The goddess death - Mrityu! | Shanti-Parva-Section-257 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 84)
பதிவின் சுருக்கம் : பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்...
ஸ்தாணு, "ஓ! தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ! பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ! சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்" என்றான்.(2)
படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் தலைவன் {பிரம்மன்}, "நான் கோபமடையவில்லை; படைக்கப்பட்டவை அழிய வேண்டும் என்பது என் விருப்பமுமல்ல. பூமியின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே இந்த அழிவு விரும்பத்தக்கதாகிறது.(3) ஓ மஹாதேவா, உயிரினங்களின் கனத்தால் பீடிக்கப்பட்டவளும், நீரில் மூழ்கி விடும் வகையில் காணப்பட்டவளுமான பூமாதேவியே, அவற்றை அழிக்குமாறு என்னிடம் வேண்டினாள்.(4) நீண்ட காலம் இது குறித்துச் சிந்தித்த பிறகும், இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் தொகைக்கு அழிவை உண்டாக்கும் வழிமுறையேதும் அகப்படாததால், என் இதயத்தைக் கோபம் தன் உடைமையாக்கியது" என்றான்.(5)
ஸ்தாணு, "ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்களை அழிக்கும் இக்காரியத்தில் கோபவசப்படாதே. நிறைவு கொள்வாயாக. அசைவனவாகவும், அசையாதனவாகவும் இருக்கும் இவ்வுயிரினங்கள் அழிய வேண்டாம்.(6) அனைத்துக் குளங்களும், அனைத்து வகைப் புல் மற்றும் தாவரங்களும், அசைவற்ற அனைத்து இனங்களும், அசையும் நால்வகை உயிரினங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன.(7) மொத்த அண்டமும் உயிரினங்களற்றதாகப் போகிறது. ஓ! தெய்வீகத் தலைவா, நிறைவு கொள்வாயாக. ஓ! நீதிமிக்க இதயம் கொண்டவனே, இதுவே உன்னிடம் நான் கேட்கும் வரமாகும்.(8) இவ்வுயிரனங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும் திரும்பாது. எனவே, இந்த உனது சக்தி அதனிலேயே தணிவடையட்டும்.(9) ஓ! பாட்டா, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தினிடமும் கருணை கொண்டு, இவை எரியாத வேறு வழிவகைகளைக் காண்பாயாக. ஓ! அண்டத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவா {பிரம்மா}, அனைத்து உயிரினங்களின் நனவுநிலைகளுக்குத் தலைமைதாங்குபவனாக என்னை நீயே நியமித்தாய்.(11) ஓ! அண்டத்தின் தலைவா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட இந்த அண்டம் உன்னில் இருந்தே பிறந்தது. ஓ தேவர்களின் தேவா, இந்த உயிரினங்கள் மீண்டும் மீண்டும் பிறந்த இறக்கும் தன்மையுடன் இவ்வுலகில் மீண்டும் தோன்றச் செய்து நீ அமைதியடைய வேண்டும் என நான் உன்னை வேண்டிக் கேட்கிறேன்" என்றான் {ஸ்தாணு}".(12)
நாரதர் {அனுகம்பகனிடம்} தொடர்ந்தார், "ஸ்தாணுவின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வாக்கு மற்றும் மனக் கட்டுப்பாடு கொண்டவனுமான தெய்வீகப் பிரம்மன், அந்தச் சக்தியைத் தன் இதயத்திற்குள்ளேயே ஒடுக்கினான்.(13) இந்த அண்டத்தை அழித்துக் கொண்டிருந்த அந்நெருப்பை ஒடுக்கிய சிறப்புமிக்கவனும், அனைவராலும் துதிக்கப்படுபவனும், எல்லையற்ற பலம் கொண்டவனுமான பிரம்மன், அதன் பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டையும் ஏற்பாடு செய்தான்.(14) சுயம்பு {பிரம்மன்} அந்நெருப்பை ஒடுக்கி விலக்கிக் கொண்ட பிறகு, கருப்பு மற்றும் சிவப்பாடைகள் உடுத்தியவளும், கரிய கண்களைக் கொண்டவளும், கரிய உள்ளங்கைகளைக் கொண்டவளும், சிறந்த காதுகுண்டலங்கள் இரண்டை அணிந்தவளும், தெய்வீக ஆபரணங்கள் சூடியவளுமாக, அவனது உடலின் அனைத்துத் துளைகளில் இருந்தும் ஒரு பெண் வெளியே வந்தாள்.(15,16) பிரம்மனின் உடலில் பிறந்த அந்தப் பெண், அவனது வலப்புறத்தில் நின்றாள்[1]. முதன்மையானவர்களான அந்த இரு தேவர்களும் {பிரம்மனும், ஸ்தாணுவும்} அவளைக் கண்டனர்.(17)
[1] கும்பகோணம் பதிப்பில், "கோபத்தாலுண்டான அந்த அக்கினியை அவர் அடக்கும்பொழுது கறுப்பும் சிவப்புமான ஆடை உடுத்தவளும், கண்களின் நடுவில் கறுத்தவளும், திவ்யமான குண்டலம் பூண்டவளும், திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான ஒரு பெண் மஹாத்மாவான அவருடைய எல்லா இந்திரியங்களினின்றும் தோன்றினாள். இந்திரியங்களிலிருந்து வெளியில் வந்ததும் அவள் தென் திசையில் நின்றாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "அவள் அவனது வலப்புறத்தில் நின்றாள்" என்றிருக்கிறது.
அப்போது, ஓ! மன்னா{அனுகம்பகா}, பலமிக்கவனும், உலகங்கள் அனைத்திற்கும் மூல காரணனுமான சுயம்பு {பிரம்மன்} அந்தப் பெண்ணை வணங்கி அவளிடம், "ஓ! மரணமே {மிருத்யு}, இந்த அண்டத்தின் உயிரினங்களைக் கொல்வாயாக.(18) கோபத்தில் நிறைந்து, படைப்புகளுக்கு அழிவைக் கொண்டுவரும் தீர்மானத்துடனே நான் உன்னை அழைத்தேன்.[2] எனவே, மூடராகவோ கல்விமானாகவோ உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தொடங்குவாயாக.(19) ஓ! பெண்ணே, எவருக்கும் உதவுவதை {அனுகூலம் செய்வதைத்} தவிர்த்து, அனைத்து உயிரினங்களையும் கொல்வாயாக. என் ஆணையின் பேரில் பெருஞ்செழிப்பை வெல்வாயாக" என்றான்.(20)
[2] "தேவர்கள் மற்றும் முனிவர்களின் வழக்கில், நினைத்தலும், அழைத்தலும் ஒன்றே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ மிருத்யுவே, இந்தப்பிரஜைகளைக் கொல். கோபங்கொண்ட என்னால் ஸம்ஹாரஞ்செய்ய வேண்டுமென்ற புத்தியுடன் நினைக்கப்பட்டாயன்றோ" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்டவளும், தாமரை மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான அந்த மரணதேவி {மிருத்யு}, கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிக் கண்ணீரை அபரிமிதமாகச் சிந்தினாள்.(21) எனினும், ஓ! மன்னா {அனுகம்பகா}, அந்தக் கண்ணீர் கீழே சிந்தாமல் அதைத் கூப்பிய கரங்களில் ஏந்தினாள். பிறகு அவள், மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுச் சுயம்புவிடம் வேண்டினாள்" என்றார் {நாரதர்}.(22)
சாந்திபர்வம் பகுதி – 257ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |