Tuesday, October 16, 2018

முக்திக்கான வழிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 299

The means leading to emancipation! | Shanti-Parva-Section-299 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 126) (பராசர கீதை - 9)


பதிவின் சுருக்கம் : முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)

ஜனகன் ஆண்ட மிதிலை (மிதிலாஞ்சல்)
ஜனகன் {பராசரரிடம்}, "எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, "(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)

[1] கங்குலியில் "பற்று இல்லாதவனைப் பாவம் பற்றுகிறது" என்று தவறுதலாக அச்சாகியுள்ளது. கும்பகோணம் பதிப்பில் "புத்தியில்லாதவனைப் பாவம் பற்றுகிறது" என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் "அறியாமையில் உள்ளவனைப் பாவம் பற்றுகிறது" என்றுமிருப்பதால், மேலுள்ள ஸ்லோகத்தில் {கும்பகோணம் பதிப்பில் உள்ளபடியே} திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)

[2] கும்பகோணம் பதிப்பில், "வரம்பிலே கட்டப்பட்ட தர்மமாகிற அணையானது உடைபடுகிறதில்லை. அணையினாலே பெருகின வெள்ளம்போலத் தரம் ஸமூஹமானது தானாக விருத்தியடைந்ததாகின்றது" என்றிருக்கிறது.

(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)

[3] "அந்த மிகச் சிறந்த ரத்தினத்தைப் போலவே ஜீவனும் யோகத்தின் மூலம் தன்னைத் தானே ஈர்த்துக் கொண்டு பிரம்ம நிலையை அடைகிறது என்ற பொருளை இந்த ஸ்லோகம் தருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)

[4] கும்பகோணம் பதிப்பில், "ஒன்றையொன்று ஆஸ்ரயித்ததும் வாழைத்தண்டு போலப் பலமில்லாததும் சரீரேந்திரியங்களுடைய கூட்டத்தோடு கூடியதுமான மானிட ஜன்மமானது வெள்ளத்தில் முழுகுகிற தோணி போல முழுகுகின்றது" என்றிருக்கிறது.

புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)

[5] "விரிவானவை என்பது நிலையற்ற இன்பங்களைக் கொண்ட பலன்கள் அனைத்தும் எனப் பொருள் கொள்ளப்படுகிறது; எனவே, வேதங்களிலும், பிற சாத்திரங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு செயல்களை இது குறிக்கிறது. சுருக்கமானவை என்பது துறவு அல்லது செயல்களைத் தவிர்ப்பது எனப் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது என்னவென்றால்: ‘அனைத்து வகை இன்பங்களையும் கனிகளாகக் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் துன்பத்தையே சந்திக்கிறார்கள்; அதே வேளையில் செயல்களைத் தவிர்ப்பவர்கள், அல்லது துறவைப் பயில்பவர்கள் மகிழ்ச்சியை அடைகின்றனர்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "விரிவாயுள்ளவைகள் துன்பத்தைத் தருகின்றன. சுருங்கினவைகளோ ஸுகத்தையளிக்கின்றன. விரிவானவையெல்லாம் ஆத்மாவைத்தவிர மற்றவைகளுக்காகவென்றும், சுருக்கமென்கிற தியாகத்தை ஆத்மாவுக்கு நன்மாயதென்றும் (அறிஞர்கள்) அறிகின்றார்கள்" என்றிருக்கிறது.

[6] "இந்த ஸ்லோகத்தின் பொருளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும். யோக முன்னேற்றத்தில் ஆன்மாவால் நிச்சயம் மனத்தையும், அதைப் பீடித்த பிற குணங்களையும் கைவிட முடியும். இந்த உவமை அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது. தாமரைத் தண்டு தன் வேர்களைச் சேற்றிலேயே கொண்டிருக்கிறது. எனவே, தாமரைத் தண்டானது விரைவாக மேல்நோக்கி வளர்ந்து சேற்றைத் தன் வேரிலேயே விட்டுவிடுகிறது எனக் கொள்ளலாமா?" என்ற கேள்வியுடன் கங்குலி இங்கே விளக்க முயல்கிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் தாமரைத் தண்டில் ஒட்டின சேறு சீக்கிரம் விட்டுப்போகிறதுபோலப் புருஷனுடைய ஆத்மாவானது மனத்தால் விடுபடுகிறது. மனமானது ஆத்மாவை இழுக்கிறது. ஆத்மா மனத்துடன் சேருகிறது. அது யோகத்துடன் கூடுகிறபொழுது அந்தப் பரமாத்மாவைப் பார்க்கிறது. இந்திரிய விஷயங்களில் பற்றுள்ள எவன் ஆத்மாவுக்கு வேறானவைகளின் காரியத்திலிருந்து கொண்டு அதைத் தன் காரியமாக நினைக்கிறானோ அவன் தன் காரியக்குறைவை அடைகின்றான்" என்றிருக்கிறது.

[7] "மனத்தால் உண்டாக்கப்பட்ட அண்டமானது பிறகு மனத்தாலேயே அழிக்கப்படுவதை விளக்குவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமென உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)

ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)

[8] "இன்பத்திற்குரிய பொருட்களைக் கைவிட்டு முக்தி அடைந்த ஒருவன் மறபிறவியை அடைவதில்லை என்பது இதன் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[9] "இந்த ஸ்லோகத்திற்குப் பொருள் கொள்வதில் நான் உரையாசிரியரையே பின்பற்றியிருக்கிறேன். (இந்தியாவில் உள்ள) மீனவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும்போது படகுகளை மூழ்கடித்துவிட்டு, அடுத்த நாளில் அவர்களுக்குத் தேவைப்படும்போது அவற்றை உயர்த்துவது நடைமுறையாகும். பேரலைகளிடம் கொண்ட அச்சத்தால் அவர்கள் தங்கள் படகுகளை மிதக்கவிட்டுச் செல்வதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "இங்கே சொல்லப்படும் பிரகிருதியானது, சத்வ, ரஜஸ் மற்றும் தமோ கணுங்களின் கலவையாகும். இந்த மூன்று குணங்களும் ஒன்றோடொன்று கலந்திருக்கும் வரையில், அஃதாவது எந்த ஒன்றும் {எந்தவொரு குணமும்} மற்ற இரண்டைவிட அதிகமாகாத வரையில் படைப்போ, புத்தியின் செயல்பாடோ ஏற்பட முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)

[11] "இந்த ஸ்லோகத்தில் பிரகிருதி என்பது முற்றிலும் வேறுபட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே அஃது அறியாமை என்று பொருள்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்" என்றார் {பராசரர்}".(47)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்".(48)

பராசர கீதை முற்றும்

சாந்திபர்வம் பகுதி – 299ல் உள்ள சுலோகங்கள் : 48

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்