Yoga-puissance! | Shanti-Parva-Section-301 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 128)
பதிவின் சுருக்கம் : யோகத்திற்கும், சாங்கியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு; யோக முறை; யோகிக்கான உணவுமுறை; யோகிகளின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, சாங்கிய மற்றும் யோக அமைப்புகளின் தத்துவங்களுக்கிடையில் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, நீர் அனைத்தையும் அறிதிருக்கிறீர்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சாங்கியத்தைப் பின்பற்றுபவர்கள் சாங்கிய அமைப்பைப் புகழ்கின்றனர், யோகிகளாக இருக்கும் மறுபிறப்பாளர்கள் யோக அமைப்பைப் புகழ்கிறார்கள். தங்கள் தங்களுக்குரிய அமைப்புகளின் மேன்மையை நிறுவுவதற்காக ஒவ்வொருவரும் தன்னுடைய அமைப்பே சிறந்ததென்று சொல்கிறார்கள்.(2) ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, யோகத்தில் அர்ப்பணிப்புடைய ஞானிகள், கடவுளின் இருப்பை நம்பாதவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது என்று காட்டுவதற்காக முறையான, மிக நல்ல காரணங்களைச் சொல்கிறார்கள்.(3) மேலும் சாங்கியக் கோட்பாடுகளை நம்பும் மறுபிறப்பாளர்கள், ஒருவன் அனைத்தின் முடிவுகளின் உண்மையான ஞானத்தை அடைவதன் மூலம், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு,(4) இந்த உடலைவிட்டுச் சென்ற பிறகு, அவன் விடுதலையடைய வேண்டுமேயன்றி வேறில்லை என்று காட்டுவதற்காக நல்ல காரணங்களை முன்வைக்கிறார்கள். பெரும் ஞானம் கொண்ட மனிதர்கள் விடுதலைக்கான {முக்திக்கான} சாங்கிய தத்துவத்தை இவ்வாறே விளக்கியிருக்கிறார்கள்.(5)
இரு தரப்பிலும் காரணங்கள் இவ்வாறு சமமாக இருக்கும்போது, ஒரு தரப்பில் இருப்பவன் மாற்றுத் தரப்பை தனதாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தால் அவனை {அத்தரப்பு} ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில், அத்தரப்பில் சொல்லப்படும் வார்த்தைகள் நன்மையானவை என்று கருதப்பட வேண்டும். இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் காணப்படுகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் இவற்றில் எக்கருத்தையும் பின்பற்றலாம்.(6) யோகத்தின் சாட்சிகள், நேரடியாகப் புலன்களின் உற்றறியும் திறனால் சொல்லப்படுகின்றன; சாங்கியத்தினுடையவை சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இந்த இரு தத்துவ அமைப்புகளும் என்னால் அங்கீகரிக்கப்படுகின்றன.(7) ஓ! மன்னா, இந்த அறிவியல் அமைப்புகள் இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு, மேலும் நல்லோர் மற்றும் ஞானிகளின் உடன்பாடும் உண்டு. ஓ! மன்னா, விதிகப்பட்ட அறிவுரைகளின்படி பயிலப்பட்டால் இவை இரண்டும் ஒரு மனிதனை உயர்ந்த கதி அடைய வைக்கின்றன.(8) ஓ! பாவமற்றவனே, இவ்வமைப்புகள் இரண்டிலும் தூய்மையும், அனைத்து உயிரினங்களிடம் கொள்ளும் கருணையும் சமமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் நோற்க வேண்டிய நோன்புகளும் இவ்விரண்டிலும் சமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பாதைகளைச் சுட்டிக்காட்டும் சாத்திரங்கள் மட்டுமே வேறுபடுகின்றன" என்றார் {பீஷ்மர்}.(9)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இரண்டு அமைப்புகளிலும் பரிந்துரைக்கப்படும் நோன்புகள், தூய்மை, கருணை மற்றும் கனிகள் ஆகியன ஒன்றேயெனில், அவற்றின் சாத்திரங்கள் (அவை பரிந்துரைக்கும் பாதைகளைப் பொறுத்தவரையில்) என்ன காரணத்தால் ஒன்றாக இல்லை?" என்று கேட்டான்.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "யோகத்தின் துணை மூலம், பற்று {ராகம்}, கவனமின்மை {மோகம்}, பாசம் {ஸ்நேகம்}, காமம், கோபம் {க்ரோதம்} ஆகிய ஐந்து களங்கங்களை {தோஷங்களைக்} கைவிடுவதால் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(11) பெரிய மீன்கள், வலையை அறுத்துக் கொண்டு, (இன்பத்தில் உலாவ) தங்கள் சொந்த பூதத்திற்குள் {நீருக்குள்} செல்வதைப் போலவே யோகிகளும் (காமம், கோபம் முதலியவற்றை அறுத்துக் கொண்டு) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, விடுதலையெனும் {முக்தியெனும்} பேரின்பத்தை அடைகிறார்கள்.(12) வலிமைமிக்க விலங்குகள், தங்களைப் பிடிக்க வேடர்களால் விரிக்கப்படும் வலைகளை அறுத்துக் கொண்டு, விடுதலையெனும் இன்பநிலைக்குள் தப்பிச் செல்வதைப் போலவே, யோகிகளும் கட்டுகள் {பந்தங்கள்} அனைத்திலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கு வழிவகுக்கும் பாவமற்ற பாதையை அடைகிறார்கள்.(13) ஓ! மன்னா, உண்மையில் பேராசையில் பிறக்கும் கட்டுகளை அறுப்பவர்களும், பலத்துடன் கூடியவர்களுமான யோகிகள், விடுதலைக்கான {முக்திக்கான} பாவமற்ற மங்கலமான, உயர்ந்த பாதையை அடைகிறார்கள்.(14) ஓ! ஏகாதிபதி, வலைகளில் அகப்படும் பலவீனமான விலங்குகள் நிச்சயம் அழிவடையும். யோக பலமற்ற மனிதர்களின் வழக்கும் அவ்வாறே ஆகிறது.(15)
ஓ! குந்தியின் மகனே, ஓ! ஏகாதிபதி, வலையில் விழுந்து அதனில் சிக்கிக் கொள்ளும் பலவீனமான மீன்களைப் போலவே, யோக பலமற்றவர்கள் (உலகக் கட்டுகளின் மத்தியில்) அழிவை அடைகிறார்கள்.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வேடர்கள் விரிக்கும் நுட்பமான வலைகளில் பறவைகள் சிக்கும்போது, (பலவீனமாக இருந்தால்) அழிவைச் சந்தித்து, பலத்துடனிருந்தால் தப்பிச் செல்வதைப் போலவே,(17) யோகிகளுக்கும் நேர்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, செயல்பாட்டு பந்தங்களால் கட்டப்பட்ட பலவீனமானவர்கள் அழிவை அடைகிறார்கள், அதே வேளையில் பலமுடையவர்க்ள அவற்றை உடைக்கின்றனர்.(18) ஓ! மன்னா, வலுவில்லாத சிறு நெருப்பானது, தன் மீது பெரும் மரங்கள் போடப்பட்டால் அணைந்து போகிறது. ஓ! மன்னா, அதே போலவே பலமில்லாத யோகியானவன் (உலகத்துடனும், அதன் பற்றுகளிலும் தொடர்பு கொள்ளும்போது) அழிவை அடைகிறான்.(19) எனினும், ஓ! ஏகாதிபதி, அதே நெருப்பு வலுவடையும்போது (அணையாமல்) காற்றின் உதவியோடு மொத்த பூமியையும் எரிக்கக்கூடும்.(20) அதே போலவே, பலத்தில் வளர்ந்து, சக்தியுடன் எரிந்து வலிமையுடன் இருக்கும் யோகியானவன், அண்ட அழிவில் எழும் சூரியனைப் போல மொத்த அண்டத்தையே எரிக்கவல்லவனாகிறான்.(21)
ஓ! மன்னா, ஒரு பலவீனமான மனிதன் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, ஒரு பலவீனமான யோகி ஆதரவற்ற நிலையில் புலன்நுகர்பொருட்களால் அடித்துச் செல்லப்படுகிறான்.(22) ஒரு யானை பலமிக்கப் பெரிய ஓடையையும் தாக்குப்பிடிக்கிறது. அதே போலவே, யோகபலமடைந்த ஒரு யோகியும் புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் தாக்குப்பிடிக்கிறான்.(23) அனைத்துப் பொருட்களின் சார்பற்றவர்களும், யோக பலமும், தலைமைப்பண்பும் கொண்டவர்களான யோகிகளானவர்கள், படைப்பின் தலைவர்கள், முனிவர்கள், தேவர்கள், அண்டத்தின் பெரும்பூதங்கள் ஆகியவற்றுக்குள் (ஆகியவர்களின் / ஆகியவற்றின் இதயங்களுக்குள்) நுழைகின்றனர்.(24) ஓ! மன்னா, யமனாலோ, அந்தகனாலோ, பயங்கர ஆற்றலைக் கொண்ட மிருத்யுவாலோ அளவில்லா சக்தி கொண்ட ஒரு யோகியைக் கோபத்தில் முறியடிக்க முடியாது.(25)
யோகபலமடையும் யோகியால், ஆயிரக்கணக்கான உடல்களை உண்டாக்கி, அவற்றுடன் பூமியில் உலவ முடியும்.(26) அவர்களில் சிலர் புலன் நுகர் பொருட்களை அனுபவித்துப் பிறகு மீண்டும் கடும் தவப்பயிற்சிகளில் தங்கள் நிறுவிக் கொண்டு (கதிர்களை விலக்கிக் கொள்ளும்) சூரியனைப் போல அத்தகைய தவங்களில் இருந்து மீண்டும் விலகுகிறார்கள்.(27) பலம் கொண்டவனும், கட்டுகளால் கட்டப்பட முடியாதவனுமான யோகி, விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(28) ஓ! ஏகாதிபதி, யோக சக்திகள் குறித்து நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். யோகத்தின் நுட்பமான சக்திகளையும், அவற்றின் குறியீடுகளையும் நான் மீண்டும் சொல்கிறேன்.(29) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தாரணை மற்றும் {யோகத்தால் ஏற்படும்} ஆத்மாவின் சமாதி நிலை ஆகியவற்றின் நுட்பமான குறியீடுகளைக் கேட்பாயாக[1].(30)
[1] "தாரணை என்பது ஆன்மாவை உலவவிடாமல் தற்சிந்தனையில் நிலைக்க வைப்பதாகும். சமாதி என்பது முற்றாக நுண்மமாகுதல் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விழிப்புடன், கவனத்துடனும் கூடிய ஒரு வில்லாளி தன் இலக்கை அடிப்பதில் வெல்வதைப் போலவே, ஆன்மாவில் ஈர்க்கப்பட்ட யோகியும் விடுதலை அடைகிறான் என்பதில் ஐயமில்லை.(31) (தலையில் வைக்கப்பட்ட) நீர் நிறைந்த பாத்திரத்தில் மனத்தை நிலைக்கச் செய்து படிகளில் விழிப்புடன் நடக்கும் ஒரு மனிதனைப் போலவே,(32) தன் ஆன்மாவில் நிலைத்து ஈர்க்கப்பட்ட யோகியும், அஃதை {ஆன்மாவைத்} தூய்மைப்படுத்தி, சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்கிறான்.(33) ஓ குந்தியின் மகனே, கடலின் பரப்பில் தூக்கிவீசப்படும் படகானது விழிப்புடன் கூடிய படகோட்டியால் மறுகரைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே,(34) ஓ! ஏகாதிபதி, ஞானம் கொண்ட மனிதனும், தன் ஆன்மாவை சமாதியில் நிலைக்கச் செய்து, தன் உடலைக் கைவிட்ட பிறகு அடைதற்கரிய விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(35)
ஓ! மன்னா, விழிப்புடன் கூடிய தேரோட்டியானவன், (தேரில்) நல்ல குதிரைகளைப் பூட்டி, தேர்வீரன் விரும்பும் இடத்திற்கு அவனை இட்டுச் செல்வதைப் போலே,(36) ஓ! ஏகாதிபதி, தாரணையில் விழிப்புடன் இருக்கும் யோகியும், வில்லில் இருந்து ஏவப்பட்டு, இலக்காக வைக்கப்பட்ட இடத்தை அடையும் ஒரு கணையைப் போல உயர்ந்த இடத்தை (விடுதலையை {முக்தியை}) விரைவில் அடைகிறான்.(37) ஆன்மாவில் தன்னைச் செலுத்தி அங்கேயே அசையாமல் இருக்கும் யோகி, தன் பாவங்களை அழித்து, அறவோரால் அடையப்படும் அழிவற்ற இடத்தை அடைகிறான்.(38) ஓ! மன்னா, உயர்ந்த நோன்புகளை {மஹாவிரதத்தை} விழிப்புடன் நோற்கும் யோகியானவன், தன் ஜீவாத்மாவை நாபி {தொப்புள்}, மிடறு {தொண்டை}, தலை, இதயம், மார்பு, விலாப்புறங்கள், கண், காது, மூக்கு ஆகியவற்றில் இருக்கும் நுண் ஆத்மாவில் முறையாகக் கலந்து, மலையளவுக்கு இருக்கும் தன் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்கள் {புண்ணியப் பாவங்கள்} அனைத்தையும் எரித்து, சிறந்த யோகத்தைப் பயின்று விடுதலையை {முக்தியை} அடைகிறான்" என்றார் {பீஷ்மர்}, (39-41)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பாரதரே, எந்த வகை உணவுகள் உண்டு, எந்தப் பொருட்களை வென்றால் ஒரு யோகியால் யோகபலத்தை அடைய முடியும் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(42)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதா, பிண்ணாக்கையும், நொய் அரிசியையும் உண்டு, எண்ணெயையும் {தைலங்களையும்}, வெண்ணையையும் தவிர்க்கும் யோகியானவன், யோக பலத்தை அடைவான்.(43) நீருடன் கலக்காத வாற்கோதுமை மாவை {யவபிஷ்டத்தை} நெடுங்காலம் உண்பதன் மூலமும், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே எனத் தன் உணவைச் சுருக்கிக் கொள்வதன் மூலமும், தூய ஆன்மா கொண்ட யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(44) முதலில் நாளின் ஒரே ஒரு வேளையும், பிறகு ஒரு பிறைநாளுக்கு {ஒரு பக்ஷகாலத்திற்கு} ஒரு முறையும், பிறகு மூன்று மாதங்களில் ஒரு முறையும், பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் பாலுடன் கலந்த நீரை மட்டுமே பருகும் யோகியானவன் யோக பலத்தை அடைகிறான்.(45) ஓ! மன்னா, இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் தூயஆன்மா கொண்ட யோகியானவன் பலத்தை அடைகிறான்.(46) காமம், கோபம், வெப்பம், குளிர், மழை, அச்சம், துயரம், மூச்சு, மனிதர்களுக்கு ஏற்புடைய அனைத்து ஒலிகள், புலன்நுகர் பொருட்கள்,(47) ஓ! மன்னா, வெல்வதற்கு அரிதானதும், கலவி இன்பத்தைத் தவிர்ப்பதால் பிறப்பதுமான மனஉலைவு, பயங்கரத் தாகம், தீண்டலாலும், உறக்கத்தாலும் கிட்டும் இன்பங்கள், கிட்டத்தட்ட வெல்லப்பட முடியாத காலதாமதம் ஆகியவற்றில் இருந்து, ஓ! மன்னர்களில் சிறந்தவனே,(48) பற்றில்லாதவர்களும், பெரும் ஞானம் கொண்டவர்களுமான யோகிகள், நுட்பமான ஆன்மாவைத் தங்கள் புத்திகளின் துணையாலும், கல்வி மற்றும் தியானம் எனும் செல்வங்களின் துணையாலும் விலகியிருக்கச் செய்கிறார்கள்.(49)
கல்விமான்களான பிராமணர்களின் இந்த உயர்ந்த (யோக) பாதையானது நடப்பதற்கு மிகக் கடினமானதாகும். எவராலும் இந்தப் பாதையில் எளிதாக நடக்க முடியாது.(50) இப்பாதையானது, எண்ணற்ற பாம்புகளும், தவழும் மண்புழுக்களும் நிறைந்ததும், எங்கும் (மறைவான) குழிகளைக் கொண்டதும், ஒருவனுடைய தாகத்தைத் தணிக்கும் நீரில்லாததும், முட்கள் நிறைந்ததும், அதனால் நடக்க முடியாத வகையில் இருக்கும் ஒரு பயங்கரக் காட்டைப் போன்றதாகும்.(51) உண்மையில் இந்த யோகப் பாதையானது, உணவுகள் கிடைக்காததும், காட்டுத்தீயில் எரிக்கப்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு பாலைவனத்தின் ஊடாகச் செல்வதும், கள்வர்க்கூட்டங்களால் மொய்க்கப்பட்டுப் பாதுகாப்பற்றதாக இருப்பதுமான ஒரு சாலையைப் போன்றதாகும். (இலக்கை அடைவதற்காக) வெகு சில இளைஞர்களால் மட்டுமே இதைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முடியும்.(52) இந்த இயல்பைக் கொண்ட பாதையைப் போலவே, சில பிராமணர்களால் {மட்டுமே} எளிதாகவும், சுகமாகவும் யோகபாதையில் நடந்து செல்ல முடியும். இப்பாதையை அடைந்து, நடப்பதை நிறுத்தும் (சற்று முன்னேறியதும் புறமுதுகிடும்) மனிதன், பல களங்கங்களைக் கொண்ட குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.(53) ஓ! பூமியின் தலைவா, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால், கத்தியைப் போன்ற கூர்முனை கொண்ட தியான யோகத்தில் எளிதாக நிற்க முடியும். எனினும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டாரால் அவ்வாறு நிற்க முடியாது.(54) தியானயோகம் கலையும்போது, அல்லது அதற்குத் தடையேற்படும்போது, பயணிகளை மறுகரைக்குக் கொண்டு செல்ல இயலாத தலைவனில்லாத தோணியைப் போல, அஃது அந்த யோகியை மங்கலமான கதிக்கு வழிநடத்துவதில்லை.(55)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உரிய சடங்குகளுடன் தியான யோகத்தைப் பயிலும் மனிதன், பிறப்பு மற்றும் இறப்பு, மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கைவிடுவதில் வெல்கிறான்.(56) நான் சொல்லும் இவை அனைத்தும் யோகம் குறித்த பல்வேறு சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. யோகத்தின் உயர்ந்த கனிகள் மறுபிறப்பாள வகையினரிடம் காணப்படுகின்றன.(57) அந்த உயர்ந்த கனியானது பிரம்மத்தைப் போன்றதாகும். மகிமை கொண்ட உயர் ஆன்ம யோகியால், தேவர்கள் அனைவரின் தலைவனான பிரம்மன், வரமளிக்கும் விஷ்ணு, பவன், தர்மன், ஆறுமுகம் கொண்ட கார்த்திகேயன், பிரம்மனின் (மானஸ) மகன்கள், அதிகத் துன்பத்தை உண்டாக்கும் இருள் குணம் {தமோ குணம்}, ஆசை குணம் {ரஜஸ் குணம்}, தூய்மையான சத்வ குணம், உயர்ந்ததான பிரகிருதி, வருணனைக் கணவனாகக் கொண்ட சித்தி தேவி, அனைத்து வகைச் சக்திகள், அனைத்தையும் தாங்கும் பொறுமை, சுற்றிலும் மின்னும் நட்சத்திரங்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் பிரகாசமான தலைவன் {சந்திரன்}, விஸ்வர்கள், (பெரும்) பாம்புகள், பித்ருக்கள், மலைகள், குன்றுகள், பயங்கரமான பெரிய கடல்கள், ஆறுகள், மழை நிறைந்த மேகங்கள், பாம்புகள், மரங்கள், யக்ஷர்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகள், கந்தர்வர்கள், ஆடவர்கள், பெண்கள் ஆகியோருக்குள் தன் விருப்பப்படியே நுழையவும் வெளியேறவும் முடியும்.(58-61) ஓ மன்னா, வலிமையான சக்தி கொண்ட பரம்பொருளுடன் தொடர்புடைய இந்த உரையாடல் மங்கலமானதாகக் கருதப்பட வேண்டும். யோகியானவன், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கிறான். (பரமனில் ஆழ்ந்த தியானத்தின் மூலம்) அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்கும் உயர் ஆன்ம யோகியால் அனைத்துப் பொருட்களையும் படைக்கவும் முடியும்" என்றார் {பீஷ்மர்}.(62)
சாந்தி பர்வம் - பாகம் 2 முற்றிற்று
சாந்திபர்வம் பகுதி – 301ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |