Friday, August 31, 2018

தீங்கிழையாமை! - சாந்திபர்வம் பகுதி – 262

Harmlessness ! | Shanti-Parva-Section-262 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 89)


பதிவின் சுருக்கம் : ஜாஜலிக்கு அறமுறைத்த துலாதாரன்; தீங்கிழையாமையே உயர்ந்த அறம் எனச் சொன்ன துலாதாரன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "புத்திசாலியான துலாதாரனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லப்பட்டவரும், தவசிகளில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான ஜாஜலி, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(1)

ஜாஜலி {துலாதாரனிடம்}, "ஓ! வணிகனின் மகனே {வைஸ்யபுத்ரா}, சாறுகளும், நறுமணமும் கொண்ட அனைத்து வகைப் பொருட்களையும், பெரும் மரங்களின் கனிகளையும், (மரப்பட்டைகளையும், இலைகளையும்), கிழங்குகளையும் நீ விற்பனை செய்கிறாய்.(2) {இவ்வாறிருக்கையில்} மெய்யுறுதி அல்லது நிலைத்த புத்தியை அடைவதில் நீ எவ்வாறு வென்றாய்? இந்த ஞானம் எங்கிருந்து உன்னிடம் வந்தது? ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, இவை யாவற்றையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக" என்று கேட்டார்".(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெரும் புகழைக் கொண்ட அந்தப் பிராமணரால் {ஜாஜலியால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், வைசிய வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவனும், அறநெறி விளக்கங்களின் உண்மைகளை நன்கறிந்தவனும், ஞானத்தில் நிறைவு கொண்டவனுமான துலாதாரன், கடுந்தவங்களை மேற்கொண்ட ஜாஜலியிடம் அறத்தின் வழிமுறைகளைக் குறித்து உரையாடினான்.(4)

துலாதாரன், "ஓ! ஜாஜலி, நித்தியமான அறத்தை அதன் புதிர்கள் அனைத்துடன் நான் அறிவேன். அஃது உலகளாவிய நட்புறவு மற்றும் அனைத்துயிரினங்களுக்கான நன்மை ஆகியவற்றைக் கொண்டதும், அனைவராலும் அறியப்பட்டதுமான பழங்கால அறத்தை {சனாதன தர்மத்தைத்} தவிர வேறேதும் இல்லை.(5) அனைத்து உயிரினங்களுக்கு முற்றாகத் தீங்கிழையாமல் இருப்பது, அல்லது (உண்மையில் தேவைப்படும் இடங்களில் மட்டும்) குறைந்த அளவு தீங்கைச் செய்வது எனும் அடிப்படையில் அமைந்த வாழ்வுமுறையே உயர்ந்த அறமாகும். ஓ! ஜாஜலி, நான் அந்த வாழ்வுமுறையின்படியே வாழ்கிறேன்.(6) என்னுடைய இவ்வீடு, மரத்தையும், புல்லையும் பயன்படுத்திப் பிறரின் கைகளால் கட்டப்பட்டதாகும். ஓ! மறுபிறப்பாள முனிவரே, செம்பஞ்சு, நீலோத்பலமலரின் வேர் {பத்மகம்}, தாமரை இதழ்கள் {துங்கம்}, பல்வேறு வகையிலான நல்ல நறுமணப் பொருட்கள், மது தவிர்த்த பல்வேறு வகைத் திரவங்கள்[1] ஆகியவற்றை நான் பிறரிடம் இருந்து கொள்முதல் செய்து, வஞ்சனை ஏதுமின்றி விற்பனை செய்து வருகிறேன்.(8) ஓ! ஜாஜலி, அனைத்து உயிரினங்களுக்கு எப்போதும் நண்பனாக இருப்பவன் எவனோ, எண்ணம், வாக்கு, செயல் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவன் எவனோ, அவனே அறமறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(9) நான் எவரிடமும் ஒருபோதும் எதையும் வேண்டுவதில்லை, எவரிடமும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடுவதில்லை; நான் ஒருபோதும் எவரையும் வெறுப்பதுமில்லை. நான் ஒருபோதும் எதனிலும் ஆசையை வளர்த்துக் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் நான் சமமான பார்வையையே செலுத்துகிறேன். ஓ! ஜாஜலி, இஃது என் நோன்பு என்பதைக் காண்பீராக.(10)

[1] "பத்மகம் Padmaka அல்லது பத்ம-காஷ்டை Padma-kaashta என்பது நிலோத்பல மலரின் வேர்த்தண்டாகும். மால்வா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் ஒருவகை மருந்து பட்டையும் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இந்த நாள் வரை இஃது இந்து {சித்த / ஆயுர்வேத} மருத்துவர்களின் பல மருந்துகளில் உட்பொருளாக அமைந்திருக்கிறது. துங்கம் Tunga என்பது தாமரை இதழ்கள், அல்லது புன்னகம் என்றழைக்கப்படும் மரத்தைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



ஓ! ஜாஜலி அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் என் தராசு முற்றிலும் சமமாகவே இருக்கும்.(11) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, வானத்தில் தென்படும் ஆச்சரியங்களைப் போலவே உலகின் வகைகளையும் காண்பதால் நான் பிறரின் செயல்களைப் புகழ்வதோ, பழிப்பதோ இல்லை[2].(12) ஓ! ஜாஜலி, நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமான பார்வையைச் செலுத்துகிறேன் என்பதை அறிவீராக. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே, மண்ணாங்கட்டி, சல்லிக்கற்கள் மற்றும் பொற்குவியல் ஆகியவற்றுக்கிடையில் நான் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை.(13) குருடர்கள், செவிடர்கள் மற்றும் அறிவிழந்தவர்கள் ஆகியோர் தங்கள் புலன்களை இழந்தததில் முற்றிலும் ஆறுதலடைவதைப் போலவே நானும் (இன்பங்களைத் தவிர்ப்பதில்) ஆறுதலடைகிறேன்[3].(14) முதுமையடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனர்கள், மெலிந்தவர்கள் ஆகியோர் எந்த வகை இன்பத்தையும் அனுபவிக்காததைப் போலவே, நானும் செல்வம் அல்லது இன்பத்தை அனுபவிப்பதை நிறுத்திவிட்டேன்.(15)

[2] "இவ்வுலகில் பல்வேறு வகையான பொருட்கள் இருக்கின்றன. எனினும், அவை வானம் காட்டும் பல்வேறு தன்மைகளைப் போன்றவையே. மேகங்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருப்பதன் விளைவால் பல்வேறு தன்மைகளை வானம் வெளிக்காட்டுவதைப் போலவே ஒரே தெய்வமே பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "தேவைரபிஹிதம் துவாராஹம் Devairapihita-dwaaraah என்பது, தேவர்களின் மூலம் (புலன்களெனும்) கதவுகள் அடைக்கப்பட்ட மனிதர்கள் என்ற பொருளைத் தரும். அதாவது புலன் பிழைகள் அல்லது புலன் இல்லாமை ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒரு மனிதன் எப்போது எதையும் அச்சுறுத்தாமலும், எதற்கும் அஞ்சாமலும் இருக்கிறானோ, எப்போது அவன் ஆசையேதும் வளர்க்காமலும், வெறுப்பேதும் கொள்ளாமலும் இருக்கிறானோ, அப்போது அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(16) ஒரு மனிதன் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பாவம்நிறைந்தவனாக எந்த உயிரினத்திடமும் நடந்து கொள்ளாதபோது, அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(17) கடந்த காலமோ, எதிர்காலமோ ஏதுமில்லை. அறமோ, மறமோ ஏதுமில்லை. எந்த உயிரினத்தின் அச்சத்திற்குரிய பொருளாகவும் இல்லாதவனே, அச்சமற்ற நிலையை அடைவதில் வெல்கிறான்[4].(18) மறுபுறம், பேச்சில் கடுமையும், தீவிரக் கோபமும் கொண்ட மனிதன், மரணத்தைப் போலவே அனைத்து உயிரினங்களின் தொல்லைக்கு மூலமாக அமைந்து, அச்சம் நிறைந்த நிலையை நிச்சயம் அடைகிறான்.(19) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதியை முறையாக நோற்றுப் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகள் {பேரர்கள்} ஆகியோருடன் சேர்ந்து வாழும் உயர் ஆன்ம நல்லோரின் நடைமுறைகளையே நான் பின்பற்றுகிறேன்.(20)

[4] "இந்நிலையும், திரும்ப வேண்டிய எந்த அச்சமும் இல்லாத பிரம்மநிலையே ஆகும். எனவே இஃது அபயம் பதம் abhayam padam என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உள்ளபடியே நல்லோராகவும், விவேகிகளாகவும் இருப்போரின் ஒழுக்கத்தில் காணப்படும் சில பிழைகளால் {குற்றங்களால்} திகைப்படையும் ஒருவன், (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) நித்திய நடைமுறைகளை முற்றிலும் கைவிடுகிறான். எனினும் கல்விமானான ஒருவன், அல்லது புலன்களை அடக்கிய ஒருவன், அல்லது மனோபலம் கொண்ட ஒருவன், அவ்வொழுக்கத்தால் வழிநடத்தப்பட்டே விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்[5].(21) ஓ! ஜாஜலி, தன் புலன்களை அடக்கி, பிறருக்குத் தீங்கிழைக்கும் ஆசைகள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த இதயத்துடன் நல்லோர் என்றழைக்கப்படுவோரால் பின்பற்றப்படும் ஒழுக்கத்தை நடைமுறையில் நோற்கும் ஞானியானவன் நிச்சயம் அறத்தகுதியை (அறத்தகுதியையும், அதன் கனியான விடுதலையையும் {முக்தியையும்}) ஈட்டுவான்.(22) ஆற்று நீரோட்டத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டு, அதே போல அடித்துவரப்படும் மற்றொரு துண்டுடன் (சில காலத்திற்குத்) தொடர்பில் இருப்பது இவ்வுலகில் காணப்படுகிறது. அந்நீரோட்டத்தில் அவ்வாறு சேர்ந்த மரத்துண்டுகள் மீண்டும் ஒன்றையொன்று விட்டுப்பிரிவதும் காணப்படுகிறது. புற்கள், குச்சிகள் மற்றும் சாணம் ஆகியவை ஒன்றோடொன்று கலப்பதும் காணப்படுகிறது. இந்தச் சேர்கை விபத்தின் மூலம் நேர்வதேயன்றி, அதற்கு ஒரு நோக்கமோ வடிவமைப்போ கிடையாது[6].(23,24) ஓ! தவசியே {ஜாஜலியே}, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கிஞ்சிற்றும் அஞ்சுவதில்லையோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ள மாட்டான்.(25)

[5] "வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளது போலவே நித்திய அற நடைமுறை இருக்கிறது. நல்லோரின் ஒழுக்கம் என்று சொல்லப்படுபவை சில வேளைகளில் சில பிழைகளால் களங்கப்பட்டிருக்கிறது. இதனால் தவறாக வழிநடத்தப்படும் மூடர்கள், அறத்தையே கைவிடுகிறார்கள். மறுபுறம் ஞானிகளோ, பிழைகளைப் புறக்கணித்து, நல்லதை எடுத்துக் கொண்டு தப்பிக்கிறார்கள் என்பது இதன் பொருளாகும். அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஞானியானவன் பாதியைக் கைவிட்டு மீதியைக் காப்பாற்றுவான் என்ற பழமொழி ஒன்றை உரையாசிரியர் குறிப்பிடுகிறார். எனினும், ஒரு மூடனோ, பாதி மட்டுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, மொத்தத்தையும் கைவிட்டுவிடுவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "ஸ்லோகம் 23ல் வரும் இஹம் iha என்ற வார்த்தை மட்டுமே பேசுபவர் இவ்வுலக உறவுகளின் சேர்க்கையை ஒப்பிட விரும்புகிறார் என்பதைச் சுட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



மறுபுறம், ஓ! கல்விமானே, எவனைக் கண்டதும் ஓநாயைக் கண்டது போல ஒவ்வொரு உயிரினமும் அஞ்சுகிறதோ, அவன் முழங்கும் வடவாக்னியிடம் கொண்ட அச்சத்தின் மூலம் கரைக்குத் தாவ நிர்ப்பந்திக்கப்படும் நீர்வாழ் விலங்கினங்களைப் போல அச்சத்தால் நிறைந்தவனாகிறான்.(26) அண்டந்தழுவிய {உலகந்தழுவிய} தீங்கிழையாமை நடைமுறை இவ்வாறே எழுந்தது. ஒருவன் தன் சக்திக்குத்தக்க அனைத்து வழிமுறைகளினாலும் இதைப் பின்பற்றலாம். தொண்டர்களுடையவனும், செல்வமுடையவனும் இதைப் பின்பற்ற முனையலாம். இது நிச்சயம் செழிப்புக்கும், சொர்க்கத்திற்கும் வழிவகுக்கும்.(27) செல்வமும் தொண்டர்களும் படைத்த மனிதர்கள், பிறரின் அச்சத்தை விலக்க இயன்றதன் விளைவாகக் கல்விமான்களால் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சாதாரண மகிழ்ச்சிக்காகவும், புகழுக்காகவும் மனிதர்கள் அண்டந்தழுவிய தீங்கிழையாமை எனும் கடமையைப் பயில்கிறார்கள்; அதே வேளையில் உண்மையில் திறனுடையவர்கள், பிரம்மத்தை அடைவதற்காக அதையே {உலகந்தழுவிய தீங்கிழையாமையை} பயில்கிறார்கள்.(28) தவங்கள், வேள்விகள், ஈகை, ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் என்னென்ன கனிகளை அனுபவிக்கிறானோ, அவை அனைத்தையும் தீங்கிழையாமை என்ற கடமையைப் பயில்வதால் பெறலாம்.(29) தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதியை அனைத்து உயிரினங்களுக்கு அளிப்பவன், வேள்விகள் அனைத்தின் மூலம் கிட்டும் தகுதியை அடைந்து, இறுதி வெகுமதியாக அச்சமற்ற தன்மையை அடைகிறான். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பதைத் தவிர மேன்மையான கடமையேதும் கிடையாது.(30)

ஓ! பெரும் தவசியே, எவனைக் கண்டு எந்த உயிரினமும் கொஞ்சமும் அஞ்சவில்லையோ, அவன் அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அச்சமில்லாத தன்மையை அடைகிறான்.(31) (உறங்கும்) அறைக்குள் {படுக்கையறைக்குள்} புகுந்த பாம்பைப் போல எவனைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறார்களோ, அவன் இம்மையிலோ மறுமையிலோ ஒருபோதும் எந்தத் தகுதியையும் அடைய மாட்டான்.(32) எந்த மனிதன் அனைத்து நிலைகளையும் விஞ்சி இருக்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ, எவன் அனைத்து உயிரினங்களையும் தன்னைப் போலவே நினைக்கிறானோ அந்த மனிதனின் பாதையில் தேவர்களே கூடத் திகைப்படைகிறார்கள்.(33) கொடைகள் அனைத்தைக் காட்டிலும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமையை உறுதியளிப்பதே (தகுதியின் அடிப்படையில்) உயர்ந்த கொடையாகும். ஓ! ஜாஜலி, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் என்னை நம்புவீராக.(34) செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன், முதலில் செழிப்பை வெல்கிறான், ஆனால் (தன் தகுதி {புண்ணியம்} தீரும்போது) அவன் மீண்டும் வறுமையையே அடைகிறான்.(35)

செயல்களில் (அவற்றின் தகுதிகளில்) அழிவைக் காணும் ஞானிகள், செயல்களை மெச்சுவதில்லை.(36) ஓ! ஜாஜலி, (மகிழ்ச்சிக்கான) ஏதோ ஒரு நோக்கத்தால் தூண்டப்படாத எந்தக் கடமையும் இங்கில்லை. எனினும் கடமை {அறம்} மிக நுட்பமானது. பிரம்மம் மற்றும் சொர்க்கம் ஆகிய இரண்டின் நிமித்தமாகவும் வேதங்களில் கடமைகள் {தர்மங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(37) கடமையின் காரியங்கள் பல ரகசியங்களையும், புதிர்களையும் கொண்டிருக்கின்றன. அவை எளிதில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக நுட்பமானவையாக இருக்கின்றன. முரண்பட்ட பல்வேறு விதிகளுக்கு மத்தியில், நல்லோரின் செயல்களைக் காண்பதன் மூலம் சிலர் கடமையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(38) காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வோர், அவற்றின் நாசிகளில் துளையிடுவோர், அவற்றைப் பெருஞ்சுமைகளைச் சுமக்கச் செய்வோர், அவற்றைக் கட்டி, பல்வேறு வகைக் கட்டுப்பாடுகளில் அவற்றை நிறுத்துவோர்,(39) அவற்றைக் கொன்று உயிரினங்களின் இறைச்சியை உண்போர் ஆகியோரை நீர் ஏன் எரிக்காமலிருக்கிறீர் {நிந்திக்காமலிருக்கிறீர்}? மனிதர்கள் சக மனிதர்களை அடிப்பதன் மூலமும், கட்டுவதன் மூலமும், கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் அவர்களை அடிமையாக்கி, பகலும் இரவும் அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவது காணப்படுகிறது. இம்மனிதர்கள், அடிப்பது மற்றும் சங்கிலிகளில் பிணைப்பது ஆகியவற்றின் விளைவால் உண்டாகும் வலியை அறியாதவர்கள் அல்ல.(41)

ஐம்புலன்களோடு கூடிய ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் தேவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். சூரியன், சந்திரன், வாயு, பிரம்மன், பிராணன், கிரது, யமன் ஆகியோர் (வாழும் உயிரினங்களுக்குள்) வசிக்கின்றனர்.(42) உயிரினங்களைக் கொண்டு வாணிபம் செய்வதன் மூலம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு பாவம் நிறைந்த நடைமுறையின் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும்போது, உயிரற்ற உடல்களை {இறைச்சியை} விற்பதில் அவர்கள் ஐயமேதும் உணர்வார்களா? வெள்ளாடு அக்னியாகும். செம்மறி ஆடு வருணனாகும். குதிரை சூரியனாகும். பூமி விராட் தேவனாகும்.(43) பசுவும் கன்றும் சோமன் {சந்திரன்} ஆகும். இவற்றை விற்கும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றியை அடைவதில்லை. ஆனால், ஓ! மறுபிறப்பாளரே, எண்ணெய் {தைலம்}, கிருதம் {நெய்}, தேன், மருந்துகள் ஆகியவற்றை விற்பதில் என்ன களங்கம் இருக்கிறது?(44) கொசுக்களும், கடிக்கும் பூச்சிகளும் இல்லாத இடங்களில் பல விலங்குகள் சுகமாகவும், வசதியாகவும் வளர்கின்றன. அவை தங்கள் தாய்க்கு அன்புக்குரியவை என்பதை அறிந்தும் மனிதர்கள் அவற்றைப் பல்வேறு வகைகளில் தண்டித்து,(45) கடிக்கும் பூச்சிகள் உள்ள புழுதிகளுக்குள் அவற்றைச் செலுத்துகின்றனர். வண்டியிழுக்கும் பல விலங்குகள் கனமிக்கச் சுமைகளால் மிகவும் ஒடுக்கப்படுகின்றன. மேலும் வேறு சில, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வகையில் நடத்தப்படுவதன் விளைவால் தளர்வடையச் செய்யப்படுகின்றன.(46) விலங்குகளுக்குத் தீங்கிழைக்கும் இத்தகைய செயல்கள், கருவைக் கொல்லும் செயலில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டதில்லை என்று நான் நினைக்கிறேன்.

உழவுத்தொழில் பாவமற்றது என மக்கள் கருதுகிறார்கள். எனினும் அத்தொழிலும் நிச்சயம் கொடுமை நிறைந்ததாகும்.(47) இரும்புக்கொழுவுடன் சேர்ந்த கலப்பையானது, மண்ணுக்கும், மண்ணில் வாழும் பல உயிரினங்களுக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது. ஓ ஜாஜலி, கலப்பையில் பூட்டப்படும் எருதுகளில் உமது கண்களைச் செலுத்துவீராக.(48) ஸ்ருதிகளில் பசுக்கள் கொல்லத்தகாதன என்றழைக்கப்படுகின்றன. ஒரு காளையையோ, பசுவையோ கொல்வதன் மூலம் அந்த மனிதன் பெரும்பாவத்தை இழைக்கிறான்.(49)

பழங்காலத்தில் புலனக்கம் கொண்ட பல முனிவர்கள் நஹுஷனிடம், "ஓ! மன்னா, சாத்திரங்களில் ஒருவனின் தாயைப் போன்ற ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பசுவைக் கொன்றிருக்கிறாய். படைப்பாளனையப் போன்றே ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு காளையையும் கொன்றிருக்கிறாய்[7].(50) ஓ! நஹுஷா, {இதன் மூலம்} நீ தீச்செயலைச் செய்திருக்கிறாய், அதைக் கண்டு நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்" என்றனர். எனினும், அவர்கள் அந்த நஹுஷனைத் தூய்மைப்படுத்துவதற்காக, அந்தப் பாவத்தை நூற்றொரு பாகங்களாகப் பிரித்து, அவற்றை நோய்களாக்கி அனைத்து உயிரினங்களுக்கு மத்தியில் விட்டனர்[8].(51) ஓ! ஜாஜலி, இவ்வாறு அந்த உயர் ஆன்ம முனிவர்கள் அனைத்து உயிரினங்களின் மேலும் அந்தப் பாவத்தைச் செலுத்தி, கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்தவனான நஹுஷனிடம், "உன் வேள்வியில் நாங்கள் ஆகுதிகளை ஊற்ற இயலாது" என்றனர்[9].(52)

[7] "ஒரு குழந்தை தாய்ப்பாலைப் பருகுவதைப் போலவே பசுவின் பாலும் அதை வளர்க்கிறது. எனவே ஒரு பசுத் தாயாக அழைக்கப்படுகிறது. பிரஜாபதி வாரிசுகளை {சந்ததிகளை} உண்டாக்கி, உணவு உற்பத்தியில் துணை புரிகிறான், எனவே, காளை பிரஜாபதியைப் போன்றதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] "நகுஷன் முனிவர்களைக் கௌரவிப்பதற்காக ஒரு பசுவையும், ஒரு காளையையும் கொன்றான். எனினும் அச்செயலில் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய முனிவர்கள், உரையில் சொன்ன வகையில் அவனிடம் இருந்த அந்தப் பாவத்தைக் கழுவினர். பிராமணனைக் கொன்ற பாவத்திலிருந்து இந்திரன் கழுவப்பட்ட நிகழ்வை இங்கே உரையாசிரியர் குறிப்பிடுகிறார். கருணை கொண்ட முனிவர்கள் அந்தப் பாவத்தைப் பெண்பாலின உயிரினங்கள் அனைத்திற்கு மத்தியிலும் பிரித்துக் கொடுத்தனர். அந்தப் பாவமே அவற்றின் பருவகால விடாயிலும், அதன் விளைவாக உண்டாகும் தூய்மையின்மையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். உரையாசிரியர், மேலே ஸ்லோகத்தில் இல்லாத பலவற்றைச் அதை விளக்குவதற்காகச் சொல்லியுள்ளதையே மேலுள்ள கங்குலியின் விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.

[9] கும்பகோணம் பதிப்பில், "ஓ ஜாஜலியே, புகழ்பெற்றவர்களும் மஹாபாக்யவான்களுமான அந்த ரிஷிகள் அந்தப் பாவத்தை நூற்றொரு ரோகங்களாகச் செய்து எல்லாப்பிராணிகளிடத்திலும் தள்ளினார்கள். உண்மையான அர்த்தத்தைக் கண்டவர்களும், மஹாத்மாக்களுமான எல்லா முனிவர்களும் நஹூஷனை ப்ரூணஹத்தி செய்தவனாகச் சொல்லுகிறார்கள். "அவன் கிருஹத்தில் நாங்கள் போஜனம் செய்யமாட்டோம்" என்று சொல்லிவிட்ட யதிகளும், சாந்தர்களுமான ரிஷிகள் ஞானத்தினால் நஹுஷனை ஆக்ஷேபித்தார்கள்" என்றிருக்கிறது.

உயர் ஆன்ம முனிவர்களும், அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களான யதிகளும், மன்னன் நஹுஷன் வேண்டுமென்றே அந்தப் பாவத்தைச் செய்ய வில்லை என்பதைத் தங்கள் தவச் சக்தியின் மூலம் உறுதி செய்த பிறகே இவ்வாறு சொன்னார்கள்[10].(53) ஓ! ஜாஜலி, இவை இப்போதும் இந்த உலகத்தில் உள்ள சில தீய மற்றும் பயங்கர நடைமுறைகளாகும். இவை பழங்காலத்தில் இருந்து அனைத்து மனிதர்களாலும் செய்யப்படுகிறது என்பதாலேயே நீர் அவற்றைச் செய்கிறீரேயல்லாமல், தூய்மையாக்கப்பட்ட உமது புத்தியின் விதிகளுக்கு ஏற்புடைய எந்தக் காரணத்தாலும் அல்ல.(54) ஒருவன், உலக நடைமுறைகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக அறிவின் மூலம் வழிநடத்தப்பட்டு எதைத் தன் கடமையாகக் கருதுகிறானோ அதையே செய்ய வேண்டும். ஓ! ஜாஜலி, தீங்கிழைப்பவன் மற்றும் என்னைப் புகழ்பவன் ஆகியோரிடம் என் நடத்தை என்ன என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பீராக.(55) அவை இரண்டையும் நான் ஒரே ஒளியிலேயே கருத்தில் கொள்கிறேன். நான் எவரையும் விரும்பவுமில்லை, எவரையும் வெறுக்கவுமில்லை. இத்தகைய ஒழுக்க நடைமுறையானது கடமை அல்லது அறத்திற்கு இணக்கமானது என ஞானிகள் மெச்சுகின்றனர்.(56) இந்த ஒழுக்க நடைமுறையே யதிகளால் பின்பற்றப்படுவதும், அறிவுக்கு இணக்கமானதுமாகும். மேன்மையான பார்வை கொண்ட கண்களுடன் எப்போதும் அறத்தை நோற்பீராக" என்றான் {துலாதாரன்}.(57)

[10] "நஹுஷன் அந்தப் பசுவையும், காளையையும் வேண்டுமென்றே கொல்லவில்லை என்று அறிந்த போதும் இவ்வகையில் அவனிடம் பேசினார்கள் என்று உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே பேசுபவரின் {துலாதாரனின்} நோக்கம், வேண்டுமென்றே செய்யப்படும்போது அச்செயல் பெருங்குற்றமாகும் என்பதைக் காட்டுவதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 262ல் உள்ள சுலோகங்கள் : 57

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்