Gautama and Ahalya! | Shanti-Parva-Section-266 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 93)
பதிவின் சுருக்கம் : காரணங்களை ஆராய்ந்து காரியம் செய்வதற்கு உதாரணமாகச் சிரகாரினின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சிரிகாரினிடம் அவரது தாய் அஹல்யையின் தலையை வெட்ட உத்தரவிட்ட கௌதமர்; தாமதித்த சிரகாரின்; வருந்திய கௌதமர்; சிரிகாரின் அகலிகையைக் கொல்லாததைக் கண்டு மகிழ்ந்த கௌதமர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, (ஒருபுறம் பெரியோரின் கட்டளைகளும், மறுபுறம் அவற்றில் உள்ள கொடூரங்களும் இருக்கும் விளைவால்) நிறைவேற்றக் கடினமான செயல்கள் அனைத்தின் காரியத்திலும் நீரே எங்களுடைய பேராசானாக {உத்தம குருவாக} இருக்கிறீர். ஒரு செயலானது ஒருவனுடைய கடமையா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை அவன் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? அது விரைவாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா, தாமதமாகத் தீர்மானிக்கப்பட வேண்டுமா?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக அங்கிரஸக் குலத்தில் பிறந்த சிரகாரினின் {சிரகாரி} பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் இரட்டிப்பாக அருளப்படுவானாக. செயல்படுவதற்கு முன்னால் நீண்ட காலம் சிந்திப்பவன் நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவான். அத்தகைய மனிதன் எந்தச் செயலிலும் ஒருபோதும் குற்றமிழைப்பதில்லை.(3) ஒரு காலத்தில் கௌதமரின் மகனும், சிரகாரின் என்ற பெயரைக் கொண்டவரும், பெரும் விவேகியுமான ஒரு மனிதர் இருந்தார். அவர் தாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு, நீண்ட காலம் சிந்தித்த பிறகே அவற்றைச் செய்து வந்தார்.(4) அனைத்துக் காரியங்களிலும் நீண்ட காலம் சிந்திப்பதாலும், நீண்ட காலம் விழித்திருப்பதாலும், நீண்ட காலம் உறங்குவதாலும், தாம் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தம்மை நிறுவி கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாலும் {ஒரு வேலையை நீண்ட காலம் செய்வதாலும்} சிரகாரின் என்ற பெயரால் அவர் அழைக்கப்படலானார்.(5)
இதனால் அவர் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார். சிறுமதி கொண்ட, முன்னறிதிறன் அற்ற ஒவ்வொருவராலும் அவர் மூடர் என்றே கருதப்பட்டார்.(6) ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தந்தை கௌதமர், தமது மனைவியிடம் {அகலிகையிடம் / அஹல்யையிடம்} பெரும் செயற்பிழையொன்றைக் கண்டு, தமது பிள்ளைகள் பிறரைக் கடந்து சென்று இந்தச் சிரகாரினிடம் கோபத்துடன், "இந்தப் பெண்ணைக் கொல்வாயாக" என்று சொன்னார்.(7) கல்விமானும், யோகப் பயிற்சியில் ஈடுபடுவோரில் முதன்மையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான கௌதமர், பெரிதாகச் சிந்திக்காமல் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.(8) "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி ஏற்றுக் கொண்ட சிரிகாரின், தம் இயல்பின் விளைவாலும், நீண்ட காலம் சிந்திக்காமல் ஒருபோதும் எந்தவொரு செயலையும் செய்யாத அவரது வழக்கத்தாலும், (தமது தந்தை சொன்னதில் உள்ள முறைமை மற்றும் முறையின்மை குறித்து) நீண்ட காலம் சிந்திக்கத் தொடங்கினார்.(9)
{அவர் தமக்குள்ளேயே}, "என் தந்தையின் கட்டளைக்கு எவ்வாறு நான் கீழ்ப்படியப் போகிறேன்? என் தாயைக் கொல்வதை எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்? முரண்பட்ட கடமைகள் எதிரெதிர் திசையில் என்னை இழுக்கும் இந்தச் சூழ்நிலையில், தீய மனிதனைப் போல மூழ்கப் போவதை நான் எவ்வாறு தவிர்க்கப் போகிறேன்?(10) தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்}. தாயைப் பாதுகாப்பதும் தெளிவாகக் கடமையே ஆகும். ஒரு மகனின் நிலை சார்பு நிறைந்ததாகும். பாவம் பீடிப்பதை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்?(11) ஒரு பெண்ணை, அதிலும் தன் தாயைக் கொன்றுவிட்டு எவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மேலும் தன் தந்தையை அலட்சியம் செய்வதன் மூலம் எவனால் செழிப்பையும், புகழையும் அடைய முடியும்?(12) தந்தையின் ஆணையை மதிப்பதே கடமையாகும். என் தாயைக் காப்பதும் அதற்கு இணையான கடமையே ஆகும். இரு கடமைகளையும் செய்யும் வகையில் நான் எவ்வாறு என் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ளப் போகிறேன்?(13) தந்தையானவர், தமது நடைமுறைகள் {சீலம்}, ஒழுக்கம் {ஆசாரம்}, பெயர் {கோத்ரம்} மற்றும் குலம் ஆகியவற்றைத் தொடர்வதற்காகத் தாயின் கருவறையில் தம்மையே வைத்து மகனாகப் பிறக்கிறார்.(14) நான் என் தாயாலும், தந்தையாலும் அவர்களது மகனாகப் பெறப்பட்டேன். என் தோற்றத்தை அறிந்த நான் (அவர்கள் இருவரிடம் நான் கொண்ட உறவுமுறை குறித்த) இந்த அறிவை ஏன் கொள்ளக் கூடாது?(15)
பிறப்புக்குப் பிறகு நடக்கும் முதல் சடங்கை {ஜாதகர்மத்தைச்} செய்யும்போது தந்தையால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், (ஆசானின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு நடக்கும்) துணைச் சடங்கில் {உபகர்மத்தில்} அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், அவருக்குரிய மரியாதையைத் தீர்மானிப்பதில் போதுமானவையாகவும் (போதுமான சாட்சியாகவும்), உண்மையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை உறுதி செய்யும் வகையிலும் இருக்கின்றன[1].(16) மகனை வளர்த்து, அவனுக்குப் போதிக்கும் விளைவால் பெரியோர் அனைவரிலும் முதன்மையானவராக, உயர்ந்த அறமுமாகத் தந்தையே இருக்கிறார். தந்தை சொல்வதையே தன் உயர்ந்த கடமையாக மகன் கருத வேண்டும் என்று வேதங்களே விதித்திருக்கின்றன.(17) தந்தைக்கு மகன் மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாவான். எனினும் மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார். மகன் கொண்ட உடலையும், வேறு அனைத்தையும் கொடுத்தவர் தந்தையே ஆவார்.(18) எனவே, ஒருபோதும் சிறு கேள்வியேனும் கேட்காமல் அவரது கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். தன் தந்தைக்குக் கீழ்ப்படிபவனின் பாவங்கள் (அத்தகைய கீழ்ப்படிதலால்) கழுவப்படுகின்றன.(19) அனுபவிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும், உணவுப் பொருட்கள் அனைத்தையும், வேத போதனைகளையும், உலகம் குறித்த பிற அறிவு அனைத்தையும் தந்தையே கொடுக்கிறார். (மகன் பிறப்பதற்கு முன்னர்) கர்பாதானம் மற்றும் சீமாந்தோன்னயனம் ஆகிய சடங்குகளைத் தந்தையே செய்கிறார்[2].(20)
[1] "ஜாதகர்மத்தின் போது தந்தையானவர், "நீ வஜ்ரத்தைப் போலக் கடினமானவனாக இருப்பாயாக", "நீ (என் எதிரிகள் அனைவருக்கும்) கோடரியாக இருப்பாயாக" என்று சொல்வார். ஆசானின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பி வரும்போது உபகர்மம் அல்லது துணைச் சடங்கு செய்யப்படுகிறது. கிருஹ சூத்திர சடங்குகளில் விதிக்கப்படாததால் இது துணை சடங்கு என்றழைக்கப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில், "ஓ மகனே, நீ நானாக இருப்பாயாக" என்று சொல்லப்படுகிறது" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "போக்யம் Bhogya என்பது ஆடை முதலிய பொருட்களைக் குறிக்கும். போஜ்யம் Bhojya என்பது உணவு முதலியவற்றைக் குறிக்கும். பிரவசனம் Pravachana என்பது சாத்திர போதனையைக் குறிக்கும். கர்பாதானம் Garbhaadhaana என்பது மனைவி பூப்படையும் {பருவமடையும்} போது செய்யப்படும் சடங்காகும். சீமாந்தோன்னயனம் Simantonnayana என்பது கரு வளர்ந்து வரும் நான்கு, ஆறு மற்றும் எட்டாம் மாதங்களில் மனைவியில் தலையில் கணவனால் சிறு குறியிடப்படும் {திலகம் சூட்டப்படும்} சடங்கைக் குறிப்பதாகும். அஃது அவளது குழல் வகிட்டின் நடுவில் சூட்டப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தந்தையே அறமாவார். தந்தையே சொர்க்கமாவார். தந்தையே உயர்ந்த தவமுமாவார். தந்தை நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் நிறைவடைவார்கள்.(21) தந்தையால் சொல்லப்படும் எந்த வார்த்தைகளும், மகனுக்கு ஆசிகளாகவே அமையும். தந்தை மகிழ்ந்து சொல்லும் வார்த்தைகள் அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவிவிடும்.(22) தண்டில் இருந்து மலர் விழுவது காணப்படுகிறது. மரத்தில் இருந்து கனி விழுவதும் காணப்படுகிறது. ஆனால் எத்துயரிலிருந்தாலும் ஒரு தந்தை பெற்றபாசத்தால் தம் மகனை ஒருபோதும் கைவிட மாட்டார்.(23) ஒரு மகன் தன் தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் குறித்த என் சிந்தனைகள் இவையே. தந்தையானவர் ஒரு மகனுக்குச் சாதாரணப் பொருளல்ல {மதிப்புமிக்கப் பொருளாவார்}.
தாயை (தாய்க்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக்) குறித்து இப்போது நான் சிந்திக்கப் போகிறேன்.(24) நெருப்புக்குத் தீக்குச்சிகளைப்[3] போல, மனிதனாகப் பிறந்த என்னில் உள்ள இந்த ஐம்பூதக் கலவைக்குத் தாயே (முக்கிய) காரணமாவாள்.(25) மனிதர்கள் அனைவரின் உடலைப் பொறுத்தவரையில், தாயே தீக்குச்சி {அரணிக் கட்டையாவாள்} ஆவாள். அனைத்து வகைப் பெருந்துயரங்களுக்கும் அவளே மருந்தாவாள் {சர்வரோகநிவாரணியாவாள்}. தாயின் இருப்பே ஒருவனைப் பாதுகாக்கிறது {அவனை ஸ்னாதன் ஆக்குகிறது}. {அவள்} இல்லாமை {அவனது} பாதுகாப்புகள் அனைத்தையும் இழக்கச் செய்கிறது {அவனை அநாதனாக்குகிறது}.(26) ஒரு மனிதன், தன் செழிப்பை இழந்திருந்தாலும், "ஓ! தாயே {அம்மா}" என்ற வார்த்தைகளைச் சொல்லி தன் வீட்டிற்குள் நுழைந்தால், அவன் எத்துயரையும் அடையமாட்டான். மேலும் முதுமையும் அவனை அண்டுவதில்லை.(27) ஒருவன் மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கொண்டிருந்தாலும், அவனுக்கு நூறு வயதே ஆகியிருந்தாலும், தாயிருப்பவன் இரு வயது குழந்தையைப் போலவே தெரிவான்.(28) மகனானவன் இயன்றவனானாலும், இயலாதவனானாலும், மெலிந்தவனானாலும், திடமானவனானாலும் தாயால் எப்போதும் பாதுகாக்கப்படுவான். விதியின்படி, {தாயைத் தவிர} வேறு எவரும் மகனின் பாதுகாவலர் ஆக முடியாது.(29) மகன் தன் தாயை இழக்கும்போதே, முதுமையடைகிறான், துயரமடைகிறான், அவன் கண்ணுக்கு உலகமே வெறுமையாகத் தெரிகிறது.(30)
[3] இவை, நாம் இப்போது காணும் தீக்குச்சிகள் அல்ல. இஃது அந்தக் காலத்தில் இருந்த அரணிக் கட்டைகளைக் குறிக்கிறது.
தாயைப் போன்ற உறைவிடமேதும் கிடையாது. தாயைப் போன்ற புகலிடம் வேறேதும் கிடையாது. தாயைப் போன்ற பாதுகாப்பு வேறேதும் கிடையாது. தாயைப் போன்று அன்புக்குரியவர் வேறு யாரும் கிடையாது.(31) மகனைத் தன் கருவறையில் சுமப்பதால் அவளே அவனின் தாத்ரீயாவாள். அவனுடைய பிறப்புக்கு மூல காரணமானதால் அவளே அவனது ஜநநீ ஆவாள். அவனது இளம் அங்கங்களை வளரச் செய்வதால் அவள் அம்பை என்றழைக்கப்படுகிறாள். ஒரு பிள்ளையை வீரத்துடன் வளர்ப்பதால் அவள் வீரஸூ என்றழைக்கப்படுகிறாள்.(32) செவிலிப் பணி செய்து அவனைக் கவனித்துக் கொள்வதால் அவள் சுஸ்ரூ என்றழைக்கப்படுகிறாள். தாயே ஒருவனுடைய சொந்த உடலாகும். எவருடைய கவனிப்பால் மட்டுமே ஒருவனின் தலை உலர்ந்த சுரைக்காயைப் போலத் தெருவோரத்தில் உருளாமல் இருக்கிறதோ அந்தத் தாயை எந்த அறிவுள்ள மனிதன் கொல்வான்?(33)
உற்பத்திக்காகக் கணவனும் மனைவியும் கலக்கும்போது, (பிறக்கப் போகும்) மகனுக்காக அவர்கள் இருவராலும் ஆசைகள் வளர்க்கப்பட்டாலும், அவை கனிவது தந்தையைவிடத் தாயையே அதிகம் சார்ந்திருக்கிறது[4].(34) மகன் எந்தக் குடும்பத்தில் பிறந்தான் என்பதையும், அவனைப் பெற்ற தந்தையையும் தாயே அறிவாள். கருவுற்ற கணத்தில இருந்து தாயானவள் தன் பிள்ளையிடம் அன்பைக் காட்டவும், அவனால் மகிழ்ச்சி கொள்ளவும் தொடங்குகிறாள். (இந்தக் காரணத்திற்காகவே மகனானவன {தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே} அவளிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்). மறுபுறம், சந்ததி தந்தைக்கு மட்டுமே உரியது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன.(35)
[4] "பிராணா Praana என்பது உற்பத்தி உறுப்பாகும். சம்கிலேஷம் Samclesha என்பது கலவியாகும். அவர்களால் வளர்க்கப்படும் ஆசைகள் கிருஹ சூத்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. "நம் பிள்ளை நல்ல நிறத்தைப் பெற்றிருக்கட்டும்", "அவன் நீண்ட நாள் வாழட்டும்". இத்தகைய விருப்பங்கள் பெற்றோர் இருவராலும் விரும்பப்பட்டாலும், அவை அவ்வாறு ஆவது, தந்தையை விடத் தாயையே அதிகம் சார்ந்திருக்கிறது. இஃது ஓர் அறிவியல் உண்மையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மனிதர்கள், திருமணத்தில் மனைவியரின் கரங்களை ஏற்று, அவர்களிடம் பிரியாமல் இருந்து அறமீட்டுவதாக உறுதியளித்த பிறகு, பிறர் மனைவியருடன் கலவியை நாடினால், அப்போது அவர்கள் தங்கள் மதிப்பையும், தகுதியையும் இழக்கிறார்கள்[5].(36) மனைவியை ஆதரிப்பதால் கணவன் பர்த்திரீ {பர்த்தா} என்றழைக்கப்படுகிறான். அவன் அவளைப் பாதுகாப்பதன் காரணமாகப் பதி என்றழைக்கப்படுகிறான். இந்த இரு செயல்பாடுகளும் அவனிடம் காணாமல் போகும்போது, அவன் பர்த்திரீ மற்றும் பதி என்ற இரண்டாகவும் இருக்க மாட்டான்[6].(37) மேலும் பெண் எப்பிழையையும் செய்வதில்லை. ஆண் மட்டுமே பிழைகளைச் செய்கிறான். முறைகெட்ட ஒரு செயலைச் செய்வதன் மூலம் ஆண் மட்டுமே குற்றத்தால் களங்கமடைகிறான்[7].(38) கணவனே மனைவியின் உயர்ந்த பொருளும், உயர்ந்த தெய்வமுமாவான் என்று சொல்லப்படுகிறது. என் அன்னை தன் கணவரைப் போன்ற வடிவிலும், தோற்றத்திலும் தம்மிடம் வந்த ஒருவனிடம் தன் புனித உடலைக் கொடுத்தாள்.(39) பெண்கள் குற்றமிழைப்பதில்லை. ஆணே குற்றத்தால் களங்கமடைகிறான். உண்மையில், பெண்கள் தங்கள் பாலின பலவீனத்தை ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் விளைவால், அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதவே முடியாது.(40)
[5] "எவர் தந்தை என்பது குறித்த சரியான அறிவை தாய் மட்டுமே கொண்டிருக்கிறாள். எனவே, தந்தை நிலையில் இத்தகைய ஐயம் இருப்பதால் தந்தையின் கட்டளைகளைப் புறந்தள்ளலாம். மேலும், ஒரு தந்தை பிறன்மனைவிழையும் முறைகேடராக இருந்தால், அந்தப் பாவத்திற்காக அவரை மதிக்காமல் இருக்கலாம். "கௌதமர் என் தந்தை என்பதை எவ்வாறு நான் அறிவேன்? அவர் பாவமற்றவர் என்பதையும் நான் எவ்வாறு அறிவேன்?" எனச் சிரகாரி கேட்கிறார் என்ற உட்பொருளையே இந்த ஸ்லோகம் தருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இந்த ஸ்லோகம், கௌதமர் தமது மனைவியைப் பாதுகாக்காததால் அவர் அவளது கணவராக இல்லை. எனவே, அவளைக் கொல்லச் சொல்ல அவரது ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்ற உட்பொருளைக் கொண்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "ஆசையூட்டுபவனாக ஆணே இருப்பதால், அவனே குற்றமிழைத்தவனாகிறான்; ஆசைக்கு இணங்கிய பெண் குற்றத்தில் இருந்து தப்புகிறாள் என உரையாசிரியர் வாதிடுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில் பெண்களால் இந்திரனிடம் வேண்டப்பட்டது (இந்திரன் செய்த பிராமணக் கொலையின் {பிரம்மஹத்தியின்} பாவத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண் பாலினத்திற்குக் கொடுக்கப்பட்டது) நினைவுகூரப்படுகையில், அவனே பாவம் நிறைந்தவன் என்பது (இவ்வழக்கில்) தெளிவாகிறது. என் தாய் அப்பாவி என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(41) எவளைக் கொல்ல ஆணையிடப்பட்டேனோ, அவள் ஒரு பெண்ணாவாள். அந்தப் பெண்ணும் என் தாயாக இருக்கிறாள். எனவே, அவள் பெரும் மதிப்பிற்குரிய ஓரிடத்தை என்னிடம் பெறுகிறாள். தாய் கொல்லத்தகாதவள் என்பதை அறிவற்ற விலங்குகள் கூட அறியும்.(42) தந்தையோ, தேவர்கள் அனைவரின் கலவையாக அறியப்பட வேண்டியவர். எனினும் தாயானவள், உயிரினங்கள் மற்றும் தேவர்கள் அனைத்தின் கலவையாக இருக்கிறாள்[8]" {என்று சிரகாரின் தமக்குள்ளேயே நினைத்தார்}.(43)
[8] "தந்தையை மதிப்பதால் தேவர்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள் என்பதால் தந்தையே அனைத்து தேவர்களும் ஆவார். எனினும் தாயை நிறைவு செய்வதால் ஒருவன் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் வெற்றியை அடைவதால், அவள் அழியத்தக்க மற்றும் அழிவில்லாத உயிரினங்களின் {தேவர்களின்} கலவையாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீண்ட காலம் சிந்திக்கும் பழக்கத்தின் விளைவால் கௌதமரின் மகனான சிரகாரின் (தமது தந்தை செய்ய ஆணையிட்ட செயலைச் செய்யாமல்) இச்சிந்தனைகளில் ஈடுபட்டே நீண்ட காலத்தைக் கழித்தார். பல நாட்கள் கழிந்ததும் அவரது தந்தை கௌதமர் திரும்பினார்.(44) கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தவப்பயிற்சியில் ஈடுபடுபவரும், பெரும் ஞானியுமான மேதாதிதி {கௌதமர்} (தமது ஆசிரமத்திற்குத்) திரும்பி, நீண்ட காலம் சிந்தித்துப் பிறகு, தமது மனைவியைப் பீடிக்கச் சொல்லி தாம் சொன்ன தண்டனை முறையற்றது என நினைத்தார்.(45) துயரால் எரிந்து, சாத்திர அறிவால் அடைந்த அமைதியான மனநிலையின் நன்மையான விளைவுகளின் காரணமாக அவர் வருத்தமடைந்ததால் பெரும் அளவில் கண்ணீரைச் சிந்தினார்.(46) அவர் {கௌதமர்}, "மூவுலகின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, விருந்தோம்பலை வேண்டும் ஒரு பிராமணத் தோற்றத்தில் என் ஆசிரமத்திற்கு வந்தான்.(47) (உரிய) வார்த்தைகளால் ஏற்கப்பட்டு, (உரிய) வரவேற்பால் கௌரவிக்கப்பட்ட அவனுக்கு, கால் கழுவ நீரும், வழக்கமான அர்க்கிய காணிக்கைகளும் வழங்கப்பட்டன. அவன் கேட்ட ஓய்வையும் நான் அவனுக்கு அளித்தேன்.(48) அதற்கு மேலும் அவனைப் பாதுகாவலனாக அடைந்திருப்பதாக அவனிடமே நான் சொன்னேன். அத்தகைய நடத்தை அவனை என்னிடம் ஒரு நண்பனாக நடக்கத் தூண்டும் என்று எண்ணினேன். எனினும், இவை யாவற்றுக்கும் பிறகும், அவன் {இந்திரன்} தவறாக நடந்திருக்கும்போது, என் மனைவி அஹல்யை {அகலிகை} எக்குற்றத்தையும் இழைத்ததாகக் கருதப்படலாகாது.(49) என் மனைவியோ, நானோ, வானத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது என் மனைவியைக் {அகலிகையைக்} கண்ட (என் மனைவியின் இயல்புக்கு மீறிய அழகைக் கண்டு புலன்களை இழந்த) இந்திரனோ குற்றவாளிகள் அல்ல என்றே தெரிகிறது. என் யோக பலத்தின் கவனமின்மையே உண்மையில் பழிக்கத்தக்கது[9].(50)
[9] "தர்மஸ்ய Dharmasya என்பது யோகதர்மசம்பந்தி Yogadharmasambhandhi என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. கௌதமர் இக்குற்றத்திற்கான ஆணை பலத்தின் மூலம் தீர்மானிக்காத தன் கவனமின்மையைப் பழிக்கிறார். இந்திரனையே குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் முனிவரின் தூய இயல்பையும், பிறருக்கு முற்றிலும் தீங்கிழைக்காத தன்மையையும் இங்கே உரையாசிரியர் நோக்குகிறார். எனினும் இந்திரனே பழிக்கத்தக்கவன் என்பதே உண்மை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனைத்துத் துயரங்களும் பொறாமையில் இருந்தே எழுகின்றன, அதன் விளைவாகத் தீர்மானப் பிழையும் எழுகிறது. பாவக்கடலில் மூழ்கியிருந்த நான் (மனைவியைக் கொல்வது என்ற வடிவில்) அந்தப் பொறாமையின் மூலமே இழுக்கப்பட்டிருக்கிறேன்.(51) ஐயோ, நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டேன். அதிலும் தன் தலைவனின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதால் வாசிஷ்டை என்றழைக்கப்படுபவளும், என்னால் ஆதரித்துப் பாதுகாக்கத் தகுந்தவள் என்ற கடமையின் விளைவால் பார்யை என்றும் அழைக்கப்படுபவளுமான ஒரு பெண்ணான என் மனைவியைக் கொன்றுவிட்டேன். இப்பாவத்திலிருந்து யாரால் என்னைக் காக்க முடியும்?(52) உயர் ஆன்ம சிரகாரினிடம் (என் மனைவியைக் கொல்லுமாறு) ஆணையிட்டுக் கண்மூடித்தனமாகச் செயல்பட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் அவன் தன் பெயரை மெய்ப்பித்திருந்தால் இந்தக் குற்றத்திலிருந்து என்னைக் காத்தவனாவான்.(53) ஓ! சிரகாரிகா, உனக்கு இரட்டிப்பான அருள் கிட்டட்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பணியை நிறைவேற்றுவதில் நீ தாமதித்திருந்தால், உண்மையில் நீ உன் பெயருக்குத் தகுந்தவனாகவே இருப்பாய்.(54) என்னையும், உன் அன்னையையும், நான் அடைந்த தவங்களையும், உன் தவங்களையும் பெரும் பாவங்களில் இருந்து காப்பாயாக. இன்று நீ உண்மையிலேயே சிரகாரிகனாக இருப்பாயாக.(55) சாதாரணமாக, உன் பெரும் ஞானத்தின் விளைவால் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நீண்ட காலம் ஆலோசிப்பாய். இன்று உன் நடத்தை வேறுவகையில் இருக்க வேண்டாம். இன்று நீ உண்மையான சிரகாரிகனாகவே இருப்பாயாக.(56)
உன் அன்னை உன் வரவை நெடுங்காலம் எதிர்பார்த்திருந்தாள். அவள் உன்னைத் தன் கருவறையில் நெருங்காலம் சுமந்திருந்தாள். ஓ! சிரகாரிகா, செயல்படுவதற்கு முன் நெடுங்காலம் சிந்திக்கும் உன் வழக்கம் இன்று நன்மையான விளைவுகளை உண்டாக்கட்டும்.(57) ஒருவேளை என் மகன் சிரகாரிகன் (அந்த ஆணையை அவன் செயல்படுத்துவதைக் கண்டு) நான் வருத்தமடைவேன் என்ற காரணத்தால் இன்றுவரை தாமதித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, (நினைவுடன் செயல்படுத்தும் எந்த நோக்கமும் இல்லாமல்) அந்த ஆணையைத் தன் இதயத்தில் சுமந்தபடி அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, அவனுக்கும் எனக்கும் உண்டாகப்போகும் துயரத்தைக் கருத்தில் கொண்டும், வழக்கின் சூழ்நிலைகளைச் சிந்தித்தும் தாமதித்துக் கொண்டிருக்கலாம்" என்று {தனக்குத் தானே} சொல்லிக் கொண்டார்.(58)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா{, இத்தகைய வருத்தத்தில் ஈடுபட்ட பெரும் முனிவர் கௌதமர், தன் மகன் சிரகாரின் தன் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்.(59) தங்கள் தந்தை திரும்பி வந்ததைக் கண்ட மகனான சிரகாரின், துயரத்தில் மூழ்கி, (தாம் ஏந்திய) ஆயுதத்தை வீசிவிட்டு, தலைவணங்கி கௌதமரை தணிவடையச் செய்யத் தொடங்கினார்.(60) தமது மகன் தம் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தலைவணங்குவதையும், அவமானத்தால் கிட்டத்தட்டக் கல்லாகிப் போயிருந்த தன் மனைவியையும் கண்டும் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(61) அந்தக் காலத்தில் இருந்து அந்த உயர் ஆன்ம முனிவர் {கௌதமர்}, தன் மனைவியிடமிருந்தோ, கவனமிக்கத் தன் மகனிடமிருந்தோ பிரிந்து வாழாமால் அந்தத் தனிமையான ஆசிரமத்திலேயே வசித்து வந்தார்.(62) தமது மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற ஆணையைச் சொல்லிவிட்டு, தமது காரியம் எதையோ நிறைவேற்றிக் கொள்ள ஆசிரமத்தைவிட்டு அவர் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் இருந்து அவரது மகன் கையில் ஆயுதத்துடன் தமது தாயாரிடம் அந்தக் கட்டளையை நிறைவேற்ற பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.(63) மகன் தமது பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட தந்தை {கௌதமர்}, ஆயுதமேந்தி (தன் தாயையைக் கொன்ற) குற்றத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்பதாக {அக்கணத்தில்} நினைத்து விட்டார்.(64) பிறகு தமது மகனை நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருந்த அந்தத் தந்தை, நீண்ட நேரம் அவரது உச்சியை முகர்ந்து, "நீண்ட காலம் வாழ்வாயாக" என்ற ஆசி கூறும் வார்த்தைகளைச் சொன்னார்.(65)
பிறகு, ஓ! பெரும் ஞானியே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியால் நிறைந்தவரும், நேர்ந்த காரியத்தால் நிறைவடைந்தவருமான கௌதமர், தமது மகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(66) "ஓ! சிரகாரிகா, நீ அருளப்பட்டிருப்பாயாக. செயல்படுவதற்கு முன் எப்போதும் நீண்ட நேரம் சிந்திப்பாயாக. என் ஆணையை நிறைவேற்றுவதில் நீ தாமதித்ததன் மூலம் இன்று நீ என்னை எப்போதும் மகிழ்ச்சியுடையவனாகச் செய்துவிட்டாய்" {என்றார் கௌதமர்}.(67) முனிவர்களில் சிறந்தவரும், கல்விமானுமான அவர், பிறகு, எந்தச் செயல்பாட்டிலும் நீண்ட காலம் சிந்திக்கும் அமைதியான மனிதர்கள் அடையும் தகுதிகளை {புண்ணியங்களைக்) குறித்த இந்த ஸ்லோகங்களைச் சொன்னார்.(68) {கௌதமர்}, "ஒரு நண்பனின் மரணக் காரியமென்றால், ஒருவன் அதை நீண்ட காலத்திற்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தைக் கைவிடும் காரியமென்றால், அவன் நீண்ட காலத்திற்குப் பிறகே அதைக் கைவிட வேண்டும். நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைந்த ஒரு நட்பே நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.(69) கோபம், அகந்தை, செருக்கு, சச்சரவுகள், பாவச் செயல்கள் ஆகியவற்றின் வசப்படாமல், ஏற்கத்தகாத பணிகளை நிறைவேற்றும் காரியங்கள் அனைத்திலும் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்.(70) ஓர் உறவினர், நண்பர், பணியாள், அல்லது மனைவி ஆகியவர்களுக்கெதிரான குற்றம் தெளிவாக மெய்ப்பிக்கப்படாத போது, அவர்களைத் தண்டிப்பதில் தாமதிப்பவன் மெச்சத்தகுந்தவனாவான்" {என்றார் கௌதமர்}.(71)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தோனே, இவ்வாறே தமது ஆணையை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தத் தமது மகனிடம் நிறைவடைந்தார் அந்தக் கௌதமர்.(72) ஒரு மனிதன் அனைத்துச் செயல்களிலும் இவ்வழியில் நீண்ட காலம் சிந்தித்து, தீர்மானத்தை அடைந்த பிறகே செயல்பட வேண்டும். இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலத் துன்பங்களை நிச்சயம் தவிர்ப்பான்.(73) எந்த மனிதன் நீண்ட காலம் கோபத்தைப் பணியச் செய்கிறானோ, எவன் எச்செயலையும் செய்வதற்கு முன்னால் நீண்ட காலம் ஆலோசிக்கிறானோ அவன் வருத்தம் தரும் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான்.(74) ஒருவன் பெரியோரிடம் நீண்ட காலம் காத்திருந்து {பணிவிடை செய்து}, அவர்களின் அருகே அமர்ந்து அவர்களிடம் மதிப்பைக் காட்ட வேண்டும். ஒருவன் தனது கடமைகளை நீண்ட காலம் கவனித்து, அவற்றை உறுதி செய்வதில் நீண்ட காலம் ஈடபட வேண்டும்.(75)
கல்விமான்களிடம் நீண்ட காலம் காத்திருந்து, நடத்தையில் நல்லோராக இருப்போரிடம் நீண்ட காலம் மதிப்புடன் பணி செய்து, தன் ஆன்மாவை நீண்ட காலம் முறையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், நீண்ட காலம் உலகால் மதிக்கப்படும் நிலையை அனுபவிப்பதில் வெல்வான்.(76) அறம் மற்றும் கடமை குறித்த காரியங்களில் ஈடுபடும் ஒருவன், அக்காரியங்களின் செய்தியை மற்றொருவன் கேட்கும்போது, அவனுக்குப் பதிலைக் கொடுப்பதற்கு முன் நீண்ட காலம் சிந்திக்க வேண்டும். அப்போது (பாவத்திற்கு வழிவகுக்கும் நடைமுறை விளைவுகளைக் கொண்ட தவறான பதிலைக் கொடுக்கும்) வருந்தத்தக்க நிலையை அவன் தவிர்க்கலாம்.(77) கடுந்தவங்களைக் கொண்ட கௌதமரைப் பொறுத்தவரையில், அம்முனிவர் நீண்ட காலம் தமது ஆசிரமத்தில் தேவர்களைத் துதித்து, இறுதியாகத் தம் மகனுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்" என்றார் {பீஷ்மர்}.(78)
சாந்திபர்வம் பகுதி – 266ல் உள்ள சுலோகங்கள் : 78
ஆங்கிலத்தில் | In English |