The glory of Vishnu sung by Sanatkumara! | Shanti-Parva-Section-280 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 107)
பதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் மகிமையையும், பிறப்பின் கணக்கையும், ஜீவன்களின் நிறம் முதலியவற்றையும், சுக்ரருக்கும், விருத்திரனுக்கும் எடுத்துச் சொன்ன ஸனத்குமாரரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "ஆகாயத்துடன் கூடிய இந்தப் பூமியைத் தன் கரங்களில் தாங்கும் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தெய்வீகமானவனை {விஷ்ணுவை} நான் வணங்குகிறேன்.(1) ஓ! தானவர்களில் சிறந்தவனே, (விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும்) முடிவிலா இடத்தைத் தலையாகக் கொண்டவனும், அதியனுமான {அனைத்திலும் மேம்பட்டவனான} அந்த விஷ்ணுவின் மகிமையைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {சுக்கிராச்சாரியார்}.(2)
அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஐயங்களை விலக்கும் நோக்கம் கொண்டவரும், அற ஆன்மாவும், பெருந்தவசியுமான ஸனத்குமாரர் அங்கே அவர்களிடம் வந்தார்[1].(3) அசுரர்களின் இளவரசனாலும் {விருத்திரனாலும்}, தவசியான உசனஸாலும் {சுக்கிராச்சாரியராலும்} வழிபடப்பட்ட அந்தத் தவசிகளில் முதன்மையாவன் {ஸனத்குமாரர்}, ஒரு விலைமதிப்புமிக்க இருக்கையில் அமர்ந்தார்.(4)
[1] ஸனத்குமாரர்கள் நால்வர், அந்த நால்வரும் வந்து விருத்திரனின் ஐயத்தை விலக்கியதாகவும் செய்தி உண்டு.
பெரும் ஞானம் கொண்ட குமாரர் {ஸனத்குமாரர்} (சுகமாக) அமர்ந்தபிறகு, அவரிடம் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "அதியனான விஷ்ணுவின் மகிமையை இந்தத் தானவர்களின் தலைவனுக்கு {விருத்திரனுக்கு} உரைப்பீராக" என்றார்.(5)
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸனத்குமாரர், புத்திமானான அந்தத் தானவர்களின் தலைவனிடம் {விருத்திரனிடம்}, அதியனான விஷ்ணுவின் மகிமை குறித்தவையும், பெரும் முக்கியத்துவம் நிறைந்தவையுமான பின்வருவனவற்றைச் சொன்னார்.(6)
{ஸனத்குமாரர்}, "ஓ! தைத்தியா {திதியின் மகனே}, விஷ்ணுவின் மகிமை குறித்த அனைத்தையும் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மொத்த அண்டமே விஷ்ணுவைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவாயாக.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அசைவன மற்றும் அசையாதன உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் அவனே. காலத்தின் போக்கில் அனைத்துப் பொருட்களையும் உள்ளீர்த்துக் கொள்பவனும், காலத்தில் அவற்றை முன்னே விடுபவனும் {உண்டாக்குபவனும்} அவனே.(8) அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் அந்த ஹரியிலேயே கலக்கின்றன, பிறகு அந்தப் பொருட்கள் அனைத்தும் அவனிலிருந்தே உதிக்கின்றன. சாத்திரங்களை அறிந்த மனிதர்களால் அத்தகைய சாத்திரத்தின் மூலம் அவனை அடைய முடியாது. அதேபோல, தவங்கள் மற்றும் வேள்வியின் மூலமும் அவனை அடைய முடியாது. புலன்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் மூலமே அவன் அடையத்தக்கவனாக இருக்கிறான்.(9) அத்தகைய கதியை அடைவதில் சாத்திரங்கள் முற்றிலும் பயனற்றவை என்பதல்ல. புற மற்றும் அகச் செயல்கள் இரண்டையும், தன் மனத்தையும் சார்ந்திருப்பதாலும், தன் புத்தியின் மூலமும் ஒருவனால் (அவற்றை {புலன்களைத்}) தூய்மைப்படுத்த முடியும். அத்தகைய வழிமுறைகளால் அவன் இவ்வுலகில் முடிவின்மையை அனுபவிப்பதில் வெல்வான்[2].(10)
[2] "வேள்விகள் முற்றிலும் பயனற்றவையல்ல. அவை, சித்த சுத்தி, அல்லது இதயத் தூய்மைக்கு வழிவகுக்கும். இதயத் தூய்மை அடையப்படும்போது, அஃது ஆன்மா குறித்த அறிவுக்கு, அல்லது விடுதலைக்கு {முக்திக்கு}, அல்லது முடிவின்மைக்கு வழிவகுக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பொற்கொல்லன் ஒருவன், பெரும் முயற்சியோடு கூடிய பெருஞ்செய்கையால் உலோகத்தை {தங்கத்தை} மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு அதன கசடுகளைத் தூய்மைப்படுத்துவதைப் போல,(11) ஜீவன் நூறு பிறவிகளை எடுக்கும் தன் போக்கின் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறது. ஒரே ஒரு பிறவியில் பெரும் முயற்சிகளோடு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிலர் காணப்படுகின்றனர்.(12) ஒருவன் தன் மேனியில் உள்ள கறை அடர்த்தியாவதற்குள் கவனத்துடன் துடைப்பதைப் போலவே, ஒருவன் பெரும் முயற்சிகளைச் செய்து தன் களங்கங்களைக் கழுவிக்கொள்ள வேண்டும்.(13) எள் தானியங்களுடன் சில மலர்களைக் கலப்பதால் மட்டுமே அவை தங்கள் சொந்த மணத்தை விடாது (விட்டுவிட்டு உடனே மணமிக்கவையாக மாறிவிட முடியாது). அதே போலவே, ஒருவன் தன் இதயத்தைச் சிறிது தூய்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஆன்மாவைக் காண்பதில் வெல்ல முடியாது.(14) எனினும், அந்தத் தானியங்கள், பெரும் அளவிலான மலர்களுடன் மீண்டும் மீண்டும் மணமூட்டப்படும்போதுதான் அவை தங்கள் சொந்த மணத்தை விட்டு, தங்களுடன் கலந்த மலர்களின் மணத்தை ஏற்கும்.(15)
அதே வகையிலேயே, நமது சூழ்நிலைகளின் மேல் பற்று கொள்வதால் ஏற்படும் களங்கங்கள், பல பிறவிகளின் போக்கில் ஏற்படும் புத்தியின் மூலமும், பெரும் அளவிலான சத்வ குணத்தின் துணை மூலமும், பயிற்சியில் பிறக்கும் முயற்சியெனும் வழிமுறையின் மூலமும் களையப்படுகின்றன[3].(16) ஓ! தானவா, செயல்களில் பற்றுக் கொள்ளும் உயிரினங்களும், அவற்றில் பற்று கொள்ளாதவையும் தங்கள் தங்கள் மனோநிலைகளுக்கு வழிநடத்தப்படும் காரணங்களை {கர்மவிசேஷங்களை} எந்த வழிமுறைகளின் மூலம் அடைகின்றன என்பதைக் கேட்பாயாக[4].(17) ஓ! பலமிக்கத் தானவா, உயிரினங்கள் எவ்வாறு செயல்களைச் செய்கின்றன, எவ்வாறு அவை விடுகின்றன என்பதை முறையான வரிசையில் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(18) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் உயர்ந்த தலைவனே {பரமனே} படைக்கிறான். அவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவனாவான். எவ்வகைக் குணங்களும் அற்றவனான {நிர்க்குண பிரம்மமான} அவன், (படைப்பை உண்டாக்கும்போது) குணங்களை ஏற்கிறான். அவனே அண்டத்தை அழிப்பவனும், அனைத்துப் பொருட்களின் புகலிடமும், விதி சமைக்கும் உயர்ந்தவனும், தூய சித்-ம் ஆவான்[5].(19) அனைத்து உயிரினங்களிலும் மாறக்கூடியவனாகவும் {க்ஷதரதேகமாகவும்}, மாற்றமில்லாதவனுமாக {அக்ஷரஜீவனுமாக} அவனே {ஸ்ரீ ஹரியே} வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகளை {விகாரங்களைக்} கொண்டவனான அவனே, தன் கதிர்களால் இந்த அண்டத்தைப் பருகுகிறான்[6].(20)
[3] "’பயிற்சியில் பிறக்கும் முயற்சிகள்’ புறப்பயிற்சி மற்றும் அகப்பயிற்சி ஆகிய இரண்ட சாதனைகளையும் குறிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "பிராணிகள் தம்முடைய கர்மத்தினாலே பற்றுள்ளவைகளும், பற்றற்றவைகளுமாகின்றன. பிராணிவர்க்கங்கள் கர்மவிசேஷங்களை அடைகின்ற விதத்தைக் கேள்" என்றிருக்கிறது.[5] "முந்தைய ஸ்லோகங்களில் ஸனந்குமாரர் ஒருவன் செய்ய வேண்டிய பயிற்சிகளைக் குறித்துச் சொல்கிறார். இந்த ஸ்லோகத்திலும், பின்வரும் ஸ்லோகங்களிலும், அறியப்பட வேண்டிய பொருளைக் குறித்துப் பேசுகிறார். இந்த ஸ்லோகத்தைப் புரிந்து கொள்ள, இதில் சொல்லப்பட்டிருக்கும் சொல் இலக்கணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "மாறக்கூடியவனாக என்பது அனைத்து உயிரினங்களிலும் உள்ள ஐந்து அடிப்படை சாரங்களின் கலவையை {உடலைக்} குறிக்கும். மாறாதவனாக அவற்றின் ஜீவன், அல்லது அறியாமையுடன் கூடிய சித்-ஆக அவற்றில் வசிக்கிறான். பதினோரு மாறுபாடுகள் என்பன, அறிவுப் புலன்கள் ஐந்து, செயல்புலன்கள் ஐந்து மற்றும் மனம் உள்ளிட்டவையாகும். இந்தப் பதினோரு மாறுபாடுகளையும் கொண்டு அவன் இந்த அண்டத்தை அனுபவிக்கிறான், அதாவது பருகுகிறான். கதிர்கள் என்பது புலன்களையே குறிக்கும். அந்தப் புலன்களைக் கூடிய அவன் , அந்த அண்டத்தை அந்தப் புலன்களால் அனுபவிக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆதியந்தமற்றவரும், ஸ்ரீமானும், ஜனங்களுடைய ஹ்ருதயகுகையிலிருக்கிறவரும், ப்ரபுவும், ஸ்வயம்ப்ரகாசருமான ஸ்ரீ ஹரியானவர் சராசரங்களான பிராணிகளை ஸ்ருஷ்டிக்கின்றார். இவர் ஸகலப்ராணிகளிடத்திலும் க்ஷரமான தேகமும் அக்ஷரமான ஜீவனும் பதினொரு விகாரங்களான இந்திரியங்களுடைய ரூபமுமாயிருந்து கொண்டு இந்திரிய வியாபாரங்களால் ஜகத்தை அனுபவிக்கின்றார்" என்றிருக்கிறது.
பூமி அவனது பாதம் என்பதை அறிவாயாக. அவனது தலையே சொர்க்கமாக இருக்கிறது. ஓ! தைத்தியனே, அவனது கரங்களே பல்வேறு திசைப்புள்ளிகளாக இருக்கின்றன. இடைவெளி {ஆகாயம்} அவனது காதுகளாகும்.(21) அவனது கண்களின் ஒளியே சூரியனாகும், அவனது மனத்தின் ஒளியே சந்திரனாகும். அவனது புத்தி எப்போதும் அறிவிலேயே வசிக்கிறது, அவனது நாவு நீரில் வசிக்கிறது.(22) ஓ! தானவர்களில் சிறந்தவனே, கோள்கள் அவனது புருவமத்தியில் இருக்கின்றன. விண்மீன்களும், நட்சத்திரக்கூட்டங்களும் அவனது கண்களின் ஒளியில் இருந்து வந்தன. ஓ! தானவா, இந்தப் பூமி அவனது பாதத்தில் இருக்கிறது.(23) ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்கள் அவனிடம் இருந்தே வந்தன என்பதை அறிவாயாக. அவனே அனைத்து வாழ்வுமுறைகளின் கனியாவான் (அல்லது கதியாவான்), (ஜபம் மற்றும் வேள்விகள் முதலிய) செயல்கள் அனைத்தின் கனியாக (வெகுமதியாக) அவனே அறியப்பட வேண்டும்.(24) உயர்ந்தவனும், மாற்றமிலாதவனுமான அவன், செயல்கள் அனைத்தில் இருந்து விலகுவதன் கனியாகவும் இருக்கிறான். சந்தங்கள் அவனது உடலின் முடியாக இருக்கின்றன, அக்ஷரம் (அல்லது பிரணவம்) அவனது சொல்லாக இருக்கிறது.(25)
(மனிதர்களில்) பல்வேறு வகையினரும், வாழ்வு முறைகளும் அவனது புகலிடமாக இருக்கின்றன. அவனது வாய்கள் {முகங்கள்} பலவாகும். கடமை (அல்லது) அறம் அவனது இதயத்தில் நடப்பட்டிருக்கிறது {நிறுவப்பட்டிருக்கிறது}. அவனே பிரம்மமும், உயர்ந்த அறமாகவும், சத்-ஆகவும், அசத்-ஆகவும் இருக்கிறான்.(26) ஸ்ருதி அவனே. சாத்திரங்கள் அவனே. வேள்விப் பாத்திரங்கள் அவனே, பதினாறு ரித்விஜர்கள் அவனே. வேள்விகள் அனைத்தும் அவனே, பெரும்பாட்டன் (பிரம்மன்) அவனே, விஷ்ணு அவனே, அஸ்வினி இரட்டையர்கள் அவனே, புரந்தரன் {இந்திரன்} அவனே.(27) மித்ரன் அவனே, வருணன் அவனே, யமன் அவனே, கருவூலத் தலைவனான குபேரன் அவனே. ரித்விஜர்களால் அவன் தனித் தனியாகக் காணப்பட்டாலும், அவர்களால் அவன் ஒருவனாகவே அறியப்படுகிறான். இந்த மொத்த அண்டமும் அந்த ஒரே தெய்வீமானவனின் கட்டுப்பட்டின் கீழ் இருப்பதை அறிவாயாக.(28) ஓ! தைத்தியர்களின் இளவரசனே, ஆன்மாவில் உள்ள வேதம், பல்வேறு உயிரினங்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்கிறது. ஓர் உயிரினம் இந்த ஒற்றுமையை உணரும்போது, அது பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(29) ஒரு படைப்பு நீடிக்க வேண்டிய காலம், அல்லது அழிய வேண்டிய காலமே கல்பம் என்றழைக்கப்படுகிறது. அத்தகைய கோடிக்கணக்கான கல்பங்களில் உயிரினங்கள் நீடித்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பானது, (பின்வரும் வழியில்) பல ஆயிரம் தடாகங்களாகக் அளவிடப்படுகிறது.(30)
ஒரு யோஜனை அகலமும், ஒரு குரோசம் ஆழமும், ஐநூறு யோஜனைகள் நீளமும் கொண்ட ஒரு தடாகத்தைப் பார். அத்தகைய பல்லாயிரம் தடாகங்களைக் கற்பனை செய்து பார்.(31) அவற்றில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒற்றை முடியின் நுனியைக் கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் இறைத்து, அந்தத் தடாகங்களின் நீரை வற்றச் செய்ய முனைந்து பார். அந்தச் செயல்பாட்டில் அந்தத் தடாகங்களை வற்றச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்கள் ஒரு படைப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலமாகும்.(32) (அனைத்துப் பொருட்களின்) உயர்ந்த சாட்சியமானது {பிரமாணமானது}, கருப்பு, பழுப்பு {தூம்ரம்}, {நடுத்தரமான} நீலம், {மிகவும் ஸஹிக்கக்கூடிய} சிவப்பு, {சுகமான} மஞ்சள் மற்றும் {மிகச் சுகமான} வெள்ளை என ஆறு நிறங்களை {வர்ணங்களை} உயிரினங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இந்த நிறங்கள் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற முக்குணங்களின் பல்வேறு அளவுகளிலான கலவையில் இருந்து கிடைக்கின்றன. எங்கே தமஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயும், ரஜஸ் அளவோடும் இருக்கிறதோ அங்கே கருப்பு என்றழைக்கப்படும் நிறமே விளைகிறது. முன்பு போலவே, தமஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொல்லப்பட்டதற்கு முரணாகவும் இருந்தால், பழுப்பு என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வம் அளவுக்குக் கீழேயேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது, நீலம் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. ரஜஸ் பெருந்தொகையாகவும், சத்வமும், ரஜஸும் மேற்சொன்னதற்கு முரண்பட்டுமிருந்தால், சிவப்பு என்றழைக்கப்படும் இடைநிலை நிறம் விளைகிறது. இந்த நிறம் (முன் சொன்ன நிறத்தை விட) ஏற்புடையதாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸ் அளவுக்குக் கீழேயும், தமஸ் அளவாகவும் இருக்கும்போது மஞ்சள் என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது மகிழ்ச்சியை உண்டாக்கும் நிறமாகும். சத்வம் பெருந்தொகையாகவும், ரஜஸும், தமஸும் மேற்சொன நிலைக்கு முரண்பட்டதாகவும் இருந்தால், வெள்ளை என்றழைக்கப்படும் நிறம் விளைகிறது. அது பேரின்பத்தை உண்டாக்குகிறது[7].(33)
[7] "விஷ்ணுபுராணம், பகுதி 1, அத்யாயம 5ல் இது மேலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மஹத், நுட்பமான வடிவிலான ஐம்பூதங்கள் மற்றும் புலன்கள் என்ற மூன்று அடிப்பைட படைப்புகள் இருக்கின்றன. ஆறு நிறங்களில் இருந்து ஆறு படைப்புகள் உதித்திருக்கின்றன. அசையாத உயிரினங்கள் அனைத்தும் கருப்பு நிறம், (பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட) பிற இடைநிலை உயிரினங்கள் பழுப்பு நிறம், மனிதர்கள் நீல நிறம், பிரஜாபத்யர்கள் சிவப்பு நிறம், தேவர்கள் மஞ்சள் நிறம் ஸனத்குமாரர் முதலிய பிறர் வெள்ளை நிறம் என்று சொல்லப்பட்டுள்ளது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வெண்மையே முதன்மையான நிறமாகும். விருப்பு, வெறுப்பில் இருந்து விடுபட்டிருக்கும் விளைவால் அது பாவமற்றதாக இருக்கிறது. அது துன்பமற்றதாகவும், பிரவிருத்தி தொடர்புடைய கடுமையான உழைப்பில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கிறது. எனவே, ஓ! தானவர்களின் இளவரசே, வெண்மையே வெற்றிக்கு (அல்லது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. ஓ! தைத்தியா, கருவறைமூலமாகப் பல்லாயிரம் பிறவிகளெடுத்த ஜீவன் வெற்றியை அடைகிறது.(34) மங்கல சாத்திரக் கோட்பாடுகள் பலவற்றைப் படித்த பிறகு தெய்வீக இந்திரனால் அறிவிக்கப்பட்டதும், ஆன்ம அறிவைத் தன் சாரமாகக் கொண்டதும், வெற்றியும் ஒரே முடிவுகளைக் கொண்டவையே. உயிரினங்கள் அடையும் கதியானது, அவற்றின் நிறத்தைச் சார்ந்திருக்கிறது, ஓ தைத்தியா, நிறமானது, நேரும் காலத்தின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.(35) ஓ தைத்தியா, ஜீவன் கடக்க வேண்டிய இருப்பின் நிலைகள் {கதிகள்} அளவற்றவையல்ல. அவை பதினான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கொண்டவையாகும். அவற்றின் விளைவால் ஜீவனானது, வழக்குக்கேற்றபடி உயரவோ, நிலைக்கவோ, வீழவோ செய்கிறது[8].(36) கரிய நிறம் கொண்ட ஒரு ஜீவன், நரகத்திற்கு வழிவகுக்கவும், நரகத்திலேயே அழுகிப் போகவும் செய்யும் செயல்களுக்கு அடிமையாக இருப்பதால், அதனால் அடையப்படும் கதி மிக இழிந்ததாகும். அந்த ஜீவனுடைய தீமையின் விளைவால், அது பல்லாயிரம் கல்பங்களின் அளவுக்கு (அத்தகைய வடிவில்) தொடர வேண்டியிருக்கும்.(37) அந்நிலையிலே பல லட்சம் வருடங்கள் கடந்ததும் அந்த ஜீவன் (இடைநிலை நிலை பிறவியில்) பழுப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. அந்நிலையிலேயே அது (நீண்ட பல வருடங்கள்) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இறுதியாக, அதன் பாவங்கள் தீர்ந்ததும், பற்றுகள் அனைத்தையும் கைவிடம் அதன் மனம் துறவை வளர்க்கிறது.(38)
[8] அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்தாகும். அவற்றுடன் மனம், புத்தி, அகங்காரம் மற்றும் சித்தம் என்ற நான்கு காரணங்களும் சேர்க்கப்பட வேண்டும். அதன் விளைவாகப் பதினான்கு என்ற எண்ணிக்கைக் கிடைக்கிறது. இந்தப் பதினான்கின் விளைவால் ஜீவன் பதினான்கு வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, தகுதியின்மைகளையும் {பாவங்களையும்} அடைகிறது. இந்தப் பதினான்கு வகைத் தகுதி மற்றும் தகுதியின்மைகள் ஒவ்வொருந்தும் லட்சக்கணக்கான பிரிவினைகளைக் கொண்டவை. ஜீவன் இந்த அண்டத்தில் திரிகையில், இத்தனை வகை நிலைகளை {கதிகளை} அடைகிறது. இதனால் சொல்லப்படுவது யாதெனில் இந்தப் பதினான்கும் சத்வம், அல்லது நல்லியல்பு என்ற குணத்தில் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜீவன், சத்வ குணத்தைப் பெறும்போது, அது தன் புத்தியின் துணியின் மூலம் தமஸோடு தொடர்புடைய அனைத்தையும் விலக்கி (தனக்கான நன்மையை அடைய) முயற்சிக்கிறது. இதன் விளைவாக அந்த ஜீவன் சிவப்பு என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது. எனினும் சத்வ குணத்தை அடைவது சாத்தியப்படவில்லையெனில், அந்த ஜீவன், நீலம் என்றழைக்கப்படும் நிறத்தை அடைந்து, மறுபிறவிகளில் சுழல வேண்டிய மனிதர்களின் உலகில் பிறக்கிறது.(39) (மனிதன் என்ற) அந்தக் கதியை அடைந்து, தன் செயல்களால் பிறந்த பற்றுகளின் மூலம் ஒரு படைப்பின் காலத்திற்குப் பீடிக்கப்பட்ட அந்த ஜீவன், மஞ்சள் என்றழைக்கப்படும் நிறத்தை அடைகிறது (அல்லது தேவத் தன்மையை அடைகிறது). நூறு படைப்புக் காலங்களுக்கு அந்நிலையில் நீடிக்கும் அந்த ஜீவன் (மீண்டும் மனிதத் தன்மையை அடைவதற்காக) அந்நிறத்தை விடுகிறது.(40) மஞ்சள் நிறத்தை அடைந்த ஜீவன், ஆயிரக்கணக்கான கல்பங்களுக்கு அந்நிலையிலேயே நீடித்து, ஒரு தேவனாக இருக்கிறது. எனினும் (அப்போதும் கூட), கடந்த கல்பங்களில் தான் செய்த செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்து, பத்தாயிரத்து ஒன்பது வழிகளில் திரிந்து விடுதலையை {முக்தி} அடையாமல், நரகத்தையே அடைகிறது. சொர்க்கம் அல்லது தேவத் தன்மையால் அது, (செயல்கள் எனும்) நரகத்தில் இருந்து விடுபடுகிறது என்பதை அறிவாயாக. அதே வகையில், அந்த ஜீவன் (பிற நிறங்களோடு தொடர்பு கொண்டு) பிற பிறவிகளில் இருந்து விடுபடுகிறது.(41,42) ஜீவன் பல நீண்ட கல்பங்கள் தேவர்களின் உலகில் திளைக்கிறது. அங்கிருந்து விழும் அந்த ஜீவன் மீண்டும் மனிதத் தன்மையை அடைகிறது. அதன் பிறகு, நூற்றியெட்டுக் கல்பங்களுக்கு அந்நிலையிலேயே அது நீடிக்கிறது. பிறகு அந்த ஜீவன் மீண்டும் தேவ நிலையை அடைகிறது. (இரண்டாம் முறையாக) மனித நிலையில் இருக்கும்போது, அந்த ஜீவன் (கலியின் வடிவிலான) காலனிடம் (தன் தீய செயல்களின் மூலம்) விழுந்தால், அது கரிய நிறத்திலேயே மூழ்கி, இருப்பின் அனைத்து நிலைகளிலும் மிகத் தாழ்ந்த இழிந்த நிலையை அடைகிறது. இனி, அந்த ஜீவன் எவ்வாறு விடுதலையை {முக்தியை} என்பதை உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)
விடுதலையை விரும்பும் ஜீவன், சத்வ குணத்தைப் பெருந்தொகையாகக் கொண்ட எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்து, படிப்படியாகச் சிவப்பு, மஞ்சகள் நிறங்களை அடைந்து, இறுதியாக வெள்ளை நிறத்தை அடைகிறது. அந்நிறத்தை அடைந்ததும் அந்த ஜீவன், இன்ப உலகங்கள் எட்டைத் தங்களுக்குக் கீழே கொண்ட துதிக்கத்தக்க பல்வேறு பகுதிகளை அடைந்து, விடுதலையேயான களங்கங்களற்ற, ஒளிவடிவத்தில் அங்கேயே நீடித்திருக்கிறது[9].(45) (ஏற்கனவே சொல்லப்பட்ட) எட்டும், ஆறாயிரமும் (உட்பிரிவுகளைக் கொண்டதும்), அந்த உயர்ந்த பிரகாசத்திற்கு ஒப்பானதும், (உண்மை நிலை, அல்லது எதனையும் சாராதிருக்கும் எந்த நிலையும் இல்லாமல்) மனத்தின் படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவன் அடையத்தக்க உயர்ந்த பொருளானது, விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த (துரியம் என்றழைக்கப்படும்) நிலையாக இருக்கிறது[10].(46) யோக பலம் கொண்டு வரும் இன்பநிலையைக்கைவிட இயலாத யோகியைப் பொறுத்தவரையில், அந்த ஜீவன் (அதே ஒரே உடலில்) மங்கல நிலையில் {ஜீவன் முக்தனாக} நூறு கல்பங்கள் வசித்திருந்து, அதன் பிறகு (மஹா, ஜன, தப, சத்ய லோகங்கள் என்றழைக்கப்படும்) நான்கு உலகங்களுக்குச் செல்கிறது. பற்றுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் கடந்தவனும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாலும் வெற்றியடையாமல் இருப்பவனும், ஆறாவது நிறத்தை அடைந்தவனுமான ஒருவனுக்கு இதுவே உயர்ந்த கதியாகும்.(47) (ஏற்கனவே சொல்லப்பட்டது போல உரிய திறனை அடைந்த பிறகு) யோகப் பயிற்சியில் இருந்து வீழ்ந்த யோகியானவன், தன் முற்பிறவி செயல்களின் எச்சம் தீராமல் நூறு கல்பங்கள் சொர்க்கத்தில் வசித்து, சத்வ குணத்தில் உள்ள முந்தைய மனோநிலையின் விளைவால் (அறிவுப்புலன்கள் ஐந்து, மனம் மற்றும் புத்தி ஆகிய) ஏழைக் கொண்டு களங்கங்கள் அனைத்தையும் அழிக்கிறான். அந்தக் காலம் கடந்ததும், அத்தகைய மனிதன் மீண்டும் மனிதர்களின் உலகில் பிறந்து பெரும் மேன்மையை அடைகிறான்.(48)
[9] "ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் மொத்தத் தொகை எழாகும். இவற்றின் மூலம் அடையப்படும் செயல்கள் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஏழும் ஒரு ஜீவன் விடுதலையை {முக்தி} அடைவது வரை அதனைப் பற்றிக் கொள்வதால், அது {ஜீவன்} இந்த ஏழின மூலம் பல்வேறு வழிகளில் செயல்படுகிறது. எனவே, இந்த எழுநூறு வகைச் செயல்களைச் சார்ந்த ஜீவன் அடுத்தடுத்துச் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களை அடைகிறது. வெள்ளை நிறத்தை அடைந்ததும், தனக்குக் கீழேயுள்ள எட்டு புரிகளை (பேரின்பம் நிறைந்த இந்திர, வருண முதலிய, அல்லது காசி, மதுரா, மாயா முதலிய புரிகளை, அல்லது ஆன்ம முன்னேற்றத்தின் அடையாள நிலைகளான புரிகளை) விட்டுவிட்டு உயர்ந்த பிரகாசமான உலகங்களின் ஊடாகப் பிரம்மலோகத்தை அடைகிறது. அந்த உயர்ந்த, துதிக்கத்தக்க உலகங்களை யோகக் கனியால் அடையலாமேயன்றி ஞானத்தால் மட்டுமே அடைந்துவிட முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "முந்தைய ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட எட்டு புரிகளும், சுக்லம் அல்லது வெள்ளை நிற இருப்பின் நன்கறியப்பட்ட அறுபது நிகழ்வுகளுடன் இங்கே ஒப்பிடப்படுகிறது. அறுபது என்ற இந்தப் பட்டியல் இவ்வாறு அடையப்படுகிறது: முதலில், விழிப்பு நிலை; இரண்டாவது ஐம்பூதங்களாலான திரள் உடல்; மூன்றாவது ஒலி, மணம், வடிவம், சுவை மற்றும் தீண்டல் ஆகியவற்றுடன் மேற்கண்டவை சேர்த்து 7 ஆகிறது. பிறகு அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து; ஐம்பு மூச்சுகள்; மனம், புத்தி, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் சித்தம் ஆகிய இவை 19 ஆகிறது. பிறகு அவித்யை, காமம், கர்மம் வருகின்றன. இந்த 7 மற்றும் 19தோடு, ஆன்மா, அல்லது இவற்றைக் காண்பவனைச் சேர்த்தால் மொத்த தொகை 30 ஆகிறது. கனவு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்தத் தொகை இரட்டிப்பாகும். எனவே, வெள்ளை நிறம் கொண்ட ஜீவன்களின் பரகதி விழிப்புநிலை மற்றும் கனவு நிலை ஆகியவற்றைக் கடந்து (கனவற்ற உறக்கத்தில் மேற்கண்ட 30ம் செயலில்லாமல் நிற்கிறது) கனவற்ற உறக்கட நிலையையும் கடந்து துரியம் என்றழைக்கப்படும் நான்காவது நிலையாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறகு மனிதர்களின் உலகில் இருந்து திரும்பும் அவன், மேல் நோக்கிய அளவில் உயர்ந்து உயர்ந்து செல்லும் இருப்பின் புதிய வடிவங்களை அடைவதற்காக மறைந்து போகிறான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவன் ஏழு முறை ஏழு உலகங்களையும் கடந்து சென்று, சமாதியின் விளைவால் எப்போதும் பலம் பெருகி, அதிலிருந்து விழித்தெழுகிறான்.(49) இறுதி விடுதலையில் {முக்தியில்} விருப்பமுள்ள யோகி, அந்த ஏழையும் யோக அறிவால் அடக்கி, பற்றுகளில் இருந்து விடுபட்டு உலக வாழ்வில் தொடர்ந்து வசித்து, அந்த ஏழையும் கைவிட்ட பிறகு, அழிவற்ற முடிவிலா நிலையை அடைகிறான். சிலர் அதை மஹாதேவனுக்கு உரிய உலகம் என்றும்; சிலர் விஷ்ணுவுக்குரியது என்றும்; சிலர் பிரம்மனுக்குரியது என்றும்; சிலர் சேஷனுக்குரியதென்றும்; சிலர் நரனுக்கு உரியதென்றும்; சிலர் பிரகாசமான சித்-க்கு உரியதென்றும்; சிலர் முழுவதும் பரவியிருப்பவனுக்குரிய உலகமென்றும் சொல்கிறார்கள்[11].(50) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, திரள் உடல், நுட்பவுடல் மற்றும் காரண உடல்களை ஞானத்தின் மூலம் முற்றாக எரிப்பதில் வென்ற மனிதர்கள் பிரம்மத்திற்குள் நுழைகின்றனர். பிரம்மத்தோடு ஒவ்வாதவையும், செயல்களைத் தங்கள் சாரமாகக் கொண்டவையுமான அவர்களது புலன்கள் அனைத்தும் கூட அதனுள்ளேயே கலக்கின்றன.(51) அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, தேவ நிலையை அடைந்தவையும், அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீராதவையுமான ஜீவன்கள், அடுத்து வரும் கல்பத்தில் தங்கள் முற்பிறவியில் இருந்த நிலையை அடைகின்றன. அடுத்தடுத்த நேரும் கல்பம் தனக்கு முந்தைய கல்பத்தைப் போன்றே இருப்பதன் மூலம் இது நேர்கிறது.(52)
[11] "முக்தியை விரும்பும் யோகி கைவிடும் ஏழும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பூ, புவ, சுவ, மஹா, ஜன, தப மற்றும் சத்திய லோகங்களாக இருக்க வேண்டும், அல்லது அறிவுப்புலன்கள், மனம் மற்றும் புத்தி அடங்கிய ஏழாக இருக்க வேண்டும். முதலில் சொல்லப்படும் தேவஸ்யா Devasya என்பது மஹாதேவனைக் குறிக்கிறது. சைவர்கள் அதமை கைலாசம் என்று சொல்கிறார்கள். வைஷ்னவர்கள் அதை வைகுந்தம் என்று அழைக்கிறார்கள். ஹிரண்யகர்பர்கள் அதைப் பிரம்மலோகம் என்றழைக்கிறார்கள். சேஷன் நாராயணனின் ஒரு குறிப்பிட்ட வடிவமான அனந்தனாவான். நர லோகம் என்று அஃதை அழைப்பவர்கள் சாங்கியர்களாவர். அனுபநிஷதர்கள் அதைப் பரப்ரம்மலோகம் என்றழைக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அண்ட அழிவுக்கான நேரம் வரும்போது, அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ கூடிய செயல்களுடைய கனிகளின் எச்சம் தீர்ந்த ஜீவன்கள், சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்து, நூறு கல்பங்களானாலும் ஒருவன் செய்த செயல்களை ஞானமில்லாமல் அழிக்க முடியாது என்பதால், அடுத்தக் கல்பத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்கிறது. ஒரே தன்மையிலான சக்திகளையும், ஒரே வடிவங்களையும் கொண்ட மேன்மையான உயிரினங்கள் அனைத்தும், அண்ட அழிவுக்குப் பிறகு நேரும் புதிய படைப்பில் தங்கள் தங்களுக்குரிய விதிகளின்படியே மீண்டு, அழிந்தது போன்றே படைப்பின் போது இருந்த அதே வகையிலேயே உயரவும், தாழவும் செய்கின்றன.(53) மேலும், பிரம்மத்தை அறிந்த மனிதனைப் பொறுத்தவரையில், முந்தைய கல்பங்களில் செய்த செயல்களின் எச்சங்கள் தீராமல், அவன் அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்யும்வரை, அனைத்து உயிரினங்களும், களங்கமற்ற அறிவியல்கள் இரண்டும் அவனது உடலிலேயே வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவனது சித்தம் யோகத்தால் தூய்மையடையும்போதும், சம்யாமத்தை அவன் பயிலும்போதும், புலப்படத்தக்க இந்த அண்டமானது அவனுக்கு ஐவகைப் புலன்களாக மட்டுமே தெரிகிறது[12].(54) தூய்மையான மனத்துடன் விசாரிக்கும் ஜீவன் உயர்ந்த களங்கமற்ற கதியை அடைகிறது. அதன் பிறகு அஃது அழிவற்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து அடைவதற்கரிதான நித்திய பிரம்மத்தை அடைகிறது.(55) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, இவ்வாறே நான் நாராயணனின் மேன்மையைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன்" என்றார் {ஸனத்குமாரர்}.(56)
[12] "பிரம்மத்தை அறிந்தவனுக்கு, மொத்த அண்டமும் உள்ளங்கை நெல்லிக் கனியைப்போல முற்றிலும் பிரம்மத்திற்கு ஒப்பானதாகவே தெரியும். தியானம், தாரணை, சமாதி ஆகியவற்றைப் பயின்று யோகத்தின் மூலம் சித்தம் தூய்மையடைந்தும்போது, புலப்படத்தக்க அண்டமானது அவனுக்குத் தன் புலன்களாகவே தெரியும். இங்கே குறிப்பிடப்படும் இரண்டு வெள்ளை அறிவியல்கள், பிரம்மத்தோடு சேர்த்து அனைத்து அறிவும் உள்ளடங்கிய பராவித்யை மற்றும் அபரா வித்யையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விருத்திரன், "உமது இந்த வார்த்தைகளை முற்றிலும் உண்மையாகக் காண்கிறேன். உண்மையில், இஃது இவ்வாறு இருக்கும்போது, நான் கவலைப்பட (காரணம்) ஏதும் இல்லை. ஓ! பெரும் மனோ சக்திகளைக் கொண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, கவலை மற்றும் அனைத்து வகைப் பாவத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்.(57) ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! புனிதமானவரே, மிகப்பிரகாசமானவனும், முடிவிலியுமான விஷ்ணுவின் பெரும் சக்தி வாய்ந்த இந்தக் காலச்சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அந்த நித்தியமான இடத்தில் இருந்து அனைத்து வகைப் படைப்பும் எழுகிறது. அந்த விஷ்ணுவே பரமாத்மா ஆவான். அவனே அனைத்திலும் முதன்மையானவன் ஆவான். அவனிலேயே இந்த மொத்த அண்டமும் ஓய்ந்திருக்கிறது {நிலைத்திருக்கிறது}" என்றான் {விருத்திரன்}".(58)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! குந்தியின் மகனே, இந்த வார்த்தைகளைச் சொன்னதும், விருத்திரன் தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டு, தன் ஆன்மாவை (யோகத்தில் பரமாத்மாவுடன்) ஒன்றிணைத்து, அந்த உயர்ந்த இடத்தை அடைந்தான்" என்றார்.(59)
யுதிஷ்டிரன், "ஓ! பாட்டா, பழங்காலத்தில் விருத்திரனிடம் ஸனத்குமாரர் சொன்ன அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கத் தலைவன் இந்த ஜனார்த்தனனா (கிருஷ்ணனா) என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(60)
பீஷ்மர், "(பலம் முதலிய) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த தெய்வம் வேரில் இருக்கிறது {அனைத்திற்கும் வேராக இருக்கிறது}. அங்கிருந்தே பரமாத்மா இருப்பில் உள்ள பல்வேறு பொருட்களைத் தன் சக்தியின் மூலம் படைக்கிறான்.(61) அழிவில்லாதவனான இந்தக் கேசவன், அவனது எட்டாம் பகுதி ஆவான். உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இந்தக் கேசவனே (அவனது சக்தியில்) எட்டில் ஒரு பகுதியைக் கொண்டு மூவுலகங்களையும் படைப்பவனாவான்.(62) வேரில் கிடப்பவனுக்கு அடுத்து இருப்பவனும், (இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒப்பிடுகையில்) நித்தியமானவனுமான இந்தக் கேசவன், ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் மாற்றமடைகிறான். எனினும், உயர்ந்த வலிமை மற்றும் பலத்துடன் வேரில் கிடப்பவனோ, அண்டம் அழியும்போது (அனைத்துப் பொருட்களுடைய ஆற்றல்வித்தின் வடிவில்) நீரில் கிடக்கிறான். நித்தியமான உலகங்கள் அனைத்தின் ஊடாகச் செல்லும் தூய ஆன்மாவைப் படைப்பவன் இந்தக் கேசவனே ஆவான்.(63) முடிவற்றவனும், நித்தியமானவனுமான அவன், (தன்னில் உள்ள வெளிப்பாட்டுடன்) வெளியனைத்தையும் {ஆகாயமனைத்தையும்} நிறைத்து, (அண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவத்திலும்) அண்டத்தில் திரிகிறான். குணங்களை உடைமையாக்குவதைக் குறிப்பது போன்ற அனைத்து வகை வரம்புகளில் இருந்தும் விடுபட்ட அவன், அவித்யையால் பீடிக்கப்படுபவனாகவும், நனவுநிலையால் விழிப்பவனாகவும் தன்னை அமைத்துக் கொள்கிறான். பரமாத்மாவான கேசவனே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். இந்த அற்பத அண்டம் முழுமையும் அவனிலேயே நிறுவப்பட்டிருக்கிறது" என்றார் {பீஷ்மர்}.(64)
யுதிஷ்டிரன், "ஓ! ஞானத்தின் உயர்ந்த பொருளை அறிந்தவரே, விருத்திரன் தனக்காகக் காத்திருந்த சிறந்த கதியை முன்பே கண்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஓ! பாட்டா, அதன் காரணமாகவே அவன் (வரப் போகும் மரணத்தை எண்ணி) துயரப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.(65) ஓ! பாவமற்றவரே, {ஆன்மாவில்} வெள்ளை நிறம் கொண்டவனும், தூய்மையான, அல்லது களங்கமற்ற குலத்தில் பிறந்தவனும், சாத்யன் என்கிற நிலையை அடைந்தவனுமான ஒருவன், (மறுபிறவியின் மூலம் இந்த உலகத்திற்குத்) திரும்பி வருவதில்லை. ஓ! பாட்டா, அத்தகைய மனிதன், நரகம் மற்றும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்கும் நிலை ஆகிய இரண்டில் இருந்தும் விடுபடுகிறான்.(66) எனினும், ஓ! மன்னா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அடைந்தவர்களும் கூட, சில வேளைகளில் தமஸ் குணத்தில் மூழ்கி இடைநிலை உயிரினங்களின் வகையில் {விலங்குகளாகவும், பறவைகளாகவும்} வீழ்வதும் காணப்படுகிறது.(67) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளோம். துன்பம், அல்லது அலட்சியம், அல்லது இன்பம் ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களில் பற்றுக் கொண்டிருக்கிறோம். ஐயோ, நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன? அது நீலமா? அல்லது நிறங்கள் அனைத்திலும் இழிந்த கருப்பு நிறமா?" என்று கேட்டான்.(68)
பீஷ்மர் தொடர்ந்தார், "பாண்டவர்களே, நீங்கள் களங்கமற்ற குலத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் கடும் நோன்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களின் உலகில் இன்பத்தில் திளைத்திருந்து பிறகு நீங்கள் மீண்டும் மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பி வருவீர்கள்.(69) இந்தப் படைப்பு நீடிக்கும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்து, அடுத்தப் புதிய படைப்பில் நீங்கள் தேவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வகை இன்பநிலைகளையும் அனுபவித்து, இறுதியாகச் சித்தர்களாகக் கணக்கிடப்படுவீர்கள். ஒருபோதும் அச்சம் உனதாக வேண்டாம். உற்சாகமாக இருப்பாயாக" {என்றார் பீஷ்மர்}.(70)
சாந்திபர்வம் பகுதி – 280ல் உள்ள சுலோகங்கள் : 70
ஆங்கிலத்தில் | In English |