Varna, Gotra Differences! | Shanti-Parva-Section-297 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 124) (பராசர கீதை - 7)
பதிவின் சுருக்கம் : தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...
ஜனகன் {பராசரரிடம்}, "ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?" என்று கேட்டான்.(2)
பராசரர் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்" என்றார் {பராசரர்}[1].(8,9)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "க்ஷத்திரிய சாதியில் இருந்து விளைந்தவர்களுக்கு மத்தியில் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள் ஆகியோர் உள்ளனர். ஓ! மனிதர்களின் தலைவா, அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள் மற்றும் சண்டாளர்கள் ஆகியோர் நான்கு வர்ணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பால் பிறந்தவர்களாவர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "க்ஷத்திரியாதிரதர், அம்பஷ்டர், உக்கிரர், வைதேஹர், ச்வபாகர், புல்கஸர், ஸ்தேநர், நிஷாதர், ஸூதர், மாகதர், அயோகர், காரணர், விராத்தியர், சண்டாளர் ஆகிய இவர்கள் நான்கு வர்ணங்களிலிருந்து ஒன்றோடொன்று கலந்து உண்டாகிறார்கள்" என்றிருக்கிறது.
ஜனகன் {பராசரரிடம்}, "அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?" என்று கேட்டான்[2].(11)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஓ முனிச்ரேஷ்டரே, ஒரே ப்ரம்மாவினால் உண்டானவர்கள் கோத்திரத்தினால் எப்படி அநேகர்களானார்கள்? இவ்வுலகில் கோத்ரங்கள் அநேகங்களல்லவா? எங்கே வேண்டுமா அங்கே உண்டான முனிவர்கள் எப்படித் தம் ஜாதியை அடைந்தார்கள்? சிலர் சூத்திர ஜாதியிலுண்டானவர்கள். மற்றவர்கள் அயோநிஜர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பல்வேறு கோத்திரங்களிலான {உட்பிரிவுகளாலான} பிராமணர்கள் எவ்வாறு உண்டானார்கள்? ஓ தவசிகளில் உயர்ந்தவரே, இவ்வுலகில் பல கோத்திரங்கள் இருக்கின்றன. பல்வேறு கருவறைகளில் பிறந்தவர்களும், சூத்திரக் கருவறைகளில் பிறந்தவர்களும், தாழ்ந்த கருவறைகளில் பிறந்தவர்கள் எவ்வாறு தவசிகளாகிறார்கள்?" என்றிருக்கிறது.
பராசரர் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்" என்றார் {பராசரர்}[4].(18)
[3] கும்பகோணம் பதிப்பில், "தவத்தால் சுத்தமாகச் செய்யப்பட்ட மனத்தையுடைய மகாத்மாக்களின் பிறப்பானது இழிவான பிறப்புடன் சேர்க்கக்கூடியதாகாது. அரசனே, முனிவர்கள் எங்கே வேண்டுமோ அங்கே புத்திரர்களையுண்டுபண்ணி அந்தப் புத்திரர்களுக்கு மறுபடியும் தங்கள் தவத்தாலே ரிஷித்தன்மையைச் செய்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்த உயர் ஆன்மாக்கள் கொண்ட தாழ்ந்த பிறவியால் பிராமணர்களாக மாட்டார்களெனினும், இவர்கள் கடுந்தவங்களைச் செய்து தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். ஓ! மன்னா, இங்கேயும், அங்கேயும் தவசிகளுக்கு மகன்கள் இருந்தனர். எனினும், அவர்கள் {தவசிகளின் மகன்கள்} தங்கள் சொந்த தவங்களின் விளைவால் முனிவர்களாவதில் வென்றனர்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "கர்மத்தால் இதர கோத்திரங்கள் உண்டாயின. தவத்தாலுண்டான ஸத்துக்களுடைய அந்தப் பெயர்களும் கிரகிக்க யோக்யமானவைகள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செயல்களால் அவர்கள் கோத்திரங்கள் உண்டாகின. அந்த அறவோரின் கடுந்தவங்களால் அந்தக் கோத்திரங்களுக்கு அவர்களின் பெயர்களுமுண்டாகின" என்றிருக்கிறது.
ஜனகன் {பராசரரிடம்}, "ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்" என்றான்.(19)
பராசரர் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)
பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்" என்றார் {பராசரர்}.(30)
[5] "பிரம்மன், பிராமணனுக்கு இணையானவன் என்றும், விஷ்ணு க்ஷத்திரியனுக்கு இணையானவன் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார். எனவே, இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், (பராசரரைப் பொறுத்தவரையில்) நான்கு வகையினருக்கும் பொதுவான கடமைகள் அனைத்தையும் பயிலும் சூத்திரன் ஒருவன் மறுபிறவியில் பிராமணனாவதில் வெல்கிறான் என்பதாகும். இவ்வாறே சாத்திரங்களை அறிந்த பிராமணர்கள் சொல்கிறார்கள்; ஆனால் பராசரரின் கருத்தோ, அறவோனான ஒரு சூத்திரன் மறுபிறவியில் க்ஷத்திரியனாகப் பிறப்பை அடைகிறான் எனவும் உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்கம் தருகிறார்.
ஜனகன் {பராசரரிடம்}, "ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(31)
பராசரர் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன" என்றார்.(34)
ஜனகன் {பராசரரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?" என்று கேட்டான்.(35)
பராசரர் {ஜனகனிடம்}, "ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது" என்றார் {பராசரர்}.(39)
சாந்திபர்வம் பகுதி – 297ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |