Wednesday, September 05, 2018

புரோடாசயாகம்! - சாந்திபர்வம் பகுதி – 263

Rice-ball Sacrifice ! | Shanti-Parva-Section-263 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 90)


பதிவின் சுருக்கம் : வேள்வியின் முக்கியத்துவத்தைத் துலாதாரனிடம் எடுத்துச் சொன்ன ஜாஜலி; வேள்விகளையும் அவற்றின் தன்மைகளையும் குறித்து ஜாஜலிக்குச் சொன்ன துலாதாரன் இறுதியில் மனோவேள்வியே அனைத்து வேள்விகளிலும் முதன்மையானது என்றது...


ஜாஜலி {துலாதாரனிடம்}, "ஓ! தராசை ஏந்துபவனே {துலாதாரா}, நீ சொல்லும் இந்தக் கடமையின் போக்கு அனைத்து உயிரினங்களுக்கும் எதிராகச் சொர்க்கத்தின் வாயிலை மூடி, அவற்றின் வாழ்வுத் தேவைக்கான வழிமுறைகளைத் தடை செய்கிறது.(1) உழவில் இருந்தே உணவு தோன்றுகிறது. உனக்கும்கூட அவ்வுணவே வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஓ! வணிகனே, விலங்குகள், பயிர்கள் {தானியங்கள்} மற்றும் மூலிகைகளின் துணை கொண்டு மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(2) விலங்குகள் மற்றும் உணவில் இருந்தே வேள்விகள் தோன்றுகின்றன. உன் கோட்பாடுகள் நாத்திகத்தின் மணத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. வாழ்வாதார வழிமுறைகள் கைவிடப்பட்டால் இவ்வுலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்" என்றார் {ஜாஜலி}.(3)

துலாதாரன் {ஜாஜலியிடம்}, "வாழ்வாதார வழிமுறைகள் குறித்து நான் இப்போது சொல்லப்போகிறேன். ஓ! பிராமணரே, நான் நாத்திகனல்ல. நான் வேள்விகளைப் பழிக்கவுமில்லை. எனினும், {உள்ளபடியே} வேள்வியை அறிந்த மனிதன் மிக அரிதானவன்.(4) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியை நான் வணங்குகிறேன். அவ்வேள்வியை அறிந்தவர்களையும் நான் வணங்குகிறேன். ஐயோ, பிராமணர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேள்வியைக் கைவிட்டு க்ஷத்திரியர்களுக்குரிய வேள்விகளைச் செய்து வருகிறார்கள்[1].(5)

[1] "உண்மை என்னவென்றால், விலங்கு மற்றும் தாவர வாழ்வுக்குத் தீங்கை விளைவிக்கும் வேள்விகள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்கானவையே. பிராமணர்களுக்கான வேள்வி என்பது யோகத்தில் ஈடுபடுவது மட்டுமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மறுபிறப்பாளரே, பேராசையும், செல்வத்தில் விருப்பமும் கொண்ட நம்பிக்கையாளர்கள் பலர், ஸ்ருதிகளில் உள்ள தீர்மானங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உண்மை போலத் தோன்றுபவையும், உண்மையில் போலியானவையுமானவற்றை அறிவித்து, பல்வேறு வகை வேள்விகளையும் அறிமுகம் செய்து,(6) "இந்த வேள்வியில் இதைக் கொடுக்க வேண்டும். இந்த மற்றொரு வேள்வியில் இந்த மற்றொரு பொருள் கொடுக்கப்பட வேண்டும். இதில் முதலில் வருவது மெச்சத்தகுந்தது" என்று சொல்கிறார்கள். எனினும், ஓ! ஜாஜலி, இவையனைத்தின் விளைவாக, களவும், பல தீச்செயல்களும் எழுகின்றன[2].(7) நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்டும் வேள்விக் காணிக்கை மட்டுமே தேவர்களை நிறைவு செய்யும் என்பது அறியப்பட வேண்டும். தேவர்களை வழிபடுவதற்குரிய வணக்கங்கள், நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள், வேதம் ஓதல், செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் குறித்து  சாத்திரங்களில் அபரிமிதமான குறிப்புகள் இருக்கின்றன.(8) அறமில்லா மனிதர்கள் தங்கள் அறச்செயல்களின் மூலம் தீய வாரிசுகளை {சந்ததிகளைப்} பெறுகின்றனர். பேராசை கொண்ட மனிதர்களில் இருந்து பேராசைமிக்கப் பிள்ளைகள் தோன்றுகின்றனர், நிறைவானவர்களிடம் இருந்து நிறைவுடைய பிள்ளைகள் பிறக்கின்றனர்.(9) வேள்வி செய்பவனும், புரோகிதரும் கனியில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு (அவர்கள் செய்யும் வேள்விகள் அல்லது துணைபுரியும் வேள்விகளில்) செயல்பட்டால், அவர்களது பிள்ளைகள் களங்கமடைவார்கள். மறுபுறம், அவர்கள் கனியின் மீது ஆசை கொள்ளவில்லையெனில் அவ்வாறான ஆசையில்லாத பிள்ளைகள் அவர்களுக்குப் பிறப்பார்கள். ஆகாயத்தில் இருந்து தெளிந்த நீர் உண்டாவதைப் போல, வேள்விகளில் இருந்தே சந்ததி உண்டாகிறது.(10)

[2] "வேள்விகள் தரும் புகழினாலேயே அவை எப்போதும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அவற்றைச் செய்வது செல்வம் சார்ந்ததாகும். செல்வத்தை அடையும் காரியம், பல தீய செயல்களைச் செய்வதற்கு வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் சூரியனை நோக்கி எழுகின்றன. சூரியனில் இருந்து மழை எழுகிறது. மழையிலிருந்து உணவு எழுகிறது. உணவிலிருந்து உயிரினங்கள் பிறக்கின்றன.(11) பழங்காலங்களில்  நீதிமிக்க அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த மனிதர்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதையே அவற்றில் இருந்து வழக்கமாகப் பெற்றனர். உழாமலேயே பூமி பயிர்களை விளைவித்தது. முனிவர்கள் சொல்லும் வாழ்த்துகளே செடிகளையும், மூலிகைகளையும் உண்டாக்கின.(12) பழங்கால மனிதர்கள் ஒருபோதும், கனிகளின் மீதுள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்யவில்லை, மேலும், அவர்கள் கனிகளை அனுபவிப்பவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டதுமில்லை. தங்கள் திறனில் ஐயங்கொண்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் வேள்விகளைச் செய்வோர்,(13) தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நேர்மையற்றவர்களாகவும், வஞ்சகர்களாகவும், செல்வத்தில் மிகுந்த ஆசை கொண்ட பேராசைக்காரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்கீகாரம்பெற்ற சாத்திரங்கள் அனைத்தும் தீமையால் நிறைந்தவை என்று போலி அறிவின் துணையுடன் சொல்லும் மனிதன், இத்தகைய அவனது பாவச்செயலுக்காகப் பாவம் நிறைந்த உலகங்களுக்கே நிச்சயம் செல்வான். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அத்தகைய மனிதன் நிச்சயம் பாவம் நிறைந்த ஆன்மாவாவான், மேலும் அவன் எப்போதும் இங்கேயே ஞானமற்றவனாக இருப்பான்[3].(14,15)

[3] "ஞானமற்றவன் என்பது விடுதலை {முக்தி} அடையாமையைக் குறிக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

எந்த மனிதன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளன செயல்கள் தினமும் நிறைவேற்றப்பட வேண்டியன என்று கருதுகிறானோ, எந்த மனிதன் எந்த நாளிலாவது அவற்றை நிறைவேற்றாமல் போனால் அச்சத்தால் நிறைகிறானோ, வேள்விக்கு அடிப்படையான அனைத்தையும் பிரம்மத்தைப் போன்றே எவன் பொருள் கொள்கிறானோ, தானே செயல்புரிபவன் என்று எவன் ஒருபோதும் கருதவில்லையோ, அவனே உண்மையில் பிராமணனாவான்.(16) அத்தகைய மனிதனின் செயல்கள் {வேள்விகள்} நிறைவுபெறாமல் போனாலோ, தூய்மையற்ற விலங்குகள் அனைத்தினாலும் அவற்றின் நிறைவுக்கு முன் தடுக்கப்பட்டாலோ கூட அந்தச் செயல்கள் மேன்மையான திறம்பெற்றவையே என்று நாம் கேள்விப்படுகிறோம். எனினும், அச்செயல்களின் கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் (அவை நிறைவடைவதற்கு முன்பு இத்தகைய தடங்கல்களால் தடை) செய்யப்பட்டால், பாவக்கழிவு {பரிகாரம்} நிச்சயம் தேவை.(17) வாழ்வின் உயர்ந்த நோக்கமான (விடுதலையை) அடைய ஆசைப்படுபவர்கள், உலகம் சார்ந்த அனைத்து வகைச் செல்வத்திலும் ஆசையற்றவர்கள், எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் அலட்சியம் செய்பவர்கள், பொறாமையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் வாய்மையையும், தற்கட்டுப்பாட்டையும் தங்கள் வேள்வியாக எடுத்துக் கொள்கிறார்கள்.(18) உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்கள், பிரணவத்தைத் தியானிப்பவர்கள் ஆகியோர் எப்போதும் பிறரை நிறைவு செய்வதில் வெல்கிறார்கள்.(19) தேவர்கள் அனைவரின் ஆன்மாவாகிய அண்டந்தழுவிய பிரம்மம் (பிரணவம்), பிரம்மத்தை அறிந்தவனிடமே வசிக்கிறது. எனவே, ஓ! ஜாஜலி அத்தகைய மனிதன் உண்டு நிறைவடையும்போது, தேவர்கள் அனைவரும் நிறைவடைந்தவர்களாகிறார்கள்.(20)

அனைத்து வகைச் சுவைகளிலும் நிறைவடைந்த ஒருவன், எந்த ஒரு குறிப்பிட்ட சுவையையும் விரும்பாததைப் போலவே ஞானத்தால் நிறைவடைந்தவன், முற்றான அருள் ஊற்றாக நீடிக்கும் நிறைவை அடைகிறான்.(21) அறத்தின் புகலிடமாக இருப்பவர்களும், அறத்தில் திளைப்பவர்களுமான ஞானிகளே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற நிச்சயமான ஞானத்தை அடைந்தவர்களாவர். அத்தகைய ஞானத்தைக் கொண்ட ஒருவன், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் தன்னில் இருந்து எழுந்ததாகவே எப்போதும் கருதுவான்[4].(22) (வாழ்வெனும் இந்தப் பெருங்கடலின்) மறுகரையை அடைய முயல்பவர்களும், நம்பிக்கை நிறைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான சிலர், பேரருளை உண்டாக்குவதும், மிகப் புனிதமானதும், அறவோர் வசிப்பதும், கவலையில் இருந்து விடுபட்டு, எவ்வகையான கலக்கமோ, வலியோ இல்லாத, திரும்ப வேண்டிய அவசியமில்லாத இடமான பிரம்மலோகத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(23,24) அத்தகைய மனிதர்கள் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் ஆடம்பர வேள்விகளில் பிரம்மத்தைத் துதிப்பதில்லை. அவர்கள் அறவோரின் பாதையிலேயே நடக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகள் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழைக்காமலேயே செய்யப்படுகின்றன.(25)

[4] "அஃதாவது, அத்தகைய மனிதன், அனைத்துப் பொருட்களையும், தன்னையும் பிரம்மாகவும் கருதுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இம்மனிதர்கள், மரங்கள், மூலிகைகள், கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே வேள்விக் காணிக்கையாக அறிகிறார்கள். பேராசைமிக்கப் புரோகிதர்கள், செல்வத்தை விரும்புபவர்களாக இருப்பதால், இந்த (ஏழை) மனிதர்களின் வேள்விகளை ஒருபோதும் செய்து கொடுப்பதில்லை.(26) இந்த மறுபிறப்பாளர்களோ, தங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவடைந்தாலும்கூட, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதற்காகவும், தங்களையே வேள்விக் காணிக்கையாக்கும் விருப்பத்தாலும் வேள்விகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.(27) இந்தக் காரணத்தினால், பேராசைமிக்கப் புரோகிதர்கள், தவறாக வழிநடத்தப்படுபவர்களின் வேள்விகளில் மட்டுமே செயல்பட்டு, விடுதலையை அடைய முயற்சி செய்யாமல் சொர்க்கத்தை நாடுகிறார்கள். எனினும், உண்மையில் நல்லவர்களாக இருப்போர், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறரைச் சொர்க்கத்திற்கு உயரச் செய்கிறார்கள். ஓ ஜாஜலி, இந்த இருவகை நடத்தைகளையும் பார்த்து, (உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல்) சமமான இதயத்துடன் அனைத்து உயிரினங்களையும் நான் கருத்தில் கொள்கிறேன்.(28) ஞானம் கொண்ட முதன்மையான பிராமணர்கள் பலர், (சிலருக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லாத விடுதலைக்கு வழிவகுப்பற்றையும், சிலருக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லாத அருள் உலகங்களுக்கு வழிவகுப்பவற்றையும் என இரு வகைக் கனிகளைத் தர வல்ல) வேள்விகளைச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே, அவ்வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்கள் நடந்த பாதையில் அவர்கள் நடக்கிறார்கள்.(29) வேள்வி செய்பவர்களில் ஒருவகையினருக்கு (கனியில் உள்ள விருப்பத்தால் வேள்வி செய்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் உலகத்தில் இருந்து) திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், உண்மையில் ஞானிகளாக இருப்போருக்கு (கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் தூண்டப்படாமல் வேள்வி செய்பவர்களுக்கு) திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஓ ஜாஜலி, வேள்வி செய்பவர்களில் இரு வகையினரும் (அவர்கள் செய்யும் வேள்விகளின் விளைவால்) தேவர்கள் நடந்த பாதையிலேயே நடந்தாலும், அவர்கள் அடையும் இறுதி கதிகளில் இத்தகைய வேறுபாடு இருக்கிறது.(30)

அத்தகைய மனிதர்கள், தங்கள் மனங்களில் அமையும் காரியங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் விளைவால், உழவிற்குத் துணைபுரிவதற்காக காளைகள் எந்தவித கட்டாயமுமின்றித் தாங்களே தங்கள் தோள்களில் கலப்பையைச் சுமந்து, வண்டிகளை இழுக்கின்றன, பசுக்களும் மனிதக் கரங்களின் தீண்டலில்லாமலேயே தங்கள் மடியில் பாலைச் சுரந்து கொடுக்கின்றன.(31) அவர்கள், மனவிருப்பமெனும் எளிய செயலின் மூலம் வேள்விக் கம்புகளையும் {யூபங்களையும்} (வேள்விக்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும்) உண்டாக்கி அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வகை வேள்விகளைச் செய்கிறார்கள்[5]. இத்தகைய தூய ஆன்மாவைக் கொண்ட ஒருவனே (வேள்விக் காணிக்கையாக) ஒரு பசுவைக் கொல்லலாம்[6].(32) எனவே, அவ்வகையல்லாதோர் (விலங்குகள் இல்லாமல்) செடிகொடி மூலிகைகளுடன் கூடிய வேள்விகளையே செய்ய வேண்டும். துறவுக்கு இத்தகைய தகுதி {புண்ணியம்} இருக்கும் காரணத்தாலேயே உம்மிடம் பேசும்போது அஃதை என் கண்முன் நிறுத்தினேன்[7].(33) கனியில் {பலனில்} உள்ள விருப்பமனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, உலகக் காரியங்களில் எவன் எம்முயற்சியும் செய்வதில்லையோ, எவனிடமும் தலைவணங்காமல் எவன் இருக்கிறானோ, எவன் ஒருபோதும் பிறரைத் துதிப்பதில்லையோ, தனது செயல்கள் அனைத்தும் பலவீனமடைந்தாலும் எவன் பலவானாக இருக்கிறானோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(34) ஓ! ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன? எனினும், துறவு தொடர்பான கடமைகளை முறையாக மதிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைவான்" என்றான் {துலாதாரன்}.(35)

[5] "தேவையான பொருட்கள் அனைத்தையும் யோக சக்தியால் உண்டாக்கி உண்மையான வேள்விகளைச் செய்யாமல், அவர்கள் மனோ வேள்வியைச் செய்தார்கள் என்ற பொருள் வருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "செயல்களின் ஆதிக்கத்தைக் கடந்த ஆன்மாவாக இருப்பதால், பசுவைக் கொன்ற பாவம் அத்தகைய மனிதனை அண்டாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] "இக்காரணத்தினாலேயே நான் கனியின் மீது கொண்ட விருப்பத்தால் செயல்படும் ஒருவனின் மனோநிலையைப் புகழாமல் துறவை புகழ்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேற்கண்ட 30 முதல் 33 ஸ்லோகங்களின் உரையானது கும்பகோணம் பதிப்பில், "ஓ மஹாமுனிவரே, மனத்தை வசம் செய்த பண்டிதர்கள் எப்பொழுதும் யஜ்ஞத்திலேயிருக்கிற காரணத்தினால் தேவையானமென்கிற மார்க்கத்தினால் போகிறார்கள். ஓ ஜாஜலியே! உள்ளபடியே இருவரும் தேவையானமென்னும் மார்க்கத்தில் போகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு திரும்பி வருவது உண்டு. மனத்தை அடக்கினவனுக்குத் திரும்பி வருதலில்லை. இவர்களுக்கு மனத்தின் ஸங்கற்ப ஸித்திகளால் எருதுகள் தாமாகவே வந்து சேருகின்றன; வகிக்கவும் செய்கின்றன்ன; பசுக்களும் தாமாகவே கறக்கின்றன.அவர்கள் தாங்களே சங்கற்பத்தினால் யூபங்களைப் பெற்று எளிதிலடையப்பட்ட தக்ஷிணையுடன் யாகஞ்செய்கிறார்கள். அவ்வாறு ஆத்மத்யானத்தோடிருப்பவன் கோவை ஆலம்பனம் செய்யத் தகுதியுள்ளவன். பிராம்மணரே, ஆனாலும், அவர்கள் தானியங்களால் யாகஞ்செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஸ்ரத்தையுடன் கோவைக் கட்டி யாகஞ்செய்யமாட்டார்கள். அந்த உண்மையை உமக்குச் சொல்கிறேன்" என்றிருக்கிறது.

ஜாஜலி, "ஓ!வணிகனின் மகனே {வைஸ்யா}, மனோவேள்விகளை மட்டுமே செய்யும் தவசிகளின் இந்த மறைபொருள் கோட்பாடுகளை இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே நான் (அவற்றைக் குறித்து) உன்னிடம் கேட்கிறேன். பழங்காலத்தின் தவசிகள் இந்த யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களில்லை. எனவே அவர்களுக்கு அடுத்த வந்த தவசிகள் (பொதுவான ஏற்புக்கு) அவற்றை எடுத்துரைக்கவில்லை.(36) அறிவற்ற மனம் கொண்டோர் மட்டுமே ஆன்ம மண்ணில் வேள்விகளைச் செய்யத் தவறுபவர்கள் என நீ சொல்வாயென்றால், ஓ! வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள்? ஓ பெரும் ஞானியே, இஃதை எனக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் எனக்குப் பெரிதான நம்பிக்கை இருக்கிறது" என்றார் {ஜாஜலி}.(37)

துலாதாரன், "சில வேளைகளில் சிலரால் செய்யப்படும் வேள்விகள் (அவற்றைச் செய்பவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளைவால்) வேள்விகளாவதில்லை. இந்த மனிதர்கள் (அகம் மற்றும் புறமென) எந்த வேள்வியையும் செய்யத் தகாதவர்கள் என்று சொல்லப்பட வேண்டும். எனினும், நம்பிக்கை நிறைந்தவர்களைப் பொறுத்தவரையில், பசுவானவள் தன்னிடமிருந்து தெளிந்த நெய், பால், தயிர், வால் முனையிலுள் முடி, கொம்புகள், குளம்புகள் ஆகியவற்றை முழுமையாகக் காணிக்கை அளிப்பதன் மூலம் அவள் {பசு} மட்டுமே அனைத்து வேள்விகளையும் தாங்கத் தகுந்த ஒரே பொருளாக இருக்கிறாள்[8].(38) (திருமணமாகாத மனிதர்கள் வேள்விகளைச் செய்யக் கூடாது என வேதங்கள் அறிவிக்கின்றன). எனினும், நான் சொன்னபடியே (விலங்குகளைக் கொல்லாமல், தெளிந்த நெய் முதலிய காணிக்கைகளை மட்டுமே அர்ப்பணித்துச் செய்யப்படும்) வேள்விகளைச் செய்வதால் ஒருவன், தன் நம்பிக்கையையே மனைவியாகக் கொண்டு இத்தகைய (குற்றமற்ற) காணிக்கைகளைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் . இத்தகைய வேள்விகளை முறையாக மதிப்பதால், ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைகிறான்.(39) (வேள்விக் காணிக்கையாக அளிக்கப்பட நிச்சயம் தூய்மையற்றவையான) விலங்குகள் அனைத்தையும் தவிர்த்து, வேள்விகளில் அரிசிப் பந்தைக் காணிக்கையாக அளிப்பதே {புரோடாசயாகமே} தகுந்ததாகும். அனைத்து ஆறுகளும் சரஸ்வதியைப் போன்று புனிதமானவையே, அனைத்து மலைகளும் புனிதமானவையே.(40) ஓ ஜாஜலி, ஆன்மாவே தீர்த்தமாகும் {புண்ணியத்தலமாகும்}. புனிதத்தலங்களுக்குச் செல்வதற்காக உலகில் திரியாதீர். (எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல் நான் சொன்ன வகையில்) இக்கடமைகளைச் செய்வதன் மூலமும், தன் திறனுக்குத்தகுந்த தகுதியை ஈட்டுவதன் மூலமும் ஒருவன் மறுமையின் அருள் உலகங்களை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்" என்றான் {துலாதாரன்}.(41)

[8] {இங்கே சொல்லப்படுவது என்னவென்றால்: சில மனிதர்கள் செய்யும் சில வேள்விகள் அவர்களது நம்பிக்கையின்மையால் பொய்த்துப் போகலாம். இத்தகைய மனிதர்கள் எந்த வேள்வியையும் (மனோ வேள்வியையோ அல்லது வெளிப்படையான வேள்விகளையோ) செய்யத்தகுந்தவர்கள் இல்லை. எனினும் வெள்வி செய்வது எளிதானதே. பசுவும் அவை தரும் பொருட்களும் அனைத்து வேள்விகளையும் தாங்கவல்லவை. இயன்றோரைப் பொறுத்தவரையில், நெய், பால், தயிர் எனத் தாங்கள் விரும்பிய அளவுக்குப் போதுமான வகையில் முழுக் காணிக்கையளிக்க முடியும். வறியவர்களைப் பொறுத்தவரையில், பசுவின் குளம்படி புழுதியும், பசுவின் வாலில் உள்ள நீரும், அவற்றின் கொம்புகளில் உள்ள நீரும் அவர்களின் வேள்விகளைச் செய்ய முற்றிலும் போதுமானவையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அறிவுக்குப் பொருத்தமானவையும், நல்லோர் மற்றும் ஞானிகளால் எப்போதும் பயிலப்படுபவையுமான இந்தக் கடமைகளையே துலாதாரன் மெச்சினான்" என்றார்.(42)

சாந்திபர்வம் பகுதி – 263ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top