Salvation! | Shanti-Parva-Section-274 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 101)
பதிவின் சுருக்கம் : முக்தி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, விடுதலையை {முக்தியை} வழிமுறைகளால் வென்றெடுக்க முடியுமேயன்றி வேறு வகையிலல்ல என்று நீர் சொன்னீர். அவ்வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நான் முறையாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஞானியே, வழிமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற எப்போதும் முனைபவனாக நீ இருப்பதால், ஓ! பாமற்றவனே, நுட்பமான காரியத்தைக் குறித்து நீ செய்யும் இந்த விசாரணை உண்மையில் உனக்குத் தகுந்ததே ஆகும்.(2) ஒருவன் தன் பயன்பாட்டுக்காக மண் குடத்தைச் செய்யும்போது இருந்த மனநிலை, அந்தக் குடம் {மண்குடத்தைச் செய்யும் அந்தப் பணி} நிறைவடைந்ததும் மறைந்தது போகிறது. அதே வகையிலேயே, எந்தக் காரணம் ஒரு மனிதனை முன்னேற்றத்திற்கும், செழிப்புக்குமான வேராக அறத்தைக் கருதச் செய்யுமோ, அது {அந்தக் காரணம்} விடுதலையை அடைய முனைபவர்களிடம் இல்லாமல் போகிறது[1].(3) கிழக்கத்திப் பெருங்கடலுக்கு வழிவகுக்கும் பாதையின் மூலம் ஒருவன் மேற்கத்திப் பெருங்கடலுக்குச் செல்ல முடியாது. விடுதலைக்கான {முக்திக்கான} வழிவகுக்க ஒரே பாதை மட்டுமே இருக்கிறது. (அடையத்தக்க வேறு எந்தப் பொருளுக்கும் வழிவகுக்கும் எதுவும் அதனோடு ஒப்பிடத்தக்கதல்ல). இது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
[1] "ஒரு மனிதனுக்கு மண்குடம் தேவைப்படும்போது, அதை உண்டாக்க அவன் செயல்படுகிறான். அவனிடம் அஃது இருக்கும்போது, அவனது தேவை நிறைவடைந்துவிட்டதால் அவன் அதே மனநிலையில் இருப்பதில்லை. அதே போலவே, அறத்தின் வெகுமதியாகச் சொர்க்கம் மற்றும் உலகம் சார்ந்த செழிப்பை விரும்பும் மனிதர்களுக்குப் பிரவிருத்தி, அல்லது செயல்களே வழிமுறைகளாக இருக்கின்றன. அத்தகைய அறத்தை அடைந்த பிறகு, விடுதலை அடைவதில் தங்களை நிறுவிக் கொண்டோரிடம், அனைத்துமாக நிவிருத்தியே {தியானம் / யோகம் போன்ற அகச்செயலே} இருப்பதால் அது {பிரவிருத்தி} அல்லது அவை {செயல்கள்} செயல்படுவதில்லை.
பிழைபொறுத்தல் பயில்வது {மன்னிப்பது}, கோபத்தை அழிப்பது, அனைத்து நோக்கங்களையும் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் ஆசையை வேரறுக்க வேண்டும். சத்வ குணத்தைப் பயில்வதன் மூலம்[2] ஒருவன் உறக்கத்தை {சோம்பலை} வெல்ல வேண்டும்.(5) விழிப்புணர்வின் மூலம் ஒருவன் அச்சத்தை விலக்க வேண்டும், ஆன்ம சிந்தனையின் மூலம் ஒருவன் மூச்சை வெல்ல வேண்டும்[3]. பொறுமையின் மூலம் ஒருவன் விருப்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விலக்க வேண்டும்;(6) பிழை {குற்றம்}, அறியாமை, ஐயம் ஆகியவற்றை உண்மை கல்வியின் மூலம் விலக்க வேண்டும். ஞானத்தைத் தேடுவதன் மூலம் ஒருவன் அக்கறையின்மை மற்றும் விருப்பமில்லாத பொருட்களைக் குறித்த விசாரணை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்[4].(7) மிகக் குறைந்த அளவில் எளிய, செரிக்கத்த உணவின் மூலம் ஒருவன் சீரின்மை மற்றும் நோய்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். நிறைவின் மூலம் ஒருவன் பேராசை மற்றும் தீர்மான மயக்கம் ஆகியவற்றையும், உண்மை ஞானத்தின் மூலம் உலகம் சார்ந்த அனைத்து காரியங்களையும் தவிர்க்க வேண்டும்[5].(8)
[2] "சோம்பல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "யோகத்தின் மூலம் ஒருவன் தன் மூச்சை ஒழுங்குசெய்து, இறுதியாக அதை நிறுத்த வேண்டும். புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு ஒரு யோகியால் காலகாலத்திற்கும் வாழ முடியும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "நித்திரை Nidraa என்பது அநாணுசந்தானம் ananusandhaana அல்லது ஆவலின்மை, அல்லது ஆர்வமின்மை என்று விளக்கப்படுகிறது. பிரதிபா pratibhaa என்பது முறையற்ற அல்லது விருப்பமற்ற பொருட்களைக் குறித்த விசாரணை என்ற பொருளைக் கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "உண்மையென்னவென்றால் உலகம் உண்மையற்றதாகவும், ஒரு முடிவைக் கொண்டதாகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் ஒருவன் அநீதியை வெல்ல வேண்டும். அனைத்து உயிரினங்களையும் மதிப்பதன் மூலம் ஒருவன் அறத்தை ஈட்ட வேண்டும். எதிர்பார்ப்பு எதிர்காலம் தொடர்புடையது என்பதைச் சிந்திப்பதன் மூலம் ஒருவன் அதைத் தவிர்க்க வேண்டும்; ஆசையைக் கைவிடுவதன் மூலம் அவன் செல்வத்தைக் கைவிட வேண்டும்.(9) (இம்மையில் உள்ள) அனைத்தும் நிலையற்றவை என்பதைச் சிந்திப்பதன் மூலம் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன் பற்றைக் கைவிட வேண்டும். அவன் யோகம் பயில்வதன் மூலம் பசியை அடக்க வேண்டும். நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் அவன் தன்முக்கியத்துவம் கொண்ட கருத்துகளை அனைத்தையும் விலக்கி, மனநிறைவின் மூலம் அனைத்து வகைத் தீவிர நாட்டங்களையும் விரட்ட வேண்டும்.(10) உழைப்பின் மூலம் ஒருவன் காரிய தாமதத்தையும், உறுதிப்பாட்டின் மூலம் அனைத்து வகை ஐயங்களையும், எண்ணங்களை வெளியிடாததன் மூலம் அளப்பளத்தலையும் {அதிகம் பேசுவதையும்}, துணிவின் மூலம் அனைத்து வகை அச்சங்களையும் அடக்க வேண்டும்[6].(11) புத்தியின் மூலம் வாக்கும், மனமும் அடக்கப்பட வேண்டும். ஞானக்கண்ணின் மூலம் புத்தி அடக்கப்பட வேண்டும். ஆன்ம அறிவின் மூலம் ஞானமும், இறுதியாக ஆன்மாவின் {பரமாத்மாவின்} மூலம் ஆன்மாவும் {அகங்காரம்} கட்டுப்படுத்தப்பட வேண்டும்[7].(12)
[6] "யோகத்தின் மூலம் அஃதாவது உடலிள்ள காற்றை {வாயுவை} ஒழுங்குமுறை படுத்துவதன் மூலம் பசி அடக்கப்பட வேண்டும். உறுதிப்பாட்டின் மூலம் ஐயம் விலக்கப்பட வேண்டும்; அஃதாவது ஐயத்தை விலக்குவதன் மூலம் குறிப்பிட்ட ஞானம் நாடப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஐயம் நிறைந்த தீர்மானங்கள் அனைத்தும் சாத்திர நம்பிக்கையின் மூலம் விலக்கப்படுவதையே இது குறிக்கிறது என்று உரையாசிரியர் நினைக்கிறார். இந்த ஸ்லோகத்தில் "அச்சம்" என்று சொல்வதன் மூலம் அச்சத்திற்கான தோற்றுவாயான உலகம் சொல்லப்படுகிறது. ஆசை, கோபம், பேராசை, பிழை {குற்றம்} செருக்கு மற்றும் பொறாமை ஆகிய ஆறையும் வெல்வதன் மூலம் அது {உலகமென்ற அச்சம்} வெல்லப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "யோகப் பயிற்சியே இங்கே விதிக்கப்படுகிறது. முதலில், புலன்கள் மனத்தில் கலக்கப்பட வேண்டும், பிறகு மனமானது புத்தியில் கலக்கப்பட வேண்டும், பிறகு புத்தியானது ஆன்மாவில், அல்லது அகங்காரத்தில் கலக்கப்பட வேண்டும். இந்த அகங்காரமானது இறுதியில் பரமாத்மாவில் கலக்கப்பட வேண்டும். அகங்காரத்தைப் புரிந்து கொள்ளும்போது, பிரம்மத்தைக் காணலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தூய செயல்களையும், அமைதியான ஆன்மாவையும்[8] கொண்டோர், கல்விமான்களால் சொல்லப்படும் யோகத்தின் ஐந்து தடைகளை அடக்குவதன் மூலம் இந்த இறுதியான நிலையை {ஆன்மாவில் ஆன்மா கலக்கும் நிலையை} அடைகின்றனர்.(13) ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் பேச்சைக் கட்டுப்படுத்தி, யோகத்திற்குச் சாதகமான பழக்கங்களான(14) தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, வெளிப்படைத்தன்மை, பிழைபொறுக்கும் {மன்னிக்கும்} தன்மை, இதயத் தூய்மை, உணவுத்தூய்மை, புலனடக்கம் ஆகியவற்றைப் பயில வேண்டும்.(15) இவற்றின் மூலம் ஒருவனுடைய சக்தி பெருகி, பாவங்கள் அகன்று, விருப்பங்கள் கனியால் மகுடம் சூட்டப்பட்டு, (பல்வேறு வகைகளிலான) ஞானம் அடையப்படுகிறது.(16)
[8] "தூய செயல்கள் என்பன நிஷ்காம தர்மத்தில் {ஆசையற்ற அறத்தில்} உள்ளனவாகும். ஆன்ம அமைதி என்பது நாட்டங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தையும் விலக்குவதன் மூலம் அடையப்படும் ஆன்மத் தூய்மையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் தன் பாவங்கள் கழுவப்பட்டு, சக்தி மற்றும் எளிய உணவைக் கொண்டு தன் புலன்களுக்குத் தலைவனாகி, ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வெல்லும்போது, பிரம்மத்தை அடைய முனைகிறான்.(17) (சாத்திரங்களைக் கேட்பது மற்றும் கற்பதன் மூலம் கிட்டும்) அறியாமை தவிர்ப்பு, (துறவின் விளைவால் உண்டாகும்) பற்றின்மை, (மனநிறைவு மற்றும் பிழைபொறுத்தலைப் பின்பற்றுவதன் மூலம் கிட்டும்) கோபம் மற்றும் ஆசையில் இருந்து விடுதலை {கோபமின்மை மற்றும் ஆசையின்மை}, யோகத்தின் மூலம் வெல்லப்படும் பலம், செருக்கு மற்றும் அலட்சியம் இன்மை, (அனைத்து வகை அச்சத்தையும் அடக்குவதன் மூலம் கிட்டும்) கவலையில் இருந்து விடுதலை {கவலையின்மை} இல்லம் மற்றும் குடும்பம் போன்ற எதனிலும் பற்றின்மை(18) ஆகியவையே விடுதலையின் {முக்தியின்} பாதையாக அமைகின்றன. அந்தப் பாதை இனிமைநிறைந்ததும், களங்கமற்றதும், தூய்மையானதுமாகும். அதேபோல, ஆசையின்மையின் மூலம் செய்யப்படும் வாக்கு, உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவையும் விடுதலையின் பாதையாக அமைகின்றன" என்றார் {பீஷ்மர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 274ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |