Kapila and Syumarsmi! | Shanti-Parva-Section-268 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 95)
பதிவின் சுருக்கம் : விலங்குகளைக் கொல்லாமல் வேள்வி செய்ய வேண்டும் என்பது குறித்து கபிலருக்கும் ஸ்யூமரஸ்மிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நன்கறியப்பட்ட ஆறு குணங்களுக்கு {செல்வம் [ஐஸ்வர்யம்], ஞானம், புகழ் [கீர்த்தி], அமைதி [சாந்தி], மனோவுறுதி [வைராக்யம்], அறம் [தர்மம்] என்ற ஆறு குணங்களுக்கு} வழிவகுக்கும் யோக அறத்தை எவ்வாறு பின்பற்றலாம்? எந்த உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் எவ்வாறு அதைப் பயிலலாம் என்பது குறித்து நீர் ஏற்கனவே எனக்கு விளக்கிச் சொன்னீர். ஓ! பாட்டா, இன்பம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டு விளைவுகளுக்கும் வழிவகுக்கும் அறத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக.(1) ஒரே கதியையே அடையச் செய்யும் இல்லறக்கடமைகள் {கிருகஸ்ததர்மம்} மற்றும் யோகக்கடமைகள் {யோகதர்மம்} ஆகிய இரண்டில் எது மேன்மையானது?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டும் உயர்ந்த அருளைக் கொண்டவையே. இவை இரண்டும் சாதிப்பதற்கு மிகக் கடினமானவையே. இரண்டும் உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லவையே. இவை இரண்டும் மறுப்பிற்கிடமின்றி நல்லோராக இருப்போரால் பயிலப்படுபவையே.(3) நான் இப்போது இந்தக் கடமை நடைமுறைகள் இரண்டின் உண்மைக் கருத்தில் நீ கொண்டுள்ள ஐயங்களை விலக்குவதற்காக அவற்றின் முக்கியத்துவத்தை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) இது தொடர்பாகக் கபிலருக்கும், ஒரு பசுவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(5)
பழங்காலத்தில், மன்னன் நஹுஷனின் அரண்மனைக்குத் தேவன் தாஷ்டிரி {த்வஷ்டா} வந்த போது, அவன் {நஹுஷன்} தன் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்துவதற்காக உண்மையானதும், புராதனமானதும், நித்திய தடையாணையுமான வேதங்களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு பசுவைக் கொல்ல ஆயத்தமானான்.(6) பரந்தமனம் கொண்டவரும், சத்வக் கடமைகளை எப்போதும் நோற்பவரும், தமது புலன்களைக் கட்டுப்படுத்துவதில் எப்போதும் ஈடுபடுபவரும், உண்மை ஞானம் கொண்டவரும், எளிய உணவை உண்பவரும்,(7) நம்பிக்கையுடன் கூடிய சிறந்த அறிவை அடைந்தவரும், முற்றிலும் அச்சமற்றவரும், நன்மையானவரும், உறுதியானவரும், எப்போதும் உண்மையை நோக்கித் தம்மைச் செலுத்திக் கொள்பவருமான கபிலர், கொல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள பசுவைக் கண்டு, "ஐயோ, வேதங்களே" என்ற வார்த்தைகளை ஒருமுறை சொன்னார். அந்த நேரத்தில, ஸ்யூமரஸ்மி என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் (யோக சக்தியின் மூலம்) அந்தப் பசுவின் வடிவத்திற்குள் நுழைந்து, யதியான அந்தக் கபிலரிடம், "ஓ! கபிலரே, ஆச்சரியமாக இருக்கிறது.(8) வேதங்கள் (அவற்றில் உள்ள தீர்மானங்களின் மூலம் உயிரினங்களைக் கொல்ல அனுமதிப்பதன் விளைவால்) நிந்திக்கத்தகுந்தவையென்றால், (உயிரினங்கள் அனைத்திற்கும் முற்றிலும் தீங்கிழையாமையைக் கொடுக்கும்) பிற கடமைகளை அதிகாரம் பெற்றவையாக எதைக் கொண்டு கருத முடியும்?[1](9) தவங்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், நுண்ணறிவுடன் கூடியவர்களும், ஸ்ருதிகளையும், ஞானத்தையும் தங்கள் கண்களாகக் கொண்டவர்களுமான மனிதர்கள், முனிவர்களால் தொகுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட வேதங்களின் தடையாணைகளை தெய்வத்தின் வார்த்தைகளாகவே கருதுகிறார்கள்.(10) வேதங்களின் உட்பொருளைப் பொறுத்தவரையில், கனியின் விருப்பில் விடுபட்டவனும், (பொறாமை மற்றும் வெறுப்பு என்ற) நோயற்றவனும், எதற்கும் அடிமையாக இல்லாதவனும், (தன் விருப்பங்கள் அனைத்தும் உடனே கனிவதன் விளைவால்) எந்த முயற்சியும் இல்லாதவனுமான பரம்பொருளின் வார்த்தைகளாகவே அவை இருக்கும்போது (அவற்றை நிந்திப்பதாலோ, புகழ்வதாலோ) எவராலும் என்ன சொல்ல முடியும்?" என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}[2].(11)
[1] "செயல்கள் மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. எனவே, அவ்விரண்டிற்கும் அதிகாரம் பெற்றவையாக வேதங்களே இருக்கும்போது, ஒன்றையோ, மற்றொன்றையோ நிந்திக்கவோ, மெச்சவோ முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், "தைரியசாலிகளும், வேதஜ்ஞானமாகிற கண்ணுள்ளவர்களுமான முனிவர்கள் எல்லா வேதத்தையும் எந்நாளும் ஆத்மஜ்ஞானமுள்ள ஈஸ்வரருடைய வசனமாக நினைக்கிறார்கள். பயனில் ஆசையற்றவரும், விருப்பு வெறுப்பில்லாதவரும், ஒரு விஷயத்திலும் முயற்சியில்லாதவருமான ஈஸ்வரருக்கு வேதங்களில் இப்படிச் சொல்ல வேண்டுமென்கிற எண்ணமானது ஏது?" என்றிருக்கிறது.
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "நான் வேதங்களை நிந்திக்கவில்லை. எவ்வகையிலும் அவற்றைக் குறைத்துப் பேசவும் நான் விரும்பவில்லை. பல்வேறு வாழ்வுமுறைகளுக்கு {ஆசிரமங்களுக்கு} விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகளின் நடைமுறைகளும் ஒரே கதிக்கே வழிவகுக்கின்றன என நாம் கேள்விப்படுகிறோம்.(12) ஒரு சந்நியாசி உயர்ந்த கதியை அடைகிறார். ஒரு காட்டுவாசியும் {வானப்ரஸ்தனும்} உயர்ந்த கதியை அடைகிறான். இல்லறத்தான் {கிருஹஸ்தன்} மற்றும் பிரம்மச்சாரியாகிய மற்ற இருவரும் கூட அதே கதியையே அடைகின்றனர்.(13) வாழ்வுமுறைகள் நான்கும் எப்போதும் தேவையான வழிகளாகவே கருதப்படுகின்றன[3]. ஒப்பீட்டளவில் இவற்றின் பலம், அல்லது பலவீனமானது, அவற்றுக்குரிய கதிகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.(14) ‘இவற்றை அறிந்து கொண்டு, சொர்க்கத்திற்கும் மற்ற அருள்களுக்கும் வழிவகுக்கும் செயல்களை நிறைவேற்றுவாயாக’ என்பது வேதத் தீர்மானத்தில் ஒன்றாகும். ’செயல்களைச் செய்யாதே’ என்பதும் மற்றொரு வேத தீர்மானமே ஆகும்.(15) செயல்களைத் தவிர்ப்பது தகுதியுடையதென்றால், அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சாத்திரங்களின் நிலை இவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட தீர்மானங்களின் பலம், அல்லது பலவீனத்தை உறுதி செய்வது மிகக் கடினமாகவே இருக்க வேண்டும்.(16) சாத்திரங்களில் அல்லாமல் நேரடி சாட்சியம் சார்ந்த, தீங்கிழையாமை எனும் அறத்தை விட மேன்மையான கடமையின் நடைமுறை எதனையும் நீர் அறிவீரென்றால், அஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார் {கபிலர்}.(17)
[3] "எதைக் கொண்டு ஆன்மா அடையப்படுமோ அது தேவயானம் என்று உரையாசிரியர் விளக்குகிறார். ஒப்பீட்டளவில் நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} பலம், அல்லது பலவீனம் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. சந்நியாசி மோட்சம், அல்லது விடுதலையை {முக்தியை} அடைகிறார்; காட்டுவாசி {வானப்பிரஸ்தன்} பிரம்மலோகத்தை அடைகிறான்; இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (இந்திரனால் தலைமை தாங்கப்படும் தேவலோகமான) சொர்க்கத்தை அடைகிறான்; பிரம்மச்சாரி முனிவர்களின் உலகத்தை அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஸ்யூமரஸ்மி, "’ஒருவன் சொர்க்கத்ததில் உள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்ய வேண்டும்’ என்ற இந்த ஸ்ருதி நம்மால் அடிக்கடி கேட்கப்படுகிறது. (அடையப்பட வேண்டிய) கனியை முதலில் நினைத்தே ஒருவன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.(18) வெள்ளாடு, குதிரை, செம்மறியாடு, பசு, பறவையினங்கள் அனைத்தும், வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள், செடி கொடிகள் ஆகியன வாழும் உயிரினங்கள் பிறவற்றின் உணவாகின்றன. இதை நாம் கேள்விப்படுகிறோம்[4].(19) உணவானது, தினத்திற்கு தினம் காலையும் மாலையும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல ஸ்ருதியானது, விலங்குகள் மற்றும் தானியங்கள் வேள்விகளின் அங்கங்களாகும் எனத் தீர்மானிக்கிறது[5].(20)
[4] "பேசுபவர் {ஸ்யூமரஸ்மி}, சொர்க்கத்தின் இருப்பையே கேட்பவர் {கபிலர்} மறுத்துவிடுவாரோ என்ற அச்சத்தால், ’சொர்க்கத்தில் உள்ள விருப்பத்தின் காரணமாக மனிதர்கள் வேள்வி செய்ய வேண்டும்’ என்ற துணிவுரையுடன் தொடங்குகிறார் என உரையாசிரியர் விளக்குகிறார். எனவே, அவர் உணவின் நிமித்தமாகக் கொலையை நியாயப்படுத்தும் நிலையை எடுக்கிறார். உயிரினங்கள் வாழ்வதற்காக உண்ண வேண்டும். அவை தங்கள் உயிரைத் தாங்கிக் கொள்வதற்குக் கொலை அவசியமாகிறது. எனவே, கொலையானது உயர்ந்த தேவையின் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "இவையே வேள்விக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அண்டத்தின் தலைவன் அவற்றை {அந்த உயிரினங்களை} வேள்வியோடு சேர்த்துப் படைத்தான். அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவன், அவற்றின் உதவியுடனே தேவர்களை வேள்விகள் செய்ய வைத்தான்.(21) மொத்தம் ஏழு (வளர்ப்பு விலங்குகளும்), ஏழு (காட்டு) விலங்குகளும் வேள்விக்குத் தகுந்தவை எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை அனைத்தும் இணையான தகுதியைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தங்களுக்கு முந்தையவற்றுக்குத் தாழ்ந்தவையாக இருக்கின்றன. அதே போல, மொத்த அண்டமே வேள்விக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என வேதங்கள் அறிவிக்கின்றன. எவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறானோ, அவனையும் அதே காரியத்திற்காகவே வேதங்கள் நியமித்திருக்கின்றன[6].(22) மிகப் பழங்காலத்து மனிதர்களால் இஃது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கல்விமானான எந்த மனிதன், தன் திறனுக்குத் தக்கபடி வேள்விக்கான உயிரினங்களில் குறிப்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?(23) தாழ்ந்த விலங்குகள், மனிதர்கள், மரங்கள், செடிகள் ஆகிய அனைத்தும் சொர்க்கத்தை அடைவதை விரும்புகின்றன. எனினும், அவை அஃதை அடைவதற்கு வேள்வியைத் தவிர வேறெந்த வழிமுறையும் கிடையாது.(24)
[6] "பசு, வெள்ளாடு, மனிதன், குதிரை, செம்மறியாடு, கோவேறு கழுதை மற்றும் கழுதை ஆகிய ஏழும் {வேள்விக்கு அனுமதிக்கப்படும்} வளர்ப்பு விலங்குகளாகும். சிங்கம், புலி, பன்றி, எருமைக்கடா, யானை, கரடி மற்றும் குரங்கு ஆகிய ஏழும் {வேள்விக்கு அனுமதிக்கப்படும்} காட்டு விலங்குகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கோ, ஆடு, மனிதன், நாய், குதிரை, கோவேறுகழுதை, கழுதை இந்த ஏழு பசுக்களும் ஸாதுக்களால் க்ராம்யங்களென்று சொல்லப்படுகின்றன. ஸிம்மம், புலி, பன்றி, எருமைக்கடா, யானை, மான், முள்ளம்பன்றி இந்த ஏழும் ஆரண்யங்களாக நினைக்கப்படுகின்றன. யாகங்களில் உபயோகிக்கப்பட்டவையெல்லாம் உத்தமமென்று பெயர் பெற்றவையாகச் சொல்லுகிறார்கள். இதுதான் முன்னோர்களாலும், அவர்களுக்கும் முந்தினவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு முந்தையவற்றுக்குத் தாழ்ந்தவையாக இருக்கின்றன" என்று கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
உதிர்ந்த செடிகள், விலங்குகள், மரங்கள், கொடிகள், தெளிந்த நெய், பால், தயிர், இறைச்சி மற்றும் (வேள்வி நெருப்பில் ஊற்றப்படும்) அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்கள், நிலம், திசைப்புள்ளிகள், நம்பிக்கை, காலம் எனப் பனிரெண்டும்,(25) அவற்றுடன் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள், வேள்வி செய்பவன் ஆகியவற்றைச் சேர்த்தால் பதினாறும், இல்லறத்தானாக அறியப்படும் நெருப்பும் சேர்ந்த இந்தப் பதினேழும்(26) வேள்வியின் அங்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன. வேள்வியே உலகின் வேரென்றும், அதன் நடைமுறை என்றும் ஸ்ருதி {வேதம்} தீர்மானிக்கிறது. பசுக் கொடுக்கும் தெளிந்த நெய், பால், தயிர், சாணம், பாலுடன் கலந்த தயிர், தோல், வால்மயிர், கொம்புகள் மற்றும் குளம்புகள் ஆகியவற்றால் மட்டுமே வேள்விக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியும். இவற்றில் குறிப்பிட்ட வேள்விகளுக்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டவையும்,(27,28) ரித்விஜர்களும், (புரோகிதர்கள் மற்றும் பிற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) கொடைகளும் சேர்ந்தே வேள்விகளை நீடிக்கச் செய்கின்றன[8]. மனிதர்கள் இவற்றை ஒன்றாகத் திரட்டி வேள்விகளைச் செய்கிறார்கள்.(29) வேள்வி செய்வதற்காகவே அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மைக்கு இணக்கமாக இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. இவ்வாறே பழங்காலத்தின் மனிதர்கள் அனைவரும் தங்களை வேள்வி செய்வதில் நிறுவிக் கொண்டார்கள்.(30)
[8] "இங்கே குறிப்பிடப்படும் பசுவின் பொருட்கள் அனைத்தும் வேள்விகள் அனைத்திற்கும் தேவைப்படுபவையல்ல. சில சிவற்றுக்கும், பிற பிறவற்றுக்கும் தேவைப்படும். இவற்றில் தேவையானவையும், ரிஜ்விஜரும், தக்ஷிணையும் சேரும்போது, அந்தந்த வேள்விகளை நிறைவு செய்ய, அல்லது தாங்கிப்பிடிக்க, அல்லது நீடிக்கச் செய்யப் போதுமானவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எனினும், வேள்விகளைக் கனிக்காகவோ, வெகுமதிக்காகவோ செய்யாமல், அவை செய்யப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாகச் செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில், அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கவோ, எதனுடனும் பகைமை பாராட்டவோ, எந்த உலகக் காரியத்திலும் தன்னை நிறுவிக் கொள்ளவோ செய்வதில்லை என்பதே காணப்படுகிறது.(31) வேள்வியின் அங்கங்களென மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், வேள்விக்குத் தேவையானவை எனச் சொல்லப்பட்ட பிற பொருட்கள், விதிகளில் குறிப்பிடப்பட்டவை ஆகிய அனைத்தும், (வேள்விகளின் நிறைவுக்கான) அங்கீகரிக்கப்பட்ட சடங்கிற்காகப் பயன்படுத்தப்படும்போது ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கின்றன.(32) முனிவர்களால் எவை தொகுக்கப்பட்டவையோ, வேதங்களை எவை அறிமுகப்படுத்துகின்றவோ அந்த ஸ்மிருதிகளையும் நான் காண்கிறேன். அவை பிராமணங்களைப் பின்பற்றுவதன் விளைவால் கல்விமான்களால் அதிகாரமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(33) வேள்விகள் பிராமணங்களையே தங்கள் மூலமாகக் கொண்டிருக்கின்றன, அவை உண்மையில் பிராமணங்களையே சார்ந்திருக்கின்றன. மொத்த அண்டமும் வேள்வியைச் சார்ந்திருக்கிறது, வேள்வியும் அண்டத்தைச் சார்ந்திருக்கிறது.(34) ஓம் என்ற அசையே வேதங்கள் எழுந்த வேராக இருக்கிறது. (எனவே, பெரும் கருத்தைக் கொண்ட அந்த அசையைச் சொல்லியே எந்தவொரு சடங்கும் தொடங்கப்பட வேண்டும்). ஓம், நமஹ, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட் என்ற அசைகளைச் சொல்பவனும், தன் திறனுக்குத் தக்க வகையில் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்பவனுமான ஒருவனுக்கு(35) அடுத்தப் பிறவியில் நேரப்போகும் மூவுலகங்கள் அனைத்திலும் அச்சமேதும் ஏற்படாது. இவ்வாறே வேதங்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட தவசிகளும், முதன்மையான முனிவர்களும் சொல்கின்றனர்.(36)
எவனிடம் ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் மற்றும் வேத இலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி சாமப்பாடல்களை நிறைவு செய்யத் தேவைப்படும் அசைநிலை {சொல்லின் தன்மை} ஆகியவை இருக்கின்றவோ அவனே உண்மையில் பிராமணனாவான்.(37) ஓ! துதிக்கத்தக்க பிராமணரே, அக்னிஹோத்ரம், சோம வேள்வி மற்றும் பெரும் வேள்விகள் பிறவற்றின் கனிகளை நீர் அறிவீர்.(38) இதன் காரணமாகவே, எவ்வகை ஐயுணர்வுமின்றி ஒருவன் வேள்வி செய்யவும், பிற மக்களின் வேள்விகளில் துணை புரியவும் வேண்டும் என நான் சொல்கிறேன். சொர்க்கத்திற்கு வழிவகுக்கத்தக்க (யோதிஷ்டோமம் முதலிய) வேள்விகளைச் செய்யும் ஒருவன், தெய்வீகப் பேரின்பத்தின் வடிவிலான உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.(39) வேள்விகளைச் செய்யாதவர்களுக்கு இம்மையுமில்லை மறுமையுமில்லை என்பது நிச்சயமானதாகும். வேதங்களின் தீர்மானங்களை உண்மையில் நன்கறிந்தவர்கள், (செயல்படத் தூண்டுபவை, அவற்றைச் செய்வதைத் தவிர்க்க போதிப்பவை ஆகிய) இரண்டு வகைத் தீர்மானங்களையும் சம அதிகாரம் கொண்டவையாகவே கருதுகின்றனர்" என்றார் {ஸ்யூமரஸ்மி}.(40)
சாந்திபர்வம் பகுதி – 268ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |