Vasishta and Karala! | Shanti-Parva-Section-303 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 130)
பதிவின் சுருக்கம் : அழிவற்றது மற்றும் அழியக்கூடியவை குறித்து ஜனக குலத்தின் மன்னன் கராளனுக்கும், பெருமுனிவர் வசிஷ்டருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எது சிதைவற்றது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் எவரும் திரும்பி வர வேண்டிய அவசியமில்லையோ, அஃது என்ன? மேலும் எது சிதைவுள்ளது என்று அழைக்கப்படுகிறதோ, எதை அடைவதன் மூலம் ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டி வருமோ, அஃது என்ன?(1) ஓ! எதிரிகளைக் கொல்பவரே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, சிதைவுள்ளது, சிதைவற்றது ஆகிய இரண்டையும் உண்மையில் புரிந்து கொள்வதற்காக அவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமையை நான் உம்மிடம் கேட்கிறேன்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் உம்மை ஞானப் பெருங்கடல் எனச் சொல்கிறார்கள். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட யதிகளும் அதையே சொல்கிறார்கள்.(3) நீர் வாழ இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சூரியன் தனது தென்பாதையில் இருந்து வடபாதைக்குத் திரும்பும்போது நீர் உயர்ந்த கதியை அடைவீர்.(4) நீங்கள் எங்களை விட்டுச் சென்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கான நன்மைகள் அனைத்தையும் யாரிடம் இருந்து கேட்போம்? நீரே குரு குலத்தின் விளக்காவீர். உண்மையில், நீர் ஞான ஒளியால் சுடர்விடுகிறீர்.(5) எனவே, ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நான் இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். அமுதம் போல எப்போதும் இனிமையாக இருக்கும் உமது உரைகளைக் கேட்கும் ஆவல் தணிவடையாமல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் வசிஷ்டருக்கும், ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஒரு காலத்தில் முனிவர்களில் முதன்மையானவரும், சூரியப்பிரகாசம் கொண்டவருமான வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருந்தபோது, மன்னன் ஜனகன் {கராளன்} அவரிடம் நமது பரமநன்மைக்கான {மோட்சத்துக்கான} உயர்ந்த ஞானத்தைக் குறித்துக் கேட்டான்.(8) ஆன்மா குறித்த அறிவுத்துறையில் உயர்ந்த திறனைக் கொண்டவரும், அந்த அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் குறிப்பிட்ட தீர்மானங்களைக் கொண்டவரும்,(9) முனிவர்களில் முதன்மையானவருமான மைத்ராவருணி {வசிஷ்டர்} அமர்ந்திருந்தபோது, கூப்பிய கரங்களுடன் அவரை அணுகிய மன்னன் {கராளன்} அவரிடம் நன்கு உச்சரிக்கப்பட்ட, இனிமையான, சர்ச்சைக்குரிய நோக்கமேதும் இல்லாத, பணிவான வார்த்தைகள் மூலம் இந்தக் கேள்வியைக் கேட்டான்,(10) "ஓ! புனிதமானவரே, எதை அடைந்தால் ஞானிகள் மீண்டும் திரும்பி வர வேண்டியதில்லையோ, அந்தப் பரமநித்திய {உயர்ந்த அழிவற்ற} பிரம்மத்தைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்.(11) எது அழியத்தக்கது என்றழைக்கப்படுகிறது என்பதையும், இந்த அண்டம் அழிவடையும்போது, அஃது எதனுள் நுழைகிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், அழிவற்றது, மங்கலமானது, நன்மையானது, அனைத்து வகைத் தீமையில் இருந்து விடுபட்டது என எது சொல்லப்படுகிறது?" என்று கேட்டான் {ஜனக குல மன்னன் கராளன்}.(12)
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, இந்த அண்டம் எவ்வாறு அழிவடைகிறது என்பதையும், இதற்கு முன் எப்போதும் அழியாததும், இனி எந்தக் காலத்திலும் ஒருபோதும் அழிய முடியாததும் எது என்பதையும் கேட்பாயாக.(13) (தேவர்களுடைய அளவீடுகளின்படி) ஒரு யுகம் பனிரெண்டயிரம் {12,000} வருடங்களைக் கொண்டதாகும். அத்தகைய நான்கு யுகங்கள் ஆயிரம் முறை {12000 X 4 X 1000} நேர்வது ஒரு கல்பமாகும். அதுவே பிரம்மனுடைய ஒரு பகலின் அளவாகும்.(14) ஓ! மன்னா, பிரம்மனின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும். {அத்தகைய} பிரம்மனே அழிவடையும்போது, வடிவமற்ற ஆன்மாவைக் கொண்டவனும், அனிமா, லகிமா {ப்ராப்தி} முதலிய யோக குணங்களை இயற்கையிலேயே கொண்டவனுமான சம்பு விழிப்படைந்து, பெரும் அளவுகளைக் கொண்டவனும், முடிவிலா செயல்களைச் செய்பவனும், வடிவத்தோடு கூடியவனும், அண்டத்தைப் போன்றவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனை, அல்லது மூத்தவனை {ஹிரண்யகர்ப்பனை} மீண்டும் ஒருமுறை படைக்கிறான் {சம்பு ஹிரண்யகர்ப்பனைப் படைக்கிறான்}. அந்தச் சம்புவே வேறு வகையில் ஈசானன் (அனைத்தின் தலைவன்) என்று அழைக்கப்படுகிறான். அவன் தூய்மையானவனாகவும், பிரகாசமிக்கவனாகவும், சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனாகவும்,(15,16) அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிந்த கரங்களும் கால்களும் கொண்டவனாகவும், எங்கும் கண்களையும், தலையையும், வாயையும், காதுகளையும் கொண்டவனாகவும் இருக்கிறான்.(17)
{அப்படி படைக்கப்படும்} மூத்த பிறவி ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படுகிறான். (வேதாந்தத்தில்) இந்தப் புனிதமானவன் புத்தி என்றழைக்கப்படுகிறான். யோக சாத்திரங்களில் அவன் பெரியவன் {மஹத்}, விரிஞ்சி, பிறப்பில்லாதவன் என்று அழைக்கப்படுகிறான்.(18) சாங்கிய சாத்திரங்களில் முடிவின்மையையே தன் ஆன்மாவாகக் கொண்டவனாகக் கருதப்படும் அவன், பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். பல்வேறு வடிவங்களிலும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் அவன், ஒருவனாகவும் {ஓரக்ஷரமாகவும்}, அழிவற்றவனாகவும் கருதப்படுகிறான்.(19) முடிவிலா உட்பொருள்களைக் கொண்ட மூவுலகங்களும், எந்த மூலத்தின் துணையும் இல்லாமல் அவனால் படைக்கப்பட்டு, அவனாலேயே மூழ்கடிக்கப்படுகின்றன. அவனுடைய பலவகை வடிவங்களின் விளைவால் அவன் அண்ட வடிவத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(20) பல மாற்றங்களை ஏற்படுத்தித் தன்னைத் தானே அவன் படைத்துக் கொள்கிறான். வலிமையும், சக்தியும் கொண்ட அவன், முதலில் நனவுநிலையையும் {அஹங்காரத்தையும்}, நனவுநிலையுடன் கூடிய பிரஜாபதி என்றழைக்கப்படும் பெரும்பூதத்தையும் {அஹங்கார்ரத்தைச் செய்கின்ற விராட்டையும்} படைக்கிறான்.(21) புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்தே புலப்படுபவன் (அல்லது ஹிரண்யகர்ப்பன்) படைக்கப்பட்டான். இதுவே கல்விமான்களால் ஞானப்படைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட மஹான் (அல்லது விராட்) மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} அறியாமையின் படைப்பாகும்[1].(22)
[1] "மஹான், அல்லது பிரஜாபதி, அல்லது விராட் மற்றும் நனவுநிலையைப் படைக்கும்போது, தமஸ் அல்லது அறியாமை என்பது மேலோங்குகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஸ்ருதிகளை விளக்கும் கல்விமான்களால் அறியாமை மற்றும் ஞானம் {அறிவு} என்ற பெயர்களால் அழைக்கப்படும் (வழிபடத்தகுந்த) குணங்களின் துதி {வித்தை}, அதன்மூலம் நிகழும் அழிவு {அவித்தை}ஆகியவை இஃது, அஃது, அல்லது மூன்றில் உள்ள வேறொன்றை (அக்ஷரம்{1}, ஹிரண்யகர்ப்பன்{2}, அல்லது விராட் என்பனவற்றைக்) குறிப்பிடும் வகையில் எழுகின்றன[2].(23) ஓ! மன்னா, நனவுநிலையில் {அகங்காரத்தில்} இருந்து மூன்றாவதாக (நுட்பமான) பூதங்கள்{3} {ஸூக்ஷ்ம பூதங்கள்} படைக்கப்பட்டன என்பதை அறிவாயாக[3]. மூன்றாவதின் {பூதங்களின்} மாறுபாடுகளில் இருந்து நான்காவது படைப்பாக நனவுநிலையின் அனைத்து வகைகளும் {திரள் பூதங்களும் / ஸ்தூலபூதங்களும்} உண்டாகின[4].(24) இந்த நான்காவது படைப்பில் காற்று {வாயு}, ஒளி, வெளி {ஆகாயம்}, நீர், பூமி {நிலம்} ஆகியவையும், அவற்றின் குணங்களான ஒலி, ஊறு, வடிவம், சுவை மற்றும் மணமும்{13} அடங்கியிருக்கின்றன.(25) இந்தப் பத்தும் ஒரே வேளையில் உண்டாகின என்பதில் ஐயமில்லை. ஓ! ஏகாதிபதி, (மேலே குறிப்பிடப்பட்ட) மூல பூதங்களின் கலவையில் இருந்து எழுந்தவையே ஐந்தாவது படைப்பாகின.(26) இதில் {இந்த ஐந்தாம் படைப்பில்}, காது {சுரோத்திரம்}, தோல் {தவக்கு}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, ஐந்தாவதாக மூக்கு {கிராணம்}, வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் பிறப்புறுப்பு ஆகியன உள்ளடங்கும்.(27) இவற்றில் முதல் ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், இறுதி ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அமைகின்றன{23}. ஓ! மன்னா, மனத்துடன்{24} கூடிய இவையாவும் அடுத்தடுத்து எழுந்தன.(28) இவையே உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களிலும் உள்ள இருபத்துநான்கு காரியங்களாகின்றன {தத்துவங்களாகின்றன}. இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் வாய்மையின் உட்பார்வை கொண்ட பிராமணர்கள் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை.(29)
[2] இந்த ஸ்லோகம் மிகக் கடினமானதாக இருக்கிறது. நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதில் எனக்கு உறுதிப்பாடு இல்லை. இந்த ஸ்லோகத்தில் ’அக்ஷரத்திலிருந்து ஹிரண்யகர்ப்பன் எழுந்தான்; ஹிரண்யகர்ப்பனிலிருந்து விராட் இருந்து எழுந்தான். சாதாரண மக்களால் இஃது, அஃது, அல்லது மற்றொன்று ஆகியன வழிபடப்படுகின்றன, அதே வேளையில் உண்மையான உள்பார்வை கொண்டவர்கள் வழிபாட்டுக்குத் தகுந்த எந்தக் குணங்களையும் அவற்றில் காண்பதில்லை’ என்று சொல்லப்படுவதாத் தெரிகிறது. அறியாமை என்றழைக்கப்படும் குணங்களின் துதி, ஞானம் என்றழைக்கப்படும் (அத்துதியின் அழிவில்) துதியின்மை ஆகியவை எழுகின்றன. வழிபடுவதற்கோ, அத்தகைய வழிபாட்டைக் கண்டிப்பதற்கோ எந்த மனிதனும் இல்லாதபோது இவை இரண்டும் எவ்வாறு எழுகின்றன என்று கேட்கப்படலாம். இந்த இரண்டு நுட்பமனான வடிவங்களும், இருப்புக்கு வந்தபிறகு, நீண்ட காலத்திற்குப் பிறகு மனிதர்கள் தோன்றிய பிறகு மனிதர்களால் பயன்படுத்தப்பட்டன என்பது பதிலாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓரிடத்திலுண்டான அபரமென்கிற ஜடமான உபாதியும், பரம் என்கிற சைதன்யமும் வேதசாஸ்திரங்களின் அர்த்தத்தை விசாரிக்கின்றவர்களால் வித்தை அவித்தையென்று சொல்லப்படுகின்றன. அரசே, அஹங்காரத்திலிருந்துமுண்டான ஸூக்ஷ்ம பூதங்களின் ஸ்ருஷ்டியை மூன்றாவதாக அறியக்கடவாய்" என்றிருக்கிறது. கங்குலியில் மேற்கண்ட 20ம் ஸ்லோகம் முதல் 22ம் ஸ்லோகம் வரையிலான செய்தி பிபேக்திப்ராயின் பதிப்பில், "மூவுலகங்களும் அவனால் படைக்கப்பட்டதும் அவன் தன் ஆத்மாவால் அனைத்தினுள்ளும் படர்ந்தூடுகிறான். அவன் பகுரூபன் என்றும் விஷ்வரூப் என்றும் அறியப்படுகிறான். மாற்றங்களின் மூலம் அவன் தன் ஆத்மாவில் இருந்தே தன்னைப் படைத்துக் கொள்கிறான். அபரிமிதமான சக்தி கொண்ட அவன் நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான், அந்த அகங்காரத்தில் இருந்து பிரஜாபதி படைக்கப்படுகிறான். புலப்படாததிலிருந்து புலப்படுவது {பிரகாசமானது} படைக்கப்படுகிறது. இதுவே ஞானப்படைப்பு என்று சொல்லப்படுகிறது. மஹத் மற்றும் அகங்காரம் ஆகியவை அறியாமையின் படைப்பாகச் சொல்லப்படுகின்றன. புனித உரைகளின் கருத்தை அறிந்தவர்கள், அதைக் குறித்துச் சிந்தித்தவர்கள், இந்தத் தகவமைப்புகளின் மூலமே அறிவும், அறியாமையும் உண்டாகின என்று சொல்கிறார்கள்" என்றிருக்கிறது.[3] "அக்ஷரம் அல்லது அழிவற்றதில் இருந்து ஹிரண்யகர்ப்பன். ஹிரண்யகர்ப்பனிலிருந்து மஹான், அல்லது விராட் மற்றும் நனவுநிலை. இறுதியானவற்றில் இருந்து நுட்பமான பூதங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "அரசனே, அஹங்காரத்திலிருந்துமுண்டான ஸூஹ்ம பூதங்களின் ஸ்ருஷ்டியை மூன்றாவதாக அறியக்கடவாய். ஸாத்விகராஜஸதாமஸங்களாயிருக்கிற எல்லா அகங்காரங்களிலுமுண்டான ஸ்தூல பூத ஸ்ருஷ்டியை நான்காவதாக அறியக்கடவாய்" என்றிருக்கிறது.
உடல் என்றழைக்கப்படும் இவற்றின் கலவையையே மூவுலகங்களிலும் உள்ள உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தும் கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! மன்னா, அவற்றின் கலவைகளே தேவர்கள், மனிதர்கள், தானவர்கள்,(30) யக்ஷர்கள், பூதங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், பெரும்நாகர்கள், சாரணர்கள், பிசாசங்கள்,(31) தெய்வீக முனிவர்கள், ராட்சசர்கள், கடிக்கும் வண்டுகள், புழுக்கள், கொசுக்கள், கழிவில் பிறக்கும் புழுக்கள், எலிகள், நாய்கள், சுவாபாகர்கள் {நாயை உண்ணும் புலையர்கள்}, சைநேயங்கள் {மான்களை உண்ணும் நீசர்கள்}, சண்டாளர்கள், புல்கசர்கள்,(32) யானைகள், குதிரைகள், கழுதைகள், புலிகள், மரங்கள், பசுக்கள் ஆகியவையாக அறியப்படுகின்றன. நீர், ஆகாயம், பூமி ஆகியவற்றைத் தவிர வேறு எதனிலும் உயிரினங்கள் இருப்பதாக நாம் கேள்விப்படாததால் இவற்றில் உள்ள எந்த உயிரினமும் இந்தக் கலவையையே கொண்டிருக்கின்றன.(33,34) ஓ! ஐயா, புலப்படுவது {வடிவமாக இருப்பவை} என்றழைக்கப்படும் வர்க்கத்தில் சேர்க்கப்படும் இவை அனைத்தும் நாளுக்கு நாள் அழிவடைவது காணப்படுகிறது. எனவே, இந்த இருபத்துநான்கின் கலவையால் உண்டான அனைத்து உயிரினங்களும் அழியத்தக்கன {சிதைவுள்ளவை} என்று சொல்லப்படுகின்றன.(35)
இதுதான் அழிவில்லாதது. புலப்படுவவை, புலப்படாதவை ஆகியவற்றால் உண்டான இந்த அண்டம் அழிவடைவதால் அஃது அழியத்தக்கது என்று சொல்லப்படுகிறது.(36) மூத்த பிறப்பான மஹான் என்றழைக்கப்படும் பூதமே அழியக்கத்தக்கது என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, நீ என்னிடம் கேட்ட அனைத்தையும் உனக்குச் இப்போது சொல்லிவிட்டேன்.(37) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்துநாலையும் கடந்து இருப்பத்தைந்தாக இருப்பவன் விஷ்ணு என்றழைக்கப்படுகிறான். அனைத்துக் காரியங்களிலும் படர்ந்தூடுருவி இருந்தாலும் (ஞான) காரியமாக இல்லாத அந்த விஷ்ணு, அனைத்து குணங்களும் அற்றிருக்கும் விளைவால் ஞானிகளால் அவ்வாறு அழைக்கப்படுகிறான்.(38) அழியத்தக்கவை புலப்படுபவை அனைத்தையும் உண்டாக்குவதால் இவை அனைத்தும் வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருபத்துநாலாவதான பிரகிருதியே (தன் மாறுதல்களின் மூலம் எழுந்த) இவை அனைத்திற்கும் தலைமை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான விஷ்ணு வடிவமற்றவனாக இருப்பதால் அண்டத்திற்குத் தலைமை தாங்குவதாகச் சொல்ல முடியாது[5].(39) புலப்படாதது {பிரகிருதி}, (சித்-உடன் கலப்பதன் விளைவால் உண்டாகும்) உடல் கொள்ளும்போது, உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கிறது. நித்தியமான சேதனத்தை (அழிவற்றவனைப்) பொறுத்தவரையில் அவன் குணங்களும் வடிவமும் அற்றவனாக இருந்தபோதிலும் (பிரகிருதியுடன் கலப்பதன்ன் விளைவால்) அனைத்து வடிவங்களையும் ஏற்கிறான்.(40) பிறப்பு இறப்பு என்ற குணங்களைக் கொண்ட பிரகிருதியுடன் கலக்கும் அவனும், பிறப்பிறப்பின் குணங்களை ஏற்கிறான். உண்மையில் அவன் குணங்களேதும் அற்றவனாக இருப்பினும், அத்தகைய கலவையின் விளைவால் அவன் உணரப்படும் பொருளாகிறான்.(41) இவ்வழியிலேயே மகத்-ஆன்மா (ஹிரண்யகர்ப்பன்), பிரகிருதியுடன் கலந்து, அறியாமையைக் கொண்டு, மாற்றங்களை அடைந்து தன்னுணர்வைப் பெறுகிறான்[6].(42)
[5] "இத்தகைய ஸ்லோகங்களின் பொருளானது, இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட வார்த்தைகளின் இலக்கணக் குறியீடுகளைச் சார்ந்திருக்கின்றன. சம்ஸ்க்ருதத்தில் இருந்து வராத வேறெந்த மொழியிலும் சரியா இவற்றை உரைத்துவிட முடியாது. பிரகிருதியே அண்டத்தின் அதிஷ்டாத்ரி. விஷ்ணு அல்ல. விஷ்ணு, பிரம்மன், அக்ஷரம், அல்லது அழிவில்லாதது ஆகியன அண்டத்தைப் படர்ந்தூடுவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஷ்ணு வியாபகன் ஆனால் அதிஷ்டாத்ரி {அதிஷ்டாதா} அல்ல என்ற பொருளையே இந்த ஸ்லோகம் தருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] கும்பகோணம் பதிப்பில், "எதை அடைந்து மறுபடி திரும்புகிறதில்லையோ தத்வமில்லாதவரும், தத்வமென்று பெயருள்ளவருமான அந்த விஷ்ணு இருப்பத்தைந்தாமவர். வித்வான்கள் இந்த விஷ்ணுவை இருப்புநான்கு தத்வங்களுக்கும் அதிஷ்டாதாவாக இருப்பதால் தத்வமாகச் சொல்லுகின்றனர். வ்யக்தத்தைப் படைத்ததும் நசிப்பதுமான அது அந்த அந்த மூர்த்தியை அடைகிறது. அது இருபத்துநான்காவதான அவ்யக்தம் {பிரகிருதி}. இருப்பதைந்தாமவன் {விஷ்ணு} சரீரமில்லாதவன்; எல்லா மூர்த்திகளுமுள்ளவனும் (உண்மையில்) மூர்த்தியில்லாதவனுமான அவனே சேதனவஸ்துக்களுக்கெல்லாம் அறிவைக் கொடுத்து எப்பொழுதும் எல்லா மூர்த்திகிலும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக இருக்கிறான். ஸ்ருஷ்டி ப்ரளயமென்கிற தர்மத்தோடு கூடின பிரகிருதியினாலே ஸ்ருஸ்டிப்ரளய தர்மத்தையுடையவனாகவும் இருக்கிறான். குணமில்லாதவனாயிருந்தும் குணமுள்ளவனென்கிற பெயருடன் எப்பொழுதும் விஷயமாகிறான். இவ்விதம் இந்த மஹனான பரமாத்மா ஸ்ருஷ்டி ப்ரளயங்களில் ஸமர்த்தனாயிருக்கிறான். அவனே பிரகிருதியுடன் கூடி விகாரத்தையடைகிறான். அறிந்துகொள்ளுதலில்லாமல் (அந்த விகாரத்தை) அபிமானிக்கின்றான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "எனினும் இருப்பத்தைந்தாவதும் ஒன்று இருக்கிறது. அவன் விஷ்ணு ஆவான். அவனே உண்மையும், அவனது வெளிப்பாடுகளே உண்மையுமாகும். கல்விமான்கள், அவனே அனைத்து உண்மைகளின் புகலிடம் என்பதே உண்மை எனச் சொல்கிறார்கள். புலப்படும் வடிவம் கொண்ட அனைத்தும், வடிவமற்றதையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அந்த இருபத்துநான்கும் புலப்படுபவையாகும். எனினும் இருபத்தைந்தாமவனுக்கு வடிவம் கிடையாது. அவன் அனைத்தின் இதயத்திலும் இருக்கிறான். அவனது வடிவம் அவனது ஆத்மாவிலேயே நிறுவப்பட்டுள்ளது. நனவுநிலை, நனவின்மை ஆகிய வடிவம் கொண்ட அனைத்து உடல்களிலும் இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவின் தன்மைகள் அவை பின்பற்றுகின்றன, அனால் அவன் {விஷ்ணு} படைப்பும், அழிவுமற்றவனாவான். அவன் குணங்களற்றவனாக இருப்பினும், அவன் எப்போதும் குணங்களைக் கொண்டவனாக உணரப்படுகிறான். படைப்பையும், அழிவையும் குறித்து அறிந்தவர்கள் புத்திமிக்க மஹத், பிரகிருதியுடன் இணைந்து இவ்வழியிலேயே செயல்படுகிறது என்று சொல்கிறார்கள்" என்றிருக்கிறது.
சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களுடன் கலக்கும் அவன், மறதியாலும், அறியாமையின் விளைவாலும் பல்வேறு வகைகளைச் சார்ந்த பல்வேறு உயிரினங்களாக அடையாளம் காணப்படுகிறான்.(43) பிரகிருதியுடன் கலந்து வசிப்பதால் எழும் அவனது பிறப்பு மற்றும் அழிவின் விளைவால், உண்மையில் அவன் யாரோ, அவனாகவே தன்னை நினைக்கிறான். இஃது, அல்லது அதுவாகத் தன்னைக் கருதும் அவன், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைப் பின்பற்றுகிறான்.(44) தமஸின் ஆதிக்கத்தில் அவன் தமஸால் பீடிக்கப்படும் பல்வேறு வகை நிலைகளை அடைகிறான். ரஜஸ் மற்றும் சத்வத்தின் ஆதிக்கத்தால் அவன் அதே போன்று ரஜஸ் மற்றும் சத்வத்தால் பாதிக்கப்பட்ட நிலைகளை அடைகிறான்.(45) இவை வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களாகும். அந்த நிறங்கள் அனைத்தும் பிரகிருதியின் தொடர்புடையவையாக இருக்கின்றன (வெள்ளையாக, சிவப்பாக அல்லது கருப்பாக இருப்பவன் அவனோடு தொடர்புடைய பிரகிருதியின் இயல்பின்படி காலத்திற்கேற்ற நிறத்தை அடைகிறான்).(46) தமஸ் குணத்தால் ஒருவன் நரகத்திற்குச் செல்கிறான். ரஜஸால் மானிட நிலையை அடைகிறான் (அல்லது தக்க வைத்துக் கொள்கிறான்). சத்வத்தின் மூலம் மக்கள் தேவர்களின் உலகங்களுக்கு உயர்ந்து, பேரின்ப நிலையின் பங்குதாரர்கள் ஆகின்றனர்.(47) தொடர்ந்து பாவச்செயல்களைச் செய்வதால் ஒருவன் இடைநிலை வகைகளில் {பறவை மற்றும் விலங்கு பிறப்பை அடைந்து} மூழ்குகிறான். அறம் சார்ந்து செயல்படுவதால் மட்டுமே ஒருவன் தேவர்களின் நிலையை அடைகிறான்.(48) இவ்வழியில், இருபத்தைந்தாவது காரியமான அக்ஷரம் (அழிவற்றது) புலப்படாததுடன் (பிரகிருதியுடன்) கலப்பதன் மூலம், க்ஷரமாக (அழிவுள்ளதாக) மாறுகிறது என ஞானியர் சொல்கின்றனர். எனினும், ஞான வழிமுறைகளின் மூலம் அழிவற்றவனானவன், தன் உண்மை இயல்பை வெளிப்படுத்துகிறான்" என்றார் {வசிஷ்டர்}.(49)
சாந்திபர்வம் பகுதி – 303ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |