Ways that lead to emancipation! | Shanti-Parva-Section-289 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 116)
பதிவின் சுருக்கம் : மனோவுறுதி முதலிய முக்திக்கான வழிமுறைகள் குறித்து சகரனுக்கும், அரிஷ்டநேமிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நம்மைப் போன்ற மன்னர்கள், அடைய வேண்டிய பெரும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மேலும் அவன், பற்றுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையில் எந்தெந்த குணங்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பழங்கதையில் இது தொடர்பாக ஆலோசனை கேட்ட சகரனுக்கு, அரிஷ்டநேமி[1] சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)
[1] கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் அரிஷ்டநேமி என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் வைநதேயர் / கருடன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சகரன் {அரிஷ்நேமியிடம்}, "ஓ! பிராமணரே, எந்த நன்மையைக் கொண்டு ஒருவனால் இம்மையில் பேரின்பத்தை அனுபவிக்க முடியும்? உண்மையில் துன்பத்தையும், கலக்கத்தையும் ஒருவனால் எவ்வாறு தவிர்க்க முடியும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சகரனால் கேட்கப்பட்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், தர்க்ஷிய குலத்தைச் சேர்ந்தவருமான அரிஷ்டநேமி, கேள்வி கேட்பவன் அனைத்து வகையிலும் தன் போதனைகளுக்குத் தகுந்தவன் என்று கருதி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(4) {அரிஷ்டநேமி}, "இவ்வுலகில் முக்தியால் உண்டாகும் பேரின்பநிலையே உண்மையான பேரின்பமாகும். அறியாமையில் உள்ள மனிதன், பிள்ளைகள் மற்றும் விலங்குகளிடம் கொண்ட பற்றாலும், செல்வம் மற்றும் தானியங்களால் பீடிக்கப்பட்டதாலும் அது குறித்து அறிவதில்லை.(5) உலகப் பொருட்களில் பற்றுடைய புத்தி, தாகத்தால் பீடிக்கப்பட்ட மனம் {எதுவும் வேண்டும் என்ற ஏக்கங்கொண்ட மனம்} என்ற இவை இரண்டும் திறன்மிக்க அனைத்து சீர்திருத்தங்களையும் கலங்கடித்துவிடும். பற்றுகளெனும் சங்கிலிகளால் கட்டப்பட்டு அறியாமையில் உள்ள மனிதன் விடுதலையை {முக்தியை} அடைய இயலாதவனாகிறான்.(6) நான் இப்போது பற்றிலிருந்து பிறக்கும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தையும் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன். கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. உண்மையில், ஞானம் கொண்ட ஒருவனால் பொருளுடன் அவற்றைக் கேட்க இயலும்.(7)
{உரிய} காலத்தில் பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் இளைஞர்களானதும் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டத்தகுந்தவர்கள்தான் என்பது உறுதி செய்துகொண்டு, பற்றுகள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு, மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(8) உன்னால் அன்புடன் பேணிக்காக்கப்பட்ட மனைவி வயதில் முதிர்ச்சியடைந்து, அவள் ஈன்ற மகனிடம் பற்றுடன் இருக்கும்போது, உயர்ந்த பொருளை (விடுதலையை {முக்தியை}) ஈட்டும் நோக்கத்தோடு, {உரிய} காலத்தில் அவளை விட்டு அகல்வாயாக.(9) உனது வாழ்வின் முதன்மையான வருடங்களில் உன் புலன்களைக் கொண்டு அவற்றுக்குரிய பொருட்களை முறையாக அனுபவித்த பிறகு, ஒரு மகனைப் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், பற்றுகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாகத் திரிவாயாக {சுகமாக நடப்பாயாக}.(10) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {போதிய அளவுக்கு} ஈடுபடுத்திய பிறகு, மேலும் மேலும் அவற்றில் ஈடுபடும் விருப்பத்தை நீ அடக்க வேண்டும். பிறகு பற்றுகளில் இருந்து விடுபட்டு, முயற்சி இல்லாமலும், ஏற்கனவே தீர்மானிக்கப்படாமலும், கிடைப்பதில் நிறைவடைந்து, அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களில் சமபார்வையைச் செலுத்தி மகிழ்ச்சியாகத் திரிவாயாக.(11)
ஓ! மகனே, (பற்றுகளில் இருந்து விடுபடும் வழி என்ன என்பதை) இவ்வாறே உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். விடுதலை {முக்தியை} அடையும் விருப்பம் குறித்து இனி உனக்கு விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.(12)
பற்றுகள் மற்றும் அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள். எனினும், உலகப் பொருட்களில் பற்றுடைய மனிதர்கள் அழிவடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை.(13) (மனிதர்களைப் போலவே) புழுக்களும், எறும்புகளும் உணவை அடைவதில் ஈடுபட்டு, தேடலிலேயே இறப்பது காணப்படுகிறது. பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள், அதே வேளையில் உலகப் பொருட்களில் பற்றுடையோர் அழிவடைகிறார்கள்.(14) நீ விடுதலையை அடைய விரும்பினால், "நானில்லாமல் இவர்கள் எவ்வாறு இருப்பார்கள்?" என்று நினைத்து, ஒருபோதும் உன் உறவினர்களிடம் உன் எண்ணங்களைச் செலுத்தாதே.(15) ஓர் உயிரினம் தானே பிறப்படைந்து, தானே வளர்ந்து, இன்பதுன்பங்களையும், மரணத்தையும் தானே அடைகிறது.(16)
இவ்வுலகில் மக்கள் இன்புற்று, தங்கள் பெற்றோராலோ, தங்களாலோ ஈட்டப்பட்ட உணவு, ஆடை ஆகியவற்றையும், இன்னும் பிற உடைமைகளை அடைகின்றனர். முற்பிறவின் விளைவாலன்றி எதையும் இப்பிறவியில் அடைய முடியாது என்பதால், இது முற்பிறவிச் செயல்களின் விளைவேயாகும்.(17) பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் செயல்களால் பாதுகாக்கப்பட்டு, செயல்களின் கனிகளை வகுப்பவனால் {பரமனால்} விதிக்கப்பட்ட விளைவின் காரணமாகத் தங்கள் உணவை அடைகின்றன.(18) களிமண்கட்டியான மனிதன், பிற சக்திகளையே முழுமையாகச் சார்ந்திருக்கிறான். எனவே, இவ்வளவு உறுதியற்றவனாக இருக்கும் ஒருவனால், தன் உறவினர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்கும் அவனிடம் உள்ள அறிவார்ந்த கருத்து {காரணம்} என்ன?(19) உன் உறவினர்களைக் காக்க மிகுந்த முயற்சிகளைச் செய்தும், நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைக் காலன் கொண்டு போகும் அந்தக் கணம் மட்டுமே உன்னை விழிப்படையச் செய்யும்.(20)
உன் உறவினர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் காத்து, உணவளிக்கும் உன் கடமை முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து, அவர்களை நீ கைவிடக்கூடும்.(21) உன் உறவினர்கள் இவ்வுலகில் இருந்து காலனால் கொண்டு போகப்பட்ட பிறகு, அங்கே அவர்கள் இன்புறுகிறார்களா, துன்புறுகிறார்களா என்பதை உன்னால் அறிய முடியாது.(22) நீ வாழ்ந்திருந்தாலும், இறந்திருந்தாலும், உன் உறவினர்கள் தங்களின் சொந்த செயல்களுடைய கனிகளின் விளைவால், தங்களை இவ்வுலகில் தக்கவைத்துக் கொள்வதில் வெல்லும்போது, உன் நன்மைக்கானதையே நீ செய்ய வேண்டும்[2].(23) அறியப்பட்ட வழக்கம் இதுவே எனும்போது, இந்த உலகில் உள்ள எவனையும் எவனைச் சேர்ந்தவனாகக் கருத முடியும்? எனவே, விடுதலை {முக்தி} அடைவதில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. மேலும் நான் உனக்குச் சொல்லப் போவதைக் கேள்.(24)
[2] "உன் உறவினர்கள் இறக்கும்போது அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை நீ அறியாதவன் என்பதால் அப்போது உன்னால் அவர்களுக்கு உதவ முடியாது. எனவே, நீ இறக்கும்போது, உன் உறவினர்களாலும் உனக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. உன் பெரும் அக்கறையைக் கோரும் விடுதலை {முக்தி} அடைதலை மறந்து, உன் உறவினர்களைக் குறித்துச் சிந்திப்பதால் நீ ஒன்றையும் ஈட்டப்போவதில்லை. அதே போல, நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் கவலைப்படாமல் வாழவோ துன்புறவோ செய்கிறார்கள், நீயும் அவர்களின் இருப்பையோ, முயற்சிகளையோ கருத்தில் கொள்ளாமல் இன்புறவோ துன்புறவோ வேண்டும். நீ உன் உறவினர்களின் கவலைகளில் மூழ்கி உனக்கான உயர்ந்த நன்மையை மறந்து போகக் கூடாது என்பதே இந்த ஸ்லோகங்களில் வரும் வாதமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பசி, தாகம், அத்தகைய பிற உடல்நிலைகள், கோபம், பேராசை மற்றும் குற்றங்களை வென்றவனும், உறுதிமிக்க ஆன்மா கொண்டவனுமான மனிதன் நிச்சயம் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(25) மடமையினால் சூதாட்டம், குடி, கூத்தியாள் உறவு, வேட்டை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தன்னை மறக்காதவன் எப்போதும் விடுதலை அடைந்தவன் ஆவான் {முக்தனாவான்}.(26) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் உண்ணும் தேவையின் விளைவால் உண்மையில் கவலையடைபவன், வாழ்வின் களங்கங்களை {குற்றங்களை} நன்கு உணர்ந்தவன் என்று சொல்லப்படுகிறான்[3].(27) பெண்களுடன் நேரும் கலவியால் மட்டுமே மீண்டும் மீண்டும் தனக்குப் பிறவிகள் நேர்கின்றன என்று கவனமான சிந்தனையின் விளைவால் கருதுபவன், பற்றுகளில் இருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகிறான்.(28) உயிரினங்களின் பிறப்பு, அழிவு, முயற்சி (அல்லது செயல்கள்) ஆகியவற்றின் இயல்பை உண்மையில் அறிந்த மனிதன் நிச்சயம் விடுதலையடைந்தவனே {முக்தனே} ஆவான்.(29) தானியங்கள் நிறைந்த ஆயிரம் கோடி வண்டிகளில், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள ஒரு கைப்பிடி தானியம் மட்டுமே (தன் ஏற்புக்குத் தகுந்தது) போதுமெனக் கருதுபவனும், மூங்கில் மற்றும் நாணல்களாலான கொட்டகைக்கும், மாளிகைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டில் அலட்சியம் கொள்பவனுமான மனதின் நிச்சயம் விடுதலை அடைவான் {முக்தனாவான்}[4].(30)
[3] கும்பகோணம் பதிப்பில், "இரவும், பகலும் எப்பொழுதும் போஜனத்துக்காகவே ச்ரமத்தையடைகின்றவன் தோஷபுத்தியுடையவனாகச் சொல்லப்படுகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு மனிதன், நாளைக்கு நாள் இரவுக்கு இரவு தான் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பதில் மட்டுமே ஆவலைக் கொண்டிருந்தால், அவனது புத்தி களங்கமுடையதாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. கங்குலி முற்றிலும் வேறு பொருளில் சொல்லியிருக்கிறார். வரிசையாக முக்தி அடைபவர்களைக் குறித்தே அடுத்தடுத்து சொல்லப்பட்டு வருவதால் கங்குலி சொல்வதே சரியாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "ஆயிரம் கோடி வண்டி தானியங்களில் ஒருபடி தான்யத்தையும், உப்பரிகையில் தன் மஞ்சத்திற்குரிய இடத்தையும் தன் வாழ்க்கைக்குப் போதுமானவையாகப் பார்க்கிறவன் மோக்ஷத்தை அடைகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு கைப்பிடி தானியத்திற்கும், ஆயிரம் கோடி வண்டிகளில் உள்ள தானியத்திற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவன், அல்லது ஒரு மாளிகைக்கும், மூங்கில் குவியலுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவன் விடுதலையடைந்தவனாவான்" என்றிருக்கிறது.
உலகமானது, மரணம், நோய் மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காணும் மனிதன் நிச்சயம் விடுதலையடைவான்.(31) உண்மையில், உலகை அவ்வாறு காணும் ஒருவன் நிறைவடைவதில் வெல்வான்; அதே வேளையில், உலகை அத்தகைய ஒளியில் காணத்தவறும் ஒருவன் அழிவையே அடைவான். சிறிதளவில் மட்டுமே மனம் நிறையும் மனிதனும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(32) உண்பவர்களையும், உணவுகளையும் {உண்ணப்படுபவைகளையும்} கொண்டதாக உலகைக் காண்பவனும், மாயையில் பிறக்கும் இன்ப துன்பங்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாக {முக்தனாக} கருதப்படுகிறான்.(33) மஞ்சத்தோடு கூடிய மென்மையான படுக்கையையும், கடினமான தரையையும் ஒன்றாகக் கருதுபவனும், நெல்லரிசியையும், இழிவான அரிசியையும் ஒன்றாகக் கருதுபவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(34) பட்டுத்துணியையும், தர்ப்பையாலான துணியையும் ஒன்றாகக் கருதுபவனும், பீதாம்பரத்தையும், மரவுரியையும் ஒன்றாக மதிப்பவனும், தூய ஆட்டுத் தோலுக்கும் {ஆட்டுமயிர்க்கம்பளத்துக்கும்}, தூய்மையற்ற தோலுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் காணாதவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(35)
ஐம்பூதக் கலவையின் விளைவெனவே இவ்வுலகைக் காண்பவனும், இக்கருத்தையே முதன்மையாகக் கொண்டு இவ்வுலகில் நடந்து கொள்பவனுமான மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(36) இன்ப துன்பங்களை ஒன்றாக, ஈட்டல், இழப்புகளை இணையாகக் கருதுபவனும், வெற்றி தோல்வியில் வேற்றுமை பாராட்டாதவனும், விருப்பு வெறுப்புகளை ஒன்றாகக் கொள்பவனும், அச்சம் மற்றும் கவலையில் மாற்றமடையாமல் இருப்பவனுமான மனிதன் முற்றாக விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(37) பல குறைபாடுகளைக் கொண்ட தன் உடலை குருதி, சிறுநீர், மலம் ஆகியவற்றின் திரளாகவும், சீர்கேடுகள் மற்றும் நோய்களின் திரளாகவும் கருதும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(38) முதுமையடையும்போது இவ்வுடலானது, தோல் சுருக்கங்கள், நரை முடிகள், உடல் மெலிவு, நிறக் குறைவு, வடிவச் சீர்குலைவு ஆகியவற்றால் தாக்கப்படும் என்பதை எப்போதும் நினைக்கும் மனிதன் விடுதலை அடைகிறான்.(39) ஆண்மை இழத்தல், கண்பார்வை மங்குதல், செவிட்டுத்தன்மை, பலத்தை இழத்தல் ஆகியவற்றுக்குத் தன்னுடல் ஆட்படும் என நினைக்கும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(40)
முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோரும் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து செல்ல வேண்டியவர்களே என்று அறியும் மனிதன் விடுதலை அடைந்தவனாவான் {முக்தனாவான்}.(41) பெரும் பலமும், தாக்கமும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களும் கூட இந்தப் பூமியில் இருந்து செல்ல வேண்டியிருந்தது என்பதை அறிந்த மனிதன் விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்.(42) இவ்வுலகில் பொருட்களை அடைவது எப்போதும் கடினமானது, {அதனால் பெறும்} துன்பம் அதிகமானது, உறவினர்களைப் பராமரிப்பது துன்பத்தையே எப்போதும் தரும் என்பதை அறிந்த மனிதன் விடுதலை அடைகிறான் {முக்தனாகிறான்}.(43) பிள்ளைகள் மற்றும் பிற மனிதர்களின் அபரிமிதமான குறைகளைக் கண்ட எவன் தான் விடுதலையை {முக்தியைப்} புகழ மாட்டான்?(44) சாத்திரங்கள் மற்றும் உலக அனுபவத்தில் மூலம் விழிப்படைந்தவனும், இவ்வுலகின் ஒவ்வொரு மனிதக் கவலையும் நிச்சயமற்றவை என்பதைக் கண்டவனுமான மனிதன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(45) என்னுடைய இந்த வார்த்தைகளை மனத்தில் கொண்டு, இல்லற வாழ்விலோ {கிருஹஸ்தாஸ்ரமத்திலோ}, விடுதலைக்கு வழிவகுக்கும் எந்த வாழ்விலோ {சந்நியாசத்திலோ} உன் புத்தியைக் குழப்பிக் கொள்ளாமல் விடுதலையடைந்த ஒருவனைப் போல உன்னை அமைத்துக் கொள்வாயாக" என்றார் {அரிஷ்டநேமி}[5]. (46)
[5] "நீ இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றப் போகிறாயா? சுட்டிக்காட்டப்பட்ட வழியில் நீ நடந்து கொண்டால், அதைச் செய்வதில் எந்தத் தீங்கும் கிடையாது. (வழக்கமான வழியில் தனிமையில் ஓய்ந்து சந்நியாசத்தை ஏற்றுக் கொண்டு) நீ விடுதலை அடைவதைப் பின்தொடரப் போகிறாயா? அப்போதும் நீ சுட்டிக்காட்டப்பட்ட வழியிலேயே நடக்க வேண்டும், உண்மையில், அதுவே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் சந்நியாச வழியாகும்" என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கிருஹஸ்தாச்ரமத்திலிருந்து மோக்ஷத்தில் உன்னுடைய புத்தியானது தளர்ச்சியில்லாமல் செய்யப்படுமானால் என்னுடைய இந்த வார்த்தையைக் கேட்டு முக்தன் போல நடக்கக்கடவாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட நீ, விடுதலையடைந்த ஒருவனைப் போலவே எப்போதும் திரிய வேண்டும். இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்தரமத்தைப் பின்பற்றினாலும், விடுதலையை {முக்தியை /சந்நியாசத்தைப்} பின்பற்றினாலும் உன் புத்தி குழப்பமடையாதவாறு செயல்படுவாயாக" என்றிருக்கிறது.
அவரது இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேட்ட அந்தப் பூமியின் தலைவன் சகரன் விடுதலையை {முக்தியை} விளைவிக்கும் ஒழுக்கங்களை அடைந்து, அவற்றின் உதவியோடு தன் குடிமக்களை ஆள்வதைத் தொடர்ந்தான்" என்றார் {பீஷ்மர்}.(47)
சாந்திபர்வம் பகுதி – 289ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |