Penance! | Shanti-Parva-Section-296 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 123) (பராசர கீதை - 6)
பதிவின் சுருக்கம் : பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
பராசரர் {ஜனகனிடம்}, "இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் "நான்" என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)
இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)
ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)
[1] "மனத்தளர்ச்சியால் தவங்களைச் செய்வோர் பலர் என்பது இங்கே சொல்ல வரும் கருத்தாகும். எனினும், இல்லறத்தின் இன்பம் உண்மையற்றது, அது துன்பத்திலேயே முடிவடைகிறது என்ற மனப்பதிவால் உடனே தவங்களைச் செய்பவர்கள் மிக அரிதானவர்களாவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், "எல்லோருக்கும் ஸாதாரணமானதும், ஸ்வர்க்கமார்க்கத்தை அடைவிக்கிறதுமான தவமானது, ஜிதேந்திரியனும், அடக்கமுடையவனுமான சூத்ரனுக்குக்கூட விதிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)
[3] "முற்பிறவியில் செய்யப்பட்ட தவங்களால்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)
[4] "இந்தச் சுலோகத்தின் இரண்டாவது வரியை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்ற உறுதி எனக்கில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மூவுலகங்களிலும் தவத்தாலடையக்கூடாதது ஒன்றுமில்லை. நல்வினை செய்யாதவர்களுக்கு ஸுகங்களில்லாமற்போவதே பயன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மூவுலகங்களிலும் தவங்களின் மூலம் அடைய முடியாத ஏதும் கிடையாது. இன்பநுகர் பொருட்களைத் துறக்கும் நிலையும் முற்பிறவி செயல்களின் கனியே ஆகும்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், "லோகத்தால் இந்திரியங்களுக்கு மயக்கமுண்டாகும். அதனால் இவனுடைய பிஜ்ஞையானது அப்யாஸமில்லாத வித்தை போல நசிந்துவிடும்" என்றிருக்கிறது.
ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)
[6] "களங்கமற்ற தவம் என்பது நிஷ்காம தவமாகும் அதாவது பலனில் ஆசை கொள்ளாத தவமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] கும்பகோணம் பதிப்பில், "பயனை விரும்புகிறவன் நல்ல வழியை விட்டு விஷயரூபமான வழியை அடைகிறான். அவனுக்குத் தர்மத்திலும் தவத்திலும் தானத்திலும் ஸந்தேகமுண்டாகின்றது. அவன் கொடிய பாவங்களையே செய்து நரகத்தை அடைகிறான்" என்றிருக்கிறது.
ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)
[8] ஒருவன் உடைமையாகக் கொள்ளும் அல்லது செயல்படும் அனைத்தும் முற்பிறவி செயல்கள் விளைவல்ல என்பதே இந்தச் சுலோகத்தின் நோக்கம் என உரையாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ஒருவன் முற்பிறவி செயல்களின், அல்லது பிராரவ்த கர்மத்தின் விளைவால் மனைவிகள், உணவு, பானம் முதலியவற்றை அடைகிறான். இவற்றைப் பொறுத்தவரையில் புருஷகாரம் அல்லது முயற்சி என்பது பலவீனமானது. எனவே அவற்றை அடைவதில் முயற்சியைச் செலுத்துவது விவேகமாகாது. எனினும், அறமீட்டுவதைப் பொறுத்தவரையில் முயற்சி என்பது தவிர்க்கப்பட முடியாததாகும். எனவே, ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைச் செய்ய முயற்சிக்க வேண்டும். விதி மற்றும் முயற்சிக்கிடையில் இத்தகைய வேறுபாட்டைக் காணாமல் பொருள் கொள்ளப்படும் சாத்திர போதனைகளும் விதிகளும் பொருளற்றவையாக ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முயற்சியின்றிக் கிடைத்தவை கிருகஸ்தர்களால் எப்பொழுதும் அனுபவிக்கத்தக்கவை. தன் தர்மமானது முயற்சியால் அடையத்தக்கதென்பது என் எண்ணம்" என்றிருக்கிறது.
கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் {பராசரர்}.(39)
[9] "வீண் பகட்டுணர்வால் நிலையற்ற சொர்க்கத்திற்காகச் செய்யப்படும் வேள்விகளும், பிற செயல்கள் அனைத்தும் அழிவுக்குத்தகுந்தவையே ஆகும். எனினும், கனியில் விருப்பமில்லாமல் செய்யப்படும் தவங்கள் முக்திக்கு வழிவகுப்பதால் அவை அவ்வாறானவையாக இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் நதிகள் என்றும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடு ஆறுகள் நதம் என்றும் அழைக்கப்படுகின்றன
சாந்திபர்வம் பகுதி – 296ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |