Sannyasa Ashrama! | Shanti-Parva-Section-278 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 105)
பதிவின் சுருக்கம் : பிரம்மத்தை அடையத்தக்க நடத்தை, செயல்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்; சந்நியாச வழிமுறையை அவனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பிரகிருதியைக் கடந்ததும், மாற்றமில்லாததுமான பிரம்மத்தின் இடத்தை அடைய ஒரு மனிதன் என்ன நடத்தையை, என்ன செயல்களை, என்ன வகை ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும், அவன் எதனிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "விடுதலை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக, எளிய உணவை உண்பவனாகத் தன் புலன்களை ஆள்பவனாக உள்ள ஒருவன் பிரகிருதியைக் கடந்து, உயர்ந்த இடத்தை அடைந்து, மாற்றமடையாதவனாகிறான்[1].(2) ஒருவன் தன் இல்லத்தில் இருந்து ஓய்ந்து, ஈட்டலையும், இழத்தலையும் ஒரே ஒளியில் கண்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைக்குரிய பொருட்கள் (அனுபவிக்கத்தகுந்த வகையில் ஆயத்தமாக இருக்கும்போதும் அவை) அனைத்தையும் அலட்சியம் செய்து, துறவு வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.(3) கண்ணாலோ, சொல்லாலோ, எண்ணத்தாலோ அவன் மற்றொருவனை இழிவாகக் கருதக் கூடாது. எந்த மனிதனும் கேட்கும்படியோ, இல்லாமலோ அவனைக் குறித்துத் தீமையாகப் பேசக்கூடாது.(4) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்து, ஒழுக்கத்தில் சூரியனின் பாதையைப் பின்பற்ற வேண்டும்[2]. இந்த வாழ்வில் உள்ள ஒருவன் எந்த உயிரினத்திடமும் நட்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.(5)
[1] "பிரகிருதி என்பது பூமி, நீர் முதலிய ஐம்பூதங்களைக் கொண்ட மூல இயற்கையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "அதாவது, விடுதலையை வேண்டும் ஒருவன் தன்னை ஒரே இடத்திற்குள் அடைத்துக் கொள்ளாமல், நிலைத்த வசிப்பிடத்தையோ, இல்லத்தையோ ஏற்படுத்திக் கொள்ளாமல் உலகம் முழுவதும் திரிய வேண்டும் என்று பேசுபவர் {பீஷ்மர்} சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் கடுமொழிகளை அலட்சியம் செய்து, அகங்காரத்துடன் தன்னை மற்றொருவனைவிட மேன்மையானவனாக மதித்துக் கருதிக்கொள்ளக்கூடாது. மற்றொருவனின் மூலம் கோபம் தூண்டப்படும்போதும், அவன் இனிமையான பேச்சுகளை மட்டுமே உதிர்க்க வேண்டும். தானே பழிக்கப்படும்போதும், அவன் பதிலுக்குப் பழித்துரைக்கக்கூடாது.(6) அவன் மனிதர்களுக்கு மத்தியில் நட்புடனோ, நட்பில்லாமலோ பழகக்கூடாது. அவன் பிச்சையெடுக்கச் செல்லும் ஒரு வலத்தில் பல வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அதே போல, முன்கூட்டியே (உணவுக்கு) அழைக்கப்பட்டு எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது.(7) (பிறரால்) புழுதி வாரி இறைக்கப்படும்போதும், அவன் தன் கடமைகளில் உறுதியாக இருந்து, அத்தகைய ஏற்பில்லாத பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அவன் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பதிலுக்குப் பழிதீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அச்சமற்றவனாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.(8) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட மனிதன், ஓர் இல்லறத்தானின் வசிப்பிடத்தில் புகை எழுவது நின்று, உலக்கையொலி அடங்கி, அடுப்பில் நெருப்பு அணைந்து, அங்கே வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவை முடித்த பிறகு, அல்லது உணவுக்கான நேரம் கடந்ததும் அங்கே ஈகை இரத்தலுக்கு {பிச்சை எடுக்கச்} செல்ல வேண்டும்.(9) அவன் தன் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகப் பராமரித்துக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டும் {உணவில்} நிறைவடைய வேண்டும். நிறைவை உண்டாக்கும் அளவுக்கான உணவுக்குக்கூட அவன் ஆசைப்படக்கூடாது. அவன் தன் தேவையை அடையத் தவறும்போது, நிறைவின்மையை வளர்க்கக்கூடாது. மேலும் தன் தேவையை அடையும்போது அவன் மகிழக்கூடாது.(10)
சாதாரண மனிதர்களால் விரும்பப்படும் பொருட்களில் ஒருபோதும் அவன் விரும்பங்கொள்ளக்கூடாது. மரியாதையுடன் அழைக்கப்படும்போதும் அவன் எவனுடைய வீட்டிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவனைப் போன்ற ஒருவன், கௌரவத்துடன் அடையப்படும் அத்தகைய ஆதாயங்களைப் புறக்கணிக்க வேண்டும்[3].(11) அவன் தனக்கு முன்பு வைக்கப்பட்ட உணவில் ஒரு போதும் குறை காணக்கூடாது, மேலும் தகுதிகளையும் பாராட்டக்கூடாது. மனிதர்களின் தேவைகளில் இருந்து விலக்கப்பட்ட படுக்கையையும், ஆசையையும் அவன் விரும்ப வேண்டும்.(12) கைவிடப்பட்ட வீடு, மரத்தடி, காடு, குகை போன்ற இடங்களையே அவன் நாட வேண்டும். தன் நடைமுறைகளைப் பிறர் அறியாவண்ணம், அல்லது பிறரால் (வெறுக்கத்தக்க அல்லது ஒதுக்கத்தக்கவற்றைப்) பின்பற்றுவதன் மூலம் தன் உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவன் தன் சுயத்துக்குள் நுழைய வேண்டும்[4].(13) யோகத் தொடர்பு மற்றும் தோழமை தொடர்பற்றல் ஆகியவற்றின் மூலம் அவன் முற்றிலும் சமமான, உறுதியான, சீரான நிலையை அடைய வேண்டும். அவன் தன் செயல்களின் மூலம் தகுதி, அல்லது தகுதியின்மையை ஈட்டக்கூடாது[5].(14) அவன் மனநிறைவு, நல்ல உள்ளடக்கம், எப்போதும் உற்சாகம் நிறைந்த முகம் மற்றும் புலன்களுடன், அச்சமற்றவனாக, மனத்தில் எப்போதும் புனித மந்திரங்களை உரைப்பவனாக, அமைதிநிறைந்தவனாக, துறவு வாழ்வை மேற்கொள்பவனாக இருக்க வேண்டும்.(15)
[3] கும்பகோணம் பதிப்பில், "எல்லாருக்கும் பொதுவான சந்தனம் ஆரமுதலான லாபத்தை விரும்பக்கூடாது. பூஜிக்கப்பெற்றுப் புஜிக்கக்கூடாது. அப்படிப்பட்டவன் பூஜித்துக் கொடுப்பதை வெறுக்க வேண்டும்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "சூன்யகிருகத்தையோ, மரத்தின் அடியையோ, வனத்தையோ, குகையையோ ஒன்றை ஒருவருக்கும் தெரியாமல் அடைந்து மற்றோரிடத்தில் போய் வஸிக்க வேண்டும். சலனமற்றவனும், நிலைபெற்றவனுமாகி (பிறர்) அனுஸரித்தாலும் விரோதித்தாலும் ஸமமாயிருக்க வேண்டும்.[5] "செயல்களில் இருந்து முற்றிலும் விடுபடும் அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அடிப்படை சாரங்களின் {ஐம்பூதங்களின்} விளைவால் உண்டாகி அதனிலேயே கரைந்து போகும் புலன்களின் மூலம் தன் உடலின் தோற்றத்தையும் அழிவையும் கண்டும், (பிற) உயிரினங்களின் பிறப்பையும் இறப்பையும் கண்டும், அவன் ஆசையில் இருந்து விடுபட்டு, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத இருவகை உணவுகளையும் உண்டு அனைத்தின் மீதும் சம பார்வையைச் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த உணவை உண்டு, தன் புலன்களை அடக்கும் அவன் சுயத்தின் மூலம் ஆன்ம அமைதியை அடைகிறான்.(16) ஒருவன், {தனக்குள்} (எழுச்சியடையும்) சொற்கள், மனம், கோபம், பொறாமை, பசி மற்றும் காமம் ஆகிவற்றின் தூண்டல்களை அடக்க வேண்டும். இதயத் தூய்மைக்காகத் தவத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், (பிறரின்) நிந்தனைகள் தன் இதயத்தைப் பீடிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் {பாரபட்சமில்லாத} நடுவுநிலைமையை அடைந்து புகழையும், பழியையும் சமமாகக் கருத வேண்டும். உண்மையில் இதுவே புனிதமான, உயர்ந்த பாதையான சந்நியாச வாழ்வுமுறையாகும்.(18)
உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட ஒரு சந்நியாசி அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன் புலன்களை விலக்கி, பற்றுகள் அனைத்திலிருந்தும் தனித்திருக்க வேண்டும். அவன் முந்தைய வாழ்வுமுறைகளில் வாழ்ந்த போது அறிந்த மனிதர்களிடம் அல்லது சென்ற இடங்களுக்கு ஒருபோதும் மீண்டும் செல்லக் கூடாது. அவன், அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்புடைய வகையில், ஒரு நிலையான வீடு இல்லாமல் சுயத்தின் தியானத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(19) அவன் இல்லறத்தாருடனோ {கிருஹஸ்தர்களுடனோ}, காட்டுவாசிகளுடனோ {வானப்ரஸ்டர்களுடனோ} ஒருபோதும் கலந்திருக்கக் கூடாது. (முன்பே சிந்திக்கப்படாமல்) முயற்சியில்லாமல் அடையப்படும் உணவையே அவன் உண்ண வேண்டும். மகிழ்ச்சி தன் இதயத்தைப் பீடிக்க அவன் ஒருபோதும் அனுமதிக்ககூடாது.(20) ஞானிகளுக்கு, இத்தகைய துறவு வாழ்க்கையே விடுதலையை அடையும் வழிமுறையாகும். எனினும், மூடர்களுக்கு இந்தக் கடமைகளின் நடைமுறைகள் மிகச் சுமை நிறைந்ததாகவே தெரியும். தவசி ஹாரீதர் இவை அனைத்தையுமே விடுதலையை அடையும் பாதையாக அறிவித்தார்.(21) எவன் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழையாமையை உறுதிகூறுவானோ, அவன் முடிவில்லாத, அல்லது நித்தியமான இன்பமயமான பிரகாச உலகங்கள் பலவற்றை அடைகிறான்" என்றார் {பீஷ்மர்}.(22)
சாந்திபர்வம் பகுதி – 278ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |