Soul impure! | Shanti-Parva-Section-305 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 132)
பதிவின் சுருக்கம் : ஜீவனின் பதினாறு கலைகள்; பதினாறாவது கலையான சித்; ஜீவன் களங்கமடையும் தருணம் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {ஜனக மன்னன் கராளனிடம்}, "இவ்வாறே அறியாமையின் விளைவாலும், அறியாமையுடன் கூடிய பிறவற்றின் தொடர்பாலும் ஜீவனானவன், அழிவையே கதியாகக் கொண்ட ஆயிரம் கோடி பிறவிகளை அடைகிறான்.(1) ஜீவனானவன், அறியாமையுடன் கூடிய சித்-ஆக மாறுவதன் விளைவால், இடைநிலை வகைகள், மனிதர்கள், தேவர்களுக்கு மத்தியில் ஆயிரம் வசிப்பிடங்களை அடைகிறான்.(2) அறியாமையின் விளைவால் அந்த ஜீவன், ஆயிரமாயிரம் முறை சந்திரமாஸைப் போல வளரவும் தேயவும் செய்கிறான். இதுவே அறியாமையுடன் கூடிய ஜீவனின் உண்மையான இயல்பாகும். உண்மையில் சந்திரமாஸுக்கு பதினாறு பகுதிகள் {கலைகள்} முழுமையாக உண்டு என்பதை அறிவாயாக. அவற்றில் பதினைந்து மட்டுமே வளரவும், தேயவும் செய்கின்றன.(3) (புலப்படாதிருப்பதும், புதுநிலவின் {அமாவாசையின்} இரவில் தோன்றுவதுமான எஞ்சியிருக்கும் பாகமான) அந்தப் பதினாறாவது பாகம் நிலையானதாக இருக்கிறது. சந்திரமாஸைப் போலவே, ஜீவனுக்கும் முழுமையாகப் பதினாறு கலைகள் இருக்கின்றன. அவற்றில் (சித்-ன் பிம்பத்தோடு {சிந்தனையோடு} கூடிய பிரகிருதி, ஞானம் மற்றும் செயற்புலன்கள் பத்து, உட்பொருட்கள் நான்கு ஆகியவை) பதினைந்தும் தோன்றவும், மறையவும் செய்கின்றன. பதினாறாவது (தூய சித்-ஆனது) எந்த மாறுதலுக்கும் உட்படுவதில்லை.(4)
அறியாமையுடன் கூடிய ஜீவன், மேற்குறிப்பிட்ட பதினைந்து பாகங்களுடன் {கலைகளுடன்} மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறக்கிறான். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான ஜீவனின் பாகம் அடிப்படை பூதங்களுடன் கலக்கிறது, இந்தக் கலவை மீண்டும் மீண்டும் நேர்கிறது.(5) பதினாறாவது பாகம் {கலை} நுட்பமானதாகும் {சூக்ஷ்மமானதாகும்}. அது {தூய சித்} (நிலையானவனும், மாற்றமில்லாதவனுமான) சோமனாக அறியப்பட வேண்டும். அஃது ஒருபோதும் புலன்களால் தாங்கப்படுவதில்லை. மறுபுறம் புலன்களே அதனால் தாங்கப்படுகின்றன.(6) அந்தப் பதினாறும் உயிரினங்களின் பிறப்புக்குக் காரணமாக இருப்பதால், ஓ! ஏகாதிபதி {கராளனே}, அவற்றின் துணை இல்லாமல் ஒருபோதும் உயிரினங்களால் பிறவியை அடைய முடியாது. அவையே பிரகிருதி என்றழைக்கப்படுகின்றன. ஜீவன் பிரகிருதியுடன் கலக்க வேண்டிய காரியத்தின் அழிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(7)
இருபத்தைந்தாவதாக இருக்கும் மஹத்-ஆன்மாவானது, புலப்படாதது என்றழைக்கப்படும். பதினாறு பாகங்களை {கலைகளைக்} கொண்ட உடலைத் தனதெனக் கருதினால், அது மீண்டும் மீண்டும் வடிவத்தை ஏற்க வேண்டும். ஓ! மன்னா, களங்கமற்றதும், தூயதும் எது என்பதை அறியாததன் விளைவால், தூய்மை மற்றும் தூய்மையின்மை ஆகிய இரண்டின் கலவையில் விளையும் அர்ப்பணிப்புக்காக, உண்மையில் தூய்மையான ஆன்மாவானது தூய்மையற்றதாகிறது {களங்கமடைகிறது}.(8,9) அறியாமையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஜீவனானது, ஞானத்தின் தன்மையைக் கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அறியாமையுடன் தொடர்பு கொள்கிறது.(10) ஓ! ஏகாதிபதி, அனைத்து வகைக் குற்றங்களில் இருந்து விடுபட்டிருந்தாலும், பிரகிருதியின் முக்குணங்களில் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அஃது அந்தக் குணங்களைக் கொண்டதாகிறது" என்றார் {வசிஷ்டர்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 305ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |