Vritra slained - Brahminicide! | Shanti-Parva-Section-282 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 109)
பதிவின் சுருக்கம் : சிவனின் சக்தியில் பிறந்த நோயால் விருத்திரனின் உடலில் தோன்றிய அறிகுறிகள்; விருத்திரனைக் கொன்றதும் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி; அக்னி முதலிய நால்வருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவம் பிரித்துக் கொடுக்கப்பட்டது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட விருத்திரனின் உடலில் தோன்றிய அடையாளங்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) வீரனான அந்த அசுரனின் வாய் நெருப்புத் தழல்களை வெளியிடத் தொடங்கியது. அவனது நிறம் மிகவும் குன்றியது. அவன் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கியது. அவனது மூச்சு கனமாகவும், அடர்த்தியாகவும் ஆனது.(2) அவனது முடி சிலிரிப்படைந்தது. ஓ! பாரதா, அவனது நினைவு, கடுமையான, பயங்கரமான, மங்கலமற்ற ஓநாயுடைய ஊளையின் வடிவில் அவனது வாயில் இருந்து வெளிப்பட்டது. சுடர்மிக்க எரி கோள்கள் அவனது வலப்புறத்திலும், இடப்புறத்திலும் விழுந்தன.(3) கழுகுகள், கங்கங்கள், நாரைகள் ஆகியன ஒன்றாகத் திரண்டு கடுமையாக அலறியபடியே விருத்திரனின் தலைக்கு மேல் வட்டமிட்டன.(4) பிறகு அம்மோதலில், தேவர்களால் துதிக்கப்பட்டவனும், வஜ்ரம் தரித்தவனுமான இந்திரன், தேரில் அமர்ந்திருந்த அந்தத் தைத்தியனைக் கடுமையுடன் பார்த்தான்.(5)
கடும் நோயால் பீடிக்கப்பட்ட அந்த அசுரன், ஓ! ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ! குரு குலத்தவனே, சரியாக அப்போது, பிராமணக் கொலை என்ற பாவமானது {பிரம்மஹத்தியானது}, கடுமையான, பயங்கரமான வடிவில் (உடல் படைத்த வடிவில்) அனைத்து உலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி, கொல்லப்பட்ட விருத்திரனின் உடலில் இருந்து வெளிப்பட்டாள்.(10)
ஓ! அற ஆன்மாவே {யுதிஷ்டிரனே}, பயங்கரப் பற்களும், கோரமான முகமும், கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், கலைந்த முடியுடன், பயங்கரக் கண்களுடன் இருந்த அவள் {பிரம்மஹத்தி}, தன் கழுத்தில் கபால மாலையுடன் (உடல் கொண்டு வந்த அதர்வன) மந்திரத்தைப் போல, முழுவதும் குருதியால் மறைக்கப்பட்டு, மரவுரி உடுத்திக் கொண்டு விருத்திரனின் உடலில் இருந்து வெளியே வந்தாள். ஓ !ஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, வஜ்ரதாரியை {இந்திரனைப்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓ! குரு குலத்தவனே, சிறிது நேரங்கழித்ததும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மூவுலகங்களின் நன்மைக்குத் தொடர்புடைய ஏதோவொரு காரணத்திற்காகச் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.(14) பெரும் சக்தியுடன் கூடிய இந்திரன் தன் காரியத்திற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, தேவர்களின் தலைவனைப் பற்றிக் கொண்டு, அந்தக் கணமுதல் அவனைப் பீடித்தாள்.(15)
பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} தன் மேனியை இவ்வாறு பீடித்ததும், அச்சமடைந்த இந்திரன், தாமரைத் தண்டின் இழைகளில் புகுந்து பல நீண்ட வருடங்களாக அங்கேயே வசித்தான்.(16) ஆனால் அந்தப் பிராமணக் கொலை என்ற பாவம் {பிரம்மஹத்தி} அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, சக்ரன் {இந்திரன்}, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட பிரம்மன், (தன்னை வேண்டுபவனை விடுவிக்கும் வழிமுறைகளைக் குறித்து) சிந்திக்கத் தொடங்கினான்.(20)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இறுதியாகப் பெரும்பாட்டன் {பிரம்மன்} அந்தப் பிரம்மஹத்தியிடம் இனிய குரலில் அவளைத் தணிப்பதற்காக,(21) "ஓ! இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன?" என்று கேட்டான்.
அப்போது பிரம்மஹத்தி {பிரம்மனிடம்}, "மூவுலகங்களின் படைப்பாளனும், அண்டத்தால் துதிக்கப்படுபவனுமான சிறந்த தேவனே என்னிடம் நிறைவுடன் இருக்கும்போது, என் விருப்பங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நான் கருதுகிறேன். என் வசிப்பிடம் இப்போது உறுதி செய்யப்படட்டும்.(23) உலகங்களைப் பராமரிக்க வேண்டிய இந்த விதி உம்மால் அமைக்கப்பட்டது. ஓ! தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ! உலகங்கள் அனைத்தின் பலமிக்கக் குருவே, நீர் என்னிடம் நிறைவுடனிருப்பதால் நான் நிச்சயம் சக்ரனை விட்டகல்வேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வசிப்பிடத்தை எனக்கு அருள்வீராக" என்று கேட்டாள் {பிரம்மஹத்தி}".(25)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெரும்பாட்டன் {பிரம்மன் பிரம்மஹத்தியிடம்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று பிரம்மஹத்தியிடம் சொன்னான். உண்மையில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, இந்திரனின் மேனியில் இருந்து பிரம்மஹத்தியை அகற்றும் வழிமுறைகளைக் கண்டடைந்துவிட்டான்.(26) அந்தச் சுயம்பு உயர் ஆன்ம அக்னியை நினைத்தான். பின்னவன் {அக்னி தேவன்} உடனடியாகப் பிரம்மனின் முன்பு தோன்றி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) "ஓ! சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ! எந்தக் குறையும் இல்லாதவரே, நான் உம் முன்பு தோன்றியிருக்கிறேன். நான் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(28)
பிரம்மன் {அக்னிதேவனிடம்}, "நான் இந்தப் பிராமணக் கொலை என்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} பல பகுதிகளைப் பிரிக்கப் போகிறேன். அவளிடம் இருந்து சக்ரனை {இந்திரனைக்} காப்பதற்காக, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை நீ ஏற்பாயாக" என்று கேட்டான்.(29)
அக்னி {பிரம்மனிடம்}, "ஓ! பிரம்மாவே, நான் எவ்வாறு அவளிடம் இருந்து மீட்கப்படுவேன்? ஓ! பலமிக்கத் தலைவா, அதற்கு ஒரு வழியைச் சொல்வீராக. ஓ! அனைத்து உலகங்களாலும் புகழப்படுபவரே, (நான் காக்கப்படும்) வழிமுறைகளை விவரமாக அறிய நான் விரும்புகிறேன்" என்றான்.(30)
பிரம்மன் நெருப்பிடம், "தமஸ் குணத்தில் மூழ்கிய எந்த மனிதன், உன்னைச் சுடர்மிக்க வடிவில் கண்டும், தானியங்களையும், மூலிகைகளையும், சாறுகளைக் காணிக்கையாக்கி, ஹவிஸை உனக்கு அளிக்காமல் தவிர்க்கிறானோ,(21) அந்த மனிதனுக்குள், நீ கொண்ட பிரம்மஹத்தியின் {முதல்} பகுதி உடனடியாக நுழைந்து, அதுமுதல் அவனிலேயே வசித்திருக்கும். ஓ! ஹவிஸை சுமப்பவனே, உன் இதய நோய் அகலட்டும்" என்றான்"[1].(32)
[1] கும்பகோணம் பதிப்பில், "அக்னியே, தமோ குணத்தினால் சூழப்பட்ட எந்த மனிதன் ஜ்வலிக்கின்ற உன்னை அவனாகவே அடைந்து ஓரிடத்திலும் தானியம் ஸமித்துகள் ஸோமரஸம் இவைகளால் யாகஞ்செய்யவில்லையோ அவனை உடனே இந்தப்ரம்மஹத்தி அடையும். அவனிடத்திலேயே வசிக்கவும் போகிறது" என்றிருக்கிறது.
பீஷமர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், ஹவிசையும், வேள்விக்காணிக்கைகளையும் உண்பவனுமான அவன் {அக்னி} அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஓ! மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) "ஓ! பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ! தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ! மூவுலகங்களின் தலைவா, பிராமணக் கொலை என்ற பாவத்தின் (இந்தப் பிரம்மஹத்தியிலன் ஒரு பகுதியை) உமது உத்தரவின் பேரில் ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எனினும், நாங்கள் எவ்வாறு மீட்கப்படுவோம் என்பதை எங்களுக்குச் சுட்டிக்காட்டுவீராக" என்றன.(38)
பிரம்மன் மரங்களிடம், "நீங்கள் ஏற்கும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் இரண்டாம் பகுதி}, தீர்மான மயக்கத்தால், உங்களைப் பருவ காலங்களில் வெட்டும் மனிதனைப் பீடிக்கப் போகிறது" என்றான்.(39)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு உயர் ஆன்ம பிரம்மனால் சொல்லப்பட்டதும், மரங்களும், செடிகளும், புற்களும் அந்தப் படைப்பாளனைப் புகழ்ந்துவிட்டு, அங்கே மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டன.(40) பிறகு, ஓ! பாரதா, அனைத்து உலகங்களின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அப்சரஸ்களை அழைத்து, அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் வகையில் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்:(41) "பெண்களில் முதன்மையான இந்தப் பிரம்மஹத்தி, இந்திரனின் உடலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். என்னால் வேண்டப்படும் நீங்கள், (தேவர்களின் தலைவனைக் காப்பதற்காக) இவளது நான்கில் ஒரு பகுதியை உங்கள் மேனியில் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.(42)
அதற்கு அந்த அப்சரஸ்கள் {பிரம்மனிடம்}, "ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ! பெரும்பாட்டா, (நாங்கள் உம்மிடம் செய்து கொள்ளும்) இந்தப் புரிந்துணர்வால் (விளையும் விளைவுகளில் இருந்து) நாங்கள் விடுபடும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திக்க வேண்டும்" என்றனர்.(43)
பிரம்மன் பெண்களிடம், "உங்கள் இதயங்களின் நோய் அகலட்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் மூன்றாம் பகுதி}, பெண்கள் மாதவிடாயில் இருக்கும்போது அவர்களுடன் கலவியை நாடும் மனிதனை உடனே பீடித்து, உங்களிடம் இருந்து அகன்றுவிடும்" என்றான்".(44)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்சரஸ்களும், உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு, தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று இன்பமாக விளையாடத் தொடங்கினர்.(45)
பிறகு, பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான, மூவுலகங்களின் சிறப்புமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, நீர்நிலைகளை நினைத்தவுடன் அவை உடனே அவனிடம் வந்தன.(46) அளவிலா சக்தியைக் கொண்ட பிரம்மனின் முன்னிலைக்கு வந்த அந்த நீர்நிலைகள், அவனை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னன:(47) "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ! அனைத்துலகங்களின் பலமிக்கக் குருவே, நாங்கள் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டன.(48)
பிரம்மன் {நீர்நிலைகளிடம்} , "விருத்திரனைக் கொன்றதன் விளைவால் இந்தக் கொடிய பாவம் இந்திரனைப் பீடித்திருக்கிறது. பிரம்மஹத்தியின் நான்கில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வீராக" என்றான்.(49)
நீர்நிலைகள் {பிரம்மனிடம்}, "ஓ! உலகங்கள் அனைத்தின் குருவே, நீர் அணையிட்டவாறே ஆகட்டும். எனினும், ஓ! எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்?" என்று கேட்டன.(51)
பிரம்மன் நீர்நிலைகளிடம், "புத்தி மயக்கம் கொண்ட எந்த மனிதன், உங்களை இழிவாகக் கருதி, சளி, சிறுநீர் மற்றும் மலத்தை உங்களில் விடுவானோ,(52) அவனை இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் நான்காம் பகுதி} உடனடியாகப் பீடித்து, அதுமுதல் அவனிலேயே வசித்துவரும். உண்மையில், இவ்வழியிலேயே நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான்".(53)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அப்போது பிராமணக் கொலை என்ற அந்தப் பாவம் {பிரம்மஹத்தி}, தேவர்களின் தலைவனை விட்டு அகன்று, தனக்காகப் பெரும்பாட்டனின் ஆணையால் விதிக்கப்பட்ட வசிப்பிடங்களுக்குச் சென்றாள்.(54)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, இவ்வாறே இந்திரன் அந்தப் பயங்கரப் பாவத்தால் பீடிக்கப்பட்டான், (இவ்வாறே அவளிடம் இருந்து விடுதலையும் பெற்றான்). பிறகு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அனுமதியுடன் இந்திரன் ஒரு குதிரை வேள்வியைச் செய்யத் தீர்மானித்தான்.(55) ஓ! ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ! பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ! பிருதையின் மகனே, விருத்திரனின் குருதியில் இருந்து உயர்ந்த மகுடங்களைக் கொண்ட சேவல்கள் பிறந்தன. இந்தக் காரணத்தினாலேயே அந்த வளர்ப்புப் பறவைகள் {சேவல்கள்} மறுபிறப்பாள வகையினரும், தொடக்கச் சடங்கை மேற்கொண்ட தவசிகளுகும் (உணவாகக்) கொள்ளத் தூய்மையற்றதானது[2].(58)
[2] கும்பகோணம் பதிப்பில், "குந்தீநந்தன, விருத்ராஸுரனுடைய ரத்தத்தினாலேயே குமிழிகளுண்டாயின. ஆகையால், ஜலக்குமிழிகள் இருபிறப்போர்களாலும் (விசேஷமாக) தீக்ஷிதர்களாலும் தவத்தையே, செல்வமாகவுடைய முனிவர்களாலும் அருந்தத்தக்கவைகளல்ல" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் "விருத்திரனின் குருதியில் இருந்து குர்வுந்தங்கள் பிறந்தன" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், அஃது ஏதோவொரு சேவல்வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமெனப் பிபேக்திப்ராய் குறிப்பிடுகிறார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, இருபிறப்பாளர்களே {பிராமணர்களே} பூமியில் தேவர்களாக அறியப்படுவதால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஏற்புடையதையே செய்வாயாக.(59) ஓ! குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் வெல்லப்படஇயலாதவனான நீயும் கூட மற்றொரு இந்திரனாகி உன் எதிரிகள் அனைவரையும் கொல்பவனாகலாம்.(61) ஒவ்வொரு பர்வ நாளிலும், விருத்திரனின் இந்தப் புனிதக் கதையைப் பிராமணர்களுக்கு மத்தியில் சொல்வோர், எந்தப் பாவத்தினாலும் ஒருபோதும் களங்கப்படமாட்டார்கள்.(62) விருத்திரன் தொடர்புடைய இந்திரனின் மிகப் பெரிய, அற்புதம் நிறைந்த சாதனையை நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்" என்று கேட்டார் {பீஷ்மர்}.(63)
சாந்திபர்வம் பகுதி – 282ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |