிறைவேற்றுவாயாக" என்றான்.(25)
மீண்டும் அந்தக் கன்னிகை {மிருத்யு} பெரும்பாட்டனிடம், "ஓ! தேவா, நான் உயிரினங்களைக் கொல்லவல்லவள் அல்ல. (இந்தக் கட்டளையில் இருந்து தப்பும் வகையில்) நான் உம்மை நிறைவு செய்யவே முனைகிறேன்" என்றாள்.(26)
கொடுந்தன்மையில் அச்சமடைந்தவளாகவும், பெரும்பாட்டனின் ஆணையில் இருந்து தப்ப அவனை வேண்டிக் கொண்டிருந்தவளுமான அந்தப் பெண்ணை அமைதியடையச் செய்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, மீண்டும் அவளிடம்,(27) "ஓ! மரணமே {மிருத்யு}, எக்கொடுமையும் உனதாகாது. ஓ! மங்கலக் கன்னியே, உயிரினங்களை அழிக்கும் பணியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. ஓ! இனிய பெண்ணே, நான் சொன்னது நிச்சயம் பொய்யாகாது.(28) இப்போது நித்திய அறம் உன்னைப் புகலிடமாகக் கொள்ளட்டும். நானும் தேவர்கள் அனைவரும் உன் நன்மையை நாடுவதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்போம்.(29) உன் இதயத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். வாழும் உயிரினங்கள் நோயால் பீடிக்கப்படும், (அவ்வாறு இறப்பவர்கள்) உன்னைப் பழி சொல்ல முடியாது.(30) நீ ஆண்களில் ஆணாகவும், பெண்களில் பெண்ணாகவும், அலியில் அலியாகவும் இருப்பாயாக" என்றான்[5].(31)
[5] "இதன் மூலம் மரணதேவி நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்ம நிலையை அடைவாள் என உரையாசிரியர் விளக்குகிறார். சுயம்பு, கொடுமையில் இருந்து அவளைப் பாதுகாக்கவும், அவளது அச்சங்களைத் தணிப்பதற்காகவும் அளிக்கும் வரம் இஃது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {அனுகம்பகா}, இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை உயர் ஆன்மாவும், தேவர்கள் அனைவரின் அழிவில்லாத் தலைவனுமானவனிடம் இறுதியில் கூப்பிய கரங்களுடன், "நான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய இயலாதவளாக இருக்கிறேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(32)
அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, மனம் இரங்காமல், மீண்டும் அவளிடம், "ஓ! மரணமே {மிருத்யு} மனிதர்களைக் கொல்வாயாக.(33) ஓ! மங்கலப் பெண்ணே, இதனால் நீ எக்கொடுமையையும் ஈட்டாத வகையில் நான் விதிப்பேன். கூப்பிய உன் கரங்களுக்குள் நீ இன்னும் ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணீர் துளிகள் பயங்க நோய்களின் வடிவை ஏற்று, காலம் நேர்கையில் அவையே மனிதர்களை அழிக்கும்.(34) உயிரினங்களுக்கு முடிவு நேரும்போது, நீ அவற்றிடம் இருக்கும் ஆசை மற்றும் கோபத்தை விரட்டுவாய். அளவிலாத் தகுதி {புண்ணியம்} உனதாகும். முற்றிலும் பாகுபாடற்ற ஒழுக்கம் கொண்ட நீ எந்தக் கொடுமையையும் {பாவத்தையும்} ஈட்டமாட்டாய்.(35) இதைச் செய்வதன் மூலம் நீ கொடுமையில் மூழ்காமல் அறம் மட்டுமே நோற்றவளாவாய். எனவே, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிரினங்களைக் கொல்லத் தொடங்கி, உன் பணியில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக" என்றான்.(36)
இவ்வாறு சொல்லப்பட்டவளும், மரணம் {மிருத்யு} என்ற பெயரில் அழைக்கப்படுபவளுமான அந்தப் பெண், பிரம்மனின் சாபத்திற்கு அஞ்சி, "சரி!" என்று அவனுக்குப் பதிலளித்தாள். அக்காலத்தில் இருந்து அவள், உயிரினங்களின் இறுதிக் காலத்தில் ஆசை மற்றும் கோபத்தை விரட்டத் தொடங்கி, அதன் மூலம் அவற்றின் உயிர்மூச்சை நிறுத்தினாள்.(37) மரணம் சிந்திய கண்ணீரே மனிதர்களின் உடலைப் பீடிக்கும் நோய்களாயிற்று. எனவே, உயிரினங்கள் அழியும்போது ஒருவன், புத்தியின் துணையுடன் இதைப் புரிந்து கொண்டு, துன்பவசப்படாமல் இருக்க வேண்டும்.(38) ஓ! மன்னர்களில் சிங்கமே! அனைத்து உயிரினங்களும் கனவுகளற்ற உறக்கத்தில் புலன்கள் மறைந்து, விழிப்புநிலையில் மீண்டும் தோன்றுவதைப் போலவே அவற்றின் உடல்களின் அழிவில், அவை மறு உலகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே திரும்ப வேண்டிருக்கிறது.(39) பயங்கர சக்தி, வலிமையான ஆற்றல் மற்றும் செவிடாகச் செய்யும் முழக்கம் ஆகியவற்றைக் கொண்ட காற்று {வாயு} என அழைக்கப்படும் பூதமே, அனைத்து உயிரினங்களிலும் உயிராக இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் உடல்கள் அழியும்போது, பழைய உடலில் இருந்து தப்பும் அந்தக் காற்று {வாயு} பல்வேறு புதிய உடல்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே காற்றானது {வாயுவானது}, திரள் உடலில் அமைந்துள்ள பிற பூதங்களில் இருந்து வேறுபட்டு புலன்களின் தலைவனாக அழைக்கப்படுகிறது.(40) தேவர்களும் கூடத் தகுதிகள் {புண்ணியங்கள்} தீரும்போது) பூமியில் அழியத்தக்க {இறப்புடைய} உயிரினங்களாகப் பிறப்பை எடுக்கின்றனர். அதே போலவே அழியத்தக்க உயிரினங்களும் கூட (போதிய தகுதியை {புண்ணியத்தை} அடையும்போது) தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கின்றன. எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அனுகம்பகா}, உன் மகனுக்காக வருந்தாதே. உன் மகன் சொர்க்கத்தை அடைந்து, அங்கே பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.(41) ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, இவ்வாறே சுயம்புவால் மரணம் {மிருத்யு} படைக்கப்பட்டாள், மேலும் இவ்வழியிலேயே அவள் உயிரினங்களின் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவை அனைத்தையும் முறையாக அழிக்கிறாள். அவள் சிந்திய கண்ணீரே நோய்களாகி, உயிரினங்களின் இறுதி வேளை வரும்போது அவை அனைத்தையும் அபகரித்துச் செல்கிறாள்" என்றார் {நாரதர்}".(42)
சாந்திபர்வம் பகுதி – 258ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |