Saturday, October 20, 2018

சாங்கிய தத்துவம்! - சாந்திபர்வம் பகுதி – 302

The philosophy of Sankhya system! | Shanti-Parva-Section-302 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 129)


பதிவின் சுருக்கம் : உடலையும், ஆன்மாவையும் சாங்கியர்கள் புரிந்து கொள்ளும் வகை; அவர்கள் முக்தி அடையும் முறை; உடலின் களங்கங்கள்; அவற்றைச் சாங்கியர்கள் அகற்றும் வழிமுறை; சாங்கிய தத்துவத்தின் மேன்மை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, அன்புள்ள ஒரு குரு தன் சீடனிடம் சொல்வதுபோல, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட யோக பாதையை முறையாக எனக்கு விளக்கியிருக்கிறீர்.(1) நான் இப்போது சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைக் குறித்துக் கேட்கிறேன். அந்தக் கோட்பாடுகளை முழுமையாக எனக்கு உரைப்பீராக. மூவுலகங்களில் உள்ள ஞானம் உம்மால் அறியப்பட்டிருக்கிறது" என்றான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தெளிவான ஆன்ம அறிவைக் கொண்டவர்களும், சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களுமான அனைவரின் நுண்கோட்பாடுகள் என்னென்ன என்பதை இப்போது கேட்பாயாக. அந்தக் கோட்பாடுகள், கபிலரைத் தங்களில் முதல்வராகக் கொண்டவர்களும், பலமிக்கவர்களுமான பெரும் யதிகள் {சாங்கியர்கள்} அனைவராலும் நிறுவப்பட்டவையாகும். ஓ! மனிதர்களின் தலைவா, அந்தக் கோட்பாட்டில் பிழைகள் {தோஷங்கள்} ஏதும் தென்படுவதில்லை.(4) அதன் தகுதிகள் {புண்ணியங்கள்} பலவாகும்.

அனைத்துப் பொருட்களும் பிழைகள் உள்ளவையே என்பதை அறிவின் துணையுடன் புரிந்து கொண்டும், மனிதர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பித்ருக்கள், (பறவைகளாகவும், விலங்குகளாகவும்) இடைநிலை வகைகளில் உலவிக் கொண்டிருப்பவை, (கருடன் முதலிய) பெரும்பறவைகள், மருத்துகள், அரசமுனிகள், மறுபிறப்பாள தவசிகள், அசுரர்கள், விஸ்வேதேவர்கள், தெய்வீக முனிவர்கள், பரம் கண்ட யோகியர், பிரஜாபதிகள், பிரம்மன் ஆகியோரும் கைவிடுவதற்கு அரிதான பொருட்களைப் புரிந்து கொண்டும், இவ்வுலகில் ஒருவன் இருக்கப்போகும் காலத்தின் உயர்ந்த எல்லையை உண்மையில் புரிந்து கொண்டும், இம்மையில் இன்பநிலை என்று அழைக்கப்படும் பெரும் உண்மையையும் புரிந்து கொண்டும், ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே,(5-10) (நிலையற்ற) பொருட்களின் தொடர்புடைய கவலைகள் அனைத்தையும் குறித்த தெளிவான அறிவுடனும், இடைநிலை வகையில் வீழ்ந்தோர், நரகத்தில் மூழ்கியோர் ஆகியோரின் கவலைகளை முழுமையாக நன்றாக அறிந்து கொண்டும்,(11) சொர்க்கத்தின் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் களங்கங்கள் {பாவங்கள்} அனைத்தையும் கண்டும், ஓ பாரதா, வேத தீர்மானங்களோடு தொடர்புடைய தகுதியின்மைகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய சிறப்புகள் அனைத்தையும் கண்டும்,(12) யோக மற்றும் சாங்கிய அமைப்பு தத்துவங்களின் நிறைகுறைகளை உணர்ந்தும்,(13) சத்வ குணம் பத்து தன்மைகளைக் கொண்டதென்றும்[1], ரஜஸ் குணத்திற்கு ஒன்பதென்றும்[2], தமஸ் குணத்திற்கு எட்டு என்றும்[3], புத்திக்கு ஏழு தன்மைகள் என்றும்[4],(14) மனத்திற்கு ஆறு என்றும்[5], வெளிக்கும் {ஆகாயத்திற்கு} ஐந்தென்றும் உணர்ந்து[6], அதற்கு மேலும் புத்திக்கு நான்கு தன்மைகளும்[7], தமஸ் குணத்திற்கு மூன்றும்[8],(15) ரஜஸ் குணத்திற்கு இரண்டும்[9], சத்வ குணத்திற்கு ஒரு தன்மையும் உண்டென்று உணர்ந்து கொண்டும்[10], அழிவடையும்போது பொருட்கள் அனைத்தும் பின்பற்றும் பாதையையும், தன்னறிவின் {சுயஞானத்தின்} போக்கையும் உண்மையில் புரிந்து கொண்டும்,(16) அறிவும், அனுபவமும் கொண்டவர்களும், காரணங்களில் தாங்கள் கொண்ட கருத்துகளால் மேன்மையடைந்தவர்களுமான சாங்கியர்கள், முற்றான மங்கல நிலையை அடைந்து, சூரியக் கதிர்களைப் போலவோ, காற்றைப் போலவோ வெளியில் {ஆகாயத்தில்} புகலிடத்தை அமைத்துக் கொண்டு, விடுதலையின் {முக்தியின்} இன்ப நிலையை அடைகிறார்கள்[11].(17)

[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "ஆனந்தம், ப்ரீதி, கெட்ட விஷயத்தில் நடுக்கம், மனத்தின் பிரகாசம், புண்ணியத்தை நாடுதல், ஸந்தோஷம், ஸ்ரத்தை, நேராயிருத்தல், த்யாகத்தில் நாட்டம், ஐஸ்வர்யம்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "ஆஸ்திகத்தன்மை, ஈயாதவனாயிராமை, ஸுகதுக்கங்களை ஸேவித்தல், பேதப்படுத்தல், புருஷகாரம், காமம், க்ரோதம், மதம், கர்வத்தினாலும், த்வேஷத்தினாலும் உண்டாகும் அதிகப்பேச்சு" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "தமஸ், மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்தாமிஸ்ரம், நித்ரை, அஜாக்ரதை, சோம்பல்" என்றிருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "மஹத்தத்வம், அஹங்காரம், ஸூக்ஷ்ம்பூதங்களான தன்மாத்திரைகள் ஐந்து" என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "வெளிப்புலன்களின் செய்கை ஐந்து, ஸங்கல்பம்" என்றிருக்கிறது.

[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "சப்தமுதலியவை" என்றிருக்கிறது.

[7] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "ஸம்சயம், நிச்சயம், அகங்காரம், ஸ்மரணம்" என்றிருக்கிறது.

[8] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "ஐயம், திரிபு, அறியாமை" என்றிருக்கிறது.

[9] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இவை, "ப்ரவ்ருத்தி, துக்கம்" என்றிருக்கிறது.

[10] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், இது, "ப்ரகாசம்" என்றிருக்கிறது.

[11] மேற்கண்ட [1] முதல் [10] வரையுள்ள கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்புகளின் தொகுப்பானது கங்குலியில் இந்த [11] அடிக்குறிப்பில் சொல்லப்படுகிறது. "சத்வ குணத்தின் பத்துக் குணங்கள், மகிழ்ச்சி {ஆனந்தம்}, உற்சாகம் {ப்ரீதி}, ஆர்வம் {கெட்ட விஷயத்தில் நடுக்கம்}, புகழ் {மனத்தின் பிரகாசம்}, அறம் {புண்ணியத்தை நாடுதல்}, நிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை {ஸ்ரத்தை}, நேர்மை, தயாளம் {த்யாகத்தில் நாட்டம்} மற்றும் தலைமைப் பண்பு {ஐஸ்வர்யம்} ஆகியவையே. ரஜஸ் குணத்தின் ஒன்பது குணங்கள் தேவர்களிடம் நம்பிக்கை {ஆஸ்திகத்தன்மை}, (பகட்டான) ஈகை {ஈயாதவனாயிராமை}, இன்பதுன்பங்களை அனுபவித்தல் {ஸுகதுக்கங்களை ஸேவித்தல்}, ஒற்றுமையின்மை {பேதப்படுத்தல்}, ஆண்மையை வெளிப்படுத்தல் {புருஷகாரம்}, காமம், கோபம் {க்ரோதம்}, வெறி {மதம்}, வன்மம் மற்றும் அவதூறு கூறும் மனநிலை {கர்வத்தினாலும், த்வேஷத்தினாலும் உண்டாகும் அதிகப்பேச்சு} ஆகியவையே. தமஸ், அல்லது இருள் குணத்தின் எட்டுக் குணங்கள், விழிப்பின்மை {தமஸ்}, மயக்கம் {மோகம்}, அதீத மயக்கம் {மகாமோகம்}, மிக அதீத மயக்கம் தாமிஸ்ரம், புத்திக்கலக்கம் {அந்தாமிஸ்ரம்}, உறக்கம் {நித்ரை}, {விழிப்புணர்வின்மை} அஜாக்ரதை, எதிலும் தாமதம் {சோம்பல்} ஆகியவையே. புத்தியின் ஏழு குணங்கள், மஹத்தத்வம், நனவுநிலை {அஹங்காரம்}, நுட்பமான ஐந்து பூதங்கள் {ஸூக்ஷ்ம்பூதங்களான தன்மாத்திரைகள் ஐந்து} ஆகியவையே. மனத்தின் ஆறு நிகழ்வுகள் மனமும், ஐம்புலன்களுமாகும். வெளியின் ஐந்து நிகழ்வுகள் வெளி, நீர், காற்று, ஒளி மற்றும் பூமியாகும். வேறு தத்துவப் பள்ளியின்படி புத்தியானது ஐயம் {ஸம்சயம்}, உறுதிப்பாடு {நிச்சயம்}, செருக்கு {அஹங்காரம்} மற்றும் நினைவு {ஸ்மரணம்} ஆகிய நான்கைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தமஸ் குணமும் புரிந்து கொள்ள இயலாமை {ஐயம்}, ஓரளவு புரிந்து கொள்தல் {திரிபு}, மொத்தமாகப் பிழையாகப் புரிந்து கொள்ளுதல் {அறியாமை} என்ற மூன்றைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ரஜஸ் குணமும் (வேறு தத்துவப்பள்ளியின்படி) செயல்படத் தூண்டல் {ப்ரவிருத்தி} மற்றும் கவலை {துக்கம்} என்ற இரண்டைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சத்வத்திற்கு {வேறு தத்துவப் பள்ளியின்படி} ஞானம் {ப்ரகாசம்} ஒன்றே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வடிவத்தைச் சார்ந்தது பார்வை {கண்}; மணத்தைச் சார்ந்தது மணப்புலன் {மூக்கு}; ஒலிக்கு காது; சாறுகளுக்கு நாவு;(18) தீண்டலுக்குத் தோல் (அல்லது உடல்). காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மயக்கமானது {அறியாமை} தமஸையே (இருளையே) தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. பேராசையானது புலன்நுகர் பொருட்களையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது.(19) அசைவை {நகர்வை} (அசைவுப்புலன்களைச்) சார்ந்தவன் விஷ்ணு. பலம் (பலத்தின் புலன்களைச்} சார்ந்தவன் இந்திரன். வயிற்றைச் சார்ந்தவன் நெருப்பு தேவன் {அக்னி}. நீர்நிலைகளைச் சார்ந்தவள் பூமாதேவி. நீர்நிலைகள் வெப்பத்தையே (அல்லது நெருப்பையே) தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன.(20) காற்றைச் சார்ந்தது வெப்பம்; காற்றானது வெளியையே {ஆகாயத்தையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; வெளியானது மஹத்-ஐயே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. மஹத்-க்கு புத்தியே அடித்தளமாக இருக்கிறது.(21) புத்தியானது தமஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; தமஸ் குணமானது ரஜஸ் குணத்தையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது; ரஜஸ் குணமானது சத்வ குணத்தையே அடைப்படையாகக் கொண்டுள்ளது; சத்வ குணமானது ஆன்மாவைச் சார்ந்திருக்கிறது.(22) ஆன்மாவானது மகிமையும் பலமும் மிக்க நாராயணனைத் தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறது. அந்த மகிமைமிக்கத் தேவன் விடுதலையை {முக்தியைத்} தன் புகலிடமாகக் கொண்டிருக்கிறான். விடுதலையானது அனைத்துப் புகலிடங்களின் சார்பும் அற்றதாக இருக்கிறது.(23)

இவ்வுடலானது, பதினாறு உடைமைகளைக் கொண்டது[12], சத்வ குணத்தின் விளைவாகவும் இருப்பது என்பதை அறிந்து கொண்டும், உயிரின உடலின் இயல்பையும், அதற்குள் வசிக்கும் சேதனையின் {பூர்வ வாசனையின்} தன்மையையும் முழுமையாகப் புரிந்து கொண்டும்,(24) உடலுக்குள் வாழும் ஓர் இருப்பும், உடலின் ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் தனித்திருப்பதும், எந்தப் பாவமும் பற்றமுடியாததுமான ஆத்மாவை உணர்ந்து கொண்டும், புலன் நுகர் பொருட்களில் பற்று கொண்டோரின் செயல்கள் எனும் இரண்டாம் பொருளின் இயல்பை உணர்ந்து கொண்டும்,(25) புலன்கள் மற்றும் ஆன்மாவைத் தங்கள் புகலிடமாகக் கொண்ட புலனின்பப் பொருட்களின் தன்மைகளைப் புரிந்து கொண்டும், அடைவதற்கரிதான {அடையக் கடினமான} விடுதலை {முக்தி} மற்றும் அதைச் சொல்லும் {வேதம் முதலிய} சாத்திரங்களை மெச்சிக் கொண்டும்,(26) முக்கிய உயிர் மூச்சுகளான பிராணன், அபானன், ஸமானன், வியானன், உதானன் ஆகியவற்றின் இயல்பையும், கீழ்நோக்கிச் செல்வதும், மேல்நோக்கிச் செல்வதுமான இரண்டு உயிர்மூச்சுகள் பிறவற்றின் {ஆவஹன், பிரவஹன் ஆகியவற்றின்} இயல்பையும் முழுமையாக அறிந்து கொண்டும்,(27) உண்மையில் ஏழு வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும், அவ்வேழு உயிர் மூச்சுகளை அறிந்து கொண்டும், பிரஜாபதிகள், முனிவர்கள், அறம் மற்றும் நீதியின்கண் எண்ணிக்கையில் பலவாக உள்ள உயர்ந்த பாதைகள் ஆகியவற்றின் இயல்பை உறுதிசெய்து கொண்டும்,(28) ஓ எதிரிகளை எரிப்பவனே, ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்}, எண்ணிலடங்கா அரசமுனிகள், தெய்வீகமான பெருமுனிவர்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய மறுபிறப்பாள முனிவர்கள் பலர் ஆகியோர்(29) அனைவரும் நெடுங்காலத்தின் போக்கில் தங்கள் பலங்களை இழந்ததைக் கண்டும், ஓ! ஏகாதிபதி, அண்டத்தின் வலிமைமிக்கவர்கள் அனைவரும் அழிவடைந்ததைக் கேள்விப்பட்டும்,(30) ஓ! மன்னா, பாவச் செயல்களைச் செய்த உயிரினங்கள் அடைந்த மங்கலமற்ற கதிகளையும், யமனின் ஆளுகைக்குள் உள்ள வைதரணி ஆற்றில் விழுந்தோரின் துயரங்களையும் புரிந்து கொண்டும்,(31) பல்வேறு கருவறைகளின் மூலம் உயிரினங்களுக்குள் மங்கலமற்ற வகையில் திரிவதையும், குருதி, நீர்,(32) சளி, சிறுநீர், மலம் மற்றும் அனைத்துத் துர்நாற்றங்களுக்கிடையில் அவை வசிக்கும் தன்மையையும், பிறகு குருதி மற்றும் உயிர் வித்து ஆகியவற்றின் கலவையின் விளைவால் மஜ்ஜை தசைக்கட்டுகளுடன்,(33) நூற்றுக்கணக்கான நரம்புகள் மற்றும் தமனிகள் நிறைந்ததும், ஒன்பது வாயில்களைக் கொண்டதுமான தூய்மையற்ற மாளிகையாக அமைந்த உடலைப் பெறுவதைத் புரிந்து கொண்டும், தனக்கான நன்மை எது, நன்மையை உண்டாக்கக்கூடிய பல்வேறு கலவைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டும்,(34) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இருள் {தமஸ்}, அல்லது ஆசை {ரஜஸ்}, அல்லது நல்லியல்பின் {சத்வ} குணங்களாலான இயல்பைக் கொண்ட உயிரினங்களின் அருவருக்கத்தக்க ஒழுக்கத்தைக் கண்டும்,(35) ஆன்மாவை முழுமையாக அறிந்தவர்களான சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களால் விடுதலையை {முக்தியை} அடைய இயலாததற்குக் காரணமெனக் கடிந்துரைக்கப்படும் {மேற்கண்ட வகையில் அருவருக்கத்தக்க} அந்த ஒழுக்கத்தைக் கண்டும், ராகுவால் விழுக்கப்படும் சந்திரனையும், சூரியனையும்,(36) தாங்கள் நிறுவப்பட்ட நிலையில் இருந்து விழும் நட்சத்திரங்களையும், தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பும் நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டும், ஒருங்கிணைந்த அனைத்துப் பொருட்களும் {ஸ்திரீ புருஷர்கள்} பிரியும் சோகத்தையும்,(37) ஒன்றையொன்று விழுங்கும் உயிரினங்களின் மிகக் கொடிய நடத்தையை அறிந்து கொண்டும், மனிதர்களின் குழந்தைப் பருவத்தில் இல்லாத புத்தியையும், உடல் அடையும் சிதைவையும், அழிவையும் கண்டும்,(38) கோபம் மற்றும் மயக்கத்தில் {அறியாமையில்} மூழ்கியதன் விளைவால் உயிரினங்கள் இழக்கும் சத்வ குணத்தைக் குறித்துக் கொண்டும், ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவர் மட்டுமே விடுதலை {முக்தி} அடைவதற்குப் போராடும் தீர்மானத்தை எட்டுவதைக் கண்டும்,(39) சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி விடுதலையை {முக்தியை} அடைவதில் உள்ள கடினத்தைப் புரிந்து கொண்டும், அடையப்படாத பொருட்களில் உயிரினங்கள் கொள்ளும் அதிக அக்கறையையும், அடைந்த பொருட்களில் கொண்ட அக்கறையின்மையையும் கண்டும்,(40) ஓ! மன்னா, உயிரிழந்தவர்களுடைய வெறுத்தொதுக்கும் உடல்களையும், புலன்நுகர் பொருட்கள் அனைத்தாலும் விளையும் தீமையையும் குறித்துக் கொண்டும்,(41) ஓ! பாரதா, இல்லங்களில் (மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில்) எப்போதும் துன்பம் நிறைந்த வாசத்தைக் கண்டும், பிராமணர்களைக் கொன்ற குற்றத்தால் வீழ்ந்த மனிதர்களின் கொடுங்கதியை அறிந்து கொண்டும்,(42) ஓ! யுதிஷ்டிரா, கிளர்வூட்டும் சாராயத்தைப் பருகுவதில் அடிமையாக இருக்கும் தீய பிராமணர்கள், ஆசான்களின் மனைவியருடன் குற்றத்தொடர்புடன் இருப்பவர்கள்,(43) தாயை முறையாக மதிக்காதவர்கள், தேவர்களை முறையாக மதிக்காதவர்கள், அவர்களை வழிபடாதவர்கள் ஆகியோரின் கதியை அறிந்து கொண்டும்,(44) தீச்செயல்களைச் செய்வோரின் கதி மற்றும் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்குகளாகப்} பிறப்பெடுத்தோரின் பல்வேறு முடிவுகளையும் (தங்கள் தத்துவம் கொடுக்கும்) அறிவின் உதவியால் புரிந்து கொண்டும்,(45) வேதங்களின் பல்வேறு தீர்மானங்கள், பருவகாலங்கள், மறையும் வருடங்கள், மாதங்கள்,(46) பிறை நாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றின் போக்குகளை உறுதி செய்து கொண்டும், சந்திரன் வளர்வதையும், தேய்வதையும் நேரடியாகக் கண்டும்,(47) பொங்கி அடங்கும் கடல்களையும், செல்வம் குறைந்து போவதையும், மீண்டும் அது பெருகுவதையும்,(48) ஒருங்கிணைந்த பொருட்களின் பிரிவையும், யுகங்களின் கழிவையும், மலைகளின் அழிவையும், ஆறுகள் காய்ந்து போவதையும்,(49) பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} (தூய்மை அடையும்) கேட்டையும், அந்தக் கேட்டுக்கும் மீண்டும் மீண்டும் நேரும் அழிவையும் கண்டும், பிறவி, முதுமை, மரணம், உயிரினங்களின் கவலைகள் ஆகியவற்றைக் கண்டும்,(50) உடல் தொடர்பான குறைகள், மனிதர்கள் அடையும் கவலைகள், உயிரினங்களின் உடல்கள் அடையும் மாற்றங்களையும் உண்மையாக அறிந்து கொண்டும்,(51) ஆன்மா தொடர்புடைய களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும், உடல்களைப் பற்றும் மங்கலமற்ற களங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டும் (சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறார்கள்) விடுதலை அடைகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(52)

[12] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில் இந்தப் பதினாறும் "ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், ஐந்து செயல்புலன்கள் மற்றும் மனம்" என்று சொல்லப்பட்டுள்ளது.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அளவற்ற சக்தி கொண்டவரே, ஒருவனுடைய உடல் தொடர்பாக நீர் காணும் களங்கங்கள் யாவை? இந்த ஐயத்தை எனக்கு முழுமையாகவும், உண்மையாகவும் விளக்குவதே உமக்குத் தகும்" என்றான்.(53)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! எதிரிகளைக் கொல்பவனே, கேட்பாயாக. ஓ! பலமிக்கவனே, அனைத்துப் பாதைகளையும் அறிந்தவர்களும், ஞானத்துடன் கூடியவர்களுமான சாங்கியர்கள், அல்லது கபிலரைப் பின்பற்றுபவர்கள், மனித உடலில் ஐந்து களங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.(54) அவை ஆசை, கோபம், அச்சம், உறக்கம் மற்றும் மூச்சு ஆகியவையே ஆகும்.(55) இந்த ஐந்து களங்கங்களும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் காணப்படுகின்றன. ஞானத்துடன் கூடியவர்கள், மன்னிக்கும் தன்மையின் துணையுடன் கோபத்தின் வேரை அறுக்கிறார்கள். அனைத்துக் காரியங்களையும் கைவிடுவதால் ஆசை அறுக்கப்படுகிறது.(56) நல்லியல்பின் (சத்வ) குணத்தை வளர்த்தெடுப்பதால் உறக்கம் வெல்லப்படுகிறது, விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதால் அச்சம் வெல்லப்படுகிறது. ஓ! மன்னா, எளிய உணவால் உயிர்மூச்சும் வெல்லப்படுகிறது.(57)

நூற்றுக்கணக்கான குணங்களின் துணையால் குணங்களையும், நூற்றுக்கணக்கான களங்கங்களால் களங்கங்களையும், நூற்றுக்கணக்கான காரணங்களால் பல்வேறு காரணங்களையும் உண்மையில் புரிந்து கொண்டு,(58) விஷ்ணுவின் நுற்றுக்கணக்கான மாயைகளால் மறைக்கப்பட்டதும், சித்திரங்கள் கொண்ட சுவற்றையும், நிலையற்ற நாணற்புல்லையும், நீரில் உள்ள நுரையையும் போன்றதே உலகம் என்பதை உறுதி செய்து கொண்டு,(59) இருள் நிறைந்த குழியாக (குழியினைப் போலப் பயங்கரமானதாக}, அல்லது (நித்திய தன்மையுடன் ஒப்பிடுகையில்) குறுகிய காலமே இருப்பதால் நீர்க்குமிழி போல உண்மையற்றதுமாக, உடனே அழியக்கூடியதாக, மகிழ்ச்சியற்றதாக, நிர்மூலத்தையே கதியாகக் கொண்டதாக, தப்பிக்கும் வழியே இல்லாததாக,(60) முற்றிலும் ஆதரவற்ற நிலையில் சகதியில் மூழ்கிய யானையைப் போல ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கியிருப்பதாக அதை {உலகத்தைக்} கண்டும், இவையாவற்றையும் குறித்துக் கொண்டும், ஓ! மன்னா, பெரும் ஞானம் கொண்ட சாங்கியர்கள், பிள்ளைகளிடம் கொண்ட உறவில் எழும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டு,(61) தங்கள் {சாங்கிய} அமைப்பு சொல்லும் அனைத்தையும் தழுவும் பரந்த அறிவின் துணையுடன், அந்த அறிவாயுதத்துடனும், தவங்களெனும் தண்டத்துடனும், ரஜஸ் குணத்தில் இருந்து பிறக்கும் மங்கலமற்ற அனைத்து மணங்களையும், தமஸ் குணத்தில் இருந்து எழும் இயல்பைக் கொண்ட மணங்கள் அனைத்தையும், சத்வ குணத்தில் இருந்து எழும் மங்கலமற்ற மணங்கள் அனைத்தையும், உடலில் பிரிக்க முடியாத வகையில் இருக்கும் அதே மூன்று குணங்களில் இருந்து பிறக்கும் தீண்டல் (மற்றும் பிற புலன்கள்) இன்பங்கள் அனைத்தையும் அறுத்து,(62,63) ஓ! பாரதா, வெற்றியால் மகுடம் சூடப்படும் இந்த யதிகள், உண்மையில் அறிவெனும் யோகத்தின் உதவியால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறார்கள்.

பயங்கரமான அந்தப் பெருங்கடல், துன்பத்தையே தன் நீராகக் கொண்டிருக்கிறது. கவலையும், துயரும் அதன் ஆழமான தடாகங்களாக இருக்கின்றன. நோயும் மரணமும் அதிலிருக்கும் பெரும் முதலைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு அடியிலும் இதயத்தைத் தாக்கும் பேரச்சங்கள் அதனில் இருக்கும் பெரும்பாம்புகளாகும்.(64) தமஸ் குணம் கொண்ட செயல்களே அதிலிருக்கும் ஆமைகளாகும். ரஜஸ் குணம் கொண்டவை அதன் மீன்களாகும். விவேகமே அதைக் கடக்கப் பயன்படும் தோணியாகும். புலன் நுகர்பொருட்களில் உள்ள பற்று அதிலுள்ள சகதியாகும். முதுமை துன்பம் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அறிவே அதனில் இருக்கும் தீவாகும். செயல்களே அதன் பேராழமாக அமைகிறது. உண்மையே அதன் கரைகளாக இருக்கின்றன. பக்தி நோன்புகள் அதன் பரப்பில் மிதக்கும் பச்சை பாசிகளாக இருக்கின்றன. பொறாமை அதிலுள்ள வலிமைமிக்கப் பெரும் நீரோட்டமாக இருக்கிறது. இதயத்தில் உள்ள பல்வேறு மிகையுணர்ச்சிகள் அதன் சுரங்கங்களாக இருக்கின்றன. பல்வேறு வகையான மனநிறைவுகள் அதன் மதிப்புமிக்க ரத்தினங்களாக இருக்கின்றன. துயரும், நோயும் அதிலுள்ள காற்றாக இருக்கிறது. அவலங்களும், தாகமும் வலிமைமிக்க அலைகளாக இருக்கின்றன. துன்பமிக்கவையும், மரணத்தை ஏற்படுத்தக்கூடியவையுமான நோய்கள் அதில் பெரும் யானைகளாக இருக்கின்றன. எலும்புக்கூட்டங்கள் அதன் படிக்கற்களாகவும், சளி அதன் நுரையாகவும் இருக்கின்றன. கொடைகள் அதன் முத்து வங்கியாக இருக்கின்றன. குருதித்தடாகங்கள் அதன் வைடூரியங்களாக இருக்கின்றன. உரத்த சிரிப்பு அதன் முழக்கமாக இருக்கிறது. பல்வேறு வகை அறிவியல்கள் {சாத்திரங்கள்} அதில் உள்ள கடக்கமுடியாத இடங்களாகும். கண்ணீர் அதன் உப்புநீராகும். தோழமை துறத்தல் (அதைக் கடப்பதற்க்காக முனைபவர்களுக்கு) பெரும் புகலிடமாக இருக்கிறது. பிள்ளைகளும், மனைவியரும் அதிலுள் உள்ள எண்ணிலடங்கா அட்டைப்பூச்சிகளாகும் {ஒட்டுண்ணிகளாகும்}. நண்பர்களும், உற்றாரும் அதன் கரைகளில் உள்ள பெருநகரங்களும், நகரங்களும் ஆகும். தீங்கிழையாமையும், வாய்மையும் அதன் எல்லைக் கோடுகளாகும். மரணம் அதன் புயலலை ஆகும். வேதாந்த அறிவு (நீரில் தூக்கி வீசப்படுபவர்களுக்குப் புகலிடம் அளிக்கவல்ல) அதிலுள்ள தீவாகும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையால் செய்யப்படும் செயல்கள் உயிர் காக்கும் மிதவைகளாக இருக்கின்றன. வணிகப் பொருட்களைத் தேடி நீரில் பயணிப்போருக்கு அழிக்கப்படும் விலைமதிப்பட்ட பொருளாக விடுதலை {முக்தி} இருக்கிறது. நெருப்புத் தழல்களைக் கக்கும் குதிரைத் தலை கொண்ட அதன் தற்சார்பு முன்னோடியைப் போல இந்தப் பெருங்கடலும் பயங்கரமான நெருப்புகளைக் கொண்டிருக்கிறது. பருவுடலில் வசிக்கும் சாங்கியர்கள், கடப்பதற்கு அரியவையான அந்தக் கடப்பாடுகளைக் கடந்து, தூய வெளிக்குள் நுழைகிறார்கள்.(65-72)

அப்போது சூரியன், சாங்கிய கோட்பாடுகளைப் பயிலும் அந்த அறவோரைத் தன் கதிர்களால் சுமக்கிறான். தாமரைத் தண்டில் உள்ள இழைகள், தாங்கள் உறிஞ்சும் நீர் அனைத்தையும் மலருக்குக் கொடுப்பதைப்போல, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பருகும் சூரியன், அவற்றை ஞானிகளான அந்த நல்லோருக்குக் கொடுக்கிறான்.(73) ஓ! பாரதா, சக்தியும், தவங்களெனும் செல்வத்தையும் கொண்ட இந்த யதிகள், தங்கள் பற்றுகள் அனைத்தையும் அழித்து, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, நுட்பமானதும், குளுமையானதும், நறுமணமிக்கதும், தீண்டுதற்கினியதுமான தென்றலால் சுமக்கப்படுகிறார்கள்.(74) உண்மையில், ஓ! குந்தியின் மகனே, பேரின்ப உலகங்களில் வீசிக்கொண்டிருக்கும் ஏழு காற்றுகளில் சிறந்த காற்றானது வெளியில் {ஆகாயத்தில்} உள்ள உயர்ந்த கதியை அவர்களுக்கு அளிக்கிறது.(75) பிறகு அவர்கள் கொண்டு சேர்க்கப்படும் வெளியானது, அவர்களுக்கு ரஜஸ் குணத்தின் உயர்ந்த கதியை அளிக்கிறது.(76) பிறகு ரஜஸ் குணமானது அவர்களைச் சத்வத்தின் உயர்ந்த கதிக்குச் சுமந்து செல்கிறது. பிறகு, ஓ! தூய ஆன்மாவே, அந்தச் சத்வ குணமானது, அவர்களைப் பலமிக்கப் பரமன் நாராயணனிடம் கொண்டு செல்கிறது.(77) பலமிக்கவனும், தூய ஆன்மாகக் கொண்டவனுமான நாராயணன் இறுதியாக அவனைப் பரமாத்மாவிடம் சுமந்து செல்கிறான். ஓ! மன்னா, பரமாத்மாவை அடையும் அந்தக் களங்கமற்ற மனிதர்கள், அஃது (என்றழைக்கப்படும் அதன் {பிரம்மத்தின்}) உடலாகி, அழிவின்மையை அடைந்து, மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறார்கள். ஓ! பிருதையின் மகனே, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தையும் கடந்த உயர் ஆன்மா மனிதர்களால் அடையப்படும் உயர்ந்த கதி அதுவே" என்றார் {பீஷ்மர்}.(79)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாவமற்றவரே, உறுதியான நோன்புகளைக் கொண்ட அந்த மனிதர்கள் பலமும், இன்பமும் நிறைந்த அந்தச் சிறந்த நிலையை அடைந்த பிறகு, அவர்களுடைய முற்பிறவிகளில் நேர்ந்த பிறப்பு மற்றும் மரணம் உள்ளிட்டவற்றை நினைவுகூர்வார்களா?(80) இந்தக் கேள்விக்கான உண்மையை முறையாக எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! குரு குலத்தவரே, உம்மைத் தவிர வேறு எவரிடமும் இதைக் கேட்பது முறை என்று நான் நினைக்கவில்லை.(81) விடுதலையை {முக்தியைச்} சொல்லும் சாத்திரங்களைக் கண்டதில், (விடுதலை {முக்தி} நிலையை அடைந்ததும் நனவு நிலை மறைந்து விடும் எனச் சில சாத்திரங்கள் சொல்கின்றன, அதே வேளையில் இதற்கு நேரெதினாதை சில சாத்திரங்கள் அறிவிக்கின்றன என்பதால்) இந்தப் பெரும் குறையை நான் காண்கிறேன். உயர்ந்த கதியை அடைந்த பிறகு, அந்த யதிகள் நனவுநிலையோடு தொடர்ந்து வாழ்ந்தால்,(82) ஓ மன்னா, பிருவிருத்தியின் அறமே உயர்ந்ததாகக் காணப்படும். மேலும், விடுதலை {முக்தி} நிலையில் நனவுநிலை மறைந்துபோகும் என்றால், அந்த முக்தியை அடைந்த மனிதன், கனவற்ற உறக்கத்தில் மூழ்கியவரே ஆவார். (கனவற்ற உறக்க நிலையில் ஒருவனுடைய நனவுநிலையானது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதேயன்றி ஒருபோதும் தொலைந்துபோவதில்லை. அந்த உறக்கத்தில் இருந்து அவன் விழிப்படைந்தால் மீண்டும் அது திரும்பிவிடும் என்றால்) முக்தி நிலையில் நனவுநிலை இல்லையென்று சொல்வதைவிட முறையற்ற வேறு எதுவும் இருக்க முடியாது" என்றான் {யுதிஷ்டிரன்}.(83)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே,பதிலளிக்க எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ கேட்ட கேள்வி முறையானதே. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பெரும் கல்விமான்களே மலைப்படையும் வகையில் இந்தக் கேள்வி இருக்கிறது.(84) நான் விளக்கிச் சொல்லப்போகும் உண்மையைக் கேட்பாயாக. கபிலரைப் பின்பற்றும் உயர் ஆன்மாக்கள் {சாங்கியர்கள்}, இந்தக் காரியத்தில் தங்கள் உயர்ந்த புத்தியை நிறுவியிருக்கிறார்கள்.(85) ஓ! மன்னா, உடல் படைத்த உயிரினங்களில் நடப்பட்டிருக்கும் {நிறுவப்பட்டிருக்கும்} அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்}, தங்கள் தங்களுக்குரிய உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் மூலமே நுட்பமானவன் {ஆன்மா} உண்டாகிறதென்பதால் அவை ஆன்மாவின் கருவிகளாக இருக்கின்றன.(86) ஆன்மாவோடு கலக்காத புலன்கள், மரக்குவியல்களைப் போன்றனவாகும். மேலும் அவை பெருங்கடலின் பரப்பில் காணப்படும் நுரையைப் போல (தாங்கள் தொண்டாற்றும் செயல்பாடுகளில்) அழிவையே அடையும்.(87) ஓ!எதிரிகளை எரிப்பவனே, உடல் கொண்ட உயிரினமானது, தன் புலன்களுடன் உறக்கத்தில் மூழ்கும்போது, நுட்பமான ஆத்மாவானது, வெளியில் உலவும் காற்றைப் போல அனைத்துப் பொருட்களின் மத்தியிலும் திரிகிறது.(88) ஓ! மன்னா, உறக்கத்தில், நுட்பமான ஆத்மாவானது, விழிப்பில் இருப்பது போலவே, (அனைத்து வடிவங்களைக்) காணவும், தீண்டலுக்குரிய பொருட்கள் அனைத்தையும் தொடவும், பிற உணர்வுகளைப் பெறவும் செய்கிறது.(89) செயல்படுபவர் இல்லாமல் செயல்பட முடியாத விளைவால், உறக்கத்தின் போது புலன்கள் அனைத்தும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் இல்லாமல் (தங்கள் சக்திகளை இழந்து) நஞ்சற்ற பாம்புகளைப் போல இருக்கின்றன.(90)

அத்தகைய வேளைகளில், நுட்பமான ஆத்மா, அனைத்துப் புலன்களுக்குமுரிய இடங்களுக்குச் சென்று, அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.(91) ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, ஓ! பார்த்தா, சத்வத்தின் அனைத்து குணங்களும், புத்தியின், மனம், வெளி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் குணங்களும், ஜீவ ஆத்மாக்கள் கொண்ட இந்தக் குணங்கள் அனைத்துடன் கூடிய புலன்களும், அதனுடன் கூடிய ஜீவ ஆத்மாவும் பரமாத்மா அல்லது பிரம்மத்தால் மூழ்கடிக்கப்படுகிறது {வெற்றி கொள்ளப்படுகிறது}. நல்ல மற்றும் தீய செயல்களும் அந்த ஜீவ ஆத்மாவை மூழ்கடிக்கிறது. தங்கள் ஆசானுக்காக மதிப்புடன் காத்திருக்கும் சீடர்களைப் போலப் புலன்களும் ஜீவாத்மாவிடம் காத்திருக்கின்றன.(94,95)

ஜீவாத்மா பிரக்ருதியைக் கடக்கும்போது, மாற்றமில்லாத பிரம்மமும், இரட்டைகள் அனைத்தையும் கடந்த உயர்ந்தவனும், பிரகிருதியைக் கடந்தவனுமான நாராயணனை அடைகிறது.(96) ஓ! பாரதா, ஜீவாத்மாவானது, தகுதி மற்றும் தகுதியின்மை ஆகிய இரண்டையும் கடந்து, குணங்கள் எதுவும் இல்லாததும், மங்கலங்கள் அனைத்தின் இல்லமுமான பரமாத்மாவுக்குள் நுழைந்து மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறது.(97) இவை பேராசானின் கட்டளைகளைச் செய்யக் குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.(98) ஓ! குந்தியின் மகனே, (இந்த உடல் கைவிடப்பட்ட) உடனே விடுதலைக்கு முனைந்தவனும், ஞானத்துடன் கூடியவனும், குணமுடன் இருப்பதால் ஆசையுள்ளவனுமான யதி, உடலற்றவன் அடையும் விடுதலை {முக்தி} எனும் அமைதியை அடைவதில் வெல்கிறான்.(99) ஓ! மன்னா, சாங்கியர்கள் பெரும் ஞானத்தைக் கொண்டவர்கள் ஆவர். இவ்வகை ஞானத்தின் மூலமே அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள். இதற்கிணையான ஞானம் வேறில்லை.(100)

எவ்வகை ஐயத்திற்கும் வசப்படாதே. சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டிருக்கு ஞானமானது உயர்ந்ததெனக் கருதப்படுகிறது. அந்த அறிவு அனைத்தையும் அறிந்த நிலையும், நித்தியமாக நிலைத்திருக்கும் நிலையுமாகும். அதுவே முழுமையான நித்திய பிரம்ம நிலையாகும்.(101) அதற்குத் தொடக்கமோ, நடுநிலையோ, முடிவோ கிடையாது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்த நிலையாகும். அண்டத்தின் படைப்புக்கு அதுவே காரணமாகும். அது முழுமையாக இருக்கிறது. எவ்வகைச் சிதைவுமில்லாததாக இருக்கிறது. சீரானதாகவும், எப்போதும் இருப்பதாகவும் அஃது இருக்கிறது. இவ்வாறு அதன் புகழ் ஞானிகளால் பாடப்படுகிறது.(102) அதனிலிருந்தே, படைப்பும், அழிவும், அனைத்து சீர்திருத்தங்களும் வருகின்றன. பெரும் முனிவர்கள் அதைக் குறித்துப் பேசுகின்றனர், சாத்திரங்களில் மெச்சுகின்றனர்.(103) கல்விமான்களான பிராமணர்கள் அனைவரும், அறவோர் அனைவரும் அதை {அந்நிலையை} பிரம்மம், பரநிலை, தெய்வீக நிலை, முடிவற்ற நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, சிதைவற்ற நிலை என்று கருதுகிறார்கள்.(104) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட பிராமணர்கள் அனைவரும், மாயைக்குரிய குணங்களோடு அதைத் தொடர்புப்படுத்தித் துதித்துப் புகழ்கின்றனர். தவங்களையும், தியானங்களையும் நன்றாக நோற்கும் யோகிகள் மற்றும் அளவற்ற உள்பார்வை கொண்ட சாங்கியர்கள் ஆகியோரின் பார்வைகள் ஒன்றே.(105) ஓ! குந்தியின் மகனே, சாங்கிய தத்துவத்தின் வடிவமே, வடிவமற்றவனின் வடிவம் என ஸ்ருதிகள் அறிவிக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, (அந்தத் தத்துவத்தின்படியான) அறிதல் நிலைகள் பிரம்ம அறிவே என்றே சொல்லப்பட்டுள்ளது.(106)

ஓ! பூமியின் தலைவா, அசைவன, அசைவற்றன எனப் பூமியில் இருவகை உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் அசைவனவே மேன்மையானவை.(107) ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி பிரம்மத்தை அறிந்தவர்களில் இருப்பதும், வேதங்களில் நேர்வதும், பிற சாத்திரங்களில் காணப்படுவதும், யோகத்தில் உள்ளதும் பல்வேறு புராணங்களில் காணப்படுவதுமான அந்த உயர்ந்த ஞானங்கள் அனைத்தும், சாங்கிய தத்துவத்தில் காணப்படுகின்றன.(108) உயர்ந்த வரலாறுகளில் காணப்படும் ஞானம் எதுவும், ஓ! மன்னா, ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட செல்வமீட்டல் தொடர்புடைய அறிவியல்களில் வரும் ஞானம் எதுவும், இவ்வுலகில் இருக்கும் ஞானம் எதுவும், சாங்கியர்களின் உயர்ந்த ஞானத்தில் இருந்து வந்தவையே ஆகும்.(109) ஓ! மன்னா, ஆன்ம அமைதி, உயர்ந்த பலம், சாத்திரங்கள் சொல்லும் நுட்பமான அறிவுகள் அனைத்தும், நுட்பமான சக்தியைக் கொண்ட தவங்களும், அனைத்து வகை இன்பநிலைகளும் என அனைத்தும், சாங்கிய அமைப்பில் முறையாக விதிக்கப்பட்டிருக்கின்றன.(110)

ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரனே}, தங்கள் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அந்த முழுமையான அறிவை அடையத் தவறும் சாங்கியர்கள், தேவர்களின் நிலையை அடைந்து பல காலங்களை இன்ப நிலைகளில் கடத்துகின்றனர். தேவர்களாகத் தங்கள் விருப்பப்படித் தலைமை செலுத்திய பிறகு ஒதுக்கப்பட்ட காலம் தீர்ந்ததும் அவர்கள் கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் யதிகளின் மத்தியில் விழுகிறார்கள்.(111) ஆகாயத்தில் நுழையும் தேவர்களைக் போலவே சாங்கிய அமைப்பைப் பின்பற்றும் மறுபிறப்பாளர்களும், துதிக்கத்தக்க தங்கள் அமைப்பில் மொத்தமாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த உடலைக் கைவிட்டு, ஞானிகள் அனைவராலும் வழிபடப்படும் உயர்ந்த நிலையான பிரம்ம நிலைக்குள் நுழைகிறார்கள்.(112) சாங்கிய அமைப்பால் பரிந்துரைக்கப்படும் அறிவை அடைய தங்களை அர்ப்பணிக்கும் மறுபிறப்பாளர்கள், தங்கள் உயர்நிலையை அடையத் தவறினாலும், இடைநிலை உயிரினங்களின் மத்தியிலோ, பாவிகளின் மத்தியில் வீழும் நிலைக்குத் தள்ளப்படுவது காணப்படுவதில்லை.(113) ஓ! மன்னா, பரந்ததும், உயர்ந்ததும், புராதனமானதும், பெருங்கடலைப் போன்றதும், அளவிடமுடியாததும், தூய்மையானதும், முற்போக்கானதும், ஏற்புடையதுமான சாங்கிய அமைப்பை முழுமையாக அறிந்த உயர் ஆன்மா கொண்டவன் நாராயணனுக்கு இணையானவன் ஆவான்.(114) ஓ! மனிதர்களில் தேவனே, சாங்கிய அமைப்பைக் குறித்த உண்மையை உனக்குச் சொல்லிவிட்டேன். அது பழங்காலத்தில் இருந்து அண்டத்தில் நீடித்திருக்கும் நாராயணனின் உடல்வடிவமாகும். படைப்புக்கான வேளைவரும்போது, அவனே படைப்பை உண்டாக்குகிறான், அழிவுக்கான வேளை வருகையில் அவனை அனைத்தையும் விழுங்குகிறான். அனைத்தையும் தன் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, அண்டத்தின் உள்ளான்மாவான அவன் உறங்கச் செல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(115)

சாந்திபர்வம் பகுதி – 302ல் உள்ள சுலோகங்கள் : 115

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்