Sukracharya! | Shanti-Parva-Section-290 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 117)
பதிவின் சுருக்கம் : சுக்கிராச்சாரியார் தேவர்களின் பக்கம் சேராமல் அசுரர்களின் நன்மையை நாடிய காரணம்; சுக்கிரன் என்ற பெயர் தோன்றியதற்கான காரணம் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, இந்த ஆவல் எப்போதும் என் மனத்தில் இருக்கிறது. ஓ! குருக்களின் பாட்டா, அது குறித்த அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்.(1) தெய்வீக முனிவரும், கவி என்றும் அழைக்கப்படுபவரும், உயர் ஆன்மா கொண்டவருமான உசனஸ், அசுரர்களுக்கு ஏற்புடையதையும், தேவர்களுக்கு ஏற்பில்லாததையும் செய்வதில் ஏன் ஈடுபட்டார்?(2) தேவர்களின் சக்தியை மங்கச் செய்வதில் அவர் ஏன் ஈடுபட்டார்? தானவர்கள், தேவர்களில் முதன்மையானோரிடம் ஏன் எப்போதும் பகைமையில் ஈடுபட்டனர்.(3) ஒரு தேவனைப் போன்ற காந்தியைக் கொண்ட உசனஸ் என்ன காரணத்தால் சுக்ரன் என்ற பெயரை அடைந்தார்? இக்காரியங்கள் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக.(4) பெருஞ்சக்தியைக் கொண்டவராக இருப்பினும், அவர் ஏன் ஆகாய மத்தியில் பயணிப்பதில் வெல்லவில்லை? ஓ! பாட்டா, இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(5)
[1] "வெள்ளி கோளே தவசி உசனஸ், அல்லது சுக்ரன் எனக் கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இவை அனைத்தையும் உண்மையில் நேர்ந்தபடியே கவனத்துடன் கேட்பாயாக. ஓ! பாவமற்றவனே, நான் கேள்விப்பட்டு, புரிந்து கொண்ட வகையிலேயே இக்காரியங்களைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன்.(6) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், அனைவராலும் கௌரவிக்கப்படுபவரும், பிருகு குலத்தின் வழித்தோன்றலுமான உசனஸ், போதுமான காரணத்திற்காகவே தேவர்களுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்வதில் ஈடுபடலானார்[2].(7) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவரான அரசன் குபேரன், அண்டத்தின் தலைவனான இந்திரனுடைய கருவூலத்திற்குத் தலைவனாவான்[3].(8) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பெருந்தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, குபேரனின் உடலுக்குள் நுழைந்து, தமது யோக சக்தியால் அந்தக் கருவூலத் தலைவனின் விடுதலையை {சுதந்திரத்தை} இழக்கச் செய்து, அவனது செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்தார்[4].(9) தன் செல்வம் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்ட கருவூலத் தலைவன் {குபேரன்} மிகவும் மனம் வருந்தினான். கவலையால் நிறைந்து, கோபத்தால் தூண்டப்பட்ட அவன் தேவர்களில் முதன்மையான மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(10)
[2] "முற்காலத்தில், தேவர்களால் தூண்டப்பட்ட விஷ்ணு, உசனஸின் தாயுடைய தலையைத் துண்டிக்கத் தன் சக்கராயுதத்தைப் பயன்படுத்தினான் என்று சொல்லி உரையாசிரியர் இந்த மறைகுறிப்பை விளக்குகிறார். எனவே, உசனஸ் தேவர்களுக்கு எதிராகக் கோபங்கொண்டு, அவர்களின் எதிரிகளான தானவர்களுக்கு ஆபத்தில் உதவி செய்ய விரும்பினார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "இந்த வாக்கியத்தின் அமைப்புமுறை மிகக் கடினமானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில், "அளவிறந்த செல்வமுடையவனும், ராஜனென்று பெயருடையவனும் யக்ஷர்களுக்கும், ராக்ஷதர்களுக்கும் அதிபதியும் எப்பொழுதும் பிரபுத்தன்மையுள்ளவனும், பொக்கசத்திற்கும், உலகத்திற்கும் பிரபுவுமான குபேரனென் றொருவனிருக்கிறான்" என்றிருக்கிறது.[4] "யோகவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தாங்கள் விரும்பினால் பிறரின் உடலுக்குள் நுழையும் தகுதியை அடைந்தவர்களாவர். உண்மையில், இங்கே சொல்லப்படுவது யாதெனில் குபேரன் செயல்பட முடியாத, அஃதாவது உள்ளே புகுந்திருக்கும் உடைமையாளரால் இயக்கப்படும் வகையில் தானியங்கி ஆனான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குபேரன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களில் முதல்வனும், கடுமையானவனும், இனிமையானவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனுமான சிவனிடம் இந்தக் காரியத்தை எடுத்துரைத்தான்.(11) அவன், "உசனஸ், யோகத்தினால் ஆன்மத் தூய்மை அடைந்து {தம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு}, என் வடிவத்திற்குள் {உடலுக்குள்} நுழைந்து, என் சுதந்திரத்தை அபகரித்து, என் செல்வம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். யோகத்தின் மூலம் என்னுள் நுழைந்த அவர், பின்னர் அதைவிட்டு அகன்றுவிட்டார்" என்றான்.(12)
இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், உயர்ந்த யோக சக்திகளைக் கொண்டவனுமான மஹேஸ்வரன் சினத்தால் நிறைந்தான். ஓ! மன்னா, அவனது கண்கள் குருதிச் சிவப்படைந்து, (உசனஸைத் தாக்கி வீழ்த்துவதற்குத் தயாராக) தன் சூலத்துடன் காத்திருந்தான்.(13)
உண்மையில், அந்த முதன்மையான ஆயுதத்துடன் கூடிய அந்தப் பெருந்தேவன், "அவன் எங்கே? அவன் எங்கே?" என்று கேட்கத் தொடங்கினான்.
அதே வேளையில் மஹாதேவனின் நோக்கத்தை (தமது யோக சக்தியின் மூலம்) உறுதி செய்து கொண்ட உசனஸ் {சுக்கிராச்சாரியார்}, தொலைவிலேயே அமைதியுடன் காத்திருந்தார்.(14) உண்மையில், யோக சக்தியில் மேன்மையான உயர் ஆன்ம மஹேஸ்வரனின் கோபத்தை உறுதி செய்து கொண்ட உசனஸ், மஹேஸ்வரனிடம் செல்லலாமா, தப்பிவிடலாமா அல்லது இருந்த இடத்திலேயே இருக்கலாமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.(15) யோக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட ஆன்மாவைக் கொண்ட உசனஸ், கடுந்தவங்களின் துணையுடன் மஹாதேவனை எண்ணிப்பார்த்து, மஹாதேவனின் சூல முனையிலேயே தம்மை நிறுத்திக் கொண்டார்.(16) வில் தரித்த ருத்திரன், தவங்களில் வெற்றியடைந்த உசனஸ், தூய ஞானத்தின் வடிவில் தம்மை மாற்றிக் கொண்டு, தன் சூல முனையில் இருப்பதை அறிந்து, அந்த ஆயுதத்தைத் தன் கரத்தால் வளைத்தான்.(17) அளவிலா சக்தி கொண்டவனும், கடுமையான கரங்களைக் கொண்டவனும், பலமிக்கவனுமான மஹாதேவன் இவ்வாறு தன் சூலத்தை (வில்லின் வடிவத்தில்) வளைத்த நேரம் முதல், அந்த ஆயுதம் பிநாகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[5].(18) அந்த உமையின் தலைவன் {சிவன்}, இவ்வாறு தன் உள்ளங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பார்க்கவரை {உசனஸைக்} கண்டு, தன் வாயைத் திறந்தான். பிறகு அந்தத் தேவர்களின் தலைவன், பார்க்கவரைத் தன் வாய்க்குள் வீசி உடனே அவரை விழுங்கிவிட்டான்.(19) பிருகு குலத்தைச் சேர்ந்தவரும், பலமிக்கவரும், உயரான்மா கொண்டவருமான உசனஸ், மஹேஸ்வரனின் குடலுக்குள் நுழைந்து அங்கே திரியத் தொடங்கினார்" என்றார் {பீஷ்மர்}.(20)
[5] கும்பகோணம் பதிப்பில், "அளவற்ற பலமுடைய பாணியினாலே சூலமானது வளைக்கப்பட்டவுடன் உக்கிரமான ஆயுதத்தையுடைய பிரபுவானவர் சூலத்தைப் பார்த்து பிநாகமென்று சொன்னார்" என்றிருக்கிறது. "பிநாகம்" என்ற சொல்லுக்கான அடிக்குறிப்பில், "’பாணி’ என்கிற பெயரில் முதல் எழுத்தான பகாரத்தை இகாரம் சேர்த்தும், ’வளைத்தார்’ என்கிற அர்த்தமுடைய ‘அநாமயத்’ என்கிற பதத்தின் இரண்டாவது எழுத்தான் ’நா’ என்பதையும், ‘க’ என்கிற அதிக எழுத்தையும் சேர்த்து ’பிநாகம்’ என்பது" என்றுமிருக்கிறது.
யுதிஷ்டிரன், "ஓ! மன்னா, மேன்மையான புத்திமான்களில் முதன்மையானவனின் குடலுக்குள் திரிவதில் எவ்வாறு உசனஸால் வெல்ல முடிந்தது? அந்தப் பிராமணர் அந்தச் சிறப்புமிக்கத் தேவனின் குடலுக்குள் இருக்கையில், அவன் {அந்தத் தேவன்} என்ன செய்தான்?" என்று கேட்டான்[6].(21)
[6] "இந்த ஸ்லோகத்தின் இறுதி வரியில் உள்ள இறுதிப் பகுதியை உசனஸுக்குப் பொருந்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது, "சுக்கிராச்சாரியர் சிவனின் குடலுக்குள் இருக்கும் போது என்ன செய்து கொண்டார்" என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
பீஷ்மர், "பழங்காலத்தில், மஹாதேவன் (உசனஸை விழுங்கிய பிறகு) நீருக்குள் புகுந்து, பல கோடி வருடங்களுக்கு அங்கேயே அசைவில்லாமல் ஒரு மரக்கட்டையைப் போல (தியோன யோகத்தில் ஈடுபட்டு) இருந்தான்.(22) கடுமையான வகையைச் சார்ந்த அவனது யோகத் தவம் நிறைவடைந்ததும் அந்தப் பெரும் தடாகத்தில இருந்து அவன் எழுந்தான். அப்போது தேவர்களின் ஆதி தேவனான நித்தியமான பிரம்மன் அவனை அணுகி,(23) அவனது தவங்களின் முன்னேற்றத்தையும், அவனது நலத்தையும் குறித்து விசாரித்தான்.
காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன் {சிவன்}, "என் தவங்கள் நன்கு பயிலப்பட்டன" என்றான்.(24)
நினைத்தற்கரிய ஆன்மா கொண்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வாய்மை அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான சங்கரன், தன் குடலுக்குள் இருந்த உசனஸ், தன் தவங்களின் விளைவால் இன்னும் மேன்மையடைந்திருப்பதைக் கண்டான்.(25) அந்த முதன்மையான யோகி (உசனஸ்), தவங்களில் கிட்டிய செல்வம் மற்றும் (குபேரனிடம் இருந்து அபகரித்த) செல்வம் ஆகியவற்றால் வளம்பெற்று, பெருஞ்சக்தியுடன் மூவுலகங்களிலும் பிரகாசமாக ஒளிருந்து கொண்டிருந்தார்.(26) இதன் பிறகு, பிநாகைதாரியும், யோகத்தின் ஆன்மாவுமான மஹாதேவன் மீண்டும் தியான யோகத்தில் தன்னை ஈடுபடுத்தினான். எனினும், கவலையால் நிறைந்த உசனஸ் அந்தப் பெருந்தேவனின் குடலுக்குள் திரியத் தொடங்கினார்.(27) தப்பிச் செல்லும் வழியை அறிய விரும்பிய அந்தப் பெருந்தவசி, தாம் எங்கே இருந்தாரோ அங்கேயே இருந்து அந்தத் தேவனின் துதிகளைப் பாடத் தொடங்கினார். எனினும், வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்த ருத்திரன், அவர் வெளியே வருவதைத் தடுத்தான்.(28)
எனினும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பெருந்தவசியான உசனஸ், மஹாதேவனின் குடலுக்குள் இருந்தபடியே, அந்தத் தேவனிடம், "எனக்குக் கருணை காட்டுவாயாக" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்.(29)
அவரிடம் {உசனஸிடம்} மஹாதேவன், "என் சிறுநீர்க்குழாயின் {சிசினத்தின்} வழியே வெளியேறுவாயாக" என்றான்.
பிறகு, தன் உடலில் இருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்தான்.(30) அனைத்துப் பக்கங்களிலும் அடைக்கப்பட்டு, வெளியேறக் குறிப்பிடப்பட்ட வழியை அறியாமல், மஹாதேவனின் சக்தியில் எரிந்தபடியே அந்தத் தவசி அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருந்தார்.(31) இறுதியாக வெளியேறும் வழியை கண்டடைந்து, அதன் வழியே வெளியேறினார். இந்தச் செய்தியின் விளைவால் அவர் சுக்கிரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இந்தச் செய்தியின் விளைவாலேயே அவர் (தமது திரிதல்களின் போக்கில்) ஆகாயத்தின் மைய புள்ளிய அடைய முடியாதவரானார்.(32) தன் குடலில் இருந்து வெளியேறி, சக்தியால் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவரைக் கண்ட பவன் {சிவன்}, கோபத்தால் நிறைந்து, சூலத்தைத் தன் கையில் உயர்த்திப்பிடித்தபடி நின்றான்.(33)
அப்போது உமாதேவி குறுக்கிட்டு உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கோபம் நிறைந்தவனுமான தன் கணவன் {சிவன்}, அந்தப் பிராமணனைக் கொல்லாதவாறு தடுத்தாள். இவ்வாறு உமை, நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து தன் தலைவனைத் தடுத்ததன் விளைவால், தவசியான உசனஸ் (அந்த நாள் முதல்) அந்தத் தேவியின் மகனானார்.(34)
தேவி {உமை}, "இந்தப் பிராமணன் இனியும் உம்மால் கொல்லத்தகுந்தவனல்ல. அவன் என் மகனாகிவிட்டான். ஓ! தேவா, உமது குடலுக்குள் இருந்து வெளியேறிய ஒருவனை உமது கரங்களால் கொல்வது தகாது" என்றாள்".(35)
பீஷ்மர் தொடர்ந்தார், "தன் மனைவியின் இவ்வார்த்தைகளால் தணிவடைந்த பவன் {சிவன்}, ஓ! மன்னா, புன்னகைத்தபடியே, "இவன் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்" என்ற இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(36) வரம் அளித்த மஹாதேவனையும், அவனது மனைவியான உமாதேவியையும் வணங்கியவரும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவருமான பெரும் தவசி உசனஸ், தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்றார்.(37) ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்ட உயர் ஆன்ம பார்க்கவரின் கதையை உனக்குச் சொல்லிவிட்டேன்" {என்றார் பீஷ்மர்}.(38)
சாந்திபர்வம் பகுதி – 290ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |