Desire, wrath and cupidity! | Shanti-Parva-Section-295 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் பர்வம் - 122) (பராசர கீதை - 5)
பதிவின் சுருக்கம் : மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
பராசரர் {ஜனகனிடம்}, "கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)
வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)
கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, "சீ" என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)
[1] "இந்த ஸ்லோகம் உருவக விளக்கமாகக் கொள்ளப்படுகிறது. அந்த மூன்று அசுரர்களும் காமம், குரோதம் மற்றும் லோபமாகும். மாயையில் திரளாகவும், நுட்பமாகவும், ஆற்றலாகவும் இருக்கும் தங்கள் அவர்களுடைய வடிவங்கள் தூய சித்-ல் கலந்தன என்பதே இங்கே சொல்லப்படும் உருவகமாகும். தீய ஆசைகளை அழித்து மனிதனைத் தூய நிலைக்கு மீட்கும் ஓர் ஆன்ம நிகழ்வு இஃது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பட்டணத்தோடு ஆகாயத்தில் செல்லுகிறவர்களான அந்த அஸுரர்கள் மூவராயிருந்தும் அந்தப் பரமேச்வரரால் தேவர்களால் விருத்தி செய்யப்பட்ட தேஜஸையுடைய ஒரே பாணத்தினால் (அறுத்துப்) பூமியில் தள்ளப்பட்டார்கள்" என்றிருக்கிறது.
அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "பெரிய குலங்களில் பிறந்தவர்களுக்கும் மிகவும் முன்னோர்களான முதியோர்களுக்கும் இருதயத்திலிருந்து அஸுரத்தன்மையானது விலகவில்லை. ஆகையால், தொடர்ச்சியாய் வந்த அந்த அஸுரத்தன்மையினாலேயே பயங்கரமான பராக்ரமத்தையுடைய அரசர்கள் அஸுரர்களுக்குரிய காரியங்களையே செய்தார்கள். அவைகள் அவர்களிடத்திலேயே இருந்தன. அவர்கள் அவைகளையே நிலைபெறவும் செய்தார்கள். இப்பொழுதும் மிகவும் புத்தியில்லாத மனிதர்கள் அவைகளைச் செய்கின்றார்கள்" என்றிருக்கிறது.
நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}" என்றார் {பராசரர்}.(31)
[3] "தேவர்களே கூடச் செழுமைக்கும், வறுமைக்கும், அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஆட்படுகிறார்கள். இவை காணப்படாத வாழ்வுமுறை என்பது ஏதும் இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "குணமில்லாதவனாயிருந்தாலும் எவன் துர்ப்புத்தியுள்ளவனோ அவன் தனக்கு அதிகனாக இருக்கிறான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 295ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |