Religious merit without wasting body! | Shanti-Parva-Section-265 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 92)
பதிவின் சுருக்கம் : கொல்லாமை குறித்து மன்னன் விசரக்கு சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கொல்லாமையைப் பயிலும்போது, உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்காமல் அறம் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
{யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, "ஒரு விதமான தீங்கையும் செய்யாதவர்கள் தங்கள் உடலையும், ஆபத்துகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாதவனுக்கு உடற்பயணம் எவ்வாறு நடக்கும்?" என்று கேட்டான்}.[1]
[1] சென்ற பகுதியில் பீஷ்மர் "இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்" என்று யுதிஷ்டிரனிடம் கேட்கிறார். அடுத்தப் பகுதியின் தொடக்கத்திலேயே எத்தொடர்பும் இல்லாமல் ஒரு கதையைச் சொல்ல விழைகிறார். கும்பகோணம் பதிப்பில் யுதிஷ்டிரன் கேட்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இக்கேள்வி இல்லை.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இதுதொடர்பாக, உயிரினங்கள் அனைத்திடமும் தான் கொண்ட கருணையின் மூலம் மன்னன் விசரக்கு {விசக்யு / விசக்நு /விசக்கண்ணன்} சொன்ன பழைய உரை குறிப்பிடப்படுகிறது.(1) உடல் சிதைக்கப்பட்ட ஒரு காளையைக் கண்டும், பசுவேள்வியில் கொல்லப்படும் பசுக்களின் வலிமிக்க வேதனைக் குரலைக் கேட்டும்,[2] விழாக்களில் துணைபுரிய அங்கே திரளும் கொடூரப் பிராமணர்களைக் கண்டும் அம்மன்னன் {விசரக்கு} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் செழிக்கட்டும்" {என்றான்}. கொல்லத்தொடங்கும்போது (அந்த ஆதரவற்ற விலங்களுக்கு) ஆசி கூறும் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டன.(3) மேலும் அந்த ஏகாதிபதி, "வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறுபவர்கள், புத்தியற்றவர்கள், நாத்திகர்கள் மற்றும் ஐயுறுவாதிகள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் மூலம் புகழை அடைய விரும்புவோர் ஆகியோர் மட்டுமே வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுவதை உயர்வாகப் பேசுகிறார்கள்.(4) அற ஆன்மாவான மனு, (அறச்) செயல்கள் அனைத்திலும் தீங்கிழையாமையை மெச்சுகிறார். உண்மையில் மனிதர்கள், கனியிலுள்ள {பலனில்} விருப்பத்தால் தூண்டப்பட்டே வேள்விகளில் விலங்குகளைக் கொல்கிறார்கள்.(5)
[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த அரசன் யஜ்ஞசாலையில் யூபத்தை முறித்துக் கொண்டு நிற்கும் விருஷபத்தையும், தொழுவத்தில் (துன்பத்தையடைகையில்) விருஷபங்களுடைய மிகுதியா சப்தத்தையும் பார்த்து, "கோக்களுக்கு க்ஷேமமுண்டாக வேண்டும்" என்று பிரார்த்தித்தான்" என்றிருக்கிறது.
எனவே, (கொலை மற்றும் கொல்லாமை அல்லது தீங்கிழையாமை ஆகியவற்றைப் பொறுத்தவரையில்) அதிகாரமுடையவற்றை (சாத்திரங்களை) அறிந்த ஒருவன், அவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்த மிக நுட்பமான, உண்மையான கடமையின் போக்கையே பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(6) ஒருவன், வசிப்பாரற்ற இடத்தின் அருகில் வாழ்ந்து, கடும் நோன்புகளைப் பயில்வதைப் பழகி, வேதச் செயல்களால் {அறச்சடங்குகளில்} குறிப்பிடப்படும் கனிகளை {பலன்களை} அலட்சியம் செய்து, இல்லறத்தைக் கைவிட்டு துறவற வாழ்வுமுறையைப் பின்பற்ற வேண்டும்.(7) வேள்விகள், மரங்கள் மற்றும் யூபங்களை உயர்வாக மதிப்பிடும் மனிதர்கள் களங்கமுடைய இறைச்சியை {மட்டும்} உண்ணமாட்டார்கள். எனினும், இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை[3].(8) கள், மீன், இறைச்சி, மது {ஆஸவம் / சாராயம்}, அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் பண்டங்கள், எள் {திலான்னம்} ஆகியன கபடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. (வேள்விகளில்) இவற்றைப் பயன்படுத்த வேதங்களில் விதிக்கப்படவில்லை.(9) செருக்கு, தீர்மானப்பிழை {மயக்கம்} மற்றும் பேராசை ஆகியவற்றிலிருந்து இவற்றின் மீது விருப்பம் ஏற்படுகிறது[4].
[3] "சாதாரண மனிதர்கள், அறச்செயல் நடைமுறைகளிலும், வேள்விகளிலும் கொல்லப்படாத விலங்குகள் அனைத்தில் இருந்தும் கிடைக்கும் இறைச்சியைக் களங்கமுடையதாகக் கருதி அவ்விறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். எனினும், இங்கே பேசுபவர் {விசரக்கு}, வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் அனைத்தின் இறைச்சியும் கூடக் களங்கமுடையவை என்பதால் இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை என்று சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "தூர்த்தர்களால் கள், மீன், தேன், மாம்ஸம், ஆஸவம் (சாராயம்), திலான்னம் {எள் எண்ணெய் கலந்த அன்னம்} இவை (முதலானை) உண்ணப்படுகின்றன. இவை வேதங்களில் சொல்லப்படவில்லை. காமத்தினாலும், லோபத்தினாலும், மோகத்தினாலும் இவைகளில் விருப்பம் வைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இறைச்சி, மது, சுரா, மீன், அஸவம் மற்றும் கிரிசரம் ஆகியவற்றை வஞ்சகர்கள் எண்ணினார்கள். அவை வேதங்களால் எண்ணப்படவில்லை. ஆசை, குழப்பம் மற்றும் பேராசை ஆகியனவே இந்தச் சபலங்களை அறிமுகப்படுத்தின" என்றிருக்கிறது.
உண்மையான பிராமணர்கள், ஒவ்வொரு வேள்வியிலும் விஷ்ணுவின் இருப்பை உணர்கிறார்கள்.(10) இனிய பாயசத்துடன் அவனது {விஷ்ணுவின்} வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் (அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள்),(11) தூய இதயம் கொண்டோர், தூய இயல்பு கொண்டோர் மற்றும் திறன்மிக்க ஞானமும், புனிதமும் கொண்டோரால் தகுந்ததாகக் கருதப்படும் எந்தச் செயலும், அவர்களால் தூய்மையானதாகக் கருதப்படும் வேறு எதுவும் அந்த உயர்ந்த தேவனுக்குக் காணிக்கையாக அளிக்கத்தகுந்தவையே; இவை அவன் ஏற்கத் தகாதவையல்ல" என்றார் {பீஷ்மர்}.(12)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உடலும், அனைத்து வகை ஆபத்துகளும், பேரிடர்களும் தொடர்ந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தீங்கு செய்யும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவனும், இக்காரியத்தில் செயல்பட இயலாதவனுமான ஒருவன் தன் உடலைப் பராமரித்துக் கொள்வதில் எவ்வாறு வெல்ல முடியும்?" என்று கேட்டான்[5].(13)
[5] "ஆபத்துகள் எப்போதும் உடலை அழிக்க முனைகின்றன. உடலானது அந்த ஆபத்துகளை அழிக்க எப்போதும் முனைகிறது. இந்த இடைவிடாத போர் அல்லது போராட்டம் தீங்கிழைக்கும் விருப்பத்தையே குறிக்கிறது. எனவே, இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே தீங்கு செய்ய வேண்டியுள்ளதால், முற்றிலும் தீங்கிழையாத வாழ்வை எந்த மனிதனாலும் எவ்வாறு வாழ முடியும் என்பது யுதிஷ்டிரனின் கேள்வி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர், "ஒருவன் தகுதியை அடைய இயலும்போது, தன் உடல் நலிவுறாமலும், வலியை அனுபவிக்காமலும், அவனுக்கு மரணம் நேராத வகையிலும் செயல்பட வேண்டும்" என்றார்[6].(14)
[6] "ஒருவன் தன் உடலை வீணாக்காமல் அறத்தகுதியை ஈட்ட வேண்டும்; தகுதியை ஈட்டுவதற்காக அவன் தன் உடலை அழித்துக் கொள்ளக்கூடாது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 265ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |