Knowledge! | Shanti-Parva-Section-279 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 106)
பதிவின் சுருக்கம் : இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?" என்று கேட்டான்.(4,5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஏகாதிபதியே, அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அனைத்திற்கும், அதனதனுக்குரிய எல்லைகள் இருக்கின்றன. மறுபிறப்புக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது நன்கறியப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் எந்தப் பொருளும் நிலையானதல்ல.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது (உனக்கிருக்கும் செல்வாக்கு) ஒரு களங்கமென நீ நினைக்கிறாய். நமது ஆய்வுக்குரிய இக்காரியத்தில் அஃது அவ்வாறில்லை என்பது உண்மையல்ல {அஃது அவ்வாறென்பது உண்மையே}. எனினும், நீங்கள் அறம் அறிந்தவர்களாகவும், ஆயத்தமானவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, காலத்தில் நீங்கள் உங்கள் துன்பத்திற்கான முடிவை (விடுதலையை) அடையப்போகிறீர்கள்[1].(7) ஓ! மன்னா, உடலுடன் கூடிய ஜீவன், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றுக்கு (அல்லது அவற்றின் கனியாக வரும் இன்பதுன்பங்களுக்கு) உரிமையாளனல்ல. மறுபுறம், அவன் {ஜீவன்}, தகுதி மற்றும் தகுதியின்மையால் பிறக்கும் இருளில் (விருப்பு வெறுப்பைத் தன் சாரமாகக் கொண்ட அறியாமையில்) மூழ்குகிறான்[2].(8) அஞ்சனப்பொடியுடன் கூடிய காற்றானது, மனோசிலையின் தூள்களைப் பற்றி (தானே {காற்று} நிறமற்ற ஒன்றாக இருப்பினும்), தான் பற்றும் பொருட்களின் நிறங்களை ஏற்று, பல்வேறு திசைப்புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்துவதைப் போலவே,(9) ஜீவனும், நிறமற்றதாக இருந்தாலும், அறியாமை மற்றும் செயல்களின் கனிகளால் பல நிறங்களை ஏற்று (களங்கமற்ற, நிலையான தன்மை கொண்ட தன் மூதாதையைக் {சித்-ஐ} களங்கமுடையதாக, மாறும் இயல்புள்ளதாகத் தோன்றச் செய்யும் வகையில்) உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணிக்கிறான்[3].(10)
[1] "முதல் வரியில் உள்ள எதிர்மறைகள் இரண்டும் சேர்ந்து, ஓர் உறுதியான நிலைக்கு {நேர்மறைக்கு} இணையானதாகும். செல்வாக்கு உண்டாக்கும் பற்றின் விளைவால், அது விடுதலைக்கான வழியில் மறித்து நிற்கிறது. எனவே, இந்தக் கருத்தின் அடிப்படையில் செல்வாக்கைக் குறித்து மன்னனின் கருத்துச் சரியானதே ஆகும்". எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அதிகப் பற்றுதலினாலே இந்த ராஜ்யதோஷம் அடையப்படுகிறதில்லையென்பதில்லை. ஆனாலும், தர்மத்தை அறிந்த நீங்கள் முயற்சியினாலேயே சிறிது காலத்தில் மோக்ஷத்தை அடையப்போகிறீர்கள்" என்றிருக்கிறது.[2] "(இங்கே குறிப்பிடப்படுவது போல) ஜீவனுக்குத் தற்செயலாக நேரும் இன்ப துன்பங்களால் கலக்கமடையாமல் யுதிஷ்டிரன் விடுதலைக்கு {முக்தி அடைய} முயற்சிக்க வேண்டும் என்று பீஷ்மர் உற்சாகமளிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "காற்று தன் மூதாதையாக வெளியை {ஆகாயத்தைக்} கொண்டுள்ளது. ஜீவன், களங்கமற்ற, நிலையான சித்-ஐ தன் மூதாதையாகக் கொண்டுள்ளது. நிறமற்ற காற்றானது, சுற்றியுள்ள பொருட்களின் வண்ணங்களைப் பற்றி, தன் மூதாதையை அவ்வண்ணங்களைக் கொண்டதாகச் செயவதைப் போலவே ஜீவனும் உண்மையில் களங்கமற்றதாக இருப்பினும், அறியாமை மற்றும் செயல்களின் களங்கங்களைப் பற்றிக் கொண்டு, களங்கமற்றதும் நிலையானதுமான தன் மூதாதை சித் அனைத்து வகைக் களங்கங்களையும் கொண்டதாக வெளிக்காட்டுகிறது. இவ்வாறே உரையில் தவிர்க்கப்பட்ட காரியங்களை ஓர் உவமையின் மூலம் உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜீவன், அறியாமையின் விளைவால் தன்னைப் பீடித்த இருளை ஞானத்தின் மூலம் விலக்குவதில் வெல்லும்போது, நிலையான பிரம்மமானது (தன் முற்றான மகிமையுடன்) வெளிப்படுத்தப்படுகிறது.(11) நிலையான பிரம்மத்திற்கு முன்னிலை மீள்வது, செயல்களின் மூலம் இயலாது எனத் தவசிகள் சொல்கின்றனர். நீயும், இந்த உலகில் உள்ள பிறரும், தேவர்களும் கூட, விடுதலையை {முக்தியை} அடைந்தவர்களை மதிக்க வேண்டும். பெரும் முனிவர்கள் அனைவரும் பிரம்மப் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை[4].(12) இது தொடர்பாகப் பழங்காலத்தில் (தைத்தியர்களின் ஆசானால் {சுக்ராச்சாரியரால்}) பாடப்பட்டது குறிப்பிடப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, தைத்தியன் விருத்திரன், தன் செழிப்பனைத்தையும் இழந்தபோது பின்பற்றிய ஒழுக்க நடைமுறையைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(13) ஓ! பாரதா, தன் புத்தியை மட்டுமே சார்ந்திருந்த அவன், தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நண்பர்களற்றவனாக இருந்தாலும், அரசுரிமையை இழந்திருந்தாலும் எதிரிகளுக்கு மத்தியில் கவலையில் ஈடுபடாமல் இருந்தான்.(14) பழங்காலத்தில் விருத்திரன் அரசுரிமையை இழந்திருந்தபோது, (அவனது ஆசானான) உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "ஓ! தானவா, உன் தோல்வியின் விளைவால் நீ துயரமெதையும் வளர்க்கவில்லை என நான் நம்புகிறேன்" என்று கேட்டார்.(15)
[4] "இந்தச் சூத்திரங்கள் புரிந்து கொள்ள மிகக் கடினமானவையாக இருக்கின்றன. செயல்கள் நிலையற்றவை; அவற்றின் விளைவுகளும் நிலையற்றவை என்பதைச் சொல்லவே, செயல்களைச் சார்ந்து பிரம்மம் அடையப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. மாறும் இயல்பைக் கொண்ட சொர்க்கத்தின் இன்பநிலையைப் போலல்லாமல பிரம்மம் நிலையானது, நித்தியமானது என்பதால், அந்தப் பிரம்மத்தை செயல்களின் மூலம் ஒருபோதும் அடைய முடியாது. ஞானத்தைக் கொண்டு அறியாமையை விலக்குவதன் மூலமே ஜீவன் பிரம்மத்திற்கு முன்னிலைமீளும்; அல்லது, உபநிஷத்துகள் அறிவிப்பது போல, தங்க அட்டிகை எப்போதும் கழுத்தில் இருந்தாலும், எங்கும், நாடப்படும்போது கவனிப்பதைப் போல ஒருவன் அதை {பிரம்மத்தை} அடைகிறான். பிரம்மத்தை அடைந்த மனிதர்களின் கருத்தைச் சார்ந்தே பிரம்மத்தின் இருப்பையும், ஜீவன் அந்த நிலையான நிலையை அடையும் சாத்தியத்தையும் எட்ட முடியும் என்பதாலேயே அவர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரம்மத்துடனே இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்பதால்தான் தவசிகள் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவைப்படும் பண்பாட்டில் இருந்து ஒருக்கணமும் ஒருபோதும் விலகுவதில்லை" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
விருத்திரன் {சுக்கிராச்சாரியாரிடம்}, "வாய்மை மற்றும் தவங்களின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும் மறைவையும் ஐயமில்லாமல் புரிந்து கொண்டு, இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.(16) காலத்தால் தூண்டப்பட்ட உயிரினங்கள் ஆதரவற்ற நிலையில் நரகத்தில் மூழ்குகின்றன. மேலும் சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று தவசிகள் சொல்கின்றனர். இவை யாவும் தங்கள் காலத்தை அடக்கத்துடன் கழிக்கின்றன.(17) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தைச் சொர்க்கத்திலும், நரகத்திலும் கழிக்கும் அவை, தங்கள் பங்கான தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} (இன்ப துன்பங்களின் மூலம்) தீர்ந்த பிறகு, காலத்தால் தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பை எடுக்கின்றன.(18) ஆசை எனும் சங்கிலிகளால் கட்டப்பட்ட உயிரினங்கள், இடைநிலை வாழ்வுகளில் ஆயிரமாயிரம் பிறவிகளைக் கடந்து ஆதரவற்ற நிலையில் நரகத்தில் விழுகின்றன[5].(19) இவ்வாறு உயிரினங்கள் வருவதையும், போவதையும் நான் காண்கிறேன். ஒருவனுடைய செயல்களின் அடிப்படையிலேயே அவன் எதையும் அடைகிறான் என்பது சாத்திரங்களில் உள்ள பாடம்[6].(20)
[5] "இடைநிலை வாழ்வுகள் என்பன, விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் புழுக்கள் முதலிய வாழ்வுகளாகும்.[6] கும்பகோணம் பதிப்பில்,"ஜீவர்கள் காலமாகிற கட்டில் கட்டப்பட்டுத் தம் வசமற்று ஆயிரம் திரியக்ஜன்மங்களையும் நரகத்தையுமடைந்து மறுபடியும் வெளியில் வருகின்றனர். நான் இவ்விதம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற பிராணிகளைப் பார்த்தவன். வினைக்குத்தக்க பயனுண்டாகுமென்று சாஸ்திரத்தில் காணப்படுகிறது" என்றிருக்கிறது.
உயிரினங்கள் மனிதர்களாகவோ, இடைநிலை விலங்குகளாகவோ, தேவர்களாகவோ பிறப்பை எடுத்து நரகத்திற்குச் செல்கின்றன. தங்களுக்குத் தகுந்த வகையில் முற்பிறவிகளில் செயல்பட்ட உயிரினங்கள் அனைத்தும், காலனின் விதிகளுக்கு உட்பட்டு, இன்ப துன்பங்களையும், ஏற்புடையவற்றையும், ஏற்பில்லாதவற்றையும் அடைகின்றன. தங்கள் செயல்களின் அளவுக்குத்தக்க இன்ப துன்பங்களை அனுபவிக்கும் உயிரினங்கள், செயல்களின் அலகுகளால் அளக்கப்படும் பழைய பாதையின் மூலம் எப்போதும் மீண்டும் வருகின்றன" என்றான் {விருத்திரன்}.(21,22)
அப்போது சிறப்புமிக்கவரான உசனஸ் {சுக்ராச்சாரியர்}, படைப்பின் உயர்ந்த புகலிடத்தைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அசுரன் விருத்திரனிடம், "ஓ! தைத்திய புத்திமானே, ஓ! குழந்தாய், இத்தகைய மூடக் கற்பனைகளை நீ ஏன் சொல்கிறாய்?" என்று கேட்டார்.(23)
விருத்திரன், "வெற்றியின் மீது கொண்ட பேராசையின் காரணமாக நான் செய்த கடுந்தவங்களையும், நீரும் தவசிகள் பிறரும் அறிவீர்.(24) பிற உயிரினங்கள் இன்புறும் பல்வேறு சுவைகளையும், பல்வேறு மணங்களையும் என் சக்தியால் அபகரித்த நான், மூவுலகங்களையும் பீடித்துக் கொண்டிருந்தேன்.(25) பிரகாசமான பல்லாயிரம் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட நான் (என் தெய்வீகத் தேரில்), எந்த உயிரினத்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக, எவனுக்கும் அஞ்சாதவனாக வானத்தில் திரிந்திருந்தேன்.(26) என் தவங்களின் மூலம் பெருஞ்செழிப்பை அடைந்தேன், என் செயல்களால் நான் அஃதை இழந்தேன். எனினும், என் மனோவுறுதியைச் சார்ந்திருந்த நான் இந்த மாற்றத்தினால் துயருறவில்லை.(27)
(பழங்காலத்தில்) சொர்க்கங்களின் உயர் ஆன்ம ஆட்சியாளனான பேரிந்திரனுடன் {மஹேந்திரனுடன்} போரிட விரும்பிய நான் அந்தப் போரில் சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், ஹரி {பாவங்கள் அனைத்தையும் அபகரிப்பவன்},(28) வைகுந்தன் {தடையில்லாத சமர்த்தன்}, புருஷன் {பரிபூர்ணன்}, அனந்தன் {முடிவற்றவன்}, சுக்லன் {சுத்தன்}, விஷ்ணு {வியாபகன்}, சநாதனன் {அனாதியானவன் / மிகப் பழமையானவன்}, முஞ்சகேசன் {பழுத்த தர்ப்பை போலப் பொன்னிறமான மயிரைக் கொண்டவன்}, ஹரிஸ்மஸ்ரு {மஞ்சள் நிற மீசையுடையவன் [தாடியுடையவன்]}, அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டன் {பிதாமஹன்} என்றும் எவன் அழைக்கப்பட்டானோ, அந்த நாராயணனைக் கண்டேன்.(29)
அந்தப் பெரும் ஹரியின் காட்சி கிட்டியதற்கான அந்தத் தவத்தோடு கூடிய வெகுமதிகள் (அனுபவிக்கத்தக்க வகையில்) என்னிடம் இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அது தீராமல் எஞ்சியிருப்பன் விளைவாலேயே நான் உம்மிடம் செயல்களின் கனிகளைக் குறித்துக் கேட்கும் விருப்பம் கொண்டேன்[7].(30) (மனிதர்களின்) எந்த வகையில் {வர்ணத்தில்} உயர்ந்த பிரம்ம செழிப்பு நிறுவப்பட்டிருக்கிறது? மேலும் அநத உயர்ந்த செழிப்பு எவ்வகையில் வீழ்ச்சியடையும்?(31) எவனிடம் இருந்து உயிரினங்கள் தோன்றி வாழ்கின்றன? எவன் மூலம் அவை செயல்படுகன்றன? எந்த உயர்ந்த கனியை அடைவதன் மூலம் ஓர் உயிரினம் நித்தியமாகப் பிரம்மத்துடன் வாழ்வதில் வெல்லும்?(32) எந்தச் செயலின் மூலம், அல்லது அந்த அறிவின் மூலம் அந்தக் கனியை அடைய முடியும்? ஓ! கல்விமானான பிராமணரே, இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {விருத்திரன்}".(33)
[7] "தவங்கள் தகுதிமிக்கவை {புண்ணியம் நிறைந்தவை} ஆகும். எதிர்பார்க்கும் பலன்களைத் தரவல்ல கடுந்தவங்களின் போக்கிலேயே நான் ஹரியைக் கண்டேன். அதன் விளைவாலும், நான் செய்த பெரும்தவங்கள் பிறவற்றின் விளைவாலும் நான் அனுபவிக்கத்தக்க வெகுமதிகள் கிடைத்தன. எனினும், அந்த வெகுமதிகளின் முழுக் கொள்ளவும் அறுவடை செய்யப்படாமல்; எஞ்சியவை இனி நான் அனுபவிக்கத்தகுந்தவையாக இருக்கின்றன என்ற தெரிகிறது. ஏனெனில் நான் செயல்களின் கனிகளைக் குறித்து உம்மிடம் கேட்கப் போகிறேன். என் விசாரணை புனிதமானதும், மங்கலம் நிறைந்ததுமாகும். அதைக் கேட்பதிலேயே அதன் வெகுமதியும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
{பீஷ்மர் தொடர்ந்தார்}, "ஓ! மன்னர்களில் சிங்கமே, ஓ! மனிதர்களில் காளையே, தானவர்களின் இளவரசனால் {விருத்திரனால்} இவ்வாறு கேட்கப்பட்ட பிறகு தவசி உசனஸ் {சுக்கிராச்சாரியர்} என்ன சொன்னார் என்பது என்னால் தொகுத்துரைக்கப்படும்போது உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சிதறாத கவனத்துடன் கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.(34)
சாந்திபர்வம் பகுதி – 279ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |