The indications of Righteousness! | Shanti-Parva-Section-259 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 86)
பதிவின் சுருக்கம் : நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள், நன்னோக்கம், களவு செய்யாமை, தீங்கிழையாமை, ஈகை முதலியவையே அறத்தின் குறியீடுகளென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இந்தப் பூமியில் வசிக்கும் மனிதர்கள் அனைவரும், அறத்தின் {தர்மத்தின்} இயல்பு குறித்த ஐயங்களால் நிறைந்திருக்கின்றனர். அறம் என்றழைக்கப்படும் இஃது என்ன? அறம் எங்கிருந்து வந்தது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) அறம் இவ்வுலகத் தொண்டுக்குரியதா? மறுமைக்கான தொண்டுக்குரியதா? அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்குமான தொண்டுக்குரியதா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(2)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்தத் தர்மம் இவ்வுலகில் பயனுடையதா? அல்லது பரலோகத்தில் பயனுடையதாகுமா? அல்லது இவ்விரண்டு உலகத்திலும் பயனுடையதா?" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள் ஆகிய இம்மூன்றும் அறத்தின் (மூலக்) குறியீடுகளாகும். இவை தவிர, கல்விமான்கள் (ஒரு செயலை நிறைவேற்றும்) நோக்கத்தை நான்காவதாக {மூலக் குறியீடாக} அறிவித்திருக்கிறார்கள்.(3) பழங்காலத்தின் முனிவர்கள் எவை அறச்செயல்கள் என்பதை அறிவித்து, தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில் அவற்றை மேன்மையானவை, தாழ்ந்தவை என்றும் வகுத்திருக்கிறார்கள். உலகக் காரியங்களின் ஒழுங்கிற்காகவே அறவிதிக்ள விதிக்கப்பட்டுள்ளன.(4) இம்மை மற்றும் மறுமை என்ற ஈருலகங்களிலும் அறமானது மகிழ்ச்சியையே தன் கனியாக விளைவிக்கிறது. நுட்பமான வழிகள் மூலம் தகுதியை {புண்ணியத்தை} அடைய இயலாத பாவம்நிறைந்த மனிதர்கள், பாவத்தால் மட்டுமே களங்கமடைகிறார்கள்.(5)
பாவிகளைத் தங்கள் பாவங்களில் இருந்து ஒருபோதும் தூய்மைப்படுத்த முடியாது என்ற கருத்தைச் சிலர் கொண்டுள்ளனர். அறமற்ற செயலைச் செய்தும், அதே வழிமுறையின் மூலம் அறச்செயலுக்கான தகுதியை ஒருவன் அடைவதைப் போலவே, ஆபத்துக் காலங்களில் பொய் பேசும் ஒருவன், மெய் பேசும் ஒருவனின் தகுதியை அடைகிறான். ஒழுக்கமே அறத்தின் புகலிடமாகும். ஒழுக்கத்தின் துணையுடன் கூடிய அறம் யாது என்பதை நீ அறிய வேண்டும்.(6) (தன் களங்கங்களைக் காணாமலும், அறிவிக்காமலும், பிறரின் களங்கங்களை அறிவிப்பது மனிதனின் இயல்பாகும்). {மறைமுகமாகப்} பிறருக்கு உடைமையானவற்றைக் களவு செய்யும் கள்வன், தன் களவால் உண்டான பயன்களை வெளிப்படையான அறச்செயல்களுக்குச் செலவிடுகிறான். அரசற்ற காலத்தில் பிறர் உடைமைகளை அபகரிப்பதில் அக்கள்வன் பேரின்பம் கொள்கிறான்.(7) எனினும், களவின் மூலம் தான் அடைந்ததைப் பிறர் களவாடும்போது, அவனே (அக்குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க) ஒரு மன்னனை விரும்புகிறான். உடைமையின் உரிமையில் குற்றமிழைக்கப்பட்டதாகப் பெரிய அளவில் உளக் கொதிப்படையும் அத்தகைய வேளையிலும் கூட, தங்கள் உடைமைகளில் நிறைவுடன் வாழ்வோரின் செல்வத்தில் அவனே ரகசியமாகப் பேராசை கொள்கிறான்.(8) (தானே களவால் பாதிப்படைந்தவனாக இருக்கும்போதும்) அவன், அச்சமில்லாமலும், தன் மனத்தில் எந்த ஐயமும் இல்லாமலும், பாவம் அனைத்தும் கழுவப்பட்ட மனத்துடன் மன்னனின் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் எந்தப் பாவச்செயலின் களங்கத்தையும் தன் இதயத்திற்குள் காண்பதில்லை.(9) உண்மை பேசுவதே தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}. வாய்மையைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வாய்மையாலேயே அனைத்தும் தாங்கப்படுகின்றன, அனைத்தும் வாய்மையையே சார்ந்திருக்கின்றன.(10)
பாவம் நிறைந்த கொடியவர்கள் கூட, தங்களுக்குள் உண்மையை {சத்தியத்தைக்} காக்க உறுதிபூண்டு, அனைத்து வகைச் சச்சரவுகளையும் புறந்தள்ளி, ஒற்றுமையடைந்து வாய்மை சார்ந்து தங்கள் (பாவச்) செயல்களில் தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போலியாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் அழிவையே அடைவார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானதை ஒருவன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. இஃது ஒரு நித்தியக் கடப்பாடாகும். இது பலவீனரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என வலிய மனிதர்கள் கருதுகிறார்கள்.(12) எனினும், இம்மனிதர்களின் விதி எதிராக மாறும்போது, இந்தத் தடையாணை அவர்களது அங்கீகாரத்தைப் பெறுகிறது. மேலும் பலத்திலோ, ஆற்றலிலோ பிறரை விஞ்சி நிற்போர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(13) எனவே, நீ எந்தத் தீய செயலிலும் ஒருபோதும் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே. இவ்வழியில் நடந்து கொள்பவனுக்கு நேர்மையற்ற மனிதர்களிடமோ, கள்வர்களிடமோ, மன்னனிடமோ அச்சமேதும் ஏற்படுவதில்லை. எவருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதன் தூய இதயத்துடன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(14) காட்டில் இருந்து வசிப்பாரற்ற ஒரு கிராமத்திற்கு விரட்டப்பட்ட மானைப் போலவே ஒரு கள்வன் அனைவரையும் {கண்டு} அஞ்சுவான். அவன் பிற மக்களையும் தன்னைப் போலப் பாவிகளாகவே நினைக்கிறான்.(15)
தூய இதயம் கொண்ட ஒருவன் எப்போதும் உற்சாகத்தில் நிறைந்தவனாக எத்திக்கிலும் அச்சமில்லாதவனாக இருப்பான். அத்தகையவன் ஒருபோதும் தன் ஒழுங்கீனத்தைப் பிறரிடம் காணமாட்டான்[2].(16) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடுவோர், ஈகை பயில்வதும் மற்றொரு உயர்ந்த கடமையெனச் சொல்லியிருக்கின்றனர். செல்வம் படைத்தோர், வறியவர்களே இந்தக் கடமையை விதித்திருக்கின்றனர் என நினைக்கிறார்கள்.(17) எனினும், அந்தச் செல்வந்தர்களின் ஊழில் திருப்பம் நேர்வதன் விளைவால் வறுமையைச் சந்திக்கும்போது ஈகை பயிற்சியானது தன்னை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(18) இஃது எவ்வளவு வலியைத் தரவல்லது என்பதையறிந்த ஒருவன், பிறர் தனக்கு இழைக்கும் போது விரும்பாத எதையும் ஒருபோதும் பிறனுக்கு இழைக்கக்கூடாது.(19) மாற்றான் மனைவியை விரும்பும் {காதலிக்கும்} ஒருவனால், (அதே வரம்புமீறலைச் செய்யும்) வேறொருவனுக்கு என்ன சொல்ல முடியும்? {அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?}. எனினும், அத்தகைய மனிதனும்கூடத் தன் மனைவியை மற்றொரு காதலனுடன் காணும்போது, அச்செயலை மன்னிக்க இயலாததைக் காணமுடிகிறது[3].(20)
[2] "அத்தகைய மனிதனும் குறைகள் கொண்டவனே. சபலத்தின் காரணமாக ஒரு கணத்தில் தான் செய்த ஒரு குற்றத்தை மற்றவர்களும் செய்வார்கள் என்று அவன் ஒருபோதும் கருதுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "எவன் பிறன் மனைவிக்கு ஜாரனாவனோ {சோர புருஷனாக இருக்கிறானோ} அவன் யாரை என்ன சொல்லத் தகுதியுள்ளவன்? பிறனொருவன் தன் மனைவிக்கு ஜாரனாக ஏற்படுவானானால் அப்பொழுது அவன் பொறுக்கமாட்டானென்பது என் எண்ணம்" என்றிருக்கிறது.
மூச்சு விட வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே செயலைச் செய்யும் மற்றொருவனை ஒரு கொலைபாதகச் செயலின் மூலம் எவ்வாறு தடுக்க நினைக்கலாம்?[4] ஒருவன் எதை எதைத் தனக்கு விரும்புவானோ, அவற்றை நிச்சயம் அடுத்தவருக்கும் விரும்ப வேண்டும்.(21) ஒருவன் தான் உடைமையாகக் கொண்டுள்ள அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, வறியோரின் தேவைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே (வணிகம் அல்லது வட்டிக்கு விடுதல் ஆகியவற்றின் மூலம்) ஒருவனுடைய செல்வத்தைப் பெருக்கும் நடைமுறையைப் படைப்பாளன் ஏற்படுத்தினான்.(22) ஒருவன் எவ்வழியில் நடந்தால் தேவர்களைச் சந்திப்பான் என்று நம்புவானோ அவ்வழியிலேயே நடக்க வேண்டும்; அல்லது செல்வம் ஈட்டப்படும் வேளைகளில், வேள்வி மற்றும் கொடை முதலிய கடமைகளைப் பின்பற்றுவது மெச்சத்தகுந்ததாகும்[5].(23)
[4] கும்பகோணம் பதிப்பில், "எவன் தான் உயிர்வாழ விரும்புகிறானோ அவன் பிறனை எப்படித் துன்பம் செய்யலாம்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தான் உயிர்வாழ வேண்டும் என விரும்பும் ஒருவன் எவ்வாறு மற்றொருவனைக் கொல்லலாம்" என்றிருக்கிறது[5] கும்பகோணம் பதிப்பில், "எந்த நல்வழியில் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்களோ அந்த வழியில் இருக்க வேண்டும். அல்லது, லோப மார்க்கத்திலிருந்தாலும் தர்மமான (லோபமார்க்கத்தில்) இருப்பது நலம்" என்றிருக்கிறது.
ஏற்புடைய (அமைதியான) வழிமுறைகளின் மூலம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அறம் எனத் தவசிகள் சொல்லியிருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, அறம் மற்றும் மறத்தின் {அநீதியின்} குறியீடுகளைத் தீர்மானிப்பதில் இதுவே நோக்கில் கொள்ளப்படும் அடிப்படைத் தத்துவம் என்பதைக் காண்பாயாக.(24) பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, உலகை ஒன்றாகத் தாங்கிக் கொள்ளும் ஊட்ட சக்தியுடன் அறத்தை {தர்மத்தை} ஏற்படுத்தினான். சிறப்புகள் நிறைந்த நல்லோரின் ஒழுக்கமானது, நுட்பமான பல கருத்துகளைச் சார்ந்த அறத்தை அடைவதற்கு (எண்ணற்ற) நலம்தரும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகும்.(25) ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அறத்தின் குறியீடுகளே உனக்கு இப்போது மீண்டும் சொல்லப்பட்டது. எனவே, ஒருபோதும் நீ உன் புத்தியைத் தீச்செயலில் நிலைக்கச் செய்யாதே" என்றார் {பீஷ்மர்}.(26)
சாந்திபர்வம் பகுதி – 259ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |