Satyavan and Dyumatsena! | Shanti-Parva-Section-267 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 97)
பதிவின் சுருக்கம் : குடிமக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாக்கும் காரியத்தில் சத்தியவானுக்கும் தியுமத்சேனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உண்மையில் ஒரு மன்னனால் எவருக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியும்? ஓ! பாட்டா, ஓ! நல்லோரில் முதன்மையானவரே, நான் இஃதை உம்மிடம் கேட்கிறேன், எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் தியுமத்சேனனுக்கும், மன்னன் சத்தியவானுக்கும் இடையில் நடந்த பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) தந்தையின் {தியுமத்சேனனுடைய} ஆணையின் பேரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வரும்போது, அதற்கு முன் எவராலும் சொல்லப்படாத குறிப்பிட்ட வார்த்தைகளை இளவரசன் சத்தியவான் சொன்னான்[1].(3) {சத்தியவான்}, "சிலவேளைகளில் அறமானது கொடுமையின் வடிவையும், கொடுமையானது அறத்தின் வடிவையும் ஏற்கின்றன. தனி நபர்களைக் கொல்வது ஒருபோதும் அறச்செயலாகும் சாத்தியமில்லை" {என்றான்}.(4)
[1] "அஃதாவது, இளவரசன் சத்தியவான், கொல்வதற்காக அழைத்துவரப்பட்ட மனிதர்களைக் கொல்லக்கூடாது, குடிமக்களின் உயிரை எடுக்கும் அதிகாரம் மன்னர்களுக்குக் கிடையாது என்கிறான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்த இளவரசன், எந்தவொரு கொடுங்குற்றத்திற்கும் கொலை தண்டனை முறையற்றது என்று வாதிடுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, "கொல்லத்தகுந்தவர்களை விடுவது அறமென்றால், ஓ! சத்தியவான், கள்வர்களைத் தண்டிக்காமல் விட்டால், (அறத்திற்கும், மறத்திற்கும் இடையிலான) வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து போகும்.(4) (தீயோரைத் தண்டிக்காமல் விட்டால்) "இஃது என்னுடையது, இஃது என்னுடையதில்லை" (என்ற உடைமை ரீதியிலான) கருத்துகள் கலியுகத்தில் நீடிக்காது.(5) (தீயோர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால்) உலகக் காரியங்கள் முடங்கிப் போகும் நிலையை எட்டும். (தீயோரைத் தண்டிக்காமல்) உலகத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதை நீ அறிந்தால், அது குறித்து எனக்குச் சொல்வாயாக" என்றான்.(6)
சத்தியவான் {தியுமத்சேனனிடம்}, "மூவகையினரும் (க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரும்) பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். இந்த மூவகையினரும் அறத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டால், அவர்களின் நடைமுறைகளை (கலப்பால் உண்டான) துணை வகையினர் பின்பற்றுவார்கள்[2].(7) அவர்களுக்கு மத்தியில் (பிராமணர்களின் ஆணைகளை) மீறுவோரைக் குறித்து மன்னனிடம் புகாரளிக்க வேண்டும். "இவன் என் ஆணைகளைக் கேட்கவில்லை" என்று ஒரு பிராமணனால் சொல்லப்படும் புகாரின் பேரில் அந்தக் குற்றவாளிக்கு மன்னன் தண்டனை அளிக்க வேண்டும்.(8) மன்னன், அந்தக் குற்றவாளியின் உடலை அழிக்காமல், சாத்திரங்களில் குறிப்பிடப்படும் தண்டனைகளை அளிக்க வேண்டும். மன்னன், குற்றத்தின் தன்மையை முறையாகச் சிந்திப்பது, அறநெறி ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு வேறு வகையில் நடந்து கொள்ளக்கூடாது.(9) மன்னன் தீயோனைக் கொல்வதன் மூலம் (நடைமுறையில்) பெரும் எண்ணிக்கையிலான தனிப்பட்ட அப்பாவிகளைக் கொல்கிறான். ஒரு கள்வனைக் கொல்வதன் மூலம், அவனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய அனைவரும் (அவர்கள் வாழ்வதற்கான வழிமுறைகளை இழக்கும் காரணத்தால்) கொல்லப்படுகின்றனர் என்பதைக் காண்பீராக. எனவே, தீய மனிதனால் தீங்கை அடையும்போது, தண்டனை வழங்கும் கேள்வியில் மன்னன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.(10)
[2] கலப்பு மற்றும் துணை வகையினர் {கலப்பு வர்ணம் / கலப்பு சாதி} குறித்த செய்தி கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் காணப்படவில்லை. கங்குலியில் மட்டுமே இது தென்படுகிறது.
சில வேளைகளில் ஒரு தீயவன், அறவோன் ஒருவனின் நன்னடத்தையை ஈர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. மேலும் சில தீய மனிதர்களிடம் இருந்து நல்ல பிள்ளைகள் பிறப்பதும் காணப்படுகிறது.(11) எனவே, தீயவர்கள் வேரோடு அழிக்கப்படக்கூடாது. தீயோரைக் கொல்வது நித்திய நடைமுறைக்கு {ஸநாதன தர்மத்துக்கு} இணக்கமானதல்ல. சிறு தண்டனைகள் மூலம் அவர்களின் குற்றங்களை ஈடு செய்ய வேண்டும்.(12) அவர்களது செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்தல், சங்கிலியில் பிணைத்து நிலவறைகளில் சிறைவைத்தல், அவர்களது வடிவத்தை இழக்கச் செய்தல் {உடல் உறுப்புகளை அகற்றுதல்} ஆகியவற்றின் மூலம் அவர்களது குற்றம் ஈடுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு மரணத் தண்டை அளிப்பதன் மூலம், அவர்களது உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடாது. பாதுகாப்பை அடையும் விருப்பத்தால், புரோகிதர்கள் மற்றும் பிறரின் முன்னிலையில் அவர்கள், "ஓ! பிராமணரே, நாங்கள் மீண்டும் ஒருபோதும் எந்தப் பாவச் செயலையும் செய்ய மாட்டோம்" என்று சொல்லி உறுதி அளித்தால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்காமல் விடுவதே தகுந்ததாகும்.(13,14) இதுவே படைப்பாளனின் ஆணையாகும். மான்தோலுடுத்தி, (துறவிகளுக்கான) தண்டம் தரித்து, தலைமழித்தவர்களாக இருக்கும் பிராமணனாகவே ஒருவன் இருந்தாலும் கூட, (அவன் வரம்பை மீறும்போது) தண்டிக்கப்பட வேண்டும்[3].(15) பெரிய மனிதர்கள் வரம்புமீறினால் அவர்களது பெருமைக்குத் தக்க அளவில் தண்டனை இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் முதல் தருணத்தில் விடப்படுவது போலத் தண்டனையின்றி விடத்தகாதவர்கள் ஆவர்" என்றான் {சத்தியவான்}.(16)
[3] "ஒருவன் சந்நியாசியாகவே இருப்பினும், அவன் குற்றமிழைப்பானெனில் அவன் தண்டனைக்குத் தகுந்தவனே என்பதையே மேற்கண்ட வரி சொல்வதாக உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தியுமத்சேனன் {சத்தியவானிடம்}, "மனிதர்கள் தாங்கள் இருக்க வேண்டிய வரம்புகளை மீறாதவரை அவர்கள் அறத்தின் பெயரால் அமர்த்தப்படலாம்.(17) அந்த வரம்புகளை மீறும்போது, மரணத்தைக் கொண்டு அவர்களைத் தண்டிக்கவில்லையெனில், அந்த வரம்புகள் விரைவில் அழிந்துவிடும். நெடுங்காலத்துக்கு முந்தைய மனிதர்கள் வெகு எளிதாக ஆளப்படத் தகுந்தவர்களாக இருந்தனர்[4].(18) அவர்கள் (பேச்சிலும், ஒழுக்கத்திலும்) மிக உண்மையுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் சச்சரவுகளிலும், சண்டைகளிலும் குறைவாகவே ஈடுபட்டனர். அவர்கள் எப்போதாவதுதான் கோபவசப்பட்டார்கள், அல்லது அவர்களது கோபம் அடக்கத்தகாததாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்தக் காலங்களில் "சீ" என்று சொல்வதே குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனையாக இருந்தது. அதன் பிறகு, கடுமொழிகள் அல்லது நிந்தனைகளே தண்டனைகளாகின.(19) அதன் பிறகு, அபராதங்களும், பறிமுதல்களும் தண்டனைகளாகப் பின்தொடர்ந்தன. எனினும், இக்காலத்தில் மரணமே தற்போதைய தண்டனையாக இருக்கிறது. ஒருவரை மட்டும் கொல்வதாலேயே பிறரைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்ற அளவுக்குத் தீமையின் அளவு அதிகரித்திருக்கிறது[5].(20) கள்வனுக்கு மனிதர்களுடனோ, தேவர்களுடனோ, கந்தர்வர்களுடனோ, பித்ருக்களுடனோ தொடர்பேதும் கிடையாது. அவன் யாருக்கு என்னவாக இருக்கிறான்? அவன் எவருக்கும் எவருமாக இல்லை. இதுவே ஸ்ருதிகளின் தீர்மானமாகும்[6].(21) கள்வன் இடுகாடுகளில் உள்ள சடலங்களின் ஆபரணங்களையும் எடுத்துக் கொள்கிறான், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களின் (அதனால் அறிவிழந்தவர்களின்) உடைகளை அணிந்து கொள்கிறான். இந்த இழிந்த பாவிகளிடம் எந்த உடன்படிக்கையையோ, (அதைச் சார்ந்திருப்பதற்காக) அவர்களிடம் இருந்து எந்த உறுதிமொழியையோ ஏற்று ஏற்படுத்திக் கொள்ளும் மனிதன் மூடனாவான்" என்றான் {தியுமத்சேனன்}[7].(22)
[4] "அதாவது, முந்தைய காலங்களில் தண்டனைகள் தேவைப்படவில்லை, அல்லது மிக மென்மையானவையே போதுமானவையாக இருந்தன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "எனவே, மரணத் தண்டனையே விரும்பத்தக்கதாகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "எனவே, அவர்களைக் கொல்வதால் இம்மையிலோ, மறுமையிலோ உள்ள யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்ததாகது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "பத்மம் Padma என்பது சடலங்களின் ஆபரணங்களாகும். ஒவ்வொரு நாட்டிலும் மயானக் கொள்ளையர்கள் இருந்தனர். பிசாசாத் Picaachaat என்பது பிசாசோபாஹதாத் Pichaachopahataat என்பதாகும். மூடர்களும், பைத்தியக்காரர்களும், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்களாக அந்தக் காலத்தில் கருதப்பட்டனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சத்தியவான், "அந்த நேர்மையற்றமுரடர்களில் இருந்து நேர்மையான மனிதர்களை உருவாக்குவதிலும், கொலையோடு தொடர்பில்லாத வழிமுறைகளின் மூலம் அவர்களைக் காப்பதிலும் நீர் வெல்லவில்லையெனில், வேள்வி எதையாவது ஏற்பாடு செய்து அவர்களை அழிப்பீராக[8].(23) குடிமக்கள் தங்கள் வாழ்வின் தொழிலில் செழிக்க வேண்டும் என்பதற்காக மன்னர்கள் கடுந்தவங்களைப் பயில்கிறார்கள். அவர்களது நாடுகளில் கொள்ளையர்களும், கள்வர்களும் பெருகும்போது அவர்கள் {மன்னர்கள்} அவமானமடைகிறார்கள். எனவே, கொள்ளையையும், களவையும் ஒடுக்குவதற்காகவும், தங்கள் குடிமக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யவும் அவர்கள் தவங்களைச் செய்கிறார்கள்.(24) அச்சுறுத்துவதால் மட்டுமே குடிமக்களை (மன்னனால்) நேர்மையானவர்களாக மாற்ற முடியும். நல்ல மன்னர்கள் பழிக்கு பழி செய்யும் நோக்கத்துடன் தீயவர்களை ஒருபோதும் கொல்வதில்லை. (மறுபுறம், அவர்கள் கொல்வார்கள் என்றாலும், கொல்லப்படுபவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு வேள்வியிலேயே அவர்களைக் கொல்வார்கள்). நல்ல மன்னர்கள் (கொடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக) நல்லொழுக்கத்தின் துணையுடன் தங்கள் குடிமக்களை முறையாக ஆள்வதன் மூலமே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.(25) மன்னர்கள் முறையுடன் செயல்பட்டால், மேன்மையான குடிமக்கள் அவர்களை {அந்த மன்னர்களைப்} போலவே செயல்படுவார்கள். தாழ்ந்த மக்களோ, தங்கள் பங்குக்கு, தங்களுக்கு அடுத்தபடியில் மேன்மையானவர்களாக இருப்போரைப் போலவே செயல்படுவார்கள். மனிதர்கள் தங்களைவிடச் சிறந்தவர்கள் என்று யாரைக் கருதுவார்களோ, அவர்களைப் போலவே செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்[9].(26) கட்டுப்பாடு இல்லாத மன்னன், (தீய வழிகளில் இருந்து) பிறரைத் தடுக்க முனைந்தால், புலன்களுக்கு அடிமையாக உலக இன்பங்கள் அனைத்திலும் ஈடுபடும் இயல்பின் விளைவால், அவன் மனிதர்கள் அனைவரின் பரிகாசத்திற்கான பொருளாகவே ஆவான்.(27) அகங்காரம் அல்லது தீர்மானப்பிழையின் மூலம் மன்னனுக்கெதிராக எவ்வழியிலாவது குற்றமிழைக்கும் மனிதன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தடுக்கப்பட வேண்டும்.(28) இவ்வழியின் மூலமே புதிய குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து அவனைத் தடுக்க முடியும். (தேவைப்பட்டால்) அவன் நண்பர்களையும், நெருக்கமான உறவினர்களையும் கூடக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.(29) ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளி எந்த நாட்டில் கடும் தண்டனைகளைச் சந்திக்கவில்லையோ, அங்கே குற்றங்கள் பெருகி, அறம் குறையும் என்பதில் ஐயமில்லை.(30)
[8] "இங்கே குறிப்பிடப்படும் வேள்வி பூத வேள்வியாகும். வேள்வியில் கொல்லப்படுபவை அவற்றின் பாவங்கள் அனைத்தும் அழிந்து சொர்க்கத்திற்கு உயரும் என்று ஸ்ருதிகளில் உள்ள தீர்மானத்தின் காரணமாக நேர்மையற்றவர்களை வேள்வியில் கொல்லப்படும் விலங்குகளைப் போல அழிக்க வேண்டுமென இளவரசன் சத்தியவான் கோருகிறான். தூக்கிலிடுவது, அல்லது சிரச்சேதம் செய்வதன் மூலம் ஏற்படும் மரணத்தோடு ஒப்பிடுகளையில் இத்தகைய செயல்கள் கருணை கொண்டவையாக இளவரசன் சத்தியவானுக்குத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "மன்னன் முறையான வழியில் செயல்படுவதால் மட்டுமே உலகம் ஒழுக்கத்திலும், அறநெறிகளிலும் மேன்மையடைகிறது. உலகை மறுசீரமைக்கக் கொடுந்தண்டனைகள் மிகச் சொற்பமாகவே தேவைப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கருணை கொண்டவரும், கல்விமானுமான ஒரு பிராமணர் முற்காலத்தில் இஃதை எனக்குப் போதித்தார். உண்மையில், ஓ! தந்தையே, மக்களிடம் கருணையால் உந்தப்பட்ட நமது முப்பாட்டன்களும், இதே அளவுக்கான தீங்கிழையாமையை அவர்களுக்கு உறுதி செய்திருக்கின்றனர்.(31) அவர்களது வார்த்தைகள், "கிருதயுகத்தில், முற்றிலும் தீங்கிழைக்காத வழிகளைப் பின்பற்றியே மன்னர்கள் தங்கள் குடிமக்களை ஆள வேண்டும்.(32) திரேதா யுகத்தில், முழு நிறைவில் இருந்து நான்கில் ஒரு பகுதி விழுந்த அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியே மன்னர்கள் தங்கள் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். துவாபர யுகத்தில், பாதி அளவுக்கு விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும், அதைத் தொடர்ந்து வரும் {கலி} யுகத்தில் நான்கில் மூன்று பகுதிகள் விழுந்துவிட்ட அறத்திற்கு இணக்கமான வழிகளின்படியும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.(33) கலியுகம் நேரும்போது, மன்னர்களின் தீய தன்மையின் மூலமும், அந்த யுகத்திற்கே உரிய இயல்பின் விளைவாகவும் அறத்தின் நான்காவது பகுதியிலும் பதினைந்து பகுதிகள் மறைந்து, அதனில் பதினாறாவது பகுதி மட்டுமே எஞ்சியிருக்கும்.(34) ஓ! சத்தியவான், இதில் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் குழப்பம் நேர்ந்தால், அம்மன்னன், மனித வாழ்வின் கால அளவையும், மனிதர்களின் பலத்தையும், நேரும் நேரத்தின் இயல்பையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை அளிக்க வேண்டும்" {என்று முன்னோர்கள் சொன்னார்கள்}.(35) உண்மையில், சுயம்புவின் {பிரம்மனின்} மகனான மனு, மனிதர்களிடம் தாம் கொண்ட கருணையால், எந்த வழிமுறைகளின் மூலம் (தீங்கிற்குப் பதிலாக) விடுதலைக்கான {முக்திக்கான} அறிவை அவர்கள் அடைவார்களோ அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்" என்றான் {சத்தியவான்}".(36)
சாந்திபர்வம் பகுதி – 267ல் சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |