Birth and death! | Shanti-Parva-Section-275 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 102)
பதிவின் சுருக்கம் : உயிரினங்களின் பிறப்பு இறப்பு குறித்து நாரதருக்கும் தேவலருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் நாரதருக்கும் அசித-தேவலருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு காலத்தில் நாரதர், நுண்ணறிவு மிக்க மனிதர்களில் முதன்மையானவரும், முதிர்ந்த வயதைக் கொண்டவருமான தேவலர் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரிடம் உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் முறைவு குறித்துக் கேட்டார்.(2)
நாரதர் {அசிதரிடம்}, "ஓ! பிராமணரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து உண்டானது? அனைத்தையும் தழுவும் அழிவானது எப்போது நேர்கிறது? எதனுள் அது கலக்கிறது? கல்விமானான நீர் இது குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(3)
அசிதர் {நாரதரிடம்}, "வேளை நேர்கையில், பல்வேறு வடிவங்களிலான இருப்பை விரும்பிய பரமாத்மாவால், எவற்றில் இருந்து அனைத்து உயிரினங்களும் உண்டாக்கப்பட்டனவோ, அவை ஐந்து பெரும் சாரங்களே {ஐம்பெரும்பூதங்களே} என்று பொருட்களை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(4) (அதன் பிறகு) புத்தியால் தூண்டப்பட்ட காலமானது, அவற்றில் இருந்து (அந்த ஐந்து அடிப்படை சாரங்களில் இருந்து) பிற பொருட்களை உண்டாக்குகிறது. எவன் இவற்றை (ஐந்து அடிப்படை சாரங்கள் {பூதங்கள்}, காலம் மற்றும் புத்தி ஆகியவற்றைத்) தவிர வேறெதனையும் சொல்கிறானோ அவன் உண்மையல்லாததைச் சொல்கிறான்.(5) ஓ! நாரதரே, இவ்வைந்தும் {இந்த ஐந்து பூதங்களும்} நித்தியமானவை, அழிவற்றவை, தொடக்கமும் முடிவும் அற்றவை என்பதை அறிவீராக. காலத்தை ஆறாவதாகக் கொண்ட இந்த ஐந்து அடிப்படை சாரங்களும் {பூதங்களும்} இயல்பாகவே பெருஞ்சக்தியைக் கொண்டிருக்கின்றன.(6) நீர், ஆகாயம், பூமி, காற்று மற்றும் வெப்பம் ஆகியவையே அந்த ஐந்து சாரங்களாகும். (பலத்திலோ, சக்தியிலோ) இவற்றுக்கு உயர்ந்தவையோ, மேன்மையானவையோ வேறெவையும் கிடையாது என்பதில் ஐயமில்லை.(7) ஸ்ருதிகளில் இருந்து அடையப்படும் தீர்மானங்கள் அல்லது அறிவில் இருந்து உண்டாகும் வாதங்களுக்கு ஏற்புடைய வகையில் (இந்த ஐந்தைத் தவிர) வேறெதன் இருப்பையும் எவராலும் உறுதி செய்ய முடியாது. எவராவது வேறெதன் இருப்பையும் உறுதி செய்தால், அவனது உறுதிப்பாடு வீணானதாகும். இந்த ஆறும் சேர்ந்து அனைத்து விளைவுகளையும் உண்டாக்குகின்றன. (நீர் உணரும்) இவை அனைத்தும் அசத் என்று அழைக்கப்படுகின்றன[1].(8)
[1] "ஆன்மா மற்றுமே சத் {உண்மை} ஆகும். மற்றவையெல்லாம் அசத் {உண்மையற்றவையாகும்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்த ஐந்தும், காலமும் (அல்லது ஜீவனும்), முற்பிறவி செயல்களின் ஆற்றலும், அறியாமையும் என்ற இந்த எட்டும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் அழிவை உண்டாக்கும் நித்திய சாரங்களாகும்[2].(9) உயிரினங்கள் அழிவடையும்போது இவற்றுக்குள்ளேயே அவை நுழைகின்றன; அவை பிறப்படையும்போது அவற்றில் இருந்தே அவை பிறக்கின்றன. உண்மையில், ஓர் உயிரினம் அழிவுக்குப் பிறகு அந்த ஐந்து அடிப்படை சாரங்களிலேயே {பூதங்களிலேயே} உறுதியடைகிறது.(10) அவனது உடல் பூமியால் ஆகிறது; அவனது காது ஆகாயத்தால் உண்டாகிறது; அவனது கண் ஒளியால் உண்டாகிறது; அவனது உயிர் (அசைவு) காற்றால் உண்டாகிறது; அவனது குருதி நீரால் உண்டாகிறது என்பதில் ஐயமில்லை.(11) இரண்டு கண்கள், மூக்கு, இரண்டு காதுகள், தோல், (ஐந்தாவதாக அமையும்) நாக்கு ஆகியவையே புலன்களாகும். இவை, அதனதனுக்குரிய பொருட்களை உணர்வதற்காக இருக்கின்றன எனக் கல்விமான்கள் அறிகிறார்கள்.(12) பார்வை, கேள்வி, நுகர்வு, தீண்டல், சுவை ஆகியன புலன்களின் செயல்பாடுகளாகும். ஐம்புலன்களும், ஐந்து வழிகளில் ஐந்து பொருட்களோடு தொடர்பு கொள்கின்றன. அறிவின் உள்ளுணர்வால் அவற்றின் குண ஒப்புமையை அறிவீராக[3].(13)
[2] "முந்தைய பகுதிகளில் தூய அறிவைக் குணமாகக் கொண்ட சித்-ஆனது, அறியாமையால் பீடிக்கப்படும்போது, முற்பிறவி செயல்களுடைய ஆற்றலின் விளைவால் அடிப்படை சாரங்களை {பூதங்களை} ஈர்க்கத் தொடங்கி எவ்வாறு பல்வேறு வடிவங்களில் பிறப்பை எடுக்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது. (முதல் படைப்பு உணரப்பட முடியாமல் இருக்கும்போது, படைப்பு மற்றும் அழிவின் முடிவிலா சக்கரங்களுக்கு முற்பிறவியின் செயல்களே காரணம் கருத்து ஏற்படுகிறது). எனவே, ஐந்து அடிப்படை சாரங்கள் {பூதங்கள்}, ஜீவன் (அல்லது சித்), முற்பிறவி செயல்களின் ஆற்றல், அறியாமை ஆகியவையே படைப்பின் காரணங்களாக அமைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "13ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரி மிகச் சுருக்கமாக இருக்கிறது. கண்ணானது பார்வைப் புலனாகும். பார்வை அல்லது தோற்றமே அதன் செயல்பாடாகும். அஃது உணரும் {கண்ணெனும் அந்தப் பார்வைப் புலன் நுகரும்} பொருள் வடிவமாகும். கண்ணானது ஒளியை அதன் காரணமாகக் கொண்டிருக்கிறது, வடிவமானது ஒளியின் குணமாகும். எனவே, கண்ணானது வடிவத்தைப் பற்றுகிறது அல்லது உணர்கிறது. கண், பார்வை {காட்சி}, மற்றும் வடிவம் ஆகியவற்றுக்கிடையிலான குணம் அல்லது தன்மையில் ஓர் ஒப்புமையை அறிவின் உள்ளுணர்வால் அறியலாம். உரையாசிரியர் இதைத் தெளிவாக விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன ஐந்து வெவ்வேறு வழிகளில் ஐம்புலன்களால் உணரப்படும் ஐந்து குணங்களாகும் {தன்மைகளாகும்}.(14) இந்த ஐந்து தன்மைகளான வடிவம், மணம், சுவை, தீண்டல் மற்றும் ஒலி ஆகியன (புலன்கள் செயலாற்றலற்றவை என்பதால்) உண்மையில் புலன்களால் உணரப்படுவதில்லை, புலன்களின் மூலம் ஆன்மாவை அவற்றை உணர்கின்றன.(15) சித்தம் என்று அழைக்கப்படும் ஒன்று, புலன்கூட்டத்தைவிட {ஐம்புலன்களைவிட} மேன்மையானதாகும். மனமானது சித்தத்தைவிட மேன்மையானதாகும். புத்தியானது மனத்தைவிட மேன்மையானதாகும். க்ஷேத்ரக்ஞன் புத்தியைவிட மேன்மையானதாகும்[4].(16) முதலில் ஓர் உயிரினம் பல்வேறு பொருட்களைப் புலன்களின் மூலம் உணர்கிறது. மனத்தைக் கொண்டு அவற்றைக் குறித்துச் சிந்திக்கிறது. பிறகு புத்தியின் துணை கொண்டு ஓர் உறுதியான அறிவை அடைகிறது. புத்தியுடைய ஒருவன், புலன்களின் மூலம் உணரப்படும் பொருட்களில் உறுதியான தீர்மானங்களை எட்டுகிறான்.(17) ஐம்புலன்கள், சித்தம், மனம், (இப்பட்டியலில் எட்டாவதான) புத்தி ஆகிய இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்களால் அறிவுப்புலன்களாக {ஞானேந்திரிங்களாகக்} கருதப்படுகின்றன.(18) கரங்கள், கால்கள், குதம், பிறப்புறுப்பு, (இப்பட்டியலில் ஐந்தாவதாக அமையும்) வாய் ஆகியவை செயற்புலன்களாக {கர்மேந்திரியங்களாக} இருக்கின்றன.(19)
[4] "மனஸ் என்பது மனத்தையும், புத்தி என்பது நுண்ணறிவையும், க்ஷேத்ரக்ஞன் என்பது ஆன்மாவையும் குறிக்கின்றன. எனினும், சித்தம் எது என்பதை உறுதி செய்வது கடினமாகும். குறைந்தது தெளிவற்ற உள்ளுணர்வு என்று பொருள் கொள்ளலாம். சில தத்துவ அமைப்புகளில் சித்தம் புத்தியை விட மேன்மையானதாகக் கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வாயானது, பேச்சு மற்றும் உண்ணும் கருவியைக் கொண்டிருப்பதால் அது செயற்புலன் {கர்மேந்திரயம்} என்றழைக்கப்படுகிறது. கால்கள் இடம்பெயரச் செய்யும் புலனாகவும், கரங்கள் பல்வேறு வகைப் பணிகளைச் செய்யும் புலனாகவும் இருக்கின்றன.(20) குதமும், பிறப்புறுப்பு கழிவுகளை வெளியேற்றும் ஒரே காரியத்திற்கு நீடிக்கும் இரு புலன்களாக இருக்கின்றன. முதலில் இருப்பது {குதம்} மலத்தை வெளியேற்றவும், இரண்டாவது {பிறப்புறுப்பு}, சிறுநீர் கழிக்கவும், ஒருவன் ஆசையின் ஆதிக்கத்தை உணரும்போது உயிர் வித்தைக் கழிக்கவும் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆறாவதாக ஒரு செயற்புலன் இருக்கிறது. அது தசை சக்தி என்றழைக்கப்படுகிறது. இக்காரியத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) உடன்பாடுகளின் படி இவையே ஆறு செயற்புலன்களின் பெயர்களாகும். நான் இப்போது ஞானப்புலன்கள், செயற்புலன்கள் மற்றும் ஐந்து (அடிப்படை) சாரங்களின் {பூதங்களின்} அனைத்து குணங்களின் பெயர்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(22) இந்தப் புலன்கள் களைப்படைவதன் விளைவாலும், அதனதனுக்குரிய செயல்பாடுகள் நின்று, அவை இடைநிற்பதன் காரணத்தாலும், அந்தப் புலன்களுக்குரியவன் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.(23) இந்தப் புலன்களின் செயல்பாடுகள் இடைநிற்கும்போது, மனத்தின் செயல்பாடு நிற்காமல் அதனுக்குரிய பொருட்களுடன் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருந்தால், அந்த நனவுநிலையே கனவு என்றழைக்கப்படுகிறது.(24)
விழிப்பு நிலையில், நல்லியல்பு {சத்வ}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருளோடு {தமஸ் குணங்களோடு} தொடர்புடைய மூன்று மனநிலைகள் இருக்கின்றன. கனவிலும் மனமானது அதே மூன்று நிலைகளுடன் தொடர்புகொள்கிறது. அந்த நிலைகளே இன்பத்திற்குரிய செயல்பாடுகளின் தொடர்புடன் கனவில் தோன்றும்போது, அவை மெச்சத்தகுந்ததாகக் கருதப்படுகிறது.(25) மகிழ்ச்சி, வெற்றி, அறிவு, பற்றின்மை ஆகியவை (விழித்த நிலையில் உள்ள மனிதனில் இருக்கும்) நல்லியல்பு {சத்வ} குணத்தின் குறியீடுகளாகும். உயிரினங்களால் அனுபவிக்கப்படும் (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, அல்லது இருள் {தமஸ் குணத்தின்}) எந்த நிலைகளும், அவை விழித்திருக்கும் நேரங்களின் செயல்களின் வெளிப்பட்டு, உறக்கத்தில் கனவு காண்கையில் அவற்றின் நினைவில் மீண்டும் தோன்றுகின்றன. விழிப்பு நிலையில் இருப்பது போலவே கனவில் தோன்றும் நம் கருத்துகளும், கனவு நிலையில் இருப்பது போலவே விழிப்புநிலையில் தோன்றும் கருத்துகளும், கனவுகளற்ற உறக்கம் என்றழைக்கப்படும் நனவுநிலையில் நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்கனவாகின்றன. அதுவே நித்தியமானதும், அதுவே விரும்பத்தக்கதுமாகும்[5].(26,27) அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, தசை சக்தி, மனம், புத்தி, சித்தம், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்கள் என இப்பட்டியல் பதினேழு வரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டியலில் பதினெட்டாவதாக உடலுக்குச் சொந்தக்காரன் {தேஹி} வருகிறான். உண்மையில், எவன் அந்த உடலுக்குள் வாழ்கிறானோ அவன் நித்தியமானவனாவான்.(28)
[5] "சாதாரண மனிதர்கள் விழித்திருக்கும்போது உண்டாகும் கருத்துகள், கனவில் வளர்க்கப்படும் கருத்துகளாக இருப்பதில்லை; அதே போல, கனவுகளில் தோன்றும் அவர்களுடைய கருத்துகள் விழித்த நிலையில் ஒன்றாக இருப்பதில்லை. அவை ஒன்றுபோலத் தோன்றினாலும் ஒன்றாக இருப்பதில்லை. எனினும் விடுதலை நிலையான நித்தியமான சுசுப்தியில், விழிப்புநிலையில் உள்ள கருத்துகள் கனவு நிலைக்குக் கடந்து சென்றும், கனவில் தோன்றும் கருத்துகள் விழிப்புநிலைக்குக் கடந்து சென்றும், சுசுப்தி அல்லது விடுதலை நிலையில் நேரடியாகப் புரிந்து கொள்ளப்படத்தக்கனவாகின்றன. எனவே, சுசுப்தி அல்லது விடுதலை என்பது, விழிப்பும், கனவுமல்லாமல், அவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் முற்றிலும் மறைந்து, அவை இரண்டும் இணைந்து செயல்படும் நிலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உடலுக்குள் வசிக்கும் அந்தப் பதினேழும் (அவித்யை அல்லது அறியாமையுடன் சேர்த்து பதினெட்டும்), உடலுக்கு உரியவனைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் இருந்து அதற்கு உரியவன் மறையும்போது, (அவித்யையுடன் சேர்த்து எண்ணப்படும்) அந்தப் பதினெட்டும், அவ்வுடலில் வசிப்பதை ஒன்றாக நிறுத்துகின்றன.(29) அல்லது, ஐந்து (அடிப்படை) சாரங்களாலான {பூதங்களாலான} இந்த உடலானது (கரைந்து போக வேண்டிய) கலவை மட்டுமே. (அவித்யை உள்ளிட்ட) அந்தப் பதினெட்டுக் குணங்கள், உடலுக்கு உரியவன், இப்பட்டியலில் இருபதாவதாக எண்ணப்படும் குடல் வெப்பம் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்தின் கலவை {பஞ்சபூதவிகாரக் கூட்டம்} என்று அறியப்படும் ஒன்றாக {உடலாக} அமைகின்றன.(30) மஹத் என்றழைக்கப்படும் ஒன்று, (பிராணன் என்றழைக்கப்படும்) காற்றின் {வாயுவின்} துணையுடன், பெயர் செல்லப்பட்ட இந்த இருபதைக் கொண்ட கலவையைத் தாங்கிப் பிடிக்கிறது. அந்த உடல் அழியும் காரியத்தில், (அதற்குக் காரணமெனப் பொதுவாகச் சொல்லப்படும்) காற்றானது {வாயுவானது}, அதே மஹத்தின் கருவியாக மட்டுமே இருக்கிறது.(31) பிறக்கும் எந்த உயிரினமும், தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் தீர்ந்ததும், ஐந்து உறுப்புக்கூறுகளுக்குள் மீண்டும் கரைகிறது, பிறகு அந்த வாழ்வில் செயல்களின் விளைவால் வெல்லப்பட்ட தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் மூலம் மீண்டும் மற்றொரு உடலுக்குள் நுழைகிறது.(32) அவித்யை, ஆசை, செயல்கள் ஆகியவற்றில் இருந்தே எப்போதும் விளையும் அவனது வசிப்பிடங்களால் அவன் ஒவ்வொரு உடலையும் கைவிட்டு, காலத்தின் தூண்டுதலின் பேரில், வீடு விட்டு வீடு அடுத்தடுத்து மாறும் மனிதனைப் போல மீண்டும் மீண்டும் வெவ்வேறு உடலுக்குள் மாறுகிறான்.(33)
ஞானமும், உறுதியான அறிவும் கொண்டவர்கள், இதை (இந்த இடப்பெயர்வைக்} கண்டு துயருக்கு வசப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய வசிப்பிட மாறுதல்களைக் கண்டு, (உண்மையில் உறவுநிலைகள் ஏதுமில்லாத போது) உறவுகளைப் பிழையாகக் கருதி மூடர்கள் மட்டுமே துயரில் ஈடுபடுகிறார்கள்.(34) இந்த ஜீவன் எவருடைய உறவுமல்ல; மேலும் அவனுக்கு உரியவரென்று சொல்ல எவரும் இல்லை. அவன் எப்போதும் தனியனாகவே இருக்கிறான், அவன் தானே தன்னுடலையும், தனது இன்ப துன்பங்களையும் படைத்துக் கொள்கிறான்.(35) ஜீவன் ஒருபோதும் பிறப்பதுமில்லை, ஒருபோதும் இறப்பதுமில்லை. உடல் பந்தத்திலிருந்து விடுபடும் அவன், சில வேளைகளில் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான்.(36) தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளின் விளைவான உடல்களின் செயல்கள் தீர்ந்து போவதன் மூலம் {உடலில் இருந்து} விடுபட்டு உடலை இழக்கும் ஜீவன், இறுதியாகப் பிரம்மத்தை அடைகிறான்.(37) சாங்கியப் பள்ளியில், தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} தீர ஞானமே காரணமாக விதிக்கப்பட்டிருக்கிறது. (சாத்திரங்களைக் கற்றவர்கள்), தங்கள் தகுதி மற்றும் தகுதியின்மை தீர்ந்து, ஜீவன் பிரம்ம நிலையை அடையும்போது, ஜீவன் உயர்ந்த கதியை அடைவதைக் (சாத்திரங்களின் கண்களைக் கொண்டு) காண்கிறார்கள்" என்றார் {அசித-தேவலர்}".(38)
சாந்திபர்வம் பகுதி – 275ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |