Jajali and Tuladhara! | Shanti-Parva-Section-261 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 88)
பதிவின் சுருக்கம் : அறமீட்டல் அல்லது தகுதியடைதல் குறித்த யுதிஷ்டிரனின் ஐயத்திற்கு விடையளிப்பதற்காக தவசி ஜாஜலி மற்றும் வணிகன் துலாதாரனின் கதையைச் சொன்ன பீஷ்மர்; ஜாஜலி செய்த கடுந்தவங்கள்; அவரது தலையில் குருவிகள் கட்டிய கூடு; செருக்கடைந்த ஜாஜலி; வணிகனான துலாதாரனின் பெருமையை ஜாஜலிக்குச் சொன்ன வானொலி; கோபமடைந்த ஜாஜலி துலாதாரனைத் தேடிச் சென்றது; ஜாஜலியின் வரவை அறிந்த துலாதாரன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இதுதொடர்பாகப் பழங்கதையில் துலாதாரனுக்கும், ஜாஜலிக்கும் இடையில் அறக்காரியம் குறித்து நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்டில், ஜாஜலி என்ற பெயரைக் கொண்டவரும், காட்டுத் துறவின் {வானப்பிரஸ்த வாழ்வுமுறையின்} வழிகளைப் பயின்று வந்தவருமான ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1) கடுந்தவங்களைக் கொண்ட அவர், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கடற்கரையை நோக்கிச் சென்று அங்கே மிகக் கடுமையான தவங்களைப் பயிலத் தொடங்கினார்.(2) பல நோன்புகளையும், நலந்தரும் கட்டுப்பாடுகளையும் நோற்றவரும், உபவாச விதிகள் பலவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட உணவைக் கொள்பவரும், மரவுரி மறும் தோல்களை உடுத்திய உடலைக் கொண்டவரும், தலையில் சடாமுடி தரித்தவரும், உடல் முழுவதும் புழுதியாலும், களிமண்ணாலும் பூசப்பட்டவரும், புத்திமானுமான அந்தப் பிராமணர் {ஜாஜலி}, (தியான யோகத்தில் ஈடுபட்டபடியே) பேச்சை நிறுத்தி {மௌன விரதத்துடன்} பல வருங்களை அங்கே கடத்தி வந்தார்.(3) ஓ! ஏகாதிபதி, பெருஞ்சக்தியைக் கொண்ட அந்த மறுபிறப்பாளர், (கடலின்) நீருக்குள் வசித்து வந்த போது, அனைத்துப் பொருட்களையும் காணும் விருப்பத்தால் மனோவேகத்தில் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தார்.(4) கடலால் சூழப்பட்டதும், ஆறுகள், தடாகங்கள், காடுகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான மொத்த பூமியையும் கண்ட பிறகு ஒருநாள், அந்தத் தவசி நீருக்கடியில் அமர்ந்தபடியே இவ்வகையில் நினைக்கத் தொடங்கினார்.(5)
{அவர் தமக்குள்ளேயே}, "அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகில் எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு மத்தியில் என்னுடன் உலவவும், நீருக்கடியில் வசிக்கவும் எவரால் முடியும்?" {என்று நினைத்தார்}.(6) ராட்சசர்களால் காணப்படாதவாறு அவர் தமக்குக்குள் இதை மீண்டும் சொல்லிக் கொண்டபோது, பிசாசங்கள் அவரிடம், "இவ்வாறு சொல்வது உமக்குத் தகாது. பெரும் புகழைக் கொண்டவனும், வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபடுபவனும், துலாதாரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மனிதன் {வாராணசியில்} இருக்கிறான். ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவனே கூட நீர் சொன்ன வார்த்தைகளைச் சொல்லத் தகுந்தவனல்ல" என்றன.(8) அந்தப் பூதங்களால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவருமான ஜாஜலி அவற்றிடம், "அத்தகைய ஞானம் கொண்டவனும், புகழ்பெற்றவனுமான துலாதாரனை நான் காண வேண்டும்" என்றார்.(9) அந்த முனிவர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் பூதங்கள் அவரைக் கடலில் இருந்து உயர்த்தி, அவரிடம், "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தச் சாலைவழியே செல்வீராக" என்றன.(10) இவ்வாறு அந்தப் பூதங்களால் சொல்லப்பட்ட ஜாஜலி, உற்சாகமற்ற இதயத்துடன் முன்னேறிச் சென்றார். வாராணசியை அடைந்த அவர், துலாதாரனைச் சந்தித்துப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்" என்றார் {பீஷ்மர்}.(11)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, ஜாஜலி அத்தகைய உயர்ந்த வெற்றியை அடைவதற்குக் காரணமான அந்தக் கடினமான சாதனைகள் என்னென்ன? அவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஜாஜலி கடுந்தவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் காலையிலும் மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(13) தன் நெருப்புகளை {ஹோமத்தீயைக்} கவனமாக வளர்த்த அவர், வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். வானப்பிரஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நன்கறிந்தவரான ஜாஜலி, (தமது நடைமுறைகளின் விளைவாக) பிரகாசத்துடன் சுடர்விடுபவராகத் தெரிந்தார்.(14) அவர் தவங்களைச் செய்தபடியே காடுகளில் வாழ்ந்து வந்தார். தமது செயல்களின் மூலம் எந்தத் தகுதியையும் அடைந்தவராகத் தம்மை ஒருபோதும் அவர் கருதிக் கொண்டதில்லை. மழைக்காலங்களில் அவர் திறந்த வானத்துக்கு அடியிலேயே உறங்கினார். கூதிர் காலத்தில் அவர் நீரில் அமர்ந்திருந்தார்.(15) கோடை காலத்தில் அவர் தம்மைச் சூரியனுக்கும், காற்றுக்கும் வெளிப்படுத்திக் கொண்டார். எனினும் அத்தகைய செயல்களின் மூலமும் எந்தத் தகுதியையும் ஈட்டிவிட்டதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. அவர் துன்பம் மிகுந்த பல்வேறு வகைப் படுக்கையிலும், வெறுந்தரையிலும் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.(16)
ஒரு மழைக்காலத்தில் அவர் வானத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தபோது, அவரது தலையில் மேகங்களில் இருந்து தொடர்ச்சியாக மழைத்துளிகள் விழுந்தன.(17) அவர் காடுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மழைக்கு வெளிப்பட்டதாலும், புழுதியடைந்ததாலும் அந்தப் பாவமற்ற முனிவரின் மயிர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டு சடைபிடித்தன.(18) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெருந்தவசி உணவை முற்றும் துறந்து, காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து, ஒரு மரக்கட்டையைப் போலக் காட்டில் நின்று கொண்டிருந்தார். அவர், இதயத்தில் அசைவற்றவராகவும், ஓர் அங்குலமும் ஒரு முறை கூட நகராதவராகவும் அங்கே நின்று கொண்டிருந்தார்.(19) அவர் ஒரு மரக்கட்டையைப் போல முற்றிலும் அசையாமல் நின்று கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, ஓ! மன்னா, குளிங்கப் பறவைகளின் {சிட்டுக்குருவிகளின்} ஒரு ஜோடி அவரது {ஜாஜலி} தலையில் தங்கள் கூட்டைக் கட்டின.(20) கருணையால் நிறைந்த அந்தப் பெரும் முனிவர் {ஜாஜலி}, இறகு படைத்தவையான அந்த ஜோடி புற்கற்றைகளாலான தங்கள் கூட்டை அவரது சடாமுடியில் கட்டியதைப் பொறுத்துக் கொண்டார்.(21) அந்தத் தவசி மரக்கட்டை போல அங்கே நின்று கொண்டிருக்கையில், அந்த இரு பறவைகளும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அவரது தலையில் வாழ்ந்து வந்தன.(22)
மழைக்காலம் முடிந்து கூதிர் காலம் தொடங்கியது. ஓ! மன்னா, ஆசையால் தூண்டப்பட்ட அந்த ஜோடி, படைப்பாளனின் விதிக்கிணங்க ஒன்றையொன்று அணுகி, முழு நம்பிக்கையுடன் தங்கள் முட்டைகளை அந்த முனிவரின் தலையில் இட்டன.(23) கடும் நோன்புகளையும் சக்தியையும் கொண்ட அந்தத் தவசி இஃதை அறிந்தார். பறவைகளின் இச்செயலை அறிந்த ஜாஜலி அசையாமலேயே இருந்தார். பிறருக்கு சிறு தீங்கையும் இழைக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் அறமீட்டுவதில் அவர் உறுதி பூண்டார்.(24) ஓ! பலமிக்க மன்னா, இறகுபடைத்த அந்த ஜோடி, ஒவ்வொரு நாளும் அவரது தலையில் இருந்து வெளியே சென்றும், திரும்பியும் முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்தன.(25) ஜாஜலி சிறிதும் அசையாமல் இருந்ததால், காலம் கனிந்ததும் அந்த முட்டைகள் முதிர்ந்து குஞ்சுகள் வெளியே வந்து, அந்தக் கூட்டிலேயே வளரத் தொடங்கின.(26) தமது நோன்புகளில் உறுதியானவரும் உயர் ஆன்மா கொண்டவருமான அந்த முனிவர், தொடர்ந்து அந்தக் குஞ்சுகளைத் தாங்கியபடியே முற்றிலும் அசைவற்றவராக அந்த இடத்திலேயே தியான யோகத்தில் மூழ்கி நின்றிருந்தார்.(27)
காலப்போக்கில் அந்தக் குஞ்சுகள் வளர்ந்து, சிறகுகள் படைத்தவை ஆகின. குளிங்கக் குஞ்சுகள் வளர்ந்து விட்டதை அம்முனிவர் அறிந்தார்.(28) புத்திசாலி மனிதர்களில் முதன்மையான அவர், ஒரு நாள் அந்தக் குஞ்சுகளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(29) தாய்தந்தை பறவைகள், தங்கள் குஞ்சுகள் சிறகு படைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நிறைவான முழு நம்பிக்கையுடன் அந்த முனிவரின் தலையிலே அவற்றுடன் வசிக்கத் தொடங்கின.(30) கல்விமானான ஜாஜலி, அந்தப் பறவைக்குஞ்சுகள் சிறகுபடைத்ததும் ஒவ்வொரு மாலையும் பறந்து சென்று, (வெகு தொலைவுக்குச் சென்றுவிடாமல்) மீண்டும் தம் தலைக்குத் திரும்பிவிடுவதைக் கண்டார். அவர் அந்த இடத்திலேயே இன்னும் அசைவற்றவராகவே நின்று கொண்டிருந்தார்.(31) சில காலத்திற்குப் பிறகு தாய் தந்தையர் இல்லாமலேயே அவை போவரும் வருவதுமாக இருப்பதை அவர் கண்டார். அப்போதும் ஜாஜலி அசையாமலேயே இருந்தார்.(32)
சில காலம் கழித்து, அந்தக் குஞ்சுகள் காலையில் சென்றபிறகு, முழு நாளையும் அவர் பார்வையில் இருந்து வெளியே கழித்து மாலையில் கூட்டில் வசிப்பதற்காகத் திரும்பி வந்தன.(33) மேலும் சில காலம் கழித்து, கூட்டிலிருந்து சென்று ஐந்து நாள் கழித்து ஆறாம் நாளில் அவை திரும்பின. ஜாஜலி அப்போதும் அசையவில்லை.(34) அடுத்ததாகப் பலத்தில் அவை முழுமையாக வளர்ந்து அவரை விட்டுச் சென்ற பின் பல நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை.(35) இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தில் அவரைவிட்டுச் சென்று ஒருமாதமாகியும் அவை திரும்பி வரவில்லை. ஓ! மன்னா, அப்போது ஜாஜலி அந்த இடத்தைவிட்டு அகன்றார்.(36) இவ்வாறு நன்மைக்காக அவை வெளியே சென்ற பிறகு மிகவும் ஆச்சரியமடைந்த ஜாஜலி, தவ வெற்றியைத் தாம் அடைந்துவிட்டதாகக் கருதினார். அப்போது அவரது இதயத்திற்குள் செருக்கு ஊடுருவியது.(37) நோன்புகளை உறுதியாக நோற்ற அந்தப் பெரும் தவசி, தம் தலையில் வளர்ந்த அந்தப் பறவைகள் இவ்வாறு அவரைவிட்டுச் சென்றதைக் கண்டு, தம்மைத் தாமே உயர்வாக நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார்.(38) பிறகு அவர், ஓடைக்குச் சென்று நீராடி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, உதிக்கும் சூரியனுக்குத் தம் வணக்கங்களைச் செலுத்தினார்.(39)
உண்மையில், இவ்வாறு அந்தச் சாதகப் பறவைகளைத் தம் தலையில் வளரச் செய்தவரும், தவசிகளில் முதன்மையானவருமான அந்த ஜாஜலி, தமது கக்கங்களில் அறையத் தொடங்கி {தோள்களைதட்டத் தொடங்கி}, "நான் பெரும் தகுதியை வென்றேன்" என்று வானத்தினூடாக உரக்க அறிவித்தார்.(40)
அப்போது வானத்தில் இருந்து புலப்படாத ஒரு குரல் எழுந்தது, ஜாஜலியும் அவ்வார்த்தைகளைக் கேட்டார். "ஓ! ஜாஜலி, அறத்தின்கண் நீர் துலாதாரனுக்கு இணையாகமாட்டீர்.(41) பெரும் ஞானம் கொண்ட அந்தத் துலாதாரன் வாராணசியில் வாழ்கிறான். ஓ! மறுபிறப்பாளரே, அவனும் கூட நீர் சொல்வதைச் சொல்லத் தகுந்தவனாகான்" {என்று அக்குரல் சொன்னது}.(42)
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜாஜலி, ஓ! ஏகாதிபதி, கோபத்தில் நிறைந்தவராக, துலாதாரனைச் சந்திக்கும் விருப்பத்தோடு, அமைதி நோன்பை {மௌன விரதத்தை} நோற்றும், மாலைவேளை சந்திக்கும் இடத்திலேயே அவ்விரவை கழித்தும் மொத்த பூமியிலும் திரிந்து கொண்டிருந்தார்.(43) ஒரு குறிப்பிட்ட அளவுக்கான காலத்திற்குப் பிறகு அவர் வாராணசி நகரத்தை அடைந்து சில்லறைப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துலாதாரனைக் கண்டார்[1].(44) கடைக்காரனான துலாதாரன், தன் இடத்திற்கு வந்த பிராமணரைக் கண்டதும், உற்சாகமாக எழுந்திருந்து, விருந்தினருக்கு உரிய வணக்கங்களுடன் அவரை வழிபட்டான்[2].(45)
[1] "ஒரு பனியாவின் கடை {வணிகனின் கடை} என்பது சில்லறைப் பொருட்களுக்கான அங்காடியாகும். அதில் மசாலா பொருட்களும், மருந்துகளும் முக்கியமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இத்தகையைக் கடைகளில் காணலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இது மளிகைக் கடையாக இருக்கலாம்.[2] "பாந்தஜீவனன் Bhaandajivanah என்பது முதலீட்டை வெளியே கொடுத்து அதன் பெறுதியில் {லாபத்தில்} வாழ்க்கை நடத்தும் ஒருவனைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
துலாதாரன் {ஜாஜலியிடம்}, "ஓ! பிராமணரே {ஜாஜலியே}, நீர் என்னிடம் வருகிறீர் என்பதை நான் அறிந்தேன். ஐயமில்லை. எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் சொல்வதைக் கேட்பீராக.(46) கடற்கரையின் அருகே பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டே நீர் கடுந்தவங்களைச் செய்து வந்தீர். அறத்தையோ, தகுதியையோ குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருந்தீர்.(47) இறுதியாக நீர் தவ வெற்றியை அடைந்த போது, குறிப்பிட்ட பறவைகளை நீர் உமது தலையில் தாங்கினீர். நீர் அந்தச் சிறு பறவைகளிடம் பெரும் கவனம் செலுத்தினீர்.(48) இறுதியில் அந்தப் பறவைகள் சிறகுகளைப் பெற்ற போது, இரை தேடி அங்கேயும் இங்கேயும் செல்வதற்காக அவை உமது தலையை விட்டுச் சென்ற போதும், ஓ! பிராமணரே, அந்தச் சாதகப் பறவைகளின் பிறப்புக்கு இவ்வாறு துணை புரிந்ததன் விளைவால், பெரும் தகுதியை அடைந்துவிட்டதாக நினைத்து, செருக்கின் தூண்டுதலை நீர் உணரத் தொடங்கினீர்.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது என்னைக் குறிப்பிடும் வானொலி ஒன்றை நீர் கேட்டீர். நீர் கேட்ட வார்த்தைகள் உம்மைச் சினத்தில் நிறைத்தன, அதன் விளைவாக நீர் இங்கே வந்திருக்கிறீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உமது எந்த விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {தூலாதாரன்}".(50)
சாந்திபர்வம் பகுதி – 261ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |