Dharmadarsana ! | Shanti-Parva-Section-264 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 91)
பதிவின் சுருக்கம் : ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது...
துலாதாரன், "ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக" என்றான்".(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்போது ஜாஜலியால் அழைக்கப்பட்ட அந்தப் பறவைகள், எவ்வுயிருக்கும் எத்தீங்குமிழைக்காத அவ்வறத்தின் விதிகளுக்கு ஏற்ப பதிலளித்தன.(5) {அப்போது அந்தப் பறவைகள்}[1]"எவ்வுயிரினுக்கும் தீங்கிழைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் (அவற்றைச் செய்தவனுக்கு) பயன்படத்தக்கனவாக இருக்கின்றன. எனினும், பிறருக்குத் தீங்கு செய்து செய்யப்படும் செயல்களோ, நம்பிக்கையை அழிக்கின்றன, நம்பிக்கை அழிந்ததும், அஃதை அழித்தவனும் {அந்தச் செயல்களைச் செய்தவனும்} அழிவடைகிறான்.(6) அடைவதையும், அடையாமல் போவதையும் ஒரே ஒளியில் கருதுவோர், நம்பிக்கையுடன் கூடியோர், தற்கட்டுப்பாடுடையோர், அமைதியான மனம் கொண்டோர், (கனியின் மீது கொண்ட விருப்பத்தால் அல்லாமல்) கடமையுணர்வால் வேள்விகளைச் செய்வோர் ஆகியோரால் செய்யப்படும் வேள்விகள் கனியை உண்டாக்குகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, பிரம்மத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கை {ஸ்ரத்தை} என்பவள் சூரியனின் மகளாவாள். நம்பிக்கை என்பது (வேத) மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் பிறக்கும் தகுதியை {புண்ணியத்தை} விட மிக மேன்மையானதாகும்.(8) பேச்சுக் குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலானது நம்பிக்கையின் மூலம் காக்கப்படுகிறது. மனக்குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலும் நம்பிக்கையால் காக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை இன்மையால் தரம் தாழ்ந்த ஒரு செயலை வாக்காலோ, மனத்தாலோ ஒருபோதும் காக்க முடியாது[2].(9)
[1] இங்கே ஜாஜலியிடம் யார் பேசுவது என்ற குறிப்புக் கங்குலியில் இல்லை; கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "உடனே அந்த ஜாஜலி தர்மத்தினால் அந்தப் பக்ஷிகளை அழைக்க, (அவை) தர்மத்தைப் பற்றிய வார்த்தைகளால் மறுமொழி சொல்லின. துலாதாரன், "ஓ பிராமணரே, கொல்லாமை முதலானவையே இம்மைக்கும் மறுமைக்கும் போதுமான தர்மம்" என்று துலாதாரனே சொல்லத்தொடங்குகிறான். ஆனால் பிபேக் திப்ராயின் பதிப்பிலோல் அந்தப் பறவைகள் பேசியதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த இடத்தில் பறவைகள் பேசத் தொடங்குவதாகவே தெரிகிறது. 18ம் ஸ்லோகத்தில் இதற்குரிய திறப்புக் கிடைக்கிறது.[2] "பேச்சுக்குறைபாடு என்பது மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பதாகும். மனக்குறைபாடு என்பது பதற்றம் மற்றும் அக்கறையின்மை முதலியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில் நேர்ந்தவற்றை அறியும் மனிதர்கள், இது தொடர்பாகப் பிரம்மன் பாடிய பின்வரும் ஸ்லோகத்தைக் குறிப்பிடுகின்றனர். (உடலாலும் செயல்களாலும்) தூய்மையான, ஆனால் நம்பிக்கையில்லாத {ஸ்ரத்தையில்லாத / அக்கறையில்லாத} ஒரு மனிதனின் வேள்விக் காணிக்கைகளையும், (உடலாலும், செயல்களாலும்) தூய்மையற்ற, ஆனால் நம்பிக்கையுள்ள {ஸ்ரத்தையுள்ள / அக்கறையுள்ள} மற்றொருவனின் வேள்விக் காணிக்கைகளையும் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) ஒன்றாகவே கருதினார்கள். வேதங்களை அறிந்தவனும் கஞ்சனுமான ஒருவனின் உணவையும், வட்டித் தொழில் செய்பவனும் தயாளனுமான மற்றொருவனின் உணவையும்(10,11) கவனமாகக் கருத்தில் கொண்ட தேவர்கள் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) அவற்றை ஒன்றாகவே ஏற்றனர். அப்போது, உயிரினங்கள் அனைத்தின் உயர்ந்த தலைவன் (பிரம்மன்) அவர்கள் பிழை செய்துவிட்டதாக அவர்களிடம் சொன்னான்.(12) தயாளனின் உணவு நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டது. எனினும், நம்பிக்கையற்றவனின் உணவோ அத்தகைய நம்பிக்கையின்மையின் விளைவால் ஒன்றுக்குமாகாததாகிறது. வட்டிக்கு விடும் தயாளனின் உணவு ஏற்புடையது, ஆனால் கஞ்சனின் உணவோ ஏற்பில்லாததாகும்.(13) இவ்வுலகில், நம்பிக்கையில்லாதவன் {ஸ்ரத்தையில்லாதவன் / அக்கறையில்லாதவன்} என்ற ஒருவன் மட்டுமே தேவர்களுக்குக் காணிக்கையளிக்கத் தகாதவனாவான். அத்தகைய மனிதனின் உணவு மட்டுமே உண்ணத்தகாததாகும். இதுவே கடமைகள் அறிந்த மனிதர்களின் கருத்தாகும்.(14)
நம்பிக்கையின்மை {ஸ்ரத்தையின்மை / அக்கறையின்மை} பெரும்பாவமாகும். நம்பிக்கையே பாவங்களைக் கழுவுகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பதைப் போலவே, நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறான்.(15) நம்பிக்கையுடன் கூடிய துறவறமானது, புனிதமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் மேன்மையானதாகும். நடத்தையில் உள்ள களங்கள் அனைத்தையும் தவிர்க்கும் ஒருவன் நம்பிக்கையுடன் இருப்பதால் புனிதமடைகிறான்.(16) அத்தகைய மனிதனுக்குத் தவங்கள், நடத்தை அல்லது பொறை ஆகியவற்றிற்கான தேவையென்ன இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களே. எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் பாதிக்கப்பட்ட மூன்று வகை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதன்படியாக ஒருவன் கொண்ட நம்பிக்கை வகையின் அடிப்படையிலேயே அவன் அழைக்கப்படுகிறான்.(17) நல்லியல்பு மற்றும் அறநெறியின் உண்மையான உள்ளொளியைக் கொண்டவர்களே இவ்வாறான கடமைகளை விதித்திருக்கின்றனர். எங்கள் விசாரணையின் விளைவால் இவை யாவற்றையும் தர்மதர்சனர் என்ற தவசியிடம் இருந்து நாங்கள் பெற்றோம்.(18) ஓ! பெரும் ஞானியே {ஜாஜலியே}, நம்பிக்கை கொண்டால் மேன்மையான நிலையை {பரத்தை} அடைவீர்; எனவே நம்பிக்கை கொள்வீராக. எவன் (ஸ்ருதிகளின் தீர்மானங்களில்) நம்பிக்கையுடனிருக்கிறானோ, (அவை தனக்கான நன்மைக்கானவை என்ற நம்பிக்கையில்) அவை சொன்னவற்றின்படி எவன் செயல்படுகிறானோ அவன் நிச்சயம் அற ஆன்மா {தர்மாத்மா} ஆவான். {நம்பிக்கையுடன் கூடிய இந்த வணிகன் {துலாதாரன்}, நம்பிக்கையெனும் அறத்தைப் பின்பற்றுகிறான்}. ஓ! ஜாஜலி, எவன் (நம்பிக்கையின் ஆதிக்கத்தின் கீழ்) தன் பாதையைப் பின்பற்றுவானோ அவன் மேன்மையானவனாவான்" {என்றன அப்பறவைகள்}".(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் ஞானம் கொண்டவர்களான துலாதாரன் மற்றும் ஜாஜலி ஆகிய இருவரும் சொர்க்கத்திற்கு உயர்ந்து,(20) தாங்கள் செய்த செயல்களால் ஈடப்பட்ட தங்களுக்குரிய இடங்களை அடைந்து அங்கேயே மகிழ்ச்சியில் திளைத்தனர்.[3] இந்த வகையிலான பல உண்மைகள் துலாதாரனால் சொல்லப்பட்டன.(21) அந்தத் திறமிக்க மனிதன் (தீங்கிழையாமை என்ற) இவ்வறத்தை முழுமையாகப் புரிந்து கொண்டான். இந்த நித்திய கடமைகள் அவனாலேயே {துலாதாரனாலேயே} அறிவிக்கப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கொண்டாடத்தக்க சக்தியைக் கொண்ட துலாதாரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மறுபிறப்பாளரான ஜாஜலி அமைதியடைந்தார். இவ்வழியில் துலாதாரன் சொன்ன பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல உண்மைகள் போதனைக்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ கேட்க விரும்பும் பிற உண்மைகள் யாவை?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(23)
[3] "இங்கே திவம் Divam என்ற வார்த்தை ஹார்தாகாசத்தைக் Haardaakaacam குறிப்பதாக எண்ணி உரையாசிரியர் பொருள் கொண்டிருக்கிறார். அவர்கள் (சொர்க்கத்தின் சாதாரண இன்பநிலையில் திளைக்காமல்) யோகபலத்தில் திளைத்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்வல்பகாலத்தில் மஹாபுத்திமான்களான அந்த ஜாஜலியும் துலாதாரனும் ஸ்வர்க்கத்தை அடைந்து தங்கள் கர்ம பலத்தினால் உண்டு பண்ணப்பட்ட தங்கள் தங்கள் ஸ்தானத்தை அடைந்து ஸுகமாகக் களித்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருவரும் சொர்க்கமடைந்து மகிழ்ச்சியில் திளைத்ததாகவே இருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 264ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |