Saturday, September 15, 2018

சாத்திரக் கள்வர்கள், பிரம்மக் கொள்ளையர்கள்! - சாந்திபர்வம் பகுதி – 269

Robbers of the scriptures and the depredators of Brahma! | Shanti-Parva-Section-269 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 96)


பதிவின் சுருக்கம் : இல்லறத்தைவிடத் துறவறம் ஏன் மேன்மையானது என்பதைச் சொன்ன கபிலர்; இல்லறவாழ்வின் முக்கியத்துவத்தையும், துறவின் தாழ்வையும் எடுத்துக் காட்டிய ஸ்யூமரஸ்மி; துறவின் பெருமையையும், எவன் பிராமணன் என்பதையும், பிராமண ஒழுக்கத்தையும் எடுத்துச் சொன்ன கபிலர்; முக்தியில் ஐயங்கொள்ளும் ஸ்யூமரஸ்மி...


கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "சுயக்கட்டுப்பாட்டையும், அமைதியையும் பின்பற்றும் யதிகள், செயல்களால் அடையப்படும் கனிகள் அனைத்தும் அழிவற்றவையாக இல்லாமல் நிலையற்றவையாகவே இருக்கின்றன என்பதைக்கண்டு, அறிவுப்பாதையின் மூலமாகப் பிரம்மத்தை அடைகிறார்கள். (விரும்பியதும் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதால்) அவர்களைத் தடுக்கக்கூடிய எதுவும் எந்த உலகத்திலும் கிடையாது.(1) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுபடுகிறார்கள். அவர்கள் எதற்கும், அல்லது எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தலைவணங்குவதில்லை. அவர்கள் பந்த பாசங்கள் அனைத்தையும் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஞானம் அவர்களுடையதாக இருக்கிறது. அவர்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையான, களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து, (பெரும் மகிழ்ச்சியுடன்) திரிந்து கொண்டிருக்கிறார்கள்.(2) அவர்கள் அழிவடையக்கூடிய அனைத்துப் பொருட்கள் மற்றும் துறவு வாழ்வு (ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம்) தங்கள் புத்தியினால் தீர்மானமான முடிவுகளை அடைந்திருக்கிறார்கள். பிரம்மத்திடம் அர்ப்பணிப்புடன், பிரம்மத்தைப் போன்று ஏற்கனவே ஆகிவிட்ட அவர்கள் பிரம்மத்திலேயே தங்கள் புகலிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.(3) துன்பத்தைக் கடந்து, ரஜஸிலிருந்து (ரஜஸ் என்ற குணத்தில் இருந்து) விடுபட்ட அவர்கள், அழிவற்றவற்றையே தங்கள் உடைமைகளாகக் கொள்கின்றனர். உயர்ந்த கதியானது இந்த மனிதர்கள் அடையும் தொலைவுக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு இல்லற வாழ்வுமுறையின் கடமைகளைப் பயிலும் தேவை என்ன இருக்கிறது?" என்று கேட்டார் {கபிலர்}[1].(4)


[1] "ஒரு பேரரசை அடைந்தவன் ஈகையின் தானத்தை நாடமாட்டான் என உரையாசிரியர் விளக்குகிறார். துறவறம் நிச்சயம் கொடுக்கும் உயர்ந்த கதியை நோக்கில் கொண்டால், ஒப்பீட்டளவில் சிறப்பற்ற வெகுமதிகளுக்கு வழிவகுக்கும் இல்லற வாழ்வுமுறையில் ஒருவனுக்கு என்ன தேவை எழும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "உண்மையில், அதுவே {முக்தியே} அடையத்தக்க உயர்ந்த பொருளாக இருந்தால், உண்மையில் (துறவை பயில்வதால் அடையப்படும்) உயர்ந்த கதி அதுவேயென்றால், அப்போதும் இல்லற வாழ்வுமுறையின் முக்கியத்துவமே புலப்படுகிறது. ஏனெனில் இல்லற வாழ்வுமுறையில்லாமல் எந்த வாழ்வுமுறையும் சாத்தியமில்லை.(5) உண்மையில், உயிரினங்கள் அனைத்தும், அவற்றுக்குரிய தாய்மாரைச் சார்ந்திருப்பதன் விளைவாலே வாழ இயல்வதைப் போலவே, இல்லறவாழ்வுமுறையைச் சார்ந்திருக்கும் விளைவால் மட்டுமே பிற மூன்று வாழ்வுமுறைகளும் நீடித்திருக்கின்றன.(6) இல்லற வாழ்வுமுறையை நோற்கும் ஓர் இல்லறத்தான், வேள்விகளைச் செய்து, தவங்களையும் பயில்கிறான். மகிழ்ச்சிக்கான விருப்பத்தின் பேரில் எவராலும் செய்யப்படும் எதுவும், இல்லற வாழ்வுமுறையிலேயே தனது வேரைக் கொண்டிருக்கிறது.(7) சந்ததிகளை உண்டாக்குவதையே பேரின்பத்தின் ஊற்றுக்கண்ணாக உயிரினங்கள் அனைத்தும் கருதுகின்றன. எனினும், (இல்லற வாழ்வுமுறையைத் தவிர) பிற வாழ்வுமுறைகள் எதனிலும் சந்ததிகளை உண்டாக்குவது சாத்தியமற்றதாகிறது.(8) அனைத்து வகைப் புல்லும், துரும்பும், (தானியங்களையும், பயிர்களையும் விளைவிக்கும்) செடி கொடிகள் அனைத்தும், குன்றுகளிலும், மலைகளிலும் வளரும் அதே வகையைச் சார்ந்த பிறவும் தங்கள் வேர்களை இல்லற வாழ்வுமுறையிலேயே கொண்டுள்ளன. உயிரினங்கள் வாழ்வு இவற்றையே சார்ந்திருக்கிறது. (இந்த அண்டத்தில்) உயிரைத் தவிர வேறு எதுவும் காணப்படாததால், இந்த அண்டம் முழுமைக்குமான புகலிடமாக இல்லறமே பார்க்கப்படுகிறது.(9) இவ்வாறிருக்கையில், இல்லறமானது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்காது என்று சொல்லும் உண்மையைக் குறித்து யாரால் பேச முடியும்?



நம்பிக்கையற்றவர்கள், ஞானமற்றவர்கள், {சிந்தனையில்} ஆழமற்றவர்கள்,(10) மதிப்பற்றவர்கள், சோம்போறிகள், உழைப்பால் களைத்தவர்கள், கடந்த காலச் செயல்களின் விளைவால் துயரமடைந்தவர்கள் ஆகியோராலும் மட்டுமே துறவு வாழ்வில் பெரும் அமைதியைக் காண முடியும்.(11) (வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள) குறிப்பிட்ட அழிவற்ற வேறுபாடுகளே மூவுலகங்களையும் தாங்கிப் பிடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. உயர்ந்த வகையைச் சார்ந்தவனும், வேதங்களை அறிந்தவனுமான சிறந்த மனிதன், தான் பிறந்த நாள் முதலே வழிபடப்படுகிறான்.(12) கர்ப்பாதானம் செய்தலைத் தவிர, மறுபிறப்பாளர்களை இம்மையிலும் மறுமையிலும் செயல்களனைத்தையும் செய்ய வல்லவர்களாக்க வேத மந்திரங்களும் அவசியமாகின்றன[2].(13) (அவர்களின் மரணத்திற்குப் பிறகு) உடலைத் தகனம் செய்வது, இரண்டாவது உடலை அடையச் செய்வது, அத்தகைய அடைதலுக்குப் பிறகு பானம் மற்றும் உணவைக் கொடுப்பது, வாழும் உலகத்தையும் யமலோகத்தையும் பிரிக்கும் ஆற்றைக் கடக்க உதவும் பசுக்களையும் பிற விலங்குகளையும் கொடை அளிப்பது, ஈமப் பிண்டங்களை நீரில் மூழ்கச் செய்வது ஆகியவற்றில் வேத மந்திரங்கள் அவசியமாகின்றன.(14) இறந்தோரின் வழக்கில், அர்ச்சிஷ்மான்கள், பர்ஹிஷத்துக்கள், கிரவியாதர்கள் என்ற மூவகைப் பித்ருக்கள் மந்திரங்களின் தேவையை அங்கீகரிக்கின்றனர், மேலும் மந்திரங்களும் திறன்மிக்கக் காரணங்களாகக் கொள்ளப்பட்டு (நோக்கங்களை அடைவதற்காக இந்த விழாக்களையும் சடங்குகளையும் செய்ய வழிகாட்டப்பட்டு) அனுமதிக்கப்படுகின்றன.(15) வேதங்கள் இஃதை இவ்வளவு உரக்கச் சொல்லும்போதும், பித்ருக்கள், முனிவர்கள், தேவர்கள் ஆகியோருக்கு மனிதர்கள் கடன்பட்டிருக்கின்றனர் என்று சொல்லப்படும்போதும், எவராலும் விடுதலையை {முக்தியை} எவ்வாறு அடைய முடியும்?(6)

[2] "சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால், ’விளைவுகள் காணப்படும் செயல்கள், விளைவுகள் காணப்படுவதற்குப் பதிலாகச் சாத்திர சாட்சியத்தைச் சார்ந்திருக்கும் செயல்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மறுபிறப்பாள வகையினரின் உடலுக்குள் நிச்சயம் வேத மந்திரங்கள் நுழைகின்றன’. நடைமுறையில் இங்கே சொல்லப்படுவது யாதெனில், ஒரு பிராமணனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வேத மந்திரங்களின் துணையுடனே செய்யப்படுகின்றன என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முதலிலேயே த்விஜர்களிடம் கர்ப்பாதான மந்திரங்கள் பிரவ்ருத்திக்கின்றனவல்லவா? வேத மந்திரங்கள் வேதமின்றி நிச்சயிக்க முடியாதவைகளாக ஸ்வர்க்க முதலானவைகளிலும் (மழை முதலான) பிரத்யக்ஷமான விஷயங்களிலும் பற்றிக் கொண்டிருக்கின்றன;" என்றிருக்கிறது.

[3] "ஒருபிராமணனின் சடலத்தைத் தகனம் செய்ய மந்திரங்கள் தேவைப்படுகின்றன. இறந்தவனின் ஆத்மா (இம்மையிலோ மறுமையிலோ) ஒளி உடலை அடைவதற்குத் துணை புரிய மந்திரங்கள் தேவைப்படுகின்றன. இந்த மந்திரங்கள் சிராத்தங்களில் உண்மையில் சொல்லப்படுகின்றன. இறந்தவனின் ஆத்மாவுக்கு மந்திரங்களின் துணையுடன் உடலும், உணவும், பானமும் கொடுக்கப்படுகின்றன. இறந்த மூதாதையை (ஈருலகங்களுக்கு மத்தியில் பாயும் ஆறான) வைதரணீயைக் கடப்பதற்கும், சொர்க்கத்தில் மகிழ்ச்சி அடைவதற்கும் இயன்றவர்களாக்க, இறந்தவரின் பரிதிநிதிகளால் பசுக்களும், விலங்குகளும் கொடையாக அளிக்கப்படுகின்றன. இறந்தவருக்குக் காணிக்கை அளிக்கப்படுவது அவரை அடையச் செய்ய விதிப்படி ஈமப்பிண்டம் நீரில் மூழ்கச் செய்யப்படுகிறது. மனிதனாவதால் ஒருவன் மூன்று கடன்களைக் கொள்கிறான். கல்வி கற்பதன் மூலம் அவன் முனிவர்களுக்கான கடனை அடைக்கிறான்; வேள்விகளைச் செய்வதன் மூலம் அவன் தேவர்களுக்கான கடனை அடைக்கிறான்; பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவன் பித்ருக்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். இங்கே வாதம் இதுதான்: ‘பரமாத்மாவின் வார்த்தைகளான வேதங்கள், மறுமையில் உள்ள பொருட்களை அடைவதற்காக இந்த மந்திரங்களை விதித்திருக்கும்போது, (காரண வடிவத்தைக் கடந்த அருவ இருப்பைக் கொண்ட) விடுதலை எவ்வாறு சாத்தியமாகும்? செயல்களுக்குச் சாதகமாக இருக்கும் வேத தீர்மானங்களே, அருவ இருப்புக்கு இணக்கமற்றோ, அறிபவன், அறியப்படுபவன் என்ற இரு நனநிலைகளின் இருப்புக்கு எதிர்மறையாகவோ இருக்கின்றன’ என்பதே பேசுபவரின் {ஸ்யூமரஸ்மியின்} வாதம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வேத தீர்மானங்களின் உண்மைக் கருத்தை நிலைகுலைப்பதாக இருந்தாலும், (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் அருவ இருப்பைக் குறித்த) இந்தப் போலிக் கோட்பாடானது, செழிப்பிழந்தவர்களும், சோம்பலால் உண்ணப்பட்டவர்களுமான கல்விமானங்களால் வெளிப்படையாக உண்மையின் வண்ணங்களில் போர்த்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது[4].(17) வேத தீர்மானங்களின் அடிப்படையில் வேள்விகளைச் செய்யும் பிராமணன், ஒருபோதும் பாவத்தால் குற்றஞ்செய்யத் தூண்டப்படுவதில்லை. அத்தகைய மனிதன், வேள்விகள் மூலம், தான் வேள்விகளில் கொன்ற அந்த விலங்குகளுடன் சேர்ந்து இன்பலோகங்களை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தையும் அடைவதன் மூலம் நிறைவடைந்து, அவ்விலங்குகளின் விருப்பங்களையும் நிறைவேற்றி, அவற்றையும் நிறைவுகொள்ளச் செய்வதில் வெல்கிறான்.(18) வேதங்களை அலட்சியம் செய்வதன் மூலமும், வஞ்சனை மற்றும் தவறான வழிகாட்டுதலின் மூலமும் ஒருவன் உயர்ந்ததை {பரமனை} அடைவதில் வெல்வதில்லை. மறுபுறம், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வதன் மூலமே ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்" என்றார் {ஸ்யூமரஸ்மி}.(19)

[4] கும்பகோணம் பதிப்பில், "மனுஷ்யர்கள், பித்ருக்கள், தேவர்கள், அதிதிகள், இவர்க்ள விஷயத்தில் கடன்காரர்களாயிருப்பதால் தனமற்றவர்களும், சோம்பேறிகளுமான பண்டிதர்களால் வேதத்திலுண்டான அர்த்தவாதத்தினுடைய உண்மை அறிவில்லாமல் ஸத்யம் போல ஏற்படுத்தப்பட்ட மோக்ஷமானது பொய்யாகும்" என்றிருக்கிறது.

கபிலர், "(செயல்களே கடமை {கர்மமே தர்மம்} ஆனால்), நுண்ணறிவு கொண்ட மனிதன் செய்யத் தர்சம், பௌர்ணமாஸம், அக்னிஹோத்ரம், சாதுர்மாஸ்யம் மற்றும் பிற செயல்கள் இருக்கின்றன. அதைச் செய்வதில் அழிவில்லாத தகுதியும் {புண்ணியமும்} இருக்கிறது. (பிறகு, அவன் கொடுமை நிறைந்த செயல்களை ஏன் செய்ய வேண்டும்?).(20) செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களாக, பொறுமையுடன் கூடியவர்களாக, (கோபம் மற்றும் அனைத்துக் களங்கங்களில் இருந்தும்) தூய்மையடைந்தவர்களாக, பிரம்மத்தை அறிந்தவர்களாகச் சந்நியாச வாழ்வுமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அத்தகைய பிரம்ம அறிவாலேயே வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளை மிகவும் விரும்பும் தேவர்களிடம் (முனிவர்களிடமும், பித்ருக்களிடமும்) பட்டிருக்கும் கடன்களை அடைப்பதில் வெல்கிறார்கள்.(21) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணில் பார்ப்பவனுமான பாதையற்ற ஒருவனின் {வித்வானின்} பாதையை அறிவதில் தேவர்களேகூட மலைத்துப் போகிறார்கள்.(22) ஆசான்களிடம் பெற்ற போதனைகளின் மூலம் ஒருவன், நான்கு வாயில்களையும், நான்கு வாய்களையும் கொண்டதும், நான்கு வகை இயல்பைக் கொண்டதுமான இந்தச் சட்டகத்திற்குள் {உடற்கட்டுக்குள்} வசிக்கும் ஒன்றை {ஆத்மாவை} அறிகிறான். இரு கரங்கள், வாக்கு புலன் {நாக்கு}, வயிறு, இன்ப புலன் ஆகியவற்றின் (ஆகியவற்றைக் கொண்டதன்) விளைவால் தேவர்களும் நான்கு வாயில்களைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். எனவே ஒருவன் அந்த வாயில்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத் தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முனைய வேண்டும்[5].(23) ஒருவன் பகடையைக் கொண்டு சூதாடக்கூடாது. அவன் பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்கக்கூடாது. உன்னதமற்ற பிறப்பைக் கொண்ட ஒரு மனிதனின் வேள்வியில் அவன் துணைபுரியக்கூடாது. அவன் கோபவசப்பட்டு மற்றொருவனைக் கைகளாலோ, கால்களாலோ தாக்கக்கூடாது. எந்தப் புத்திமான் இவ்வாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்கிறானோ, அவன் தன் கைகளையும், கால்களையும் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(24) ஒருவன் உரத்துக் கூக்குரலிடும் நிந்தனையிலோ, கண்டிப்பதிலோ ஈடுபடக்கூடாது. அவன் வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. குறும்புகள் செய்வதில் இருந்தும், பிறரைப் பழித்துக் கூறுவதில் இருந்தும் விலக வேண்டும். அவன் வாய்மை நோன்பை நோற்று, மிகக் குறைந்த அளவில் பேசி, எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொண்டால் அவன் தன் வாக்குப் புலனைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.(25)

[5] "மூலத்தின் செறிவு மொழிபெயர்ப்பிலும் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஏனம் Enam என்பது, இந்த உடற்கட்டுக்குள் வசிக்கும் அண்ட ஆன்மாவாகும். அஃது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்பவனையோ, பிரம்மத்தை அறிந்த ஒருவனையோ, பிரம்மமாகவே ஆகிவிட்ட ஒருவனையோ குறிக்கிறது. அந்த ஆன்மாவுக்கு நான்கு வகை இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விராட் viraat (அனைத்தையும் தழுவியிருக்கும் நிலை), Sutra சூத்ரம் (மெலிந்த நூலைப் போல மெலிதாகவும் அனைத்திலும் பரவி இருக்கும் நிலை), அந்தர்யாமின் antaryaamin (அனைத்தையும் அறிந்த நிலை) மற்றும் சுத்தம் (களங்கமற்ற நிலை) ஆகியவையே அவை. இன்பத்தை அனுபவிக்கும் நான்கு மூலங்கள் என்ற பொருளில் நான்கு வாய்களாகச் சொல்லப்படுபவை, உடல், புலன்கள், மனம் மற்றும் புத்தியாகும். பேசுபவர் {கபிலர்}, ஆன்மாவின் போகத்ரித்வத்தைத்தான் Bhoktritwa (ஆன்மாவின் அனுபவிக்கும் சக்தியைத் தான்) இங்குச் சொல்ல விரும்புகிறார். கத்ரித்வம் (செயல் சக்தியானது) இரு கரங்கள், வாக்குப்புலன், வயிறு, இன்ப உறுப்பு (உற்பத்தி உறுப்பு) ஆகியவற்றைக் கொண்ட வாயில்களாகக் குறிப்பிடப்படுகிறது. இறுதியாக வரும் இவையே ஆன்மாவை அதன் அறைக்குள் அடைக்கும் வாயில்களாகச் செயல்படுகின்றன. தேவர்களே கூட அவற்றைக் கடக்கவும், அவற்றின் தேவைகளைக் கடக்கவும் இயலாமல் அவற்றின் சக்தியை உணர்கிறார்கள். எவன் அவற்றைக் கடந்து, தன் சொந்த களங்கமற்ற இயல்பில் ஒளிர்கிறானோ அவன் அவற்றைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். நடைமுறையில், அண்ட ஆன்மாவின் நிலை அடைவதில் ஒருவரை தகுதியுடையவராக்க யோகமே பரிந்துரைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கைகள் முதலான நான்கு துவாரங்களையுடையவனும், சரீரம், இந்திரயம், மனம், புத்தி என்கிற நான்கு முகங்களையுடையவனுமான புருஷனை வேதவாக்யத்தால் விராட், ஹிரண்யகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தமென்கிற நான்குவிதமாக ஜீவன் அடைகிறான். கைகளும், வாக்கும், உதரமும், குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள் அந்த வாயில்களைக் காக்க வேண்டும்" என்றிருக்கிறது.

ஒருவன் உணவை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. அவன் அதிகமாகவும் உண்ணக்கூடாது. அவன் பேராசையைக் கைவிட்டு, எப்போதும் நல்லோரின் தோழமையை நாட வேண்டும். அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். இவ்வழியில் ஒருவன் தன்னை அமைத்துக் கொள்வதால் வயிறு எனும் வாயிலை முறையாகக் கட்டுப்படுத்தவதில் அவன் வெல்கிறான்.(26) ஓ வீரரே, ஒருவன் மணந்து கொண்ட மனைவி இருக்கும்போது மற்றொருவனுடைய மனைவியைக் காமத்துடன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. அவன் ஒரு பெண்ணை அவளது பருவ காலத்திலன்றி ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவன் பிற பெண்களுடன் கலவியை நாடாமல் தன் சொந்த மனைவியிடம் மட்டுமே தன்னை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வழியில் தன்னை அமைத்துக் கொள்ளும் ஒருவன், தன் இன்ப உறுப்பை முறையாகக் கட்டுப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.(27) ஞானம் கொண்ட எந்த மனிதன், தன் இன்ப உறுப்பு, வயிறு, இரு கரங்கள் (மற்றும் இரு கால்கள்), வாக்கு உறுப்பு ஆகிய நான்கு வாயில்களில் அனைத்தையும் முறையாகக் கட்டுப்படுத்துகிறானோ, அவனே உண்மையில் ஒரு மறுபிறப்பாளனாவான்.(28) நன்கு கட்டுப்படுத்தப்படாத வாயில்களைக் கொண்ட மனிதன் அனைத்திலும் பயனற்றவனாவான். அத்தகைய மனிதனின் தவங்களால் என்ன செய்ய முடியும்? அவனது வேள்விகள் எதைக் கொண்டுவரும்? அவனது உடலால் எதை அடைய முடியும்?(29) தன் மேலாடையைக் கைவிட்டவன் எவனோ, தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் உறங்குபவன் எவனோ, அமைதிநிறைந்த இதயத்தைக் கொண்டவன் எவனோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(30)

தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்த எந்த மனிதன், மணந்து கொண்ட இணையர் அனுபவிக்கும் இன்பம் அனைத்தையும் தனியாகவே அனுபவிக்கிறானோ, பிறரின் இன்ப துன்பங்களில் எவன் தன் கவனத்தைச் செலுத்தவில்லையோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்[6].(31) எந்த மனிதன் இவை அனைத்திலும் உண்மையில் உள்ளவற்றை உள்ளபடியே அவற்றின் பல வடிவ மாறுதல்களுடன் சரியாகப் புரிந்து கொள்கிறானோ, எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் கதியையும் அறிந்து கொள்கிறானோ, அவனே தேவர்களால் பிராமணனாக அறியப்படுகிறான்[7].(32) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினிமும் அச்சங்கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ அவனே பிராமணனாக அறியப்பட வேண்டும்.(33) கொடைகள், வேள்விகள் போன்ற பக்திச் செயல்கள் அனைத்தின் உண்மை விளைவான இதயத் தூய்மையை அடையாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், ஆசான்களால் விளக்கப்பட்டாலும், ஒரு பிராமணனாவதற்குத் தேவையான ஞானத்தை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டார்கள். இவை யாவற்றின் அறிவும் இல்லாத இந்த மனிதர்கள், சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்களின் பல்வேறு வகைக் கனிகளையே விரும்புகிறார்கள்.(34)

[6] "துவந்தவாராமம் dwandwaaraama என்பது கிட்டத்தட்ட திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் இன்பத்தைக் குறிப்பதாகுமே அன்றி, முரண்பட்ட இரட்டங்களில் அடையப்படும் இன்பத்தைக் குறிக்காது. திருமணம் செய்யாமலே, திருமண வாழ்வு தொடர்புடைய இன்பங்களை அனைத்தையும் தனியாக அனுபவிப்பதில் வெல்பவனே பிராமணன் என்ற பொருளை இந்த ஸ்லோகம் தருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலி இங்கே பிழை செய்திருப்பதாகவே தெரிகிறது. திருமணம் ஆனவர்கள் பிராமணர்களாகக் கருதப்படமாட்டார்கள் என்ற பொருளைத் தரும் வகையில் கங்குலியின் விளக்கம் இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "எல்லோரும் சீதோஷ்ணமுதலான த்வந்துவங்களில் களித்துக் கொண்டிருக்கும்பொழுது பிறருடைய (ஸுகதுக்கங்களை) நினையாமல் தனியாயிருந்து (ஆத்மாவில்) ஸுகித்துக் கொண்டிருக்கும் முனிவனைத் தேவர்கள் பிராம்மணனாக நினைக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அத்தகைய தவசி இன்பத்தை மட்டுமே காண்கிறான். முரண்பட்ட கருத்துகள் அனைத்திலும் அவன் சுகமாகவே இருக்கிறான். அவன் பிறரைக் குறித்துச் சிந்திப்பதில்லை. தேவர்கள் அத்தகைய மனிதனையே பிராமணனாக அறிகிறார்கள்" என்றிருக்கிறது.

[7] "உண்மையில் அனைத்துப் பொருட்களும் பிரம்மமாகவே இருக்கின்றன. அவற்றின் புற இருப்பானது மாறுபாடுகள் மட்டுமே. யோகத்தின் மூலம் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும் வரை மரணமும், மறுபிறப்புமே அனைத்து உயிரினங்களின் கதியாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பழங்காலத்தில் இருந்தே தொடர்வதும், நித்தியமானதும், நிச்சயத்தன்மையை இயல்பாகக் கொண்டதும், நமது கடமைகள் அனைத்திலும் ஓர் இழையாக நுழைந்திருப்பதும், அனைத்து வகை வாழ்வுமுறைகளிலும் உள்ள ஞானிகள், எதைக் கொண்டு தங்கள் வகைக்குரிய கடமைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றை அறியாமையையும் உலகத் தீமைகளையும் அழிக்கும் பயங்கர ஆயுதங்களாக மாற்றிக் கொள்வார்களோ, அந்த நன்னடத்தையின் ஒரு சிறுபகுதியைக் கூட நடைமுறையில் பயில இயலாத மூட புத்தி கொண்ட மனிதர்கள், புலப்படும் கனிகளை உண்டாக்குவதும், உயர்ந்த பலம் நிறைந்ததும், மரணமற்றதுமான அந்நிலையை {ஒழுக்கத்தைக்} கனியற்றதாகவும், சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாததாகவும், (முறையான போக்கின்) பிறழ்வாகவும் கருதுகிறார்கள். எனினும் உண்மையில் அவ்வொழுக்கமானது, துயரில் காணப்படுவதற்கு எதிரான நடைமுறைகளைத் தழுவி, விழிப்புணர்வின் சாரமாகவும், காமத்தாலும், கோபத்தாலும், அதே வகையைச் சார்ந்த பிற ஆசைகளாலும் பாதிக்கப்படாததாகவும் இருக்கிறது.(36,37) வேள்விகளைப் பொறுத்தவரையில் அவற்றின் குறிப்புகள் அனைத்தையும் உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. உறுதி செய்யப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை வழிவகுக்கும் கனிகள் நிலையில்லாதவையாக இருக்கின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்வீராக. (இதைக் குறித்துக் கொண்டு, ஞானப்பாதையில் நடப்பீராக" என்றார் {கபிலர்}.(38)



ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "வேதங்கள் செயல்களை முகத்தோற்றமாகக் கொள்ளவும் செய்கின்றன, அவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்றன. அவற்றின் தீர்மானங்கள் இவ்வாறு ஒன்றோடொன்று முரண்படும்போது அவற்றில் அதிகாரம் எங்கே இருக்கிறது? மேலும் செயல்களைத் துறப்பதும் பெரும் நன்மையை உண்டாக்குகிறது. இந்த இரு பாதைகளும் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஓ! பிராமணரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்றார்.(39)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "நல்ல பாதையில் (யோகத்தில்) உங்களைச் செலுத்திக் கொண்டு, உங்களது புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் இவ்வாழ்விலேயே அதன் கனிகளை உணர்வீர்களாக. எனினும், (செயல்களைச் செய்யும் மனிதர்களான) நீங்கள் தொடரும் பிற நோக்கங்களில் புலப்படும் விளைவுகள் என்னென்ன?" என்று கேட்டார்.(40)

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "ஓ! பிராமணரே, என் பெயர் ஸ்யூமரஸ்மி ஆகும். நான் ஞானத்தை அடைவதற்காக இங்கு வந்தேன். எனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பிய நான், சச்சரவு செய்யும் விருப்பத்தால் அல்லாமல், கபடமற்ற வெளிப்படைத்தன்மையுடனேயே இந்த விவாதத்தைத் தொடங்கினேன்.(41) இந்த இருண்ட ஐயம் என் மனத்தைப் பீடித்திருக்கிறது. ஓ! சிறப்புமிக்கவரே, அஃதை எனக்குத் தீர்ப்பீராக. எதைக் கொண்டு பிரம்மம் அடையப்படுமோ, அந்த (யோகம் எனும்) நல்லோரின் பாதையில் நடப்பவர்கள், தங்கள் புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் அதன் கனிகளை உணர்வார்கள் என்று நீர் சொன்னீர். உண்மையில், புலன்களின் நேரடி சாட்சியத்தின் மூலம் உணரப்படுவது எது? எதை நீர் பின்தொடர்கிறீர்?(42) சொற்போரை {தர்க்கத்தை} மட்டுமே தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்ட அறிவியல்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆகமத்தின் உண்மைப் பொருளை முறையாகப் புரிந்து கொள்ளும் வகையில் நான் அதை {ஆகமத்தைப்} படித்திருக்கிறேன். ஆகமத்தின் மூலமே நான் வேதத் தீர்மானங்களைப் புரிந்து கொள்கிறேன். வேதங்களின் உண்மைப் பொருளை வெளிக்கொணரும் நோக்கத்தைக் கொண்ட தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவியல்களை {ஆகமம் என்ற} அந்தச் சொல்லில் நான் சேர்க்கிறேன்[8].(43) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைத் தவிர்க்காமல், ஆகமத்தில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையே ஒருவன் பின்தொடர வேண்டும். ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நோற்பது, ஒருவனுக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டுகிறது. ஆகமத் தீர்மானங்களுடைய நிச்சயத்தன்மையின் விளைவால், அது வழிவகுக்கும் வெற்றியானது, நேரடியான சாட்சியத்தின் மூலம் கிட்டத்தட்ட உணரத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(44) ஒரு துறைக்குச் செல்ல இருக்கும் படகில் கட்டப்பட்ட மற்றொரு படகால், பயணிகள் அடைய விரும்பும் துறைக்கு இட்டுச் செல்ல முடியாததைப் போலவே, கடந்த கால ஆசைகளின் மூலம் செய்யப்பட்ட எங்கள் செயல்களால் இழுக்கப்படும் நாங்கள், பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவற்ற ஆற்றை ஒருபோதும் கடக்க முடியாதவர்களாக (மேலும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள ஓய்வு மற்றும் அமைதியின் புகலிடத்தையும் அடைய முடியாதவர்களாக) இருக்கிறோம். ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓர் ஆசான் தன் சீடனுக்குப் போதிப்பதைப் போல எனக்குப் போதிப்பீராக.(45)

[8] "சொற்போரை மட்டுமே தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்ட அறிவியல்கள், லோகயாதிகர்கள், கௌகதர்கள் (அல்லது பௌத்தர்கள்), காபாலிகர்கள் முதலியோரின் அறிவியலைக் குறிக்கின்றன என்று உரையாசிரியர் கருதுகிறார். தர்க்கத்தின் அடிப்படையிலானவையும், ஆகமம் என்ற வார்த்தையில் பிற அறிவியல்கள், இரண்டு மீமாம்சங்களும், சாங்கியமும், பாதஞ்சலமும் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மனிதர்களுக்கு மத்தியில், உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் துறந்தவர், தமக்குள்ளேயே முற்றிலும் நிறைவுடன் இருப்பவர், துயரத்தைக் கடந்தவர், நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், (தம் சொந்த நன்மைக்காக) செயல்படும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர், தோழமையில் முற்றாகச் சுவையிழந்தவர், அனைத்து வகைச் செயல்களையும் முற்றிலும் தவிர்த்தவரென எவரையும் காண முடியவில்லை.(46) உம்மைப் போன்ற மனிதர்களும்கூட எங்களைப் போலவே இன்பத்திற்கு வசப்படுவதும், துயரத்தில் ஈடுபடுவதும் காணப்படுகிறது. உம்மைப் போன்ற மனிதர்களின் புலன்களும், பிற உயிரினங்களைப் போலவே தங்கள் செயல்பாடுகளிலும், நோக்கங்களிலும் ஈடுபடுகின்றன.(47) இன்பம் குறித்த கேள்வியை நாம் ஆராய்ந்தால், விருப்பங்களையும், ஒரே கதியையும் கொண்ட மனிதர்களின் நான்கு வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்}, நான்கு வாழ்வுமுறைகளுக்குமான {ஆசிரமங்களுக்குமான} தூய இன்பநிலை எதனில் இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார் {ஸ்யூமரஸ்மி}.(48)

கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "ஒருவன் எந்தச் சாத்திரத்தின் அடிப்படையில் செயல்களில் ஈடுபட விரும்பினாலும், அந்தச் செயல்களை ஒழுங்குமுறைப்படுத்த அதில் {அந்த சாத்திரத்தில்} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் கனியற்றவையாவதில்லை. எந்தக் கருத்தின்படி ஒருவன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாலும், சுயக்கட்டுப்பாடு, அல்லது யோகக் கடமைகளை நோற்பதால் மட்டுமே அவனால் உயர்ந்த கதியை அடையமுடியும்.(49) ஞானத்தைத் தேடும் மனிதனுக்கு,(பிறப்பு மற்றும் இறப்பு என்ற முடிவிலாத ஆற்றைக்) கடந்து செல்ல அந்த ஞானமே துணைபுரிகிறது. எனினும், ஞானத்தின் பாதையில் இருந்து விலகிய பிறகு மனிதர்கள் தேடும் ஒழுக்கமானது, (பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீமைகளுக்கு உள்ளாக்கி) அவர்களைப் பீடிக்கவே செய்கிறது.(50) நீர் அறிவைக் கொண்டிருக்கிறீர், துன்பத்தை உண்டாக்கும் உலகம் சார்ந்த பொருட்களின் தொடர்பில்லாமல் இருக்கிறீர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களில் எவரேனும், ஒரே அண்ட ஆன்மாவைப் போல அனைத்தையும் காணச்செய்யும் அறிவை அடைவதில் எப்போதாவது வென்றிருக்கிறீர்களா?[9](51)

[9] "’ஐகாத்மியம்’ Aikaatmyam என்பது ‘ஏகம் ஏவ த்வைத தர்சன ஹின ஆத்மா யாத்ர பவதி’ Eka eva dwaita darcana hin aatmaa yatra bhavati என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. நடைமுறையில், இஃது அண்டத்தில் உள்ள அனைத்தையும் தன்னைப் போலவே காணும் ஒருவனின் மனோ நிலையாகும். இதுவே விடுதலையை {முக்தியைக்} கொண்டு வரும் உண்மை அறிவாகும், அல்லது விடுதலையே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சச்சரவில் மட்டுமே ஈடுபடும் விருப்பத்தில், சாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், விருப்புவெறுப்பில் மூழ்குவதன் விளைவால் செருக்குக்கும், ஆணவத்திற்கும் அடிமையாகும் சிலர் இருக்கிறார்கள்.(52) சாத்திரத் தீர்மானங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்தச் சாத்திரக் கள்வர்கள், இந்தப் பிரம்மக் கொள்ளையர்கள், ஆணவம் மற்றும் பிழையின் ஆதிக்கத்தால் அமைதியைத் தேடவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் மறுக்கிறார்கள்[10].(53) இம்மனிதர்கள் அனைத்துப் புறங்களிலும் கனியற்ற நிலையையே காண்கிறார்கள், (ஏதோ வாய்ப்பின் மூலம்) அவர்கள் ஞானப் பலத்தை அடைவதில் வென்றால், பிறரைக் காக்க ஒருபோதும் அவர்களுக்கு அதைச் சொல்லமாட்டார்கள். முற்றிலும் தமஸ் குணத்தாலான அவர்கள், தமஸை மட்டுமே தங்கள் புகலிடமாகக் கொள்கிறார்கள்.(54) ஒருவன் உள்ளீர்த்துக் கொள்ளும் இயல்பின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவன் வசப்படுகிறான். அதன்படி, ஒருவனுடைய குணங்களே அவனுடைய இயல்பாக எழுகிறது என்பதால், தமஸைத் தன் புகலிடமாகக் கொண்ட ஒருவனிடம், பொறாமை உணர்வுகள் {பகை}, காமம் {விருப்பு}, கோபம் {சினம்}, செருக்கு {டம்பம்}, பொய்மை, போலித்தனம் {மதம்} ஆகியவை தொடர்ந்து வளர்கின்றன.(55) உயர்ந்த கதியை விரும்பும் யதிகள், இவ்வகையிலேயே சிந்தித்து, (ஆசான்களுடைய போதனைகளின் துணையால்) இந்தக் களங்கங்களைக் கண்டு, நன்மை தீமை ஆகிய இரண்டையும் விட்டு யோகத்தில் ஈடபடுகின்றனர்" என்றார் {கபிலர்}.(56)

[10] "சாத்திரங்களின் உண்மைப் பொருளை எப்போதும் களவு செய்யவே நினைப்பதால் அவர்கள் "சாத்திரக் கள்வர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். தெய்வ இருப்பையே மறுக்கும் காரணத்தால் அவர்கள் "பிரம்மக் கொள்ளையர்கள்" ஆகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "ஓ! பிராமணரே, (செயல்களின் மெச்சத்தக்க தன்மை, துறவின் முரண் தன்மை ஆகியவற்றைக் குறித்து) நான் சொன்ன அனைத்தும் கண்டிப்பாகச் சாத்திரங்களுக்குப் பொருந்தக் கூடியவையே ஆகும். எனினும், சாத்திரங்களின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒருவன், சாத்திரங்கள் உண்மையில் எதை அறிவிக்கிறதோ அதற்குக் கீழ்ப்படிய விரும்புவதில்லை என்பது நிச்சயம் உண்மையே.(57) நேர்மை நெறிக்கு இணங்கும் எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாகவே இருக்கிறது. இதையே ஸ்ருதியும் தீர்மானிக்கிறது. அதே போல, நேர்மை நெறிக்கு இணங்காத எந்த ஒழுக்கமும், சாத்திரங்களுக்கு இணக்கமாக இருப்பதில்லை. இதுவும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.(58) சாத்திரங்களை மீறுவதன் மூலம் சாத்திரச் செயலெதையும் ஒருவனாலும் செய்ய முடியாது. மேலும் சாத்திரத்திற்குப் புறம்பானது நிச்சயம் வேதங்களுக்கு எதிரானதே. இதை ஸ்ருதி அறிவிக்கிறது[11].(59) புலன்களை எது நேரடியாகக் கவர்கிறதோ, அதை மட்டுமே நம்பும் பல மனிதர்கள், (நம்பிக்கைக்காக {எதிர்பார்ப்புக்காக} சாத்திரங்களில் சொல்லப்பட்டதைக் காணாமல்) இவ்வுலகத்தை மட்டுமே காண்கிறார்கள். சாத்திரங்கள் எவற்றைக் களங்கங்கள் என்று அறிவிக்கிறதோ, அவற்றைக் அவர்கள் காண்பதில்லை. அதன்படியே, எங்களைப் போலவே அவர்களும் துயரத்தின் வசப்படுகிறார்கள். உம்மைப்போன்ற மனிதர்கள் கவலைப்படும் புலன்நுகர் பொருட்களும், பிற உயிரினங்களும் கவலைப்படும் பொருட்களும் ஒன்றே. (இருப்பினும், ஆன்மா குறித்த உமது அறிவாலும், அவற்றின் {பிற உயிரினங்களின்} அறியாமையாலும், உமக்கும் அவற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது?(60)

[11] கும்பகோணம் பதிப்பில், "நியாயமான ஆசாரமெல்லாம் சாஸ்திரமென்று வேதம் கூறுகிறது. எது அந்யாயமோ அது அசாஸ்திரமென்று வேதம் கூறுகிறது. சாஸ்திரமின்றி ஒரு செய்கையும் இல்லையென்பது நிச்சயம். வேத வாதங்களுக்கு விலக்கானது அசாஸ்தரமென்று ஸ்ருதி சொல்லுகிறது" என்றிருக்கிறது.

நான்கு வகை மனிதர்கள் அனைவரும், நான்கு வகை வாழ்வுமுறைகள் அனைத்தும் எவ்வளவுதான் தங்கள் கடமைகளில் வேறுபட்டிருந்தாலும் அவை அனைத்தும் (பேரின்ப நிலை என்ற) ஒரே கதியையே நாடுகின்றன. கேள்விக்கப்பாற்பட்ட திறன்களையும், ஆற்றல்களையும் நீர் கொண்டிருக்கிறீர். (பல்வேறு கடமைகளுக்கு மத்தியில்) விரும்பும் கதியை நிறைவேற்ற, நன்கு கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையை உறுதி செய்வதற்காக, முடிவிலியை (பிரம்மத்தைக்) குறித்து எனக்குச் சொன்னதன் மூலம், என் ஆன்மாவை அமைதியால் நீர் நிறைத்துவிட்டீர். எங்களைப் பொறுத்தவரையில், ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாததன் விளைவால், நாங்கள் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம். எங்கள் ஞானம், தாழ்ந்த பொருட்களின் தொடர்புடையதாக இருக்கிறது, நாங்கள் அடர்த்தியான இருளில் மூழ்கியிருக்கிறோம்.(61,62) (எனினும், விடுதலையை அடைய ஒருவனைத் தகுதியாக்குமென நீர் குறிப்பிட்ட ஒழுக்க நடைமுறையைப் பயில மிகக் கடினமாக இருக்கிறது). எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறானோ, எவன் தன் கடமைகள் அனைத்தையும் செய்கிறானோ, எவன் தன் உடலை மட்டுமே சார்ந்து எங்கும் திரிய வல்லவனாக இருக்கிறானோ, எவன் தன் ஆன்மாவை முற்றான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறானோ, எவன் அறநெறிகளின் தேவையைக் கடந்தவனாக இருக்கிறானோ, எவன் மொத்த உலகையும் (அதற்குச் சொந்தமான அனைத்தையும்) அலட்சியம் செய்கிறானோ, அவனால் மட்டுமே செயல்கள் குறித்த வேத தீர்மானங்களை மீறி, விடுதலை {முக்தி} இருக்கிறதென்று சொல்ல முடியும்[12].(63,64)

[12] "பின்பற்ற மிகக் கடுமையான துறவு வாழ்வால் மட்டுமே விடுதலைக்கு வழிவகுக்க முடியும் என்பதே இங்கே சொல்லப்படும் கருத்தாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தனித்திருப்பவனும், யோகத்தோடு கூடினவனும், எல்லாவிஷயத்திலும் ஸமர்த்தனும், சிறிதும் பேசாதவனும், சக்தியுள்ளவனும், மனத்தை ஜயித்தவனுமாயிருக்கிறவன் சரீர மாத்திரத்தை அவலம்பித்துக் கொண்டு எல்லாத்திக்கிலும் சஞ்சரிக்க வேண்டி வேதத்தின் அர்த்தவாதத்தை நம்பி மோக்ஷமானது இருக்கிறதென்று சொல்லத்தகும்" என்றிருக்கிறது.

எனினும், உறவினர்களுக்கு மத்தியில் வாழும் ஒருவனுக்கு, இவ்வொழுக்க நடைமுறையைப் பின்பற்றுவது மிகக் கடினமாக இருக்கும். கொடை, வேதகல்வி, வேள்விகள், சந்ததியைப் பெறுதல், எதையும் கையாள்வதில் எளிமை,(65) ஆகிய இவற்றைப் பயின்றும் ஒருவனால் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்ல முடியவில்லையெனில், அந்த விடுதலையை அடைய முனைபவனுக்கும், வேண்டப்படும் அந்த விடுதலைக்கும் ஐயோ. அஃதை அடைய கொடுக்கப்படும் உழைப்பனைத்தும் கனியற்றதாகவே தெரிகிறது.(66) வேதங்களை அவமதித்து, அவை சொல்லும் செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஒருவன் நாத்திகனாகக் குற்றஞ்சாட்டத் தகுந்தவனே. ஓ! சிறப்புமிக்கவரே, செயல்களுக்குச் சாதகமான வேத தீர்மானங்களுக்குப் பிறகு வருவதை (விடுதலையை {முக்தியைக்}) குறித்து நான் தாமதமில்லாமல் கேட்க விரும்புகிறேன்.(67) ஓ! பிராமணரே, எனக்கு உண்மையைச் சொல்வீராக. ஒரு சீடனாக நான் உமது காலடியில் அமர்கிறேன். தயவுடன் எனக்குப் போதிப்பீராக. ஓ! கல்விமானே, விடுதலையை {முக்தியைக்} குறித்து நீர் அறிந்த அளவுக்கு நானும் அறிய விரும்புகிறேன்" என்றார் {ஸ்யூமரஸ்மி}.(68)

சாந்திபர்வம் பகுதி – 269ல் உள்ள சுலோகங்கள் : 68

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்