Objection in authorizing Righteousness! | Shanti-Parva-Section-260 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 87)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் சொன்ன அறம் நிர்ணயிக்கும் வழிமுறைகளில் தன் மறுப்பைத் தெரிவித்த யுதிஷ்டிரன் ...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறம் அல்லது கடமை என்பது நுட்பமான கருத்துகளைச் சார்ந்தது என்றும், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் ஒழுக்கத்தால் குறிப்பிடப்படுகிறது என்றும், (எண்ணற்ற செயல்களில்) நலம் தரும் கட்டுப்பாடுகள் நிறைந்ததென்றும், அதன் குறியீடுகளை வேதங்களும் கொண்டிருக்கின்றன என்றும் நீர் சொல்கிறீர். எனினும், சரியான மற்றும் தவறான காரியங்களை உள்ளுணர்வின் மூலம் பகுத்தறிவதன் விளைவால் நிச்சயமாக நான் உள்ளொளியைக் கொண்டிருக்கிறேன் என்றே எனக்குப் படுகிறது[1].(1) நான் கேட்க நினைத்த எண்ணற்ற கேள்விகள் அனைத்திற்கும் நீர் பதிலளித்திருக்கிறீர். எனினும், தற்போதும் உம்மிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஓ! மன்னா {பீஷ்மரே}, வெற்றுச் சச்சரவு செய்யும் விருப்பத்தால் அது {அக்கேள்வி} தூண்டப்பட்டதில்லை.(2) உடல்படைத்த இந்த உயிரினங்கள் அனைத்தும், தங்கள் இயல்பிலேயே பிறப்பை அடைந்து, {சிறிது காலம்} நிலைத்திருந்து, உடல்களை விடுவதாகத் தெரிகிறது. எனவே, ஓ! பாரதரே, கடமையையும் அதற்கு முரணானதையும் {அறம் மற்றும் மறம் ஆகியவற்றை}, சாத்திரக் கல்வியால் மட்டுமே உறுதி செய்ய முடியாது[2].(3) நல்ல நிலையில் உள்ள ஒருவனின் கடமைகள் ஒரு வகையானவை. துயரில் வீழ்ந்த ஒருவனின் கடமைகளோ மற்றொரு வகையிலானவை. துயர்மிக்கக் காலங்களைப் பொறுத்தவரையில் சாத்திரங்களைப் படிப்பதால் மட்டுமே கடமையை {அறத்தை} எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?[3](4)
[1] "மூலத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பது தெரியவில்லை. பீஷ்மர் அறக்குறியீடுகள் குறித்து முன்னர்ச் செய்த உரையில் கண்ட பிழையை யுதிஷ்டிரன் எடுத்தியம்புகிறான் என்ற பொருளையே இந்த ஸ்லோகம் தருகிறது என உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸுக்ஷ்மமானட தர்மலக்ஷணமானது உம்மால் நன்கு உரைக்கப்பட்டது. எனக்கு ஒருவிதமான எண்ணம் உண்டாயிருக்கிறது. அதை யுக்தியுடன் எடுத்துச் சொல்வேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீர் சொன்னது குறித்த காரியங்களைப் பகுத்துப் பார்க்கும் சக்தி எனக்கிருக்கிறது.[2] "இந்த வாதம் உரையாசிரியரால் இவ்வாறு விளக்கப்படுகிறது: அறமும், மறமும் பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கவோ, துன்பத்தை உண்டாக்கவோ ஒருவன் செய்யும் செயல்களில் இருந்து எழுகின்றன என்றும், அவை இரண்டும் அவனது எதிர்கால மகிழ்ச்சிக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன என்றும் பீஷ்மர் சொன்னார். யுதிஷ்டிரனோ, உயிரினங்கள் தங்கள் இயல்பினாலேயே பிறப்பை அடைந்து, நிலைத்திருந்து, இறப்பதாகச் சொல்கிறான். எனவே, பிறப்பு, நிலைப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு இயற்கையே சிறந்த காரணம்; இன்பதுன்பங்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட ஸ்ருதிகள் அவ்வாறு இல்லை என்று தெரிகிறது. எனவே, வேத கல்வி மட்டுமே அறம் மற்றும் மறம் குறித்த ஞானத்திற்கு வழிவகுக்காது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "துயரமென்பது முடிவிலா வகைகளைச் சேர்ந்தது. எனவே கடமை தவறுதலும் பல்வேறு வகைகளைச் சேர்ந்ததாகிறது. (உணர்ந்த துயர அளவின் நோக்கில் மெய்ப்பிக்கக்கூடிய) இந்தத் தவறுகளை விரிவான எந்த அறநெறி விதியாலும் குறிப்பிட இயலாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்லோரின் செயல்கள் அறம் (அல்லது கடமையைக்) கொண்டவை என்று நீர் சொல்கிறீர். எனினும், நல்லோரை அவர்களின் செயல்களாலேயே உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே, நல்லோரின் ஒழுக்கம் யாது என்ற கேள்விக்கு, அது தீர்மானிக்கப்பட முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே இவ்விளக்கம் இருக்கிறது.(5) சில சாதாரண மனிதர்கள் அறமற்ற செயலைச் செய்தாலும் வெளிப்படையாக அறமீட்டுவதைக் காண முடிகிறது. மேலும் இயல்புக்கு மீறிய சில மனிதர்கள் வெளிப்படையாக அறமற்ற செயல்களைச் செய்வதன் மூலம் அறமீட்டுவதையும் காணமுடிகிறது[4].(6) மேலும் (நான் சொல்வதற்கு) ஆதாரமாகச் சாத்திரத்தை நன்கறிந்தோரே சான்று பகர்கின்றனர். ஏனெனில், அடுத்தடுத்த ஒவ்வொரு யுகத்திலும் வேத விதிகள் படிப்படியாக மறைகின்றன என்று நாம் கேள்விப்படுகிறோம்.(7) கிருத யுகத்தின் கடமைகள் ஒருவகையானவை. திரேதா யுகத்தின் கடமைகள் மற்றொரு வகையிலானவே, துவாபர யுகத்திற்கானவை மேலும் வேறுபட்டவை. கலியுகத்தின் கடமைகளோ முற்றிலும் வேறொரு வகையிலானவை. எனவே, ஒவ்வொரு யுகத்தின் கடமைகளும், ஒவ்வொரு யுக மனிதர்கள் கொண்ட சக்தியின்படியே விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(8)
[4] "புண்ணியம் ஈட்டும் எதிர்பார்ப்பில் தடைசெய்யப்பட்ட சாத்திரங்களைச் சூத்திரர்கள் கேட்பதை உதராணமாக இங்கே உரையாசிரியர் குறிப்பிடுகிறார். அத்தகைய செயல்களின் மூலம் அவர்கள் பாவத்தை இழைக்கின்றனர். மேலும் அகஸ்தியரைப் போன்ற உயர்ந்த பிராமணர்கள் தண்டகவனத்தில் வசித்தோரைச் சபித்ததன் மூலம் பெரும் தகுதியை அடைந்தார். சாதாரணமானவர்கள் அல்லது இழிந்தவர்கள் என்று உலகளாவிய அளவில் சொல்லப்படும் மனிதர்களில் நன்னடத்தையின் குறியீடுகள் தென்படுகின்றன. நல்லோராகவும் மதிப்பிற்குரியோராகவும் அங்கீகரிக்கப்பட்டோரின் செயல்களோ நல்லவரையாகத் தெரிவதில்லை. எனவே, நல்லோரின் ஒழுக்கம் என்பது மிக மிக உறுதியற்ற ஒன்றாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ராக்ருதனான ஒருவன் தர்மரூபமாக அதர்மத்தைச் செய்கிறவனாகக் காணப்படுகிறான். மேலான ஒருவன் அதர்ம ரூபமாகத் தர்மத்தைச் செய்கிறவனாகவும் காணப்படுகிறான்" என்றிருக்கிறது.
எனவே, வேத தீர்மானங்கள் அனைத்தும், அனைத்து யுகங்களுக்கும் சமமான அளவில் பொருந்தாதபோது, வேத தீர்மானங்கள் உண்மையானவை என்ற சொலவடையானது வெகுமக்கள் நிறைவுக்காகச் சொல்லப்படும் பிரபல பேச்சுவடிவமாக மட்டுமே இருக்கிறது. ஸ்ருதிகளில் இருந்து தோன்றிய ஸ்மிருதிகளின் எல்லையும் மிக விரிவானதாக இருக்கிறது.(9) வேதங்களே அனைத்திற்குமான அதிகாரமெனில், அந்த அதிகாரம் ஸ்ருதியின் அடிப்படையிலான ஸ்மிருதிகளுக்கும் பொருந்தும். எனினும், ஸ்ருதிகளும், ஸ்மிருதிகளும் முரண்படும் போது அவை இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவையாக இருக்க முடியும்?(10) மேலும், பெரும் வலிமை கொண்ட சில தீய மனிதர்கள், குறிப்பிட்ட அறச்செயல்களின் குறிப்பிட்ட நடைமுறை பகுதிகளை நிறுத்திவிட்டால் இவை என்றைக்கும் அழிந்து போகும்[5].(11) நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும், உறுதி செய்தாலும் உறுதி செய்யாவிட்டாலும் கடமையின் வழியானது கத்தியின் முனையைவிடக் கூர்மையானதாகவும், மலையை விடவும் திரளானதாகவும் இருக்கிறது.(12)
[5] "புண்ணியம் ஈட்டுவதற்காக ஜனமேஜயன் செய்து கொண்டிருந்த குதிரை வேள்வியை இந்திரன் தடுத்த தருணத்தை உரையாசிரியர் இங்கே குறிப்பிடுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "செய்யப்படுகிற தர்மத்தின் நிலைமையானது எப்பொழுது வலியவர்களான துஷ்டர்களால் விகாரத்தை அடையும்படி செய்யப்படுகிறதோ அப்பொழுது அந்த நிலைமையும் நசிக்கிறது" என்றிருக்கிறது.
(வேள்விகள் மற்றும் பிற அறச்செயல்களின் வடிவில் உள்ள) அறமானது தொலைவானில் காணப்படும் நீராவியாலான நயமிக்க மாளிகையின் வடிவில் முதலில் தோன்றுகிறது. எனினும், கல்விமான்களால் ஆய்வு செய்யப்படும்போது அது புலப்படாமல் மறைந்துபோகிறது[6].(13) கால்நடைகள் நீரருந்தும் சிறு குட்டைகள், அல்லது விளைநிலங்களோடு உள்ள ஆழமற்ற வாய்க்கால்கள் வெகுவிரைவில் வற்றிவிடுவதைப் போல, ஸ்மிருதிகளில் குறிப்பிடப்படும் நித்திய நடைமுறைகளும் தொடர்பறுந்தவையாக (கலியுகத்தில்) மொத்தமாக மறைந்து போகின்றன.(14) நல்லோருக்கு மத்தியிலும் சிலர் ஆசையின் தூண்டுதலின் பேரில் (ஆறமீட்டுவதற்காகத்} துன்புறுவதன் மூலம் கபடதாரிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் சிலர் பிறரின் ஆசைகளால் தூண்டப்படுகின்றனர். எண்ணிக்கையில் பலராக இருக்கும் வேறு சிலரும், அதே வகையிலான பல்வேறு நோக்கங்கள் பிறவற்றின் ஆதிக்கத்தால் அதே வழியிலேயே நடக்கின்றனர்[7].(15) (தீய ஆசைகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள மனிதர்களால் செய்யப்பட்டாலும்) அத்தகைய செயல்கள் அறமே என்பதை மறுக்க முடியாது. மேலும், நல்லோர் என்றழைக்கப்படுவோருக்கும் மத்தியில் ஒலிக்கும் வெற்றொலியே அறமென மூடர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அத்தகைய மனிதர்களைக் கேலி செய்து, அவர்களை அறிவற்றவர்களாகவே கருதுகிறார்கள்.(16)
[6] "தொலைவானில் காணப்படும் நீராவி மாளிகைகளும், வடிவங்களும் மனிதர்களுக்கும் மேம்பட்டவர்களான கந்தர்வர்கள் வசிக்கும் நகரங்கள் என்ற வெகுமக்கள் நம்பிக்கையில் இருந்து கந்தர்வ நகரம் என்றழைக்கப்படுகிறது. இது காட்சியில் தோன்றினாலும் வெகு விரைவில் மறைந்து போகும். வேள்விகளும் அறச்செயல்களும் சொர்க்கம் மற்றும் பேரின்பம் என்ற கனிகளைத் தரும் விளைவால் அவை முதலில் இனிமையானவையாகவும் நயமிக்கவையாகவும் தெரிகின்றன. ஆனால், தத்துவத்தின் ஒளியில் அவை ஆய்வு செய்யப்படும்போது, செயல்களும், அவற்றின் விளைவுகளும் நிலையற்றவையாக இருப்பதால் ஒன்றுமில்லாமல் சுருங்கிக் காணாமல் போகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "அறத்தை நிர்ணயிக்க எவருடைய ஒழுக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த நல்லோரை அடையாளம் காண்பது மிக மிகக் கடினமானது என்பதைச் சொல்வதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மேலும், பெரிய மனிதர்கள் பலர், (தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து) நடைபிறழ்ந்து அரச வகைக்கான கடமைகளைச் செய்கின்றனர். எனவே, (எந்த மனிதனும் பின்பற்றும்) உலகளாவிய நன்மை நிறைந்த எந்த ஒழுக்கமும் காணப்படவில்லை[8].(17) குறிப்பிட்ட ஓர் ஒழுக்க வழிமுறையின் மூலம் ஒருவன் உண்மையிலேயே தகுதிவாய்ந்தவனாகிறான். அதே ஒழுக்க வழிமுறையானது, மற்றொருவன் அறமீட்டுவதைத் தடை செய்கிறது. அவ்வொழுக்கத்தைத் தன் விருப்பப்படி பயிலும் மற்றொருவன் மாறாமல் அப்படியே இருப்பதும் காணப்படுகிறது[9].(18) எனவே எந்த ஒழுக்கத்தின் மூலம் ஒருவன் தகுதிவாய்ந்தவனாகிறானோ அதுவே மற்றொருவன் அறமீட்டுவதைத் தடுக்கிறது. இவ்வாறே ஒழுக்க நடைமுறைகள் அனைத்தும் காரியத்திலும், தன்மையிலும் தங்கள் தனித்தன்மையை இழப்பதைக் காணமுடிகிறது.(19) எனவே, பழங்காலத்தின் கல்விமான்களால் அறமென அழைக்கப்பட்டதே இந்த நாள் வரை அறமாக இருக்கிறது; (கல்விமான்களால் தீர்மானிக்கப்பட்ட) அந்த ஒழுக்க நடைமுறையின் மூலம் (உலகத்தை ஆளும்) வேறுபாடுகளும், வரம்புகளும் நிலைத்தவையாகிவிட்டன[10]" என்றான் {யுதிஷ்டிரன்}.(20)
[8] "துரோணரையும், அவரது வகையை {வர்ணத்தைச் சேர்ந்த} பிறரரையும் உரையாசிரியர் இங்கே குறிப்பிடுகிறார். அம்மனிதர்கள் மகாஞானிகளாகவும், சாதுக்களாகவும் கருதப்பட வேண்டியவர்கள், ஆனால் {அவர்கள் க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை நோற்றதால்} அவர்களது ஒழுக்கம் அறமென எவ்வாறு கருதப்படும்? அறத்தின் தரம் அல்லது அதன் மூலம் அறியப்படும் நல்லமனிதனை உறுதி செய்வது மிகக் கடினமாகும் என்பதையே இங்கே யுதிஷ்டிரன் சொல்ல வருகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "விஷ்வாமித்திரர், ஜாமதக்நேயர், வசிஷ்டர் ஆகியோரை உதாரணங்களாக உரையாசிரியர் குறிப்பிடுகிறார். முதலாமவர், தன் ஆயுதத் திறத்தின் மூலம் பெரும் உயர்வடைந்தார், இரண்டாமவர் ஆயுதத் தொழிலின் மூலம் பிராமணத் தன்மையை இழந்தார். மூன்றாமவர், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு விஷ்வாமித்திரரின் செருக்கைத் தண்டித்தாலும் அவன் எதையும் இழக்கவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] கும்பகோணம் பதிப்பில், "முற்காலத்தில் வித்வான்களால் நெடுங்காலம் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமானது சொல்லப்பட்டிருக்கிறது. பழமையான அந்த ஆசாரத்தினால் சாஸ்வதமான ஒரு மர்யாதை ஏற்படுகிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 260ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |