Beneficials and excellence for non self-restraints! | Shanti-Parva-Section-288 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 115)
பதிவின் சுருக்கம் : ஆன்ம ஞானத்தைத் தேடாத மனிதர்கள் எவ்வழியில் மேன்மையடையலாம், நன்மையும், சிறப்பும் அடையலாம் என்பது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, சாத்திரங்களின் உண்மைகளை அறியாதவனும், எப்போதும் ஐயத்தில் இருப்பவனும், தற்கட்டுப்பாட்டையும், ஆன்ம ஞானத்தை நோக்கமாகக் கொண்ட பிற பயிற்சிகளையும் தவிர்ப்பவனுமான ஒருவனுக்கு எது நன்மை என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஆசானை வழிபடுதல், முதியோரிடம் மதிப்புடன் காத்திருத்தல் {அவர்களுக்குப் பணிவிடை செய்தல்}, (தகுந்த பிராமணர்களால் சொல்லப்படும்) சாத்திரங்களைக் கேட்டல் ஆகியவையே (நீ சொன்னதைப் போன்ற ஒருவனுக்கு) உயர்ந்த நன்மையை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.(2) இது தொடர்பாகக் காலவருக்கும் தெய்வீக முனிவரான நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(3)
ஒரு காலத்தில், தனக்கான நன்மையை அடைவதில் விருப்பம் கொண்ட காலவர், பிழை மற்றும் களைப்பில் {குற்றங்குறைகளில்} இருந்து விடுபட்டவரும், சாத்திரங்களில் கல்விமானும், அறிவில் நிறைவுடையவரும், தன் புலன்களை முற்றாக ஆள்பவரும், யோகத்தில் அர்ப்பணிப்புள்ள ஆன்மாவுடன் கூடியவருமான நாரதரிடம்,(4) "ஓ! முனிவரே, இவ்வுலகத்தில் ஒரு மனிதன் மதிக்கப்படுவதற்குத் தகுந்த ஒழுங்கங்கள் அனைத்தும் உம்மில் நிரந்தரமாக வசிக்கின்றன.(5) பிழையில் {குற்றத்தில்} இருந்து விடுபட்டவரான உமக்கு, பிழைக்கு ஆட்படுபவர்களும், உலகின் உண்மைகளை அறியாதவர்களுமான எங்களைப் போன்ற மனிதர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் ஐயங்களை அகற்றுவதே தகும்.(6) சாத்திரத் தீர்மானங்கள் செயல்களைச் செய்யத் தூண்டும் அதே வேளையில் ஞானம் (அடைவதற்கான) தூண்டலையும் உண்டாக்குகின்றன என்பதால் எங்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. இக்காரியம் குறித்து எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்[1].(7) ஓ சிறப்புமிக்கவரே, வெவ்வேறு ஆசிரமங்கள் {வாழ்வுமுறைகள்} வெவ்வேறு ஒழுக்க நடைமுறைகளை அங்கீகரிக்கின்றன. "இது நன்மையானது, இந்த மற்றொன்று நன்மையானது" என்ற வகையிலேயே சாத்திரங்கள் எப்போதும் நம்மைத் தூண்டுகின்றன.(8)
[1] "சாத்திரங்கள் இரு வகைப் போதனைகளையும் கொண்டிருக்கின்றன. செயல்கள் அல்லது நோன்புகளுக்கு முற்றிலும் சாதகமான அறிவிப்புகள் இருக்கின்றன. அதே போல ஞானத்திற்குச் சாதகமான அறிவிப்புகளும் இருக்கின்றன. காலவர், தான் ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டுமோ, செயல்களைச் செய்ய வேண்டுமா என்று நாரதரிடம் கேட்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாத்திரங்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, தங்களுக்காக அந்தச் சாத்திரங்கள் விதித்திருப்பதை முழுமையாக அங்கீகரித்து, அதன்படியே பல்வேறு பாதைகளில் பயணித்து அந்த நான்கு ஆசிரமங்களைப் பின்பற்றுவோரைக் கண்டும், எங்கள் சாத்திரங்களில் நிறைவோடு இருக்கும் எங்களைப் பார்த்தும் உண்மையில் எது நன்மையானது என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் தவறுகிறோம்.(9) சாத்திரங்கள் அனைத்தும் சமச்சீரானவை என்றால், எது உண்மையில் நன்மையானது என்பது வெளிப்பட்டிருக்குமே. எனினும், பல்வேறு வகைப்பட்ட சாத்திரங்களின் விளைவால் உண்மையான நன்மை எது என்பது புதிராகிப் போகிறது.(10) இந்தக் காரணங்களால் எது உண்மையில் நன்மையானது என்பது எனக்குக் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, ஓ! சிறப்புமிக்கவரே, இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக. (இதற்காகவே) நான் உம்மை அணுகினேன். ஓ!, எனக்குப் போதிப்பீராக" என்றார் {காலவர்}.(11)
நாரதர் {காலவரிடம்}, "ஓ! குழந்தாய், ஆசிரமங்கள் எண்ணிக்கையில் நான்காகும். அவை அனைத்தும், தாங்கள் வடிவமைக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், தங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும் கடமைகளுக்காகவும் தொண்டாற்றுகின்றன. ஓ! காலவா, நல்ல திறன் கொண்ட ஆசானிடம் அவற்றை முதலில் உறுதிசெய்து கொண்டு, பிறகு அவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்[2].(12) ஆசிரமங்களின் தகுதிகள் {புண்ணியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய வடிவில் வெவ்வேறானவையும், பொருளில் வேறுபட்டவையும், தாங்கள் தழுவும் நோன்புகளில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையுமாகும்[3].(13) அகன்ற நோக்கில் கண்டால், ஆசிரமங்கள் அனைத்தும், (ஆன்ம அறிவு என்ற) தங்கள் உண்மை நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்த மறுக்கின்றன. எனினும், நுட்பமான பார்வையைக் கொண்டவர்கள் தங்கள் உயர்ந்த கதியை அதில் காண்கிறார்கள்.(14) எது உண்மையில் நன்மையானதோ, எதில் நண்பர்களுக்கான நன்மைகள், எதிரிகளை ஒடுக்குதல்,(15) (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்றையும் அடைவதில் ஐயமேற்படவில்லையோ, அதுவே உயர்ந்த சிறப்பு {நன்மை} என்று ஞானிகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாவச் செயல்களைத் தவிர்ப்பது, தொடர்ந்த அற மனோநிலை, நல்லோர் மற்றும் பக்திமான்களிடம் நன்னடத்தை ஆகிய இவையே மிகச் சிறந்தவையாகும்.(16)
[2] "ஆசிரமம் என்ற இந்தச் சொல் எந்தப் பொருளைக் கொண்டுள்ளது என்பதில் ஐயமேற்படுவதால் "ஆசிரமம்: என்ற அதே வார்த்தையை அப்படியே ஆங்கிலத்திலும் தக்க வைத்திருக்கிறேன். நான்கு ஆசிரமங்கள் என்பது ஒருகாலத்தில் இந்தியாவில் பரவலாக இருந்த இனங்களின் நான்கு அடிப்படை வடிவங்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார். முதலில் அறம் என்ற ஏதும் கிடையாது என்ற வடிவம். இது சாக்கிய சிங்க அல்லது புத்தரைக் குறிக்கிறது. இரண்டாவது மரம் முதலிய வழிபாடுகளில் மட்டுமே அறம் இருக்கிறது. மூன்றாவது வேதங்களில் விதிக்கப்பட்டது மட்டுமே அறம். நான்காவது அறம் மற்றும் மறத்தைக் கடந்த நிலையை அடைய முனைய வேண்டும். இவையே அந்த நான்கு ஆசிரமங்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "ஆசிரமங்கள் நான்கு. அவை ஒவ்வொன்றின் தகுதிகளும் அவற்றுக்குரிய நிறுவனர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் சொல்லும் முக்கியத் தகுதியானது அது தன்னறிவு அல்லது சுயஞானத்துக்கு / ஆன்ம அறிவுக்கு வழிவகுக்கிறது என்பதாகும்." எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உயிரினங்கள் அனைத்திடமும் மென்மை, நடத்தையில் உண்மை, இனிய சொற்களைப் பயன்படுத்துதல் ஆகிய இவையே சிறப்பானவை {நன்மையானவை} என்பதில் ஐயமில்லை.(17) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோரிடம் சமமான பகிர்தலையும், பணியாட்களிடம் பற்றையும் ஒருவன் கொண்டால் அவையே மிகச் சிறந்தவையாகும்.(18) பேச்சில் வாய்மை சிறந்தது. எனினும், உண்மை குறித்த அறிவை அடைவது மிகக் கடினமானதாகும். வாய்மையே உயிரினங்களுக்கு மிக நன்மையானது என நான் சொல்வேன்.(19) செருக்கைத் துறத்தல், கவனமின்மையைக் களைதல், மனோநிறைவு, தற்சார்புடன் வாழ்தல் ஆகியவையே உயர்வான சிறப்புகளாக {நன்மைகளாகச்} சொல்லப்படுகின்றன.(20)
நன்கறியப்பட்ட விதிகளின் படி வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களைக் குறித்த கல்வி, ஞானம் அடைவதற்காகச் செய்யப்படும் ஆனைத்து வகை ஆய்வுகள், மற்றும் தேடல்கள் ஆகியவை சிறப்பானவை என்பதில் ஐயமில்லை.(21) எது சிறப்பானதோ, அஃதை அடைய விரும்பும் ஒருவன், ஒலி, வடிவம், சுவை, தீண்டல் மணம் ஆகியவற்றை அதிகமாகவும், தங்களுக்காக மட்டுமே என்ற வகையிலும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது.(22) சிறப்படைய விரும்பும் ஒருவனால், இரவில் உலவுதல், பகலில் உறங்குதல், சோம்பலில் ஈடுபடுதல், அயோக்கியத்தனம், ஆணவம், புலன் நுகர் பொருட்களில் அதிகமாக ஈடுபடுதல், அவற்றை முற்றிலும் தவிர்த்தல் என்ற இவை அனைத்தும் துறக்கப்பட வேண்டும்.(23) பிறரை இகழ்வதன் மூலம் ஒருவன் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ள முனையக்கூடாது. உண்மையில், அவன் தன் தகுதிகளால் மட்டுமே புகழ்பெற்றவர்களில் இருந்து தனித்தன்மையை {விசேஷ மேன்மையை} நாட வேண்டுமேயன்றி, ஒருபோதும் தாழ்ந்தவர்களிடம் அதைச் செய்யக்கூடாது.(24) உண்மையில் தகுதியற்ற {புண்ணியமற்ற} மனிதர்கள், தன்னையே வியந்து பாராட்டிக் கொள்ளும் உணர்வால் நிறைந்து, தங்கள் சிறப்புகள் மற்றும் செல்வாக்கை உறுதி செய்வதன் மூலம் உண்மையான தகுதியுள்ள மனிதர்களை {புண்ணியவான்களை} இகழ்கிறார்கள்.(25)
தன் முக்கியத்துவம் என்ற உணர்வில் பெருகும் இம்மனிதர்கள், (சரியான உணர்வுக்கு மீளும் வகையில்) தங்களோடு எவரும் தலையிடாதபோது, அவர்கள் உண்மையில் தனிச் சிறப்புடைய மனிதர்களைவிடத் தங்களை மேன்மையானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.(26) உண்மை ஞானமும், உண்மையான தகுதிகளையும் கொண்ட ஒருவன், பிறரைக் குறித்து இழிவாகப் பேசுதல் மற்றும் தற்புகழ்ச்சி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் புகழை அடைகிறான்.(27) மலர்கள் தங்கள் சிறப்பை ஊதி முழக்காமல், தூய்மையும், இனிமையும் நிறைந்த தங்கள் நறுமணத்தை வீசுகின்றன. பிரகாசமான சூரியனும், முற்றான அமைதிநிலையில் ஆகாயத்தில் தன் காந்தியைப் பொழிகிறான்.(28) அவ்வகையிலேயே, தங்கள் நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற பிற குற்றங்களைக் களைந்து, தற்சிறப்புகளைப் புகழ்ந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களே இவ்வுலகில் புகழுடன் சுடர்விடுகிறார்கள்.(29) தன் புகழையே ஊதிக்கொள்ளும் மூடனால் ஒருபோதும் இவ்வுலகில் ஒளிர முடியாது. எனினும், உண்மைத் தகுதியும், கல்வியும் கொண்ட மனிதன், குழிக்குள்ளேயே மறைந்திருந்தாலும் புகழை அடைவான்.(30)
தன் முக்கியத்துவம் என்ற உணர்வில் பெருகும் இம்மனிதர்கள், (சரியான உணர்வுக்கு மீளும் வகையில்) தங்களோடு எவரும் தலையிடாதபோது, அவர்கள் உண்மையில் தனிச் சிறப்புடைய மனிதர்களைவிடத் தங்களை மேன்மையானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.(26) உண்மை ஞானமும், உண்மையான தகுதிகளையும் கொண்ட ஒருவன், பிறரைக் குறித்து இழிவாகப் பேசுதல் மற்றும் தற்புகழ்ச்சி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் புகழை அடைகிறான்.(27) மலர்கள் தங்கள் சிறப்பை ஊதி முழக்காமல், தூய்மையும், இனிமையும் நிறைந்த தங்கள் நறுமணத்தை வீசுகின்றன. பிரகாசமான சூரியனும், முற்றான அமைதிநிலையில் ஆகாயத்தில் தன் காந்தியைப் பொழிகிறான்.(28) அவ்வகையிலேயே, தங்கள் நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற பிற குற்றங்களைக் களைந்து, தற்சிறப்புகளைப் புகழ்ந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களே இவ்வுலகில் புகழுடன் சுடர்விடுகிறார்கள்.(29) தன் புகழையே ஊதிக்கொள்ளும் மூடனால் ஒருபோதும் இவ்வுலகில் ஒளிர முடியாது. எனினும், உண்மைத் தகுதியும், கல்வியும் கொண்ட மனிதன், குழிக்குள்ளேயே மறைந்திருந்தாலும் புகழை அடைவான்.(30)
எவ்வகைக் குரல்வளத்தோடு தீய வார்த்தைகள் சொல்லப்பட்டாலும், அஃது உடனே மறைந்துவிடும். நல்ல வார்த்தைகள் எவ்வளவு மென்மையாகச் சொல்லப்பட்டாலும் இவ்வுலகில் சுடர்விடும்.(31) சூரியன் தனது நெருப்பு வடிவத்தை (சூரியகாந்தம் என்றழைக்கப்படும் ரத்தினத்தில்) வெளிக்காட்டுவதைப் போலவே, பகட்டு நிறைந்த மூடர்களால் சொல்லப்படுபவையும் சிற்றறிவைக் கொண்டவையுமான வார்த்தைகள், அவர்களுடைய இதயங்களை (அவற்றின் அற்பத்தனைத்தை) மட்டுமே வெளிப்படுத்தும்.(32) இந்தக் காரணங்களால் மனிதர்கள் பல்வேறு ஞானங்களை அடைய முனைகிறார்கள். ஞானம் தொடர்பாக அடையப்படும் அனைத்தும் மதிப்புமிக்கவையாகவே எனக்குத் தோன்றுகின்றன.(33) ஒருவன் தன்னை எவரும் கேட்காதவரை பேசக்கூடாது; முறையற்ற வகையில் கேட்கப்படும்போதும் பேசக்கூடாது. அவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் கொண்டிருந்தாலும் (பேசுமாறு தன்னை எவரும் கேட்டுக் கொள்ளும் வரை, உரிய முறையில் கேட்கப்படும் வரை) அவன் மூடனைப் போலவே அமர்ந்திருக்க வேண்டும்.(34) அறம், ஈகையில் அர்ப்பணிப்புள்ள நேர்மையாளர்கள் மற்றும் தங்களுக்குரிய வகையின் {வர்ணக்} கடமைகளைச் செய்பவர்கள் ஆகியோருக்கு மத்தியிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(35)
சிறப்பை அடைய விரும்பும் ஒருவன், பல வகையினரின் கடமைகளில் குழப்பங்கள் நேரும் {மக்கள் தங்களுக்குத் தகாத காரியங்களைச் செய்யும்} இடங்களில் ஒருபோதும் வசிக்கக்கூடாது.(36) (வாழ்வாதார வழிமுறைகளை ஈட்டும்) பணிகள் அனைத்தையும் தவிர்த்து, முயற்சியில்லாமல் கிடைத்தவற்றில் நிறைவுடன் வாழும் மனிதனும் இங்கே காணப்படுகிறான். அறவோருக்கு மத்தியில் வாழ்வதன் மூலமே ஒருவன் தூய அறத்தை அடைவதில் வெல்கிறான். அதே வகையில், பாவிகளுக்கு மத்தியில் வாழும் ஒருவன் பாவத்தால் களங்கப்படுகிறான்.(37) நீர், நெருப்பு, நிலவின் கதிர் ஆகியவை தீண்டிய உடனேயே குளிர் அல்லது வெப்பத்தை உணர்த்துவதைப் போலவே, அறம் மற்றும் மறத்தின் சுவடுகளே இன்பதுன்பங்களை உண்டாக்குகின்றன.(38) விகாசத்தை {வேள்வியில் எஞ்சியவற்றை} உண்பவர்கள், தங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் சுவையைக் கவனிக்காமலேயே உண்கிறார்கள். எனினும், தங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சுவையை வேறுபடுத்திப் பார்த்துக் கவனமாக உண்பவர்கள், இன்னும் செயல்பாட்டு பந்தங்களின் மூலம் கட்டப்பற்றவர்களாகவே அறியப்பட வேண்டும்.(39) எங்கே ஒரு பிராமணர், அறிவின் அடிப்படையில் ஆன்மா குறித்த அறிவை அடைய விரும்பும் சீடர்களிடம் கடமைகளைக் குறித்து உரையாடினாலும், அத்தகைய அறிவை அவர்கள் {சீடர்கள்} மதிக்கவில்லையோ அந்த இடத்தில் இருந்து அறவோன் அகல வேண்டும்[4].(40)
[4] கும்பகோணம் பதிப்பில், "எந்தத் தேசத்தில் சொன்னபடி நடவாதவர்களும், மரியாதையின்றிக் கேட்கிறவர்களுமாயிருக்கிறவர்களுக்குப் பிரம்மதத்வத்தை ஒருவன் சொல்வானோ அந்தத் தேசத்தை நல்ல சித்தமுள்ளவன் தள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
எனினும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றுக்கு முழு இணக்கமாகச் சீடர்கள் மற்றும் ஆசான்களுக்கு இடையிலான நடத்தை இருக்கும் எந்த இடத்தையும்விட்டு யார்தான் விலகிச்செல்வார்?(41) எந்த இடத்தில் கல்விமான்களின்மேல் அடிப்படையற்ற களங்கத்தை மக்கள் சொல்வார்களோ, அந்த இடத்தில் தன் மதிப்பை {சுயகௌரவத்தை} விரும்பும் எந்தக் கல்விமான்தான் இருப்பான்?(42) எங்கே பேராசைமிக்க மனிதர்கள் அறத்தின் எல்லைகளை {அறம் நிலைப்பதற்குரிய தடைகளைத்} தகர்ப்பார்களோ, அந்த இடத்தைவிட்டு ஆடையில் நெருப்பு பற்றியதைப் போல எவன்தான் விலகாமல் இருப்பான்?(43) எங்கே பணிவுடனும், அச்சமில்லாமலும் அறக்கடமைகளைப் பயிலும் மனிதர்கள் இருப்பார்களோ, அந்த இடத்தில் அறமனம் கொண்ட நல்லோருக்கு மத்தியிலேயே ஒருவன் நீடித்து வசிக்க வேண்டும்.(44) எங்கே மனிதர்கள் செல்வத்தை ஈட்டுவதற்காகவும், தற்காலிகமானப் பயன்கள் பிறவற்றிற்காகவும் அறக்கடமைகளைப் பயில்வார்களோ அந்த இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாவிகளாகக் கருதப்படுவதால் அங்கே அவன் வசிக்கக்கூடாது. (45)
எங்கே மனிதர்கள் வாழ்வாதாரத்தை அடைய விரும்பி பாவச்செயல்களில் ஈடுபடுவார்களோ, அங்கேயிருந்து அறையில் பாம்பைக் கண்ட ஒருவனைப் போல அவன் மிக வேகமாகத் தப்பிச் செல்ல வேண்டும்.(46) நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், எந்தச் செயலின் விளைவால் முள் படுக்கையில் கிடப்பதைப் போல உணர்வானோ, முற்பிறவிகளின் செயல்களில் பிறந்த ஆசையால் பீடிக்கப்படுவானோ, அந்தச் செயலைத் தொடக்கத்தில் இருந்தே துறக்க வேண்டும்.(47) எந்த நாட்டில் மன்னனும், மன்னனின் அலுவலர்களும் சம அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்களோ, எங்கே (விருந்திற்கு வந்த) உறவினர்களுக்கு உணவூட்டும் முன்பே உண்ணும் வழக்கம் கொண்டோர் இருக்கிறார்களோ, அந்த நாட்டை விட்டு அறவோன் விலக வேண்டும்.(48) சாத்திர அறிவைக் கொண்ட பிராமணர்களுக்கு முதலில் எங்கே உணவூட்டப்படுகிறதோ; எங்கே அவர்கள் அறக்கடமைகளை முறையாகச் செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ, எங்கே அவர்கள் சீடர்களுக்குப் போதித்து, பிறரின் வேள்விகளில் துணை புரிகிறார்களோ அந்த நாட்டிலேயே ஒருவன் வசிக்க வேண்டும்.(49) ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகிய ஒலிகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் எந்த நாட்டில் ஒலிக்கிறதோ, அங்கே ஒருவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் வசிக்கலாம்.(50)
எந்த நாட்டில் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியைப் போலப் பிராமணர்கள் வாழ்வின் தேவைகளை அடைய முடியாத துன்பத்தில் புனிதமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதை ஒருவன் காண்கிறானோ, அந்த நாட்டை விட்டு அவன் அகல வேண்டும்.(51) எந்த நாட்டில் வசிப்பவர்கள் கேட்கப்படுவதற்கு முன்பே உற்சாகமாகக் கொடுக்கிறார்களோ, அந்த நாட்டில் ஓர் அறவோன் தன் விருப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த ஒருவனைப் போல நிறைவான இதயத்துடன் வசிக்க வேண்டும்.(52) எந்த நாட்டில் தீயோர் தண்டிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட தூய ஆன்மா கொண்டோருக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அந்த நாட்டில், அறச்செயல்களில் அர்ப்பணிப்புடைய மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் வாழ வேண்டும்.(53) எந்த நாட்டில் மன்னன் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளானோ, எங்கே மன்னன் ஆசைகளைக் கைவிட்டு, செழிப்பை அடைந்து, அறவிதிகளின்படி ஆள்கிறானோ, எங்கே தற்கட்டுப்பாடுடைய மனிதர்களிடம் சச்சரவு செய்பவர்களுக்கும், நல்லோரிடம் தீச்செயல் புரிபவர்களுக்கும், வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், பேராசை மிக்கவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஒருவன் எந்தத் தயக்கமுமில்லாமல் வசிக்கலாம்.(54,55)
அத்தகைய மனோநிலை கொண்ட மன்னர்கள், அந்நாட்டில் வசிப்போரின் செழிப்பு குன்றும்போது அந்நாட்டுக்குச் செழிப்பைக் கொண்டுவருவார்கள்.(56) ஓ! மகனே {காலவா}, நன்மையானது, அல்லது சிறந்தது எது என்ற உன் கேள்விக்கு நான் உனக்குப் பதில் சொல்லிவிட்டேன். ஆன்மாவுக்கான நன்மை, அல்லது சிறப்பு எது என்பது மிக உயர்ந்த பண்பைக் கொண்டதாகையால் அது குறித்து எவரும் விளக்க முடியாது.(57) ஒரு மனிதன் இங்கே நேரும் தன் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக மேலே குறிப்பிட்டபடி நடந்து கொண்டு, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன் ஆன்மாவை அர்ப்பணித்து, தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பதன் மூலம் அடையும் உயர்ந்த சிறப்புகள் {நன்மைகள்} பலவாகும்" என்றார் {நாரதர்}.(58)
சாந்திபர்வம் பகுதி – 288ல் உள்ள சுலோகங்கள் : 58
ஆங்கிலத்தில் | In English |