Brahma and emancipation! | Shanti-Parva-Section-270 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 97)
பதிவின் சுருக்கம் : வர்ணாசிரமங்களால் அடையத்தக்க முக்தி மற்றும் பிரம்மம் குறித்து ஸ்யூமரஸ்மிக்கும் கபிலருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "வேதங்களே அதிகாரம் பெற்றவையாக அனைவராலும் கருதப்படுகிறது. மக்கள் அவற்றை ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை. ஒலியாலான பிரம்மம் {சப்தப்ரம்மம்}, (உணர்ந்தறிய முடியாத) உயர்ந்த பிரம்மம் {பரப்ரம்மம்} என்ற இருவகைப் பிரம்மங்கள் இருக்கின்றன[1].(1) ஒலியாலான பிரம்மத்தை அறிந்தவன், உயர்ந்த பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். கர்ப்பதானச் சடங்கில் தொடங்கி, வேத மந்திரங்களின் துணையுடன் தந்தை உண்டாக்கிய உடல், (பிறப்புக்குப் பிறகு) வேத மந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது.(2) (வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்பட்ட) தூய்மைச் சடங்குகளால் உடல் தூய்மை ஆகும்போது, (அந்த உடலின்) உரிமையாளன் அதுமுதல் ஒரு பிராமணன் என்று அழைக்கப்பட்டு, பிரம்ம அறிவைப் பெறத் தகுந்த பாத்திரமாகிறான். செயல்களின் வெகுமதியானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் இதயத் தூய்மை என்பதை அறிவீராக. நான் தற்போது அதுகுறித்து உம்மிடம் பேசப் போகிறேன்.(3) (செயல்களைச் செய்வதால்) இதயத் தூய்மையானது அடையப்பட்டதா, அடையப்படவில்லையா என்பது எந்த மனிதன் அஃதை அடைந்தானோ அவனால் அறியப்படும். வேதங்கள் அல்லது உள்ளுணர்வின் துணையால் அஃதை அறியமுடியாது. எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்க்காதவர்கள், எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சேர்க்காமல் எந்த வகைச் செல்வங்களையும் துறப்பவர்கள், ஆசையற்றவர்கள், அனைத்து வகை விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்கள், வேள்விகள் செய்வது கடமை என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக அவற்றைச் செய்கிறார்கள். தகுந்தவர்களுக்குக் கொடையளிப்பதே செல்வங்கள் அனைத்தின் (சரியான பயன்பாட்டுக்குரிய) கதியாகும்.(4,5)
[1] "வேதங்களே சப்தப்ரம்மம் அல்லது ஒலியாலான பிரம்மம் என்றழைக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எந்தக் காலத்திலும் பாவம் நிறைந்த செயல்களுக்கு அடிமையாகாமல், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அந்தச் சடங்குகளை நோற்று, தங்கள் விருப்பங்கள் அனைத்தின் கனியால் மகுடம் சூட வல்லவர்களாக, தூய அறிவின் மூலம் குறிப்பிட்ட தீர்மானங்களை உடையவர்களாக,(6) ஒருபோதும் கோபத்திற்கு வசப்படாதவர்களாக, பொறாமையில் ஒருபோதும் ஈடுபடாதவர்களாக, செருக்கு மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களாக, யோகத்தில் உறுதியுடன் கூடியவர்களாக, களங்கமில்லா பிறவியுடைவர்களாக, களங்கமில்லா ஒழுக்கம் கொண்டவர்களாக, களங்கமில்லா கல்வியைக் கொண்டவர்களாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக,(7) இல்லற வாழ்வு வாழ்பவர்களாக, தங்கள் கடமைகளில் முற்றிலும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகப் பழங்காலத்தில் பல மனிதர்கள் இருந்தனர். அதே தகுதிகளைக் கொண்டவர்களாகவும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், (ஜனகன் முதலியவர்கள் போன்ற) பல மன்னர்களும் இருந்தனர். அதே பண்புகளைக் கொண்ட (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) பிராமணர்கள் பலரும் இருந்தனர்[2].(8) அவர்கள் அனைத்து உயிரினங்களுடனும் சமமாகப் பழகுபவர்களாகவும், முற்றிலும் நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். மனநிறைவு மற்றும் நிச்சய ஞானம் ஆகியவை அவர்களுடையவையாக இருந்தன. அவர்களுடைய அறத்திற்கான வெகுமதிகள் புலப்படுவனவாக இருந்தன, அவர்களது நடத்தையும், இதயமும் தூய்மையானவையாக இருந்தன. அவர்கள் இரு வடிவிலான பிரம்மத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்[3].(9) முதலில் தங்கள் இதயங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவர்கள், (சிறந்த) நோன்புகள் அனைத்தையும் முறையாக நோற்கிறார்கள். அவர்கள் எதனில் இருந்தும் வீழ்ந்துவிடமால் துயரம் மற்றும் பெருங்கடினமான சந்தர்ப்பங்களிலும் அறக்கடமைகளை நோற்றனர்.(10)
[2] "இவர்களும், இவர்களைப் போன்ற மனிதர்களும், கொடைகளுக்குத் தகுந்த மனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "அதாவது, குணங்களுடன் கூடிய பிரம்மம் {சகுன பிரம்மம்} மற்றும் குணங்களில் இருந்து விடுபட்ட பிரம்மம் {நிர்க்குண பிரம்மம்} ஆகியவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து தகுதிமிக்கச் செயல்களைச் செய்தனர். இதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியைக் கண்டனர். அவர்கள் ஒருபோதும் பிறழாதவர்களான இருந்ததால், எந்தப் பாவக்கழிப்புகளையும் ஒருபோதும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.(11) அறத்தின் உண்மை வழியைச் சார்ந்திருந்த அவர்கள், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவர்களாகினர். தகுதி ஈட்டும் காரியத்தில் தன் புத்தியை ஒருபோதும் பின்பற்றாமல், அந்தக் கதியை அடைவதற்குச் சாத்திர விதிகளை மட்டுமே பின்பற்றினர். அதன்படி அவர்கள் அறச் செயல்களைச் செய்யும் காரியத்தில் வஞ்சிக்கும் குற்றமுள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை[4].(12) வேறு எதனிலும் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைச் செய்யாமல் சாத்திரங்களின் மொத்த விதிகளையும் ஒற்றுமையுடன் நோற்பதன் விளைவால், அவர்களுக்குப் பாவக்கழிப்புச் செய்ய வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.(13) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை நோற்று வாழும் மனிதர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது. பலவீனர்கள், புனித சட்டத்திலுள்ள முழுமையான, உறுதியான விதிகளைப் பின்பற்ற இயலாத மனிதர்களுக்கு மட்டுமே ஸ்ருதி பாவக்கழிப்பை அறிவித்திருக்கிறது.(14) வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, வேதங்களின் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாக, தூய்மையும், நன்னடத்தையும் கொண்டவர்களாக, புகழ்மிக்கவர்களாகப் பல பிராமணர்கள் பழங்காலத்தில் இருந்தனர்.(15)
[4] "கொடையாக ஆடைகளைக் கொடுக்க இயலாதவர்கள், ஆடைகளுக்குப் பதிலாகத் தானியங்களைக் கொடுக்கலாம். ஆனால் ஆடைகளைக் கொடுக்க இயன்றும் தானியங்களை மட்டுமே கொடுப்பவர்கள் வஞ்சிக்கும் குற்றமுள்ளவர்கள் எனச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்கள் எப்போதும் வேள்விகளில் பிரம்மத்தை வழிபட்டு, ஆசையில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர். கல்விமான்களான அவர்கள், வாழ்வின் கட்டுகள் {பற்றுகள்} அனைத்தையும் கடந்தவர்களாக இருந்தனர். இம்மனிதர்களின் வேள்விகள், அவர்களது (அறிவு), விதிகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களால் செய்யப்பட்ட செயல்கள்,(16) குறிப்பிட்ட நேரங்களில் அவர்களது சாத்திரக் கல்வி, அவர்களுடைய விருப்பங்கள், காமம் கோபத்தில் இருந்து அவர்கள் பெற்றிருந்த விடுதலை, அவர்களது பக்தி நடத்தை, அனைத்துச் சிரமங்களையும் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவர்களது செயல்கள்,(17) தங்கள் வகை {வர்ணம்} மற்றும் தங்கள் வாழ்வுமுறை {ஆசிரமங்களின்} கடமைகளைச் செய்வதால் பெறும் புகழ், அவர்களது சொந்த இயல்பின் விளைவால் கிட்டும் ஆன்மத் தூய்மை, மிக நேர்மையான அவர்களது பண்பு, அமைதியில் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பு, தங்கள் நடைமுறைகளில் அவர்கள் கொண்ட கவனம்(18) ஆகியவை முடிவிலா பிரம்மத்தைப் போன்றே இருந்தன. இதுவே நித்தியமான ஸ்ருதி என்று நாம் கேள்விப்படுகிறோம்[5]. உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள், செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் கடினமான நடத்தை மற்றும் செயல்களைக் கொண்ட மனிதர்கள்,(19) தங்கள் கடமைகளைக் கறாராக வெளிப்படுத்துவதன் விளைவால் கனிகளால் மகுடம் சூட்டப்பட்ட விருப்பங்களைக் கொண்ட மனிதர்கள் ஆகியோரின் தவங்களே, உலக ஆசைகள் அனைத்தையும் அழிப்பதற்கான விளைவைத் தரவல்ல ஆயுதங்களாகின. அற்புதமானதும், பழங்காலத்திலேயே தோற்றம் காணப்பட்டும், நித்தியமானதும், மாற்றமில்லா பண்புகளைக் கொண்டதும், துன்பகாலங்களில் நல்லோரும் ஈடுபடும் நடைமுறையில் இருந்து வேறுபட்டு, பிற சூழ்நிலைகளில் அவர்கள் {அந்த நல்லோர்கள்} செய்யும் செயல்களைப் பிரதிபலிப்பதும், காமம், கோபம் மற்றும் பிற தீய ஆசைகள் மேம்பட முடியாத நிலையைத் தரும் கவனம் நிறைந்த தன்மையைப் போன்றதும், (ஒருகாலத்தில்) மனிதகுலம் அனைத்திலும் எந்த வரம்புமீறலையும் இல்லாமல் செய்த விளைவுமான அந்த நல்லொழுக்கமே, அதன் கடமைகளின் நுண்விபரங்களையும், அதன் தொகையையும் செயல்படுத்த இயலாத மனிதர்களால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} தொடர்பான நான்கு உபபிரிவுகளாகப் பின்னர்ப் பிரிக்கப்பட்டது என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்[6].(20-22)
[5] "அத்தகைய மனிதர்கள் செய்யும் வேள்விகள் முதலியவை முடிவிலா பிரமத்தைப் போன்றிருந்தன என்று சொல்வது, அம்மனிதர்கள் பிரம்மத்தைப் போன்றவர்கள் மற்றும் அவர்கள் செய்தது அனைத்தும் பிரம்மமே என்பதைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுவதாகும். அவர்களுக்குத் தங்களைக் குறித்த நனவு இருக்கவில்லை, அல்லது அவர்கள் எதையும் தங்களுக்காகச் செய்ததில்லை. அவர்கள் அண்டத்தின் ஆன்மாவாக இருந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "முதலில் சதாச்சாரம் sadaachaara அல்லது அனைத்து மனிதர்களுக்குமான நல்லொழுக்கம் என்றழைக்கப்பட்ட ஒரேயொரு கடமைநடைமுறை மட்டுமே இருந்தது. காலத்தின் போக்கில் மொத்தமாக அதன் விதிகள் அனைத்தையும் மனிதர்களால் பின்பற்ற இயலாமல் போனது. அப்போது, அந்தக் கடமைகளை நான்கு வாழ்வுமுறைகள் {ஆசாரங்கள்} தொடர்புடைய நான்கு உபபிரிவுகளில் பிரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்ற பொருளே இங்குச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்லோர், சந்நியாச வாழ்வுமுறையைப் பின்பற்றிய பிறகு, நன்னடத்தையின் அந்தப் போக்கை முறையாக நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகிறார்கள். காட்டு வாழ்வு முறையை {வானப்ரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அவ்வொழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்.(23) இல்லற வாழ்வு முறையை {கிருஹஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம்; இறுதியாக, பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பின்பற்றுவோரும் கூட (அதே ஒழுக்கத்தை முறையாக நோற்பதன் மூலம்) அதே உயர்ந்த கதியை அடையலாம். அந்தப் பிராமணர்களே ஆகாயத்தில் சுற்றிலும் நன்மையான ஒளிக்கதிர்களைப் பொழிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிக் கோள்களாகக் காணப்படுகிறார்கள்.(24) அந்த எண்ணற்ற பிராமணர்கள், நிலைத்த பாதையில் நிறுவப்பட்ட விண்மீன்களாகவும், நட்சத்திரக்கூட்டங்களாகவும் ஆனார்கள். மனநிறைவின் (அல்லது துறவின்) விளைவால் அவர்கள் அனைவரும் வேதங்கள் அறிவித்த படியே முடிவிலாத் தன்மையை அடைந்தனர்.(25) அத்தகைய மனிதர்கள் உயிரினங்களின் கருவறைகள் மூலம் உலகிற்குத் திரும்பினால், முந்தைய செயல்களை மூலக்காரணமாகக் கொண்ட வற்றாத எச்சங்களான பாவங்களால் அவர்கள் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(26) பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்து, கடமையுணர்வுடன் தன் ஆசானிடம் காத்திருந்து {பணிவிடை செய்து கொண்டிருந்து}, (ஆன்மா குறித்த) தீர்மானமான முடிவுகளை அடைந்து, அவ்வாறே யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒருவனே உண்மையில் பிராமணனாவான். பிராமணன் என்றழைக்கப்பட வேறு எவன் தகுந்தவன்?(27)
எவன் பிராமணன், எவன் அல்ல என்பதைச் செயல்கள் மட்டுமே தீர்மானிக்கும் எனும்போது, (நல்ல அல்லது தீய) செயல்கள் ஒரு மனிதனின் இன்பம் அல்லது துன்பத்தைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்க வேண்டும். தீய ஆசைகள் அனைத்தையும் வெல்வதன் மூலம் தூய இதயத்தை அடைந்தவர்களைப் பொறுத்தவரையில், (அண்ட ஆன்மாவைக் காண்பதன் மூலம் அவர்கள் அடையும் முடிவிலாத் தன்மை மற்றும் (ஸ்ருதிகளுடைய தீர்மானங்களின் மூலம் அவர்கள் அடைந்த) பிரம்ம அறிவின் விளைவால், அவர்கள் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறார்கள் என்று சொல்லும் நித்தியமான {அழிவற்ற} ஸ்ருதியை நாம் கேள்விப்படுகிறோம்.(28) தூய இதயம் கொண்டவர்களும், ஆசையில் இருந்து விடுபட்டவர்களும், பிரம்ம அறிவை அடைவதற்காக விடுதலை {முக்தி} ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்களுமான மனிதர்களால் பின்பற்றப்படும் (அமைதி, தற்கட்டுப்பாடு, செயல்விலக்கம், துறவு, அர்ப்பணிப்பு {பக்தி}, சமாதியின் முழுமை ஆகியவற்றின்) கடமைகள், நால்வகை மனிதர்களுக்கும், நான்கு வாழ்வுமுறைகளுக்கும் சமமாகவே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவானது, உண்மையில் தூய இதயங்களையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களையும் பிராமணர்களால் எப்போதும் அடையப்படுகிறது[7].(29,30) மனநிறைவின் அடிப்படையிலான துறவிற்கான ஆன்மாவைக் கொண்ட ஒருவன், உண்மை ஞானத்தின் புகலிடமாகக் கருதப்படுகிறான். விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் அறிவைக் கொண்டதும், பிராமணர்களுக்கு மிகத் தேவையானதுமான துறவு, (எப்போதும் வழிவழியாக ஆசானிடம் இருந்து சீடனிடம் வந்து சேரும்) நித்தியமான {அழிவற்ற} ஒன்றாகும்.(31) துறவானது, சில வேளைகளில், பிற வாழ்வுமுறையின் கடமைகளுடன் கலந்திருக்கிறது. அந்நிலையில் இருந்தாலும், தனியாகவே இருந்தாலும், ஒருவன் (உலகம் சார்ந்த ஆசையின்மை அளவைச் சார்ந்த) தன் பலத்தின் அளவுக்குத் தக்கவே அதை {துறவை} நடைமுறைப்படுத்துகிறான். அனைத்து வகை மனிதர்களுக்கும் உயர்ந்த நன்மையைச் செய்வதற்கான விளைவே துறவாகும். பலவீனன் மட்டுமே அதைப் பயில்வதில் தவறுகிறான். பிரம்மத்தை அடைய முனையும் தூய இதயமுள்ள மனிதன் (துன்பங்களுடன் கூடிய) உலகில் இருந்து மீட்கப்படுகிறான்" என்றார் {கபிலர்}.(32)
[7] கும்பகோணம் பதிப்பில், "ஆசை நீங்கினவர்களும், சுத்தர்களும், மோக்ஷத்தில விருப்பமுள்ள மனமுடையவர்களுமான அவர்களுக்கு நான்காவதும் உபநிஷத்தில் சொல்லப்பட்டதும் எல்லா வர்ணத்தார்களுக்கும் பொதுவானதுமான (சமம் தம முதலான) தர்மமானது ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "(உடைமையை) அனுபவிப்பதைக் கைவிட்டவர்குக்கு மத்தியில், கொடையளிப்பவர்கள், வேள்வி செய்பவர்கள், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள், செல்வத்தை அடைந்து, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்த பிறகு துறவு வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஆகியோரில்,(33) {மரணமடைந்து} இவ்வுலகில் இருந்து செல்லும்போது சொர்க்கத்தில் முதன்மையான இடத்தை யார் அடைவார்? ஓ! பிராமணரே, இதை நான் உம்மிடம் கேட்கிறேன். எனக்கு உண்மையைச் சொல்வீராக" என்று கேட்டார்.(34)
கபிலர் {ஸ்யூமரஸ்மியிடம்}, "இல்லற வாழ்வை வாழ்பவர்களே நிச்சயம் மங்கலமானவர்களாக, அனைத்துவகைச் சிறப்புகளையும் அடைகிறார்கள். எனினும், துறவு தொடர்புடைய பேரின்பத்தை அனுபவிக்க இயலாமல் போகிறார்கள். நீரும் இதைக் காணலாம்" என்றார்.(35)
ஸ்யூமரஸ்மி {கபிலரிடம்}, "நீங்கள் (விடுதலையை {முக்தியை}) அடைவதற்கு வழிமுறையாக ஞானத்தையே சார்ந்திருக்கிறீர்கள். இல்லற வாழ்வை வாழ்பவர்களோ செயல்களில் தங்கள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். எனினும், விடுதலையே {முக்தியே} அனைத்து வாழ்வுமுறைகளின் கதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.(36) எனவே, பலத்தின் மேன்மை அல்லது குறைவில் அவற்றுக்கிடையில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அவ்வாறெனில் உண்மைக் காரியம் எவ்வாறு நிலைபெறும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(37)
கபிலர் {ஸ்யூரஸ்மியிடம்}, "செயல்கள் உடலை மட்டுமே தூய்மைப்படுத்துகின்றன. எனினும், ஞானமோ (எவரும் அடைய முனையும் ஓர்) உயர்ந்த கதியாக இருக்கிறது. இதயத்தின் களங்கங்கள் அனைத்தும் (செயல்களால்) குணமாகும்போதும், பிரம்மத்தின் இன்பநிலை ஞானத்தில் நிறுவப்படும்போதும்,(38) நல்லுணர்வு, மன்னிக்கும் தன்மை, அமைதி, கருணை, வாய்மை, வெளிப்படைத்தன்மை, தீங்கிழையாமை, செருக்கின்மை, பணிவு, துறவு, செயல்விலக்கம் ஆகியவை அடையப்படுகின்றன.(39) இவையே பிரம்மத்திற்கு வழிவகுக்கும் பாதையாக அமைகின்றன. ஒருவன் அவற்றைக் கொண்டு உயர்ந்த நிலையை அடைகிறான். இதயக்களங்கங்கள் அனைத்தும் செயல்களின் விளைவால் குணமாவது இவற்றை {நல்லுணர்வு முதலியவற்றை} அடையும்போதே ஞானிகளுக்கும் புரிகிறது.(40) ஞானத்துடன் கூடியவர்களும், செயல்கள் அனைத்தில் இருந்தும் விலகியவர்களும், தூய்மை மற்றும் ஞானத்தின் நிச்சயத்தன்மை {உறுதியுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட பிராமணர்களால் அடையப்படுவதே உண்மையில் உயர்ந்த கதியாகக் கருதப்படுகிறது.(41) வேதங்கள், வேதங்களில் சொல்லப்படுபவை (செயல்களில் உள்ள பிரம்மம்) {கர்மப்ரம்மஸ்வரூபம்}, செயல்களின் நுண்விவரங்கள் ஆகியவற்றின் அறிவை அடைவதில் வெல்லும் ஒருவனே வேதங்களை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். வேறு எவனும் கற்றாலான தோல்துருத்தி மட்டுமே ஆவான்[8].(42)
[8] "அதாவது வீணாக மூச்சுவிடுபவன், அல்லது வெறுமனே வாழ்பவன் என்ற பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேதங்களில் அனைத்தும் நிறுவப்பட்டிருப்பதால், வேதங்களை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாவான். தற்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன.(43) இவ்வண்டம் இருக்கிறது, இல்லை என்ற ஒரு தீர்மானத்தையே சாத்திரங்கள் அனைத்தில் இருந்தும் உய்த்தறிய முடிகிறது. ஒரு ஞானிக்கு இது (உணரப்படும் அனைத்தும்) சத் மற்றும் அசத் ஆகிய இரண்டாகும். அவனுக்கு இவை அனைத்தும் முடிவும் நடுவுமாக இருக்கிறது.(44) முற்றான துறவு நேர்கையில் ஒருவன் போதுமானதை அடைகிறான் என்ற இந்த உண்மை வேதங்கள் அனைத்தையும் சார்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு பின்தொடரும் மனநிறைவானது, முழுமையானதும், அழிவடையும் மற்றும் அழிவடையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும் அண்ட ஆன்மாவாக நன்கறியப்பட்டதும், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் உயர்ந்த ஞானப்பொருளும், நிறைவானதும், பேரின்பநிலையும், இரண்டற்றதும், அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதும், பிரம்மமேயானதும், புலப்படாததும், புலப்படாதது பிறக்கும் இடத்தின் காரணமாக இருப்பதும், எவ்வகைச் சிதைவுமற்றதுமான விடுதலையை {முக்தியைச்} சார்ந்திருக்கிறது[9].(45,46) புலன்களை அடக்கும் திறன், மன்னிக்கும் தன்மை, ஆசையின்மையின் விளைவால் செயல்பாடு தவிர்த்தல் ஆகிய இம்மூன்றும் முற்றான பேரின்ப நிலையின் காரணிகளாகும். அறிவையே தங்கள் கண்களாகக் கொண்ட மனிதர்கள், இந்த மூன்று குணங்களின் துணையுன், படைக்கப்படாததும், அண்டத்தின் முதன்மை காரணமாக இருப்பதும், மாற்றமில்லாததும், அழிவைக் கடந்ததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள். அஃதை அறிந்தவனைப் போன்றதேயான பிரம்மத்தை நான் வணங்குகிறேன்" என்றார் {கபிலர்}[10].(47)
[9] "45ம் ஸ்லோகத்தின் சொல்லுக்குச் சொல்லான பொருளை மட்டுமே கொடுக்க முயன்றிருக்கிறேன். இத்தகையவற்றில் இருந்து பொருளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும். முற்றாக யோகத்தில ஈர்க்கப்பட்ட நிலையே (சமாதியே) பிரம்மமாகும். இதை வேதங்கள் அனைத்தும் போதிக்கின்றன. விடுதலையிலேயே {முக்தியிலேயே} பிரம்மத்தின் உயர்ந்த இன்பநிலை இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகணம் பதிப்பில், "வேதத்தில் எல்லாம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. வேதத்திலல்லவோ இப்பொழுது எது எது இருக்கின்றனவோ, எது எது இல்லையோ அந்த எல்லாவற்றிருக்கும் இருப்பு இருக்கிறதென்பதும், இல்லை என்பதுமே எல்லா வஸ்துக்களுக்கும் இயற்கை. பிரம்மத்தை அறிந்தவனுக்கு இது முடிவும் நடுவும் (மோக்ஷரூபமாயும், மத்தியில் தோன்றுகின்ற ஜகத்தாயும்) ஸத்தும் அஸத்துமாயிருக்கிறது. (வேதமானது) ஸன்யாஸமென்றுதானே முடிந்திருக்கின்றது? சமமென்றுதானே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது?" என்றிருக்கிறது.[10] "இந்தச் சுலோகத்தின் இலக்கண அமைப்பைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. உரையாசிரியர் சொல்வது சரியே என்பதில் ஐயமேதும் இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஒருகாலமும் பாதிக்கப்படாததும், வ்யக்தாவ்யக்தமும் அறியப்பட்டதும், அறியவேண்டியதும், எல்லாவற்றிற்குமாத்மாவும், ஸ்தாவரஜங்கமரூபமும், முழுதும் ஸுகமும் சிவமும் ஸ்ரேஷ்டமும் (ராகிகளுக்குப்) பிரகாசியாததும், ஜகத்தின் உற்பத்தியில் காரணமுமான ப்ரம்மமானது தேஜஸ், க்ஷமை, சாந்தி, கெடுதலற்ற சுபம், அப்படிப்பட்ட வியோம, ஸநாதநம், துருவமென்கிற இச்சொற்களாலே ஞானக்கண்ணுடைய பிராம்மணர்களால் அறியப்படுகின்றது. ஆகையால் பிரம்மரூபமான அந்தப்பிராம்மணனுக்கு நமஸ்காரம்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 270ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |