The ignorance of soul! | Shanti-Parva-Section-304 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 131)
பதிவின் சுருக்கம் : அறியாமையில் கட்டுண்டிருக்கும் ஆன்மாவைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, "இவ்வாறு, ஆன்மாவானது தன் மறதியின் விளைவால் அறியாமையைப் பின்பற்றி, ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உடல்களை {பிறவிகளை} அடைகிறது. ஆயிரக்கணக்கான பிறவிகளை இடைநிலை வகைகளின் மத்தியிலும், சில வேளைகளில் (குறிப்பிட்ட) குணங்களுடன் ஏற்படும் கலவையின் விளைவாலும், மற்றும் அந்தக் குணங்களின் பலத்தாலும் தேவர்களுக்கு மத்தியிலும் எடுக்கிறது. மனித நிலையில் இருந்து சொர்க்கத்திற்கும், சொர்க்கத்திலிருந்து மீண்டும் மனித நிலைக்கும், பிறகு மனித நிலையில் இருந்து பல நீண்ட வருடங்களுக்கு நரகிலும் மூழ்குகிறது.(3) கூடுகளைக் கட்டும் {பட்டுப்}புழுவானது, தன்னைச் சுற்றிலும் நூல்களைப் பரப்பி அனைத்துப் பக்கங்களிலும் முழுமையாகத் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவே, ஆன்மாவும், உண்மையில் குணங்கள் அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், அனைத்துப் புறங்களிலும் குணங்களை நிறுவிக் கொள்கிறது (அவ்வாறு நிறுவி தன் சுதந்திரத்தை இழக்கிறது).(4)
(உண்மை இயல்பில்) இன்பதுன்பங்களைக் கடந்த நிலையில் இருந்தாலும், இவ்வாறே அது தன்னைத் தானே இன்பதுன்பங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறது. இவ்வாறே அது அனைத்து நோய்களையும் கடந்ததாக இருந்தாலும், தலைவலி, கண்வலி, பல்வலி, தொண்டைபாதிப்புகள், குடற்புண் {ஜலோதரம்}, அதிகத் தாகம், நொதி வீக்கம் {ஜ்வரகண்டம்}, வாந்திபேதி {விஷூசி}, தொழுநோய் {வெண்குஷ்டம்}, தீக்காயங்கள் {அக்னிதக்தம்}, இளைப்பு {காகம்}, காசநோய் {அபஸ்மாத்திரம்}, காக்காய்வலிப்பு {த்வந்துவம்} மற்றும் உடல்படைத்த உயிரினங்களின் உடல்களில் தோன்றும் பல்வேறு நோய்களாலும் தான் பீடிக்கப்படுவதாகக் கருதுகிறது.(5-7) ஆயிரக்கணக்கான இடைநிலை வகைகளிலும், சில வேளைகளில் தேவர்களுக்கு மத்தியிலும் பிறப்பதாகப் பிழையாகக் கருதும் அது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, நற்செயல்களின் கனிகளை அனுபவிக்கிறது.(8)
அறியாமையைக் கொண்ட அது {ஆன்மா}, சிலவேளைகளில் தான் வெள்ளுடை அணிந்திருப்பதாகவும், சிலவேளைகளில் நான்கு துண்டுகளைக் கொண்ட முழு உடை அணிந்திருப்பதாகவும் கருதுகிறது, அல்லது (படுக்கையில் விரிப்புகளுக்கு மத்தியில் இல்லாமல்) தரையில் கிடப்பதாகவோ, தவளையைப் போன்ற குறுகிய கை கால்களைக் கொண்டிருப்பதாகவோ, தவசியின் தியான மனோநிலையில் நிமிர்ந்து அமர்ந்திருப்பதாகவோ, மரவுரி உடுத்தியிருப்பதாகவோ, வானத்தையே கூரையாகக் கொண்டு அமர்ந்திருப்பதாகவோ, கிடப்பதாகவோ, செங்கற்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட மாளிகைக்குள் இருப்பதாகவோ, கரடு முரடான கற்களில் இருப்பதாகவோ, சாம்பலில் இருப்பதாகவோ, வெறுங்கற்களில் இருப்பதாகவோ, வெறும் தரையில் இருப்பதாவோ, படுக்கையில் இருப்பதாகவோ, போர்க்களங்களில் இருப்பதாகவோ, நீரில் இருப்பதாகவோ, புழுதியில் இருப்பதாகவோ, பலகைகளில் இருப்பதாகவோ, கனியின் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பல்வேறு வகைப் படுக்கைகளில் இருப்பதாகவோ, புல்லாலான சிறிய உடையை அணிந்திருப்பதாகவோ, மொத்தமாக நிர்வாணமாக இருப்பதாகவோ, பட்டு உடுத்தியிருப்பதாகவோ, கருப்பு மானின் தோலை அணிந்திருப்பதாகவோ, பட்டாடை உடுத்தியிருப்பதாகவோ, ஆட்டுத்தோல், அல்லது புலித்தோல், அல்லது சிங்கத் தோல் உடுத்தியிருப்பதாகவோ, சணலாலான ஆடை உடுத்தியிருப்பதாகவோ, பூச்சமரப்பட்டை அணிந்திருப்பதாகவோ, முட்செடிகளால் உண்டான ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, புழுக்கள் வெளியிடும் நூல்களில் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதாகவோ, கிழிந்த கந்தலுடை அணிந்திருப்பதாகவோ, குறிப்பிட முடியாத அளவுக்கு எண்ணற்ற பிறவகை ஆடைகளை உடுத்தியிருப்பதாகவோ {ஆத்மா} கருதிக் கொள்கிறது. ஆத்மாவானது, பல்வேறு வகை ஆபரணங்களையும், ரத்தினங்களையும் அணிந்திருப்பதாகவோ, பல்வேறு வகை உணவுகளை உண்பதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது.(9-15)
ஆத்மாவானது, ஓரிரவு இடைவெளிகளில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உண்பதாகவோ, ஒவ்வொரு நாளும் நான்கு, ஆறு மற்றும் எட்டாவது மணி நேரத்தில் உண்பதாகவோ,(16) அல்லது ஆறு, அல்லது ஏழு, எட்டு இரவுகளுக்கு ஒருமுறை உண்பதாகவோ, பத்து அல்லது பனிரெண்டு நாட்களுக்கு ஒருமுறை உண்பதாகவோ,(17) ஒரு மாதத்திற்கு ஒருமுறை உண்பதாகவோ, கிழங்குகளை மட்டும் உண்பதாகவோ, கனிகளை உண்பதாகவோ, காற்று அல்லது நீரை மட்டுமே உட்கொள்வதாகவோ, பிண்ணாக்கோ, தயிரோ, பசுஞ்சாணத்தையோ,(18) பசுவின் சிறுநீரையோ, கீரைகளையோ, மலர்களையோ, பாசிகளையோ, கஞ்சியோ,(19) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள், அல்லது தரையில் சிதறிக் கிடக்கும் கனிகளையோ, பல்வேறு உணவுகளையோ (தவ வெற்றியை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு உண்பதாகவோ கருதுகிறது.(20)
ஆத்மாவானது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் பதி சாந்திராயன நோன்பைப் பின்பற்றுவதாகவோ, நான்கு வாழ்வுமுறைகளில் பரிந்துரைக்கப்படும் பல்வேறு நோன்புகள், வழிமுறைகள் மற்றும் கடமைகளையும் பின்பற்றுவதாகவோ,(21) நான்கு முக்கிய வகையில் சேர்க்கப்பட்ட துணை வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பின்பற்றுவதாகவோ, தீயோரையும், பாவிகளையும் தனித்துக் காட்டும் பல்வேறு வகைப் பயிற்சிகளைப் பின்பற்றுவதாகவோ தன்னைக் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது ஓய்விடங்களை அனுபவிப்பதாகவும், மலைகளின் இனிமைநிறைந்த நிழல்களையும், ஊற்றுகள் மற்றும் நீரோடைகளின் அருகில் குளுமையையும்,(22) தனிமையான ஆற்றங்கரைகள், தனிமையான காட்டுப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்களுக்கு மத்தியில இருந்து விலகி தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதத்தலங்கள், தடாகங்கள், நீர்நிலைகள்,(23) இல்லங்களும், மாளிகைகளும் உள்ள அளவுக்கான தனிமையான மலைக்குகைகள் ஆகியவற்றில் தங்கி அனுபவிப்பதாகவும் கருதிக் கொள்கிறது. ஆன்மாவானது, பல்வேறு வகை மறைமந்திரங்களை உரைப்பதாகவும், பல்வேறு வகை நோன்புகளை நோற்பதாகவும், விதிகள், பல்வேறு வகைத் தவங்கள், பல்வேறு வகை வேள்விகள் மற்றும் பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபடுவதாகவும் கருதிக் கொள்கிறது.(25)
ஆன்மாவானது, சிலவேளைகளில் வணிகர்கள், வியாபாரிகளின் வழிகளைப் பின்பற்றுவதாகவும், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், இல்லாதோர், குருடர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு வகைக் கொடைகளை அளிப்பதாகவும் கருதிக் கொள்கிறது.(26) ஆன்மாவானது, அறியாமையுடன் இருப்பதன் விளைவால் சத்வம், ரஜஸ், தமஸ், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பல்வேறு குணகளைப் பின்பற்றுகிறது.(27) ஆன்மாவானது, பிரகிருதியின் ஆதிக்கத்தால் மாறுபாடுகளுக்கு உட்பட்டு, இவையாவற்றையும், நோற்று, பின்பற்றி, பயின்று தன்னை அவ்வாறே கருதிக் கொள்கிறது. உண்மையில் ஆன்மாவானது புனித மந்திரங்களான ஸ்வாஹா, ஸ்வதா, வஷத் ஆகியவற்றைச் சொல்வதில் ஈடுபடுவதாகவும், பெரியோராகத் தான் கருதுவோரை வணங்குவதாகவும்;(28) பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பதாகவும், சீடர்களுக்குப் போதிப்பதாகவும், கொடை அளிப்பதாகவும், அவற்றை ஏற்பதாகவும், வேள்விகளைச் செய்வதாகவும், சாத்திரங்களைக் கற்பதாகவும், இவ்வகையிலான செயல்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் செய்வதாகவும் கருதிக் கொள்கிறது.(29) ஆன்மாவானது, பிறப்பு, இறப்பு, சச்சரவுகள் மற்றும் கொலை ஆகியவற்றில் தொடர்புடையதாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவை யாவும் நல்லோர் மற்றும் தீயோரின் செயற்பாதைகளாக அமைகின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள்.(30)
பிரகிருதி தேவியே பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறாள். அண்டப் பேரழிவுக்கான காலம் நேரும்போது, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களும் குணங்களும், மாலை வேளையில் தன் கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சூரியனைப் போலத் தனியாக இருக்கும் பரமாத்மாவிற்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன;(31) படைப்புக்கான காலம் நேரும்போது, காலை வேளையில் கதிரைப் பொழியும் சூரியனைப் போல அது {பரமாத்மா} மீண்டும் அவற்றைப் படைத்துப் பரவச் செய்கிறது. இவ்வாறே ஆன்மாவானது, எண்ணிக்கையில் முடிவிலாதவையும், தனக்கு ஏற்புடையவையுமான தன் வடிவங்களும், குணங்களுமான இந்த வரம்புகள் அனைத்தையும் கொண்டதாக விளையாட்டாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. இவ்வழியிலேயே ஆன்மாவானது, உண்மையில் முக்குணங்களைக் கடந்ததாக இருந்தாலும், செயற்பாதைகளில் தன்னை இணைத்துக் கொண்டு, மாறுதல்களின் மூலம் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களின் தன்மைகளைக் கொண்ட வரம்புகள் மற்றும் செயல்கள் அனைத்துடன் கூடிய பிறப்பு, இறப்பு என்ற குணங்களைக் கொள்கிறது. ஆன்மாவானது செயற்பாதைக்கு வந்ததும், குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட தன்மைகளையும், குறிப்பிட்ட கதிகளை உண்டாக்குபவையாகவும் கருதுகிறது.(32-34) ஓ! ஏகாதிபதி, இந்த மொத்த அண்டமும் பிருகிருதியால் குருடாக்கப்பட்டு, (பிரகிருதியின் மூலம்) அனைத்துப் பொருட்களும் பல்வேறு வகைகளில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கடிக்கப்படுகின்றன.(35)
ஆன்மாவானது பிரகிருதியுடன் இருப்பதன் விளைவாலேயே இன்ப துன்பங்களை உண்டாக்கும் இந்த முரண்பட்ட இரட்டைகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்த அறியாமையின் விளைவினாலேயே ஜீவனானது இந்தச் சோகங்கள் அனைத்தையும் தனதாகவும், அவை தன்னைத் தேடி வருவதாகவும் கருதிக் கொள்கிறது.(36) உண்மையில், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அந்த அறியாமையின் மூலமே ஜீவனானது, எவ்வாறேனும் அந்தக் கவலைகளைக் கடக்க வேண்டும் என்றும், தன் நற்செயல்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கும் இன்பங்களை அனுபவிக்கத் தேவர்களின் உலகிற்குச் செல்ல வேண்டும் என்று கற்பனை செய்கிறது. அந்த அறியாமையின் மூலமே அஃது {ஜீவன்}, இவ்வுலகின் இன்பதுன்பங்களைச் சகிக்கவும், அனுபவிக்கவும் வேண்டுமென நினைகிகறது.(37,38) ஜீவனானது அந்த அறியாமையின் மூலமே, "நான் மகிழ்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக நற்செயல்கள் செய்வதால் என் வாழ்வின் முடிவு வரை நான் மகிழ்ச்சியைப் பெறுவேன். என் எதிர்காலப் பிறவிகள் அனைத்தும் இன்பமாக அமையும்.(39) மேலும் இப்பிறவியில் நான் செய்யும் (தீய) செயல்களின் மூலம் முடிவிலா கவலையே எனதாகும். மனித வாழ்வில் இருந்து ஒருவன் நரகிற்குள் மூழ்குவதால், மனித நிலையே பெருந்துன்பம் நிறைந்தது.(40) நரகத்திலிருந்து மீண்டும் நான் மனித நிலைக்குத் திரும்பப் பல வருடங்கள் ஆகும். மனித நிலையில் இருந்து மீண்டும் நான் தேவர்களின் நிலையை அடைவேன். அந்த மேன்மையான நிலையில் இருந்து மீண்டும் மனித நிலையை அடைந்து,(41) அங்கிருந்து மீண்டும் நான் நரகில் மூழ்குவேன்" என்று நினைக்கிறது.
அடிப்படை பூதங்கள், புலன்கள் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, அதனில் உள்ள சித்-ன் சிந்தனையுடன் இவ்வாறு ஆன்மாவின் தன்மைகளுடன் கூடியதாக இருக்கிறது என்று கருதும் ஒருவன்,(42) மீண்டும் மீண்டும் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் திரிந்து நரகில் மூழ்க வேண்டியிருக்கும். எப்போதும் மமதையுடன் கூடிய ஜீவனானது இத்தகைய பிறவிகளில் சுழல வேண்டியிருக்கிறது.(43) ஜீவன் அடுத்தடுத்து கோடிக்கணக்கான பிறவிகளை அடைவதன் மூலம் அதனுக்குக் கிட்டும் வடிவங்கள் அனைத்தும் மரணத்திற்கு ஆட்படக்கூடியவையே. நல்ல மற்றும் தீய கனிகள் நிறைந்த இவ்வழியில் செயல்படும் ஒருவன்,(44) மூவுலகங்களிலும் அடுத்தடுத்த வடிவங்களை ஏற்று அதனோடு தொடர்புடைய இன்பதுன்பங்களையும் பொறுத்துக் கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டும். நல்ல மற்றும் தீ செயல்கள் நிறைந்த செயல்களைப் பிரகிருதியே உண்டாக்குகிறது;(45) மூவுலங்களில் கிட்டும் கனிகளையும் பிரகிருதியே தாங்கிக் கொள்ளவும், அனுபவிக்கவும் செய்கிறது. உண்மையில் பிரகிருதியானது செயல்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. இடைநிலை வகைகள், மனித நிலை, தேவர்கள் ஆகிய இந்த மூன்று களங்களும்(46) பிரகிருதியில் இருந்து தோன்றுபவை என்பது அறியப்பட வேண்டும். பிரகிருதியானவள் குணங்கள் அனைத்தும் இல்லாதது என்று சொல்லப்படுகிறாள். (மஹத்-உடன் கூடிய தொடக்கத்தில்) அவளது செயல்களின் விளைவால் மட்டுமே அவளது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.(47) இதே வகையிலேயே புருஷன் (அல்லது ஆத்மா) குணங்கள் அற்றவனாக இருந்தாலும், சிந்தனையைப் பெறும்போது உடல் செய்யும் செயல்களின் விளைவால் தன் இருப்பை உறுதி செய்கிறது[1].
[1] கும்பகோணம் பதிப்பில், "பிரகிருதியை அடையாளமற்றதாகச் சொல்லுகின்றார்கள். (காரியங்களாகிற) அடையாளங்களால் நாம் அனுமானிக்கின்றோம். அப்படிப்போலவே புருஷனைச் சேர்ந்த (அறிவு ரூபமான) அடையாளமுமிருக்கின்றது. அனுமானத்தாலல்லவா புருஷன் அறியப்படுகிறான்?" என்றிருக்கிறது.
ஆன்மாவானது எவ்வகை மாறுதலுக்கு உட்படாதது என்றாலும், செயற்கோட்பாடே பிரகிருதியை நகரச் செய்கிறது என்றாலும்,(48) அறிவு மற்றும் செயல்புலன்களோடு {ஞானகர்மேந்திரியங்களோடு} கலக்கும் அஃது, அந்தப் புலன்களின் செயல்கள் அனைத்தையும் தனதாகவே கருதுகிறது. காது முதலிய ஐந்து அறிவுப்புலன்களும்,(4) வாக்கு முதலிய செயற்புலன்களும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்களுடன் கலந்து எண்ணற்ற பொருட்களில் ஈடுபடுகின்றன. உண்மையில் ஜீவனுக்குப் புலன்கள் இல்லையென்றாலும், தன் வாழ்வின் செயல்களைத் தானே செய்வதாகவும், அறிவு மற்றும் செயற்புலன்கள் அனைத்தும் தனதே என்றும் அவன் {ஜீவன்} கருதுகிறான்.(50) உண்மையில் உடலில்லாமல் இருந்தாலும், அவன் தனக்கு உடலிருப்பதாகக் கருதுகிறான். குணங்களற்றவனாக இருப்பினும் அவற்றைக் கொண்டுள்ளதாகவும், காலத்தைக் கடந்தவனாக இருப்பினும், காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவனாகவும் தன்னைக் கருதிக் கொள்கிறான்.(51) புத்தியற்றவனாகயிருந்தாலும், அது தனக்கிருப்பதாகவும், (இருபத்து நான்கு) காரியங்களையும் கடந்திருந்தாலும், அவற்றுடன் ஒன்றாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். மரணமற்றவனாக இருந்தாலும், தன்னை மரணத்திற்கு உட்பட்டவனாகவும், அசைவற்றவனாக இருந்தாலும், தன்னை அசைபவனாகவும் அவன் கருதிக் கொள்கிறான்.(52) உடல் கூடற்றவனாகாக இருந்தாலும், தனக்கு ஒன்று இருப்பதாகவும், பிறப்பற்றவனாக இருந்தாலும், தனக்குப் பிறந்து உண்டு என்றும் அவன் கருதுகிறான். தவங்களைக் கடந்தவனாக இருந்தாலும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், தனக்கு எந்தக் கதியும் கிடையாது என்றாலும், கதியடையத் தகுந்தவன் என்றும் தன்னை அவன் கருதிக் கொள்கிறான்.(53) அசைவும், பிறப்பும் அற்றவனாக இருந்தாலும், அவை இரண்டும் தனக்கு இருப்பதாகவும், அச்சத்தைக் கடந்தவனாக இருந்தாலும், அச்சம் கொண்டவனாகவும் அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அழிவற்றவனாக இருந்தாலும் அவன் தன்னை அழியத்தக்கவனாகக் கருதுகிறான். அறியாமையுடன் கூடிய ஆன்மாவானது இவ்வாறே தன்னைக் குறித்து நினைத்துக் கொள்கிறது" என்றார் {வசிஷ்டர்}.(54)
சாந்திபர்வம் பகுதி – 304ல் உள்ள சுலோகங்கள் : 54
ஆங்கிலத்தில் | In English |