Saadhyas and a swan! | Shanti-Parva-Section-300 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 127)
பதிவின் சுருக்கம் : சாத்யர்களுக்கும், அன்னப்பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கடுமொழியால் ஏற்படும் பாதிப்பு; கடுமொழியைப் பொறுத்துக் கொள்பவன் ஈட்டும் தகுதி ஆகியவற்றைச் சொன்ன அன்னப்பறவை...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, ஞானம் ஆகியவற்றைக் கல்விமான்கள் புகழ்கின்றனர். இவ்வறங்களில் உமது கருத்தென்ன?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் சாத்யர்களுக்கும் ஓர் அன்னப்பறவைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லப் போகிறேன்.(2)
ஒரு காலத்தில், பிறப்பற்றவனும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமானவன் (பிரம்மன்) தங்கத்தாலான அன்னப்பறவையின் வடிவை ஏற்று, மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தபோது சாத்யர்களைச் சந்தித்தான்.(3)
சாத்யர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! தலைவா, நாங்கள் சாத்யர்கள் என்றழைக்கப்படும் தேவர்களாவோம். உன்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். உண்மையில், விடுதலையின் அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} குறித்தே நாங்கள் உன்னிடம் கேட்கப் போகிறோம்.(4) ஓ! பறவையானவனே, உன்னைப் பெரும் கல்விமான் என்றும், சொல்திறமிக்கவன் என்றும், வாக்கில் ஞானம் உள்ளவன் என்றும் கேள்விப்படுகிறோம். ஓ! பறவையானவனே, அனைத்துப் பொருட்களிலும் எது உயர்ந்ததென நீ நினைக்கிறாய்? ஓ! உயர் ஆன்மா கொண்டவனே, எதனில் மனம் இன்பத்தை அடைகிறது? எனவே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! இறகு படைத்த படைப்புகளின் தலைவனே, எதைச் செய்தால் ஒருவன் அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபடலாம் என்று நீ கருதும் முதன்மையான செயலை எங்களுக்குப் போதிப்பாயாக" என்று கேட்டார்கள்.(6)
அன்னப்பறவை {பிரம்மன்}, "அமுதம் பருகியவர்களே, தவங்கள், தற்கட்டுப்பாடு, வாய்மை மற்றும் மனத்தை அடக்குதல் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதயத்தில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்கும் ஒருவன், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.(7) ஒருவன் பிறருடைய முக்கிய அங்கங்களுக்குத் தீங்கேற்படுத்தக்கூடாது. அவன் கொடூரப் பேச்சுகளைப் பேசக் கூடாது. அவன் ஒருபோதும் இழிந்தவர்களிடம் இருந்து சாத்திர போதனைகளைப் பெறக் கூடாது. பிறரைத் துன்பத்தில் பீடிக்கச் செய்யும் வார்த்தைகள், அவர்களை (துன்பத்தில்) எரிப்பதற்கான காரணமாகவும், நரகத்திற்கு வழிவகுக்கும் செயலாகவும் இருப்பதால் அவற்றை ஒருபோதும் பேசக்கூடாது.(8) உதடுகளில் இருந்து வார்த்தைகள் கணைகளாகப் பாய்கின்றன. (யாரை நோக்கி அவை ஏவப்படுகின்றனவோ அந்த) ஒருவன் அவற்றால் பீடிக்கப்பட்டு, உடனே எரிகிறான். அந்தக் கணைகள், இலக்காக்கப்பட்ட மனிதனின் முக்கிய அங்கத்தைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாக்குவதில்லை. எனவே, கல்விமானான ஒருவன் அவற்றை ஒருபோதும் பிறரின் மீது ஏவக்கூடாது.(9) ஒரு மனிதன் ஒரு ஞானியை சொற்கணைகளால் ஆழமாகத் துளைத்தால், அந்த ஞானியானவன் (கோபவசப்படாமல்) அமைதியைப் பின்பற்ற வேண்டும். கோபப்படத் தூண்டப்பட்டாலும் கோபத்தின் வசப்படாத மனிதன், அவ்வாறு தூண்டுபவனின் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அவனிடம் இருந்து அபகரித்துக் கொள்கிறான்.(10)
எதில் ஈடுபட்டால், அது பிறரைக் குறித்துக் குறை பேச வழிவகுத்து, அவனுக்கு {அவர்களை} எதிரியாக்குமோ, அந்த நெருப்பு போன்ற தன் கோபத்தை, எந்த அற ஆன்மா கொண்ட மனிதன், முழு இன்பத்துடன் கூடியவனாக, வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக அடக்குவானோ, அவன் பிறரின் தகுதிகளை {அவர்களிடம் இருந்து} எடுத்துக் கொள்கிறான்[1].(11) என்னைப் பொறுத்தவரையில், மற்றொருவர் என்னைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, ஒருபோதும் நான் அவற்றுக்குப் பதிலளிக்கமாட்டேன். தாக்கப்பட்டால் தாக்குபவனை எப்போதும் நான் மன்னிக்கவே செய்கிறேன். மன்னிக்கும் தன்மை, வாய்மை, கபடமின்மை {மனநேர்மை}, கருணை ஆகியனவே (அறங்கள் அனைத்திலும்) முதன்மையானவை என அறவோர் கருதுகின்றனர்.(12) வாய்மையே வேதங்களின் புதிராகும் {இரகசியமாகும்}. தற்கட்டுப்பாடே வாய்மையின் புதிராகும். விடுதலையே {முக்தியே} தற்கட்டுப்பாட்டின் புதிராகும். சாத்திரங்கள் அனைத்தின் போதனையும் இதுவேயாகும்[2].(13) எந்த மனிதன், கிளர்ந்தெழும் பேச்சுத் தூண்டலையும் {வாக்கின் வேகத்தையும்}, மனத்தில் தோன்றும் கோபத்தூண்டலையும் {கோபத்தின் வேகத்தையும்}, (தகாத பொருள்களில் கொள்ளும்) தாகத் தூண்டலையும், வயிறு மற்றும் இன்ப உறுப்பின் தூண்டல்களையும் {ஆசைகளின் வேகத்தையும்} அடக்குகிறானோ, அவனையே ஒரு பிராமணனாகவும், முனியாகவும் நான் கருதுகிறேன்.(14) எவன் கோப வசப்படாமல் இருக்கிறானோ, அவன் கோபப்படுபவனைவிட மேன்மையானவன். எவன் துறவைப் பயில்கிறானோ, அவன் துறவில்லாதவனை விட மேன்மையானவன், எவன் மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்கிறானோ, அவன் அவை இல்லாதவனைவிட மேன்மையானவன். எவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அஃது இல்லாதவனைவிட மேன்மையானவன்[3].(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "வசையையுண்டுபண்ணுவதும், ஆக்கிரகத்தால் அப்பிரியத்தைச் செய்வதும் ஜ்வலிக்கிறதுமான கோபத்தை அடக்குகிறவனும் கெட்ட எண்ணமில்லாதவனும், சந்தோஷமுடையவனும், அஸூயையற்றவனுமாயிருப்பவர் பிறருடைய புண்ணியத்தை அடைகின்றான்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "வேதத்தின் ரஹஸ்யம் ஸத்யம், ஸத்யத்தின் ரஹஸ்யம் அடக்கம். அடக்கத்தின் ரஹஸ்யம் மோக்ஷம். இதுவே எல்லாருடைய உபதேசமும்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "கோபத்தை அடையாதவன் கோபிக்கின்றவனுக்கு மேலானவன். பொறுமையுள்ளவன், பொறுமையில்லாதவனுக்கு மேலானவன். மனிதன் விலங்குகளுக்கு மேலானவன், அப்படியே, ஞானவான் ஞானமில்லாதவனைக் காட்டிலும் மேலானவன்" என்றிருக்கிறது.
கடுஞ்சொற்களால் ஒருவன் தாக்கப்படும்போதும், பதிலுக்கு அவனும் தாக்கக்கூடாது. உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் கோபத்தைத் துறக்கும் ஒருவன், அவ்வாறு தன்னைத் தாக்குபவனை எரித்து, அவனுடைய தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.(16) எவன் கடுமொழியால் தாக்கப்படும்போது, பதிலுக்குக் கடுமொழி பேசவில்லையோ, எவன் புகழப்படும்போது, அந்தப் புகழுரைகளை ஏற்றுப் பேசுவதில்லையோ, எவன் தாக்கப்படும்போதும், பதிலுக்குத் தாக்காமலும், தாக்குபவனுக்குத் தீங்கை விரும்பாமலும் மனோவுறுதியுடன் இருக்கிறானோ, அந்த மனிதன், தேவர்களாலும் விரும்பப்படும் தோழமையையே எப்போதும் அடைகிறான்.(17) அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுப் பழித்துக் கூறப்படும் ஒருவனால், {இந்தப் பாவங்களைச் செய்த} பாவியானவன், ஓர் அறவோனைப் போலக் கருதப்பட்டு மன்னிக்கப்பட வேண்டும். இவ்வழியில் செயல்படுவதன் மூலம் ஒருவன் வெற்றியை அடைகிறான்.(18) என் நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாலும், அறவோரிடம் எப்போதும் நான் மதிப்புடன் காத்திருக்கிறேன் {அவர்களுக்குப் பணீவிடை செய்கிறேன்}. எனக்கு எந்தத் தாகமும் {ஆசையும்} இல்லை. என் கோபம் அடக்கப்பட்டிருக்கிறது. பேராசையில் மயங்கி நான் ஒருபோதும் அறத்தின் பாதையில் இருந்து விழ மாட்டேன். செல்வத்திற்காக (செல்வத்திற்கான வேண்டுதல்களுடன்) நான் எவரையும் அணுகுவதில்லை[4].(19) சபிக்கப்பட்டால் பதிலுக்கு நான் சபிப்பதில்லை. தற்கட்டுப்பாடே அழிவின்மையின் {முக்தியின்} வாயில் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரும்புதிரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மனிதபிறவியை விட மேன்மையான நிலை ஏதும் இல்லை[5].(20)
[4] கும்பகோணம் பதிப்பில், "எனக்கு ஆசையும், கோபமும் மேலோங்குகிறதில்லை. நான் எதையும் அடைய விரும்பித் தர்மத்தை விட்டு விலகுகிறதில்லை. ஒன்றையும் தீய வழியில் அடைகிறதில்லை" என்றிருக்கிறது.
[5] கும்பகோணம் பதிப்பில், "என்னை ஒருவன் சபித்தாலும் நான் திரும்ப அவனைச் சபிக்கிறதில்லை. இவ்வுலகத்தில் அடக்கத்தை மோக்ஷத்திற்கு வாயிலாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்த அடக்கத்தை ரஹஸ்யமான பிரம்மமாகச் சொல்லுகிறேன். மானிட ஜன்மத்தைக் காட்டிலும் மிகவும் மேலானது ஒன்றுமில்லையன்றோ?" என்றிருக்கிறது.
இருளார்ந்த மேகங்களில் இருந்து {விடுபடும்} சந்திரனைப் போலப் பாவத்தில் இருந்து விடுபடும் ஞானியானவன், பிரகாசத்துடன் ஒளிர்ந்து, தன் காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் மூலம் வெற்றியை அடைகிறான்.(21) எவன் அண்டத்தைத் தாங்கும் முதன்மையான தூணாவதன் மூலம் அனைவருடைய துதியின் பொருளாகிறானோ {புகழப்படுகிறானோ}, எவனிடம் அனைவராலும் ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே பேசப்படுகிறதோ, அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதன் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(22) தூற்றுபவர்கள் {அவதூறு பேசுபவர்கள்}, ஒரு மனிதனின் தகுதியின்மைகளைக் குறித்துப் பேசத் தயாராக இருப்பதைப் போல அவனுடைய தகுதிகளைப் பேச ஒருபோதும் முன்வருவதில்லை.(23) எந்த மனிதன், தன் பேச்சையும், மனத்தையும் முறையாகக் கட்டுப்படுத்தி, பரமனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவனே வேதங்கள், தவங்கள் மற்றும் துறவின் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(24) ஞானியானவன், (பதிலுக்கு) இகழ்வதன் மூலமும், அவமதிப்பதன் மூலமும் தகுதியற்றவர்களை {புண்ணியமற்றவர்களை} ஒருபோதும் தூற்றக்கூடாது. அவன் {பிறரால் மிகைப்படப் புகழப்பட்டுப் பதிலுக்கு) பிறரை மிகைப்படப் புகழக்கூடாது. {மிகைப்படப் புகழ்வதன் மூலம்} தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.(25)
ஞானம் கொண்டவனும், கல்விமானுமான ஒரு மனிதன் அவதூறுகளை அமுதமாகக் கருதுகிறான். தூற்றப்பட்டாலும் அவன் கவலையில்லாமல் உறங்குகிறான். மறுபுறம், தூற்றியவனோ அழிவை அடைகிறான்.(26) கோபத்துடன் ஒருவன் செய்யும் வேள்விகள், கோபத்துடன் ஒருவன் தரும் கொடைகள், கோபத்துடன் ஒருவன் செய்யும் தவங்கள், கோபத்துடன் ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகள் ஆகியவற்றின் தகுதிகளை {புண்ணியங்களை} யமன் அபகரித்துக் கொள்கிறான். கோபமடையும் மனிதனின் உழைப்பனைத்தும் முற்றிலும் கனியற்றவையாகின்றன.(27) தேவர்களில் முதன்மையானவர்களே, இன்ப உறுப்பு, வயிறு, கரங்கள் இரண்டு, வாக்கு ஆகிய நான்கு வாயில்களையும் நன்கு கட்டுப்படுத்தும் மனிதனே அறமறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(28) வாய்மை, தற்கட்டுப்பாடு, கபடமின்மை, கருணை, பொறுமை, துறவு ஆகியவற்றை எப்போதும் பயிலும் மனிதன் வேத கல்வியில் அர்ப்பணிப்புமிக்கவனாகி, பிறரின் உடைமைகளில் பேராசை கொள்ளாமல், ஒரே நோக்கத்துடன் நன்மையானதைத் தேடி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(29) தாயின் மடியில் உள்ள நான்கு காம்புகளை உறிஞ்சிக் குடிக்கும் கன்றைப் போலவே ஒருவன் இந்த அறப்பயிற்சிகள் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வாய்மையை விடப் புனிதமான வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.(30)
மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில் திரிந்த பிறகு, பெருங்கடலைக் கடக்கும் தோணி மட்டுமே ஒரே வழிமுறையாக இருப்பதைப் போல, சொர்க்கத்தை அடைய வாய்மை மட்டுமே ஒரே வழி என்று நான் அறிவிக்கிறேன்.(31) ஒரு மனிதன் எவருடன் வசிக்கிறானோ அவரைப் போலவே, எவரை மதிக்கிறானோ அவரைப் போலவே, எவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்புகிறானோ அவ்வாறே ஆகிறான்.(32) ஒரு மனிதன் எந்த நல்லோனிடமோ அல்லோனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, தவத்தகுதியைக் கொண்ட எந்தத் தவசியிடமோ, கள்வனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, அந்த மனிதனின் பாதையிலேயே நடக்கும் அவன், மூழ்கிய சாயத்தின் வண்ணத்தை ஏற்கும் துணியைப் போல அவனது {அந்த மனிதனின்} வண்ணத்தை {குணத்தைப்} பற்றிக் கொள்கிறான்.(33) ஞானமும், நல்லியல்பும் கொண்டோரிடம் தேவர்கள் எப்போதும் உரையாடுகிறார்கள். எனவே, அவர்கள் மனிதர்கள் கொள்ளும் இன்பங்களைக் காண ஒருபோதும் விரும்புவதில்லை. (மனிதர்கள் பேணி வளர்க்கும்) இன்ப நுகர் பொருட்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளையும், {ஒன்றுக்கொன்று} சில பகைமைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த மனிதன், சந்திரனையும் காற்றையும் விட மேன்மையானவனாக ஆகிறான்[6].(34) ஒருவனுடைய இதயத்தில் குடியிருக்கும் புருஷன் {ஆத்மா} களங்கமடையாமல், அறப்பாதையில் நடக்கும்போது, தேவர்கள் அவனிடம் மகிழ்ச்சியடைகிறார்கள்.(35)
[6] "சந்திரன் அமுதத்தைக் கொண்டது. எனவே, அத்தகைய மனிதனுக்கு இணையானது; ஆனால் நிலவு வளரவும், தேயவும் செய்கிறது; எனவே, அனைத்து மாற்றங்களின் போதும் ஒரே மாதிரியாக இருக்கும் மனிதனிடம் நிலவால் இணையாக முடியாது. அதே போல, காற்றானது தான் சுமக்கும் புழுதியால் களங்கமடையாமல் இருந்தாலும், அத்தகைய மனிதனுக்கு இணையாகாது; ஏனெனில், காற்றானது மெதுவான, நடுத்தர வேகமுடைய, மிக வேகமான அசைவு எனும் மாற்றங்களைக் கொண்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுதும் தேவர்கள் ஸாதுக்களுடன் ஒற்றுமையாயிருக்கின்றார்கள். மானுஷவிஷயத்தை விரும்பவில்லை. சந்திரன் ஒரே விதமாயிருப்பதில்லை. வாயுவும் ஸமமாயிருப்பதில்லை. வளர்வதும், தேய்வதுமான விஷயத்தை எவன் அறிந்தானோ அவனே அறிந்தவன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தேவர்கள் எப்போதும் நல்லோருடன் உரையாடுகிறார்கள். மனித நோக்கங்களில் அவர்கள் விருப்பமுள்ளவர்களாக ஒருபோதும் காணப்பட்டதில்லை. சந்திரனையும், காற்றையும் போலப் பொருள்கள் வருகின்றன, போகின்றன என்பதை மனிதன் அறிய வேண்டும்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "சந்திரன் வளரவும், தேயவும் செய்கிறது, காற்று வருகிறது போகிறது" என்றிருக்கிறது.
இன்பப் புலன் {பிறப்புறுப்பு} மற்றும் வயிறு ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், களவுக்கு அடிமையாக இருப்பவர்கள், எப்போதும் கடுமொழியில் பேசுபவர்கள் ஆகியோர் உரிய சடங்குகளுடன் தங்கள் குற்றங்களான பாவக்கழிவுகளைச் செய்து கொண்டாலும், தேவர்கள் அவர்களைத் தொலைவிலேயே கைவிடுகிறார்கள்.(36) இழிந்த ஆன்மா கொண்டவன், உணவில் கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவன், பாவச் செயல்களைச் செய்பவன் ஆகியோரிடம் தேவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்வதில்லை. மறுபுறம் அத்தேவர்கள், வாய்மை நோன்பைப் பயில்பவர்கள், நன்றிமறக்காதவர்கள், அறப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்கிறார்கள்.(37) பேச்சை விட அமைதியே சிறந்தது. அமைதியைவிட வாய்மை பேசுவது சிறந்தது. மேலும் சொல்வதாக இருந்தால், வாய்மை பேசுவதை விட அறத்தொடர்புடன் வாய்மை பேசுவது மிகச் சிறந்தது. வாய்மையும் அறமும் கொண்டிருந்தாலும் ஏற்புடையதைப் பேசுவது, அறத்தொடர்புடைய உண்மை பேச்சைவிடச் சிறந்ததாகும்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(38)
சாத்யர்கள், "இவ்வுலகம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது? எக்காரணத்தால் ஒருவன் ஒளிரத் தவறுகிறான்? எக்காரணத்தால் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகின்றனர்? எக்காரணத்தால் மக்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்?" என்று கேட்டனர்.(39)
அன்னப்பறவை {பிரம்மன்}, "உலகமானது அறியாமை (எனும் இருளால்) மறைக்கப்பட்டிருக்கிறது. வன்மத்தின் விளைவால் மனிதர்கள் ஒளிரத் தவறுகின்றனர் {புகழடையத் தவறுகின்றனர்}. பேராசையால் தூண்டப்படும் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகிறார்கள். பற்றின் விளைவால் மனிதர்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(40)
சாத்யர்கள், "பிராமணர்களில் எவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? பலருக்கு மத்தியில் வசித்தாலும் அவர்களில் அமைதியின் நோன்பை எவனால் மட்டுமே நோற்க முடியும்? அவர்களுக்கு மத்தியில் பலவீனனாக இருந்தாலும் எவன் மட்டுமே பலவானாகக் கருதப்படுகிறான்? அவர்களுக்கு மத்தியில் எவன் மட்டுமே சச்சரவில் ஈடுபடுவதில்லை?" என்று கேட்டனர்.(41)
அன்னப்பறவை, "பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே, பலருக்கு மத்தியில் வசித்தாலும் அமைதியின் நோன்பை நோற்பதில் வெல்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே பலவீனனாக இருந்தாலும், பலவானாகக் கருதப்படுகிறான். அவர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே சச்சரவுகளைத் தவிர்ப்பதில் வெல்கிறான்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}[7].(42)
[7] "அறியாமை விலகிய மனிதனின் தகுதிகளைக் காட்டுவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமென உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார்.
சாத்யர்கள், "பிராமணர்களின் தெய்வீகத்தன்மை எதிலிருக்கிறது? எதில் அவர்களது தூய்மை இருக்கிறது? எதில் அவர்களது தூய்மையின்மை இருக்கிறது? எதில் அவர்களின் மனிதத்தன்மை இருக்கிறது?" என்று கேட்டனர்.(43)
அன்னப்பறவை, "வேத கல்வியிலேயே பிராமணர்களின் தெய்வீகத்தன்மை இருக்கிறது. அவர்களது நோன்புகளில் அவர்களின் தூய்மை இருக்கிறது. அவதூற்றில் {பரநிந்தனையில்} அவர்களது தூய்மையின்மை இருக்கிறது. மரணத்தில் அவர்களது மனிதத்தன்மை இருக்கிறது" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}"[7].(44)
பீஷ்மர் தொடர்ந்தார், "சாத்யர்கள் (மற்றும் அன்னப்பறவைக்கு) இடையில் நடைபெற்ற சிறந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உடலே (பருவுடன் மற்றும் நுண்ணுடல் ஆகிய இரண்டும்) செயல்கள் மற்றும் இருப்பு, அல்லது ஜீவன் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது என்பது உண்மை".(45)
சாந்திபர்வம் பகுதி – 300ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |