Felicity! | Shanti-Parva-Section-276 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 103)
பதிவின் சுருக்கம் : ஆசையைக் கைவிடுவதே சுகத்திற்குக் காரணமென மாண்டவ்யரிடம் ஜனகன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஐயோ, கொடூரர்களும், பாவிகளுமான நாங்கள் எங்கள் சகோதரர்கள், தந்தைமார், பேரர்கள், உற்றார், நண்பர் மற்றும் மகன்களைக் கொன்றோம்.(1) ஓ! பாட்டா, செல்வத்திற்கான தாகத்தை எவ்வாறு நாங்கள் தணிக்க வேண்டும்? ஐயோ, அந்தத் தாகத்தால் நாங்கள் பல பாவச் செயல்களை இழைத்துவிட்டோம்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக விசாரித்த மாண்டவ்யரிடம் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} சொன்னது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, "(இவ்வுலகில்) எனக்கு ஏதும் இல்லை, இருப்பினும் நான் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். (என் நாடு எனச் சொல்லப்படும்) மொத்த மிதிலையும் எரிந்தாலும், என்னுடையது எதுவும் எரிவதில்லை.(4) எவ்வளவு மதிப்புமிக்கவையாக இருப்பினும் உறுதியான {தொட்டரியக்கூடிய} உடைமைகளே ஞானிகளின் கவலைக்கான ஊற்றுக்கண்ணாக இருக்கும்; அதே வேளையில் சிறு மதிப்பைக் கொண்ட உடமையும் மூடர்களை ஆட்கொள்கிறது[1].(5)
[1] "பிரம்மலோகம் உள்ளிட்டவையும் அந்த உடைமைகளில் அடங்கும் என உரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். முக்தியை நாடும் ஞானிகள், படைப்பாளனின் உலகத்தில் உள்ள இன்பங்களிலும் எந்த மதிப்பையும் கொள்ள மாட்டார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இம்மையில் உள்ள மகிழ்ச்சிகள் யாவும், ஆசைகளை நிறைவு செய்வதன் மூலம் அடையத்தக்கன, உயர் மதிப்பைக் கொண்ட தெய்வீக இன்பமேதும் கூட, முற்றான ஆசையின்மையில் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்கிற்கு ஈடாகாது.(6) மாட்டின் வளர்ச்சியுடன் சேர்ந்தே அதன் கொம்புகளும் வளர்வதைப் போல, செல்வம் ஈட்டல் பெருகுவதுடன், செல்வத்திற்கான தாகமும் பெருகுகிறது.(7) ஒருவன் பற்றுக் கொள்ளும் எந்தப் பொருளானாலும், அந்தப் பொருள் தொலையும்போது அதுவே துன்பத்திற்கான ஊற்றுக்கண்ணாகிறது.(8) ஒருவன் ஆசையைப் பேணி வளர்க்கக்கூடாது. ஆசையில் பற்று கவலைக்கே வழிவகுக்கும். செல்வம் ஈட்டப்படும்போது ஒருவன் அதை அறக்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவன் ஆசையைக் கைவிடுவான்[2].(9) ஞானியானவன், பிற உயிரினங்களைத் தன்னைப் போலவே எப்போதும் பார்க்கிறான். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வெற்றியை அடையும் அவன் இம்மையிலேயே அனைத்தையும் கைவிடுகிறான்[3].(10)
[2] "அறமீட்டுவதற்காகக் கூடச் செல்வத்தில் ஆசை வளர்க்கப்படக்கூடாது என உரையாசிரியர் விளக்குகிறார். எனினும் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வம் அறத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். செல்வம் ஈட்டுவதில் ஆசை வளர்க்கப்படும்போது, பெருகி ஒருவனை முழுமையாக ஆட்கொள்ளும் என்பதால் அவன் செல்வமீட்டும் ஆசையைக் கைவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "ஒரு ஞானி அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்ப வேண்டும், ஒருபோதும் யாருக்கும் கவலையை விரும்பக்கூடாது. இங்கே நிஷ்காம தர்மம் Nishkaam dharma {ஆசையற்ற அறம்} பரிந்துரைக்கப்படுகிறது.
வாய்மை மற்றும் பொய்மை, துன்பம் மற்றும் இன்பம், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை, அச்சமின்மை மற்றும் அச்சம் ஆகிய இரட்டைகளைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் அமைதியை அடைந்து, அனைத்து வகைக் கவலையில் இருந்தும் விடுபடுகிறான்.(11) மூடப்புத்தி கொண்டவர்களுக்குக் கைவிடக் கடினமானதும், உடல் மெலிந்தாலும் குறையாததும், (ஞானிகளால்) மரண நோய் எனக் கருதப்படுவதுமான (உலகம் சார்ந்த பொருட்களுக்கான) அந்தத் தாகத்தை ஒருவன் கைவிட்டால் அவன் நிச்சயம் இன்பத்தைக் காண்பான்.(12) அற ஆன்மா கொண்ட மனிதன், நிலவைப் போலப் பிரகாசமானதும், அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டதுமான தன் நடத்தையைக் கண்டு, இம்மையிலும், மறுமையில் பெரும்புகழை மகிழ்ச்சியுடன் அடைவதில் வெல்கிறான்" என்றான் {ஜனகன்}.(13)
மன்னனின் {ஜனகனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிராமணர் மாண்டவ்யர் மகிழ்ச்சியால் நிறைந்தவராகி, தாம் கேட்டவற்றை மெச்சி, விடுதலைக்கான {முக்திக்கான} பாதையில் தம்மைச் செலுத்தினார்" என்றார் {பீஷ்மர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 276ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |