The fruits of acts! | Shanti-Parva-Section-291 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 118) (பராசர கீதை - 1)
பதிவின் சுருக்கம் : நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)
ஜனகன் {பராசரரிடம்}, "இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)
[1] "அனைத்து வர்ணங்கள் மற்றும் அனைத்து ஆசிரமங்களுக்குரிய கடமைகளே இங்கே அறங்களாகக் குறிப்பிடப்படுகின்றன"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பராசரர் {ஜனகனிடம்}, "செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)
[2] ஒருவன் தேவர்களைக் கௌரவிக்கும் வண்ணம் வேள்விகளைச் செய்து, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி கொடைகளை அளிக்க வேண்டும், அவற்றிலேயே அறம் இருக்கிறது எனச் சாத்திரத் தீர்மானங்கள் சொல்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "பாவம் நிறைந்தவை இடைநிலை விலங்குகளாகின்றன. அறம் சார்ந்தவை சொர்க்கத்தை அடைகின்றன. புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் செய்தவை மனித நிலையை அடைகின்றன. அறிவை அடைபவை விடுதலை {முக்தி} அடைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, "விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது" {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)
[4] "முற்பிறவி செயல்களின் விளைவுகளே இங்கே விதி என்று குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி விளக்குகிறார்.[5] "இஃது ஐயுறுவாதி அல்லது சார்வாகர்களின் வாதங்கள் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் நான்கு வகைச் செயல்கள் ஜாதிகிரதக் கர்மம் முதலியவை என்று நான் நினைக்கிறேன். அவை நித்யம், நைமிதிகம், காம்யம் மற்றும் நிஷித்யம் ஆகியவையாகும். அது ஜாதிகிரம கர்மம் முதலியவையாக இல்லாமல் யாந்தியகிருத கர்மம் என்றிருந்தால், பொருள் மாறுபடும், அதன் விபரம் பின்வருமாறு. "ஒருவனுடைய மறுபிறவில் அவன் முற்பிறவி செயல்களின் விளைவாக கனிகளைப் பெறுவதில்லை. முரண் கருத்தானது செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகளின் அழிவைக் குறிப்பிடுதால் இஃது இவ்வாறே இருக்க வேண்டும். மனிதர்கள் எந்தச் செயலின் கனியையும் அடையும்போது, அந்தக் கனிகளை அடைந்ததை விளக்குவதற்காக முற்பறிவியில் செய்த நால்வகைச் செயல்களையே எப்போதும் நினைவுகூர்கிறார்கள் என்று சொல்லும் கருத்துக்கு மேற்கண்டது முரணாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "12 மற்றும் 14ம் ஸ்லோகங்கள் ஐயுறுவாதியின் கோட்பாட்டைப் பிரதிபலிக்கின்றன, நான் அவ்வாறே மேலே உரை அமைத்திருக்கிறேன். 13ம் ஸ்லோகத்தைப் பராசரரின் அவதானிப்பாக உரையாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 15ம் ஸ்லோகத்தையும் ஐயுறுவாதியால் சொல்ல முடியாது என்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)
[7] "ஐயுறுவாதி அனைத்திற்கும் காரணமாக அமையும் இயற்கையைக் குறித்துச் சொல்லும் வாக்குமூலத்திற்கான பதிலாக உரையாசிரியர் இதைக் கருதுகிறார். நெருப்பு இயல்பில் வெப்பமானது. எனவே, அஃது ஒருவேளை வெப்பமாகவும், மறு வேளையில் குளிராகவும், மற்றொரு வேளையில் இரண்டும் கலந்த மென் வெப்பமாகவும் ஆவதில்லை. ஒருவன் முற்றான மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ அடைகிறான். மனிதனின் இயல்பு அவ்வாறிருக்கக் கூடாது. வேறுபட்டநிலைகள் வேறுபட்ட காரணங்களால் உண்டாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்" என்றார் {பராசரர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 291ல் சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |