The running speed of time! | Shanti-Parva-Section-277 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 104)
பதிவின் சுருக்கம் : காலம் வேகமாகக் கடந்து செல்வதால் நற்கதிக்குரிய காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் நிறையச் செய்யும் காலம் தன் போக்கில் ஓடுகிறது. ஒருவன் முயற்சிக்க வேண்டிய நன்மைக்கான ஊற்றுக்கண் எது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) ஓ! பிருதையின் மகேன {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் வேத கல்விக்கு மட்டுமே தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு மறுபிறப்பாளர் மேதாவி என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு புத்திசாலி மகனைக் கொண்டிருந்தார்.(3) விடுதலை அறத்தை அறிந்தவனான அந்த மகன், அறத்தை அறியாதவரும், வேத கட்டளைகளைச் செய்வதில் ஈடுபடுபவருமான தன் தந்தையிடம் ஒரு நாள் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)
மகன் {மேதாவி}, "ஓ! ஐயா, மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பின் காலம் மிக வேகமக ஓடுவதை அறிந்த புத்தியுள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன? ஓ! தந்தையே, உமது போதனைகளால் வழிநடத்தப்பட்டு, அறமீட்டுவதில் என்னை நான் நிறுவிக் கொள்ளும் வகையில் இஃதை உண்மையாகவும், முறையான வரிசையிலும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
தந்தை, "ஓ! மகனே {மேதாவியே}, எப்போதும் பிரம்மச்சரிய கடமைகளை நோற்று வேதங்களைக் கற்ற ஒருவன், தன் தந்தையைக் காக்கும் நிமித்தமாகச் சந்ததியில் விருப்பம் கொள்ள வேண்டும். தன் நெருப்பை நிறுவி, தனக்கு விதிக்கப்பட்ட வேள்விகளைச் செய்து, (வானப்பிரஸ்தனாக வாழ) காட்டுக்குள் ஓய்ந்து, (அனைத்தையும் கைவிட்டு, பிரளயத்திற்காக அமைதியாகக் காத்திருப்பதன் மூலம்) முனிவனாக வேண்டும்" என்றார்.(6)
மகன், "உலகம் இவ்வாறு தாக்கப்படும்போது, அனைத்துப் புறங்களிலும் முற்றுகையிடப்படும்போது, அனைத்துத் திசைகளிலும் தடுக்கப்படமுடியாத (வஜ்ரங்கள்) விழுந்து கொண்டிருக்கும்போது, எவ்வாறு உம்மால் இப்படி அமைதியாகப் பேச முடிகிறது?" என்று கேட்டான்.(7)
தந்தை, "உலகம் எவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிறது? எதனால் அது முற்றுகையிடப்படுகிறது? அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கொண்டிருக்கும் தடுக்கப்படமுடியாத வஜ்ரங்கள் எவை? உன் வார்த்தைகளால் நீ என்னை அச்சுறுத்துகிறாயா?" என்று கேட்டார்.(8)
மகன், "உலகம் காலனால் தாக்கப்படுகிறது. அது முதுமையால் முற்றுகையிடப்படுகிறது. பகல்களும், இரவுகளும் (வஜ்ரங்களைப் போலத்) தொடர்ந்து விழுகின்றன. இவற்றை ஏன் நீர் கவனிக்கவில்லை?(9) காலன் எவருக்காகவும் இங்கே காத்திருப்பதில்லை (ஆனால், திடீரென எந்த அறிவிப்புமின்றிக் கவர்ந்து செல்கிறான்) என்பதை நான் அறியும்போது, (விழிப்புணர்வில்லாமல்) அறியாமையெனும் திரையில் மூழ்கி என் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் என்னால் (அவன் வருகிறான் என்பதை அறிந்தும்) எவ்வாறு காத்திருக்க இயலும்?(10) ஒவ்வொரு இரவும் கடக்கையில், ஒவ்வொருவரின் வாழ்வுக்காலமும் கடந்து போகும்போது, ஆழமற்ற நீரில் இருக்கும் ஒரு மீனைப் போன்ற நிலையில் எவன் மகிழ்ச்சியடையமுடியும்?(11) மலர்களைக் கொய்யும் கவனமற்ற மனிதனைப் போலத் தன் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் தனது நோக்கங்களை அடையும் முன்பே காலன் அவனை அடைகிறான்[1].(12) எது நாளை செய்யப்பட வேண்டுமோ, அஃது இன்றே செய்யப்பட வேண்டும்; ஒருவன் பிற்பகலில் செய்ய நினைப்பது முற்பகலிலேயே செய்யப்பட வேண்டும். ஒருவனுடைய பணி முடிந்து விட்டது அல்லது முடிவடையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(13) உமக்கான நன்மையை (நாளை வரை விட்டு வைக்காமல்) இன்றே செய்வீராக. தடுக்கப்பட முடியாதவனான காலன், (உமது செயல்களை நிறைவேற்றும் முன்பே) உம்மை வெல்லாமல் பார்த்துக் கொள்வீராக. காலன் இன்று வரமாட்டான் என்று எவன் அறிவான்?(14) ஒருவனின் செயல்கள் நிறைவடையுமுன்பே, காலன் அவனை இழுத்துச் செல்வான். எனவே, இவ்வகையில் வாழ்வு உறுதியற்றது என்பதால், (தனது முதிர் வயது வரை காத்திராமல்) ஒருவன் இளமையிலேயே அறம் பயில வேண்டும்.(15)
[1] "தேவர்களை வழிபடப் பிராமணர்கள் அனைவரும் காலையில் மலர்களைப் பறிக்கிறார்கள். அக்காரியத்திற்கு அதிக மலர்கள் தேவைப்படும் என்பதால் அப்பணி அதிக நேரம நீடிக்கும். மலர்கள் நிறைந்த இடத்திற்குச் சென்ற மலர் கொய்வது தினத் தொழில் என்பதால், மலர் கொய்பவர் மலர்களைக் கொய்யும்போதே மனம் வேறு பொருட்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறமீட்டுவதன் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நித்தியமான மகிழ்ச்சியை நிச்சயம் வெல்வான். மடமையின் ஆதிக்கத்தில் ஒருவன் தன் மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் செயல்படத் தன் இடைக்கச்சையை உயர்த்திக் கொள்கிறான் {உயர்த்திக் கொண்டு செயல்பட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறான்}.(16) குற்றச் செயல்கள் அல்லது நற்செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் இவர்களை (உறவினர்களை) நிறைவு செய்கிறான். மகன்களையும், விலங்குகளையும் கொண்டவனும், அவற்றிடம் பற்றும், அர்ப்பணிப்பும் கொண்ட மனத்துடன் கூடியவனுமான ஒருவனை,(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலக் காலன் பற்றுகிறான்[2]. ஆசைக்குரிய பல்வேறு பொருட்களை வெல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, அனுபவிப்பது தணிவடையாதபோதே,(18) செம்மறியாட்டைக் கைப்பற்றியோடும் பெண் ஓநாயைப் போலக் காலன் அவனைக் கைப்பற்றுகிறான். "இது செய்யப்பட்டது, இது செய்யப்படாமல் எஞ்சியிருக்கிறது, இது பாதிச் செய்யப்பட்டுள்ளது"(19) என்று ஒருவன் தனக்குள் சொல்லலாம்; ஆனால் காலன், நிறைவுறாத செயல்களை முடிக்கும் அவனது ஆசையைக் கவனத்தில் கொள்ளாமல், அவனைக் கைப்பற்றி இழுத்துச் செல்கிறான். செயலோடு தொடர்புடையவற்றில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றின் கனியை அடையாமல் இருக்கும் ஒருவன்,(20) களம், கடை அல்லது வீட்டில் மும்முரமாக இருக்கும் ஒருவன் ஆகியோரைக் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான்.
[2] "இந்த ஸ்லோகத்தின் வங்கப் பதிப்பிற்கும், பம்பாய் பதிப்பிற்கும் வேறுபாடு உள்ளது. வங்கப்பதிப்பே முன்னிடத்தக்கதாக இருக்கிறது. பம்பாய் பதிப்பின் ஸ்லோகத்திற்குப் பொருள் கொள்வதாக இருந்தால், "உறங்கும் புலியை அடித்துச் செல்லும் பெரும் அலையைப் போலக் காலன் அபகரித்துச் செல்கிறான்" என்று வரும். உறங்கும் புலியை அடித்துச் செல்லும் பேரலை என்பது வழக்கத்திற்கு மாறான அறியப்படாத ஒன்றாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அம்மனிதனை மிருத்யுவானவன், தூங்குகின்ற புலியைப் பெரிய வெள்ளம் போல எடுத்துக் கொண்டு போகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இப்பகுதி {அத்தியாயம்} முழுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை மேதாவியின் கதை ஏற்கனவே சாந்திபர்வம் 175ம் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
பலவீனன், பலவான், ஞானி, துணிவுமிக்கவன், மூடன், கல்விமான்,(21) அல்லது தன் ஆசைகள் எதனிலும் நிறைவுறாத ஒருவன் ஆகியோரையும் கைப்பற்றிக் காலன் கொண்டு போகிறான். மரணம், முதுமை, நோய், கவலை, அதே வகையான பல காரியங்கள் ஆகியவற்றை(22) மனிதர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். உடல் படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, முதுமையும், மரணமும் வந்து அழிவுக்காகவே அவனைப் பற்றுகின்றன.(23) அசைவன, அசையாதன என்ற இருப்பின் இந்த வடிவங்கள் அனைத்தும் இவை இரண்டாலும் (முதுமை மற்றும் மரணத்தால்) பற்றப்படுகின்றன. வாய்மையில் மட்டுமே அழிவின்மை வசிப்பதால், காலனின் படையினரான போர்வீரர்கள் அணிவகுக்கும்போது, வாய்மையின் சக்தி ஒன்றைத் தவிர அவர்களை வேறு எதனாலும் தடுக்க இயலாது. மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமே காலனின் வசிப்பிடமாகும்.(24,25)
காடு என்று அழைக்கப்படுவதே தேவர்கள் உண்மையில் கூடுமிடமாகும், அதே வேளையில், மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் இன்பமானது, அப்படி வசிப்பவனை (ஆதரவற்றவனாக்கிக்) கட்டும் பாசம் {கயிறு} போன்றதாகும் என்று ஸ்ருதி அறிவிக்கிறது[3].(26) பாவம் நிறைவந்தவர்கள் அதை வெட்டுவதில் வெல்வதில்லை (அவற்றிலிருந்து விடுதலையும் பெறுவதில்லை). எண்ணம், சொல் மற்றும் செயலில் எவன் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கவில்லையோ,(27) பிறரின் வாழ்வாதாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எவன் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காமல் இருக்கிறானோ, அவன் எந்த உயிரினத்தினாலும் தீங்கிழைக்கப்படுவதில்லை. இந்தக் காரணங்களினால், ஒருவன் வாய்மை நோன்பைப் பயின்று, வாய்மை நோன்பிற்கு உறுதியான அர்ப்பணிப்புடன்,(28) வாய்மையைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்க வேண்டும். தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, அனைத்து உயிரினங்களையும் சமமான கண்ணுடன் கண்டு, அவன் வாய்மையின் துணையுடன் காலனை வெல்ல வேண்டும். மரணமின்மையும், மரணமும் உடலிலேயே நடப்பட்டிருக்கின்றன {நிறுவப்பட்டிருக்கின்றன}.(29)
[3] "இங்கே குறிப்பிடப்படும் தேவர்கள் என்பது புலன்களைக் குறிப்பதாகும். புலன்களோ கால்நடைகளைப் போன்றவையாகும். அவை {புலன்கள்} நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அல்லாமல் காட்டிலேயே ஒன்றுகூடுகின்றன. நகரங்கள் மற்றும் கிராமங்களில் மயக்கமடைவது போலக் காட்டில் அவற்றால் மயங்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிருத்யுவின் ஸேனை வரும்பொழுது ஒருவனாலும் ஒருகாலும் ஸத்தியம் ஒன்றினாலல்லது பலத்தினால் தடுக்கவியலாது. ஸத்தியத்தினாலன்றோ அமிருதமானது நிலைபெற்றிருக்கிறது? ‘கிராமத்திலிருக்கிறவனுடைய விஷயப்பற்றுதலென்பது மிருத்யுவின் வீடு வனமென்பது தேவர்கள் கூடுமிடம்’ என்று வேதம் சொல்கிறது. கிராமத்தில் வசிப்பவனுடைய விஷயப்பற்றானது கட்டுகிற பாசமாகும்" என்றிருக்கிறது.
மடமையினால் மரணம் எதிர்கொள்ளப்படுகிறது, வாய்மையினால் மரணமின்மை வெல்லப்படுகிறது. ஆசை மற்றும் கோபத்தைக் கடந்து, தீங்கிழைப்பதைத் தவிர்த்து என் நன்மையை மகிழ்ச்சியுடன் அடைவதற்காகவும், ஒரு தேவனைப் போல மரணத்தைத் தவிர்ப்பதற்காகவும் நான் வாய்மையைப் பின்பற்றப் போகிறேன். அமைதியால் அமைக்கப்பட்ட வேள்வியில் ஈடுபட்டு, பிரம்ம வேள்வியிலும் ஈடுபட்டு, என் புலன்களை அடக்கி,(30,31) சூரியன் வடபாதையில் திரும்பும்போது, வாக்கு, மனம் மற்றும் செயல்கள் எனும் வேள்விகளை நான் செய்யப் போகிறேன்[4]. என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு கொடுமை நிறைந்த விலங்கு வேள்வியைச் செய்ய முடியும்?(32) ஞானம் கொண்ட என்னைப் போன்ற ஒருவனால், க்ஷத்தியர்களுக்காக விதிக்கப்பட்டதும், நிலையில்லாத வெகுமதிகளைக் கொண்டதும், கொலை வேள்வியும், கொடுமை நிறைந்ததுமான பிசாச வேள்வியைப் போன்ற ஒன்றைச் செய்ய முடியும்? என்னிடம் நானே என்னைப் பெற்றுக் கொண்டேன். ஓ! தந்தையே, சந்ததியை உண்டாக்க நாடாமல் என்னில் நானே ஓயப்போகிறேன். என்னைக் காக்க என் சந்ததி வேண்டாம், நான் தன் வேள்வியைச் செய்யப் போகிறேன்[5]. எவனுடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எப்போதும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றனவோ,(34) தவங்களையும், துறவையும், யோகத்தையும் கொண்ட அவன் நிச்சயம் அவற்றின் மூலம் அனைத்தையும் அடைவான். ஞானத்திற்கு இணையான கண்ணேதும் கிடையாது. ஞானத்திற்கு இணையான வெகுமதியேதும் கிடையாது.(35)
[4] "அமைதி யாகம் {சாந்தி யஜ்ஞம்} என்பது கொலையுடன் கூடிய வேள்விக்கு எதிரானது. பிரம்ம வேள்வி என்பது ஆன்ம அறிவுக்கு வழிவகுக்கும் யோகமாகும். வாக்கு வேள்வி என்பது வேதம் ஓதல் அல்லது ஜபமாகும். மனோ வேள்வி என்பது தியானமாகும், செயல்களின் வேள்வி என்பது, நீராடல், பிற தூய்மைச் சடங்குகள் மற்றும் ஆசானிடம் கடமையுணர்வுடன் காத்திருத்தல் முதியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "தன் வேள்வி என்பது தன் ஆன்மாவைப் பரமாத்மாத்மாவில் கலப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பற்றுக்கு இணையான கவலையேதும் கிடையாது. துறவுக்கு இணையான மகிழ்ச்சியேதும் கிடையாது.(36) ஒரு பிராமணனுக்குத் தனிமைவாசம், அனைத்துயிரனங்களையும் சமமான மதிப்பது, பேச்சில் வாய்மை, நல்லொழுக்கத்தின் உறுதி {சீலம்}, தண்டத்தை {தண்டனையை} முற்றாகக் கைவிடல், எளிமை, செயல்கள் அனைத்தில் இருந்தும் படிப்படியாக விலகல் ஆகியவற்றைப் போன்ற செல்வங்களேதும் கிடையாது.(37) செல்வத்தைக் கொண்டு உமக்கு என்ன தேவை இருக்கிறது? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனைவியராலும் என்ன தேவை இருக்கிறது? நீர் ஒரு பிராமணராவீர், காலனை நீர் எதிர்கொள்ள வேண்டும். குகைக்குள் {உடலுக்குள்} மறைந்திருக்கும் சுயத்தைத் தேடுவீராக உமது பாட்டன்மாரும், தந்தையும் எங்கே சென்றார்கள்?" என்று கேட்டான் {மேதாவி}".(38)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, தமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தந்தை, சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செயல்பட்டார். நீயும் வாய்மை அறத்திற்கு அர்ப்பணிப்புடன் அதே வழியில் செயல்படுவாயாக" என்றார்[6].(39)
[6] இதே தந்தை மகன் உரையாடல் சாந்தி பர்வம் 175ம் பகுதியில் https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-175.html இருக்கிறது. இந்தப் பகுதியை விட அங்கே சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 277ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |