Yoga and Sankhya! | Shanti-Parva-Section-307 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 134)
பதிவின் சுருக்கம் : யோக முறை மற்றும் சாங்கிய முறை; ஆன்மா, புருஷன், க்ஷேத்ரம், க்ஷேதரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
ஜனகன் {ஜனக மன்னன் கராளன் முனிவர் வசிஷ்டரிடம் }, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அக்ஷரம் (அழிவற்றது) என்பதன் குணம் ஒருமை என்றும், க்ஷரம் (அழியத்தக்கது) என்றழைக்கப்படுவதன் குணம் பன்மை என்று நீர் சொன்னீர். எனினும், இவ்விரண்டின் இயல்பைக் குறித்து நான் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் என் மனத்தில் ஐயங்கள் பதுங்கியிருக்கின்றன.(1) அறியாமையிலுள்ள மனிதர்கள் ஆன்மாவைப் பல நிகழ்வுகள் கொண்டதாகப் பார்க்கின்றனர். எனினும், அறிவும், விவேகமும் கொண்டோர் ஆன்மாவை ஒன்றே ஒன்றாகக் கருதுகின்றனர். எனினும், நான் மிக மந்த புத்தியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, இவை யாவும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்.(2) அக்ஷரம் மற்றும் க்ஷரத்தின் ஒருமை மற்றும் பன்மைக்காக நீர் சொன்ன காரணங்களையும், என் நிலையற்ற புத்தியின் விளைவால் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்.(3) எனவே, ஒருமை {அபேதம்} மற்றும் பன்மை {பேதம்}, ஞானி, அஜ்ஞானி, ஜீவாத்மா, ஞானம், அறியாமை, அக்ஷரம், க்ஷரம், சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் ஆகியவை குறித்து நீர் எனக்கு மீண்டும் சொல்லவும், நான் கேட்கவும் விரும்புகிறேன்" என்றான் {கராளன்}.(4,5)
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, "நீ கேட்பதை உனக்குச் சொல்கிறேன். எனினும், ஓ! ஏகாதிபதி, யோக நடைமுறைகளைத் தனியாக விளக்குகிறேன் கேட்பாயாக.(6) யோகிகளின் கட்டுப்பாடான தியானமே அவர்களுடைய உயர்ந்த பலமாகும்[1]. தியானம் இருவகைப்பட்டது என யோகத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(7) ஒன்று மனக்குவிப்பு மற்றொன்று (சுவாசத்தை முறைப்படுத்தும்) பிராணாயாமம் என்றழைக்கப்படுகிறது. பிராணாயாமம் பொருள் கொண்டதாகவும், மனக்குவிப்பு அதைக் கொள்ளாததாகவும் சொல்லப்படுகிறது[2].(8) சிறுநீர் கழிப்பு, மலக்கழிப்பு, உணவு உண்ணுதல் ஆகிய மூன்று வேளைகளைத் தவிர ஒருவன் தனது மொத்த காலத்தையும் தியானத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.(9) மனத்தின் துணையுடன் புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் இருந்து விலக்கும் புத்திமான், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, பிராண மூச்சை வெளிப்படுத்தும் இருபத்திரண்டு {22} முறைகளுக்கு {ஏவல்களுக்கு} ஏற்புடைய வகையில், எது (அறியாமை அல்லது பிரகிருதி என்றழைக்கப்படும்) இருபத்துநான்கு தத்துவங்களைக் கடந்ததோ, எது உடலின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதாகவும், சிதைவு மற்றும் அழிவுக்கு அப்பாற்பட்டதாகவும் ஞானிகளால் கருதப்படுகிறதோ அதனுடன் {பரமாத்மாவுடன்} ஜீவாத்மாவைக் கலக்க வேண்டும்.(10,11)
[1] ஏனெனில், தியானம் அவர்களை அறியாமை வெல்லவல்லவர்களாக்குகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "பிராணாயாமம் மந்திரங்கள் அல்லது ஜபத்தின் துணையுடன் செய்யப்படும்போது அது சகுணம் அல்லது சகர்ப்பம் அல்லது பொருள் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. எனினும், மனக்குவிப்பானது அத்தகைய ஜபத்தின் உதவியோடு அமைவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராணாயாமம் மனத்தின் குணத்தோடு கூடினதும், குணமில்லாததுமாக இருக்கிறது" என்றிருக்கிறது.
அந்த இருபத்திரண்டு {22} முறைகளின் மூலம்தான் ஆன்மா எப்போதும் அறியப்படுகிறது என நாம் கேள்விப்படுகிறோம். தீய ஆசைகளால் ஒருபோதும் பாதிக்கப்படாத மனம் கொண்டவனுடையதே இந்த யோகப்பயிற்சி என்பது உறுதியாகும். அது வேறு யாருடையதுமல்ல.(12) ஓ! மிதிலையின் மன்னா {கராளா}, ஒருவன், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, எளிமையான உணவு உண்டு, புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, புலன்கள் அனைத்தின் செயல்பாடுகளையும் நிறுத்திய பிறகு, ஒரு பாறையைப் போன்ற அசைவற்ற நிலையை ஏற்று, புத்தியால் மனத்தை அமைதிப்படுத்தி, இரவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியில் தன் மனத்தை ஆன்மாவில் நிலைநிறுத்த வேண்டும்.(13,14) யோக விதிகளை அறிந்த ஞானிகள் ஒரு மரத்துண்டைப் போல நிலையாகவும், ஒரு மலையைப் போல அசைவில்லாமலும் இருக்கும்போதே அவர்கள் யோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(15) ஒருவன் கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், காணவும் செய்யாதபோது; தீண்டலின் எந்த உணர்வும் பெறாதபோது; அனைத்துக் காரியங்களில் இருந்தும் மனம் முற்றிலும் விடுபட்டிருக்கும்போது;(16) அவன் எந்தப் பொருளையும் உணராதபோது, எந்தச் சிந்தனையையும் வளர்க்காதபோது; அவன் மரத்துண்டைப் போல ஆகும்போது, அவன் கச்சிதமான யோகத்தில் இருப்பதாக ஞானியரால் அழைக்கப்படுகிறான்.(17)
அத்தகைய நேரத்தில் அவன், காற்றில்லாத ஓர் இடத்தில் எரியும் விளக்கைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்; அத்தகைய நேரத்தில் அவன் தன் நுட்பமான வடிவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கச்சிதமாகக் கலக்கிறான். ஒருவன் அத்தகைய முன்னேற்றத்தை அடையும்போது, அவன் உயரவோ {உயர்ந்த நிலையை அடையவோ}, இடைநிலை வகைகளுக்கு மத்தியில் வீழவோ வேண்டிய தேவையேதும் இல்லை.(18) அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றை முழுமையாக அடையாளங் கண்டதாக நம்மைப் போன்ற மனிதர்கள் சொல்லும்போது, யோகியானவன் பரமாத்மாவைக் காண்பதாகச் சொல்லப்படுகிறது.(19) யோகத்தில் இருக்கும்போது, அந்த யோகியின் இதயத்தில் சுடர்மிக்க நெருப்பைப் போலவோ, பிரகாசமான சூரியனைப் போலவோ, வானத்தில் தோன்றும் தீப்பிழம்பைப் போலவோ பரமாத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது[3].(20)
[3] கும்பகோணம் பதிப்பில், "லிங்கசரீரமில்லாதவனும், அசைவற்றவனுமாகி காற்றில்லாதவிடத்தில் ஜ்வலிக்கின்ற தீபம் போல மேலே பிரகாசிக்கின்றவனும், சலனகதியை அடையாதவனுமாயிருப்பவன் பரமாத்மாவைப் பார்ப்பான். பார்த்து, "அப்பா! என்னைப் போன்றவர்களால் அறிய வேண்டியவனும் (எல்லாவற்றையும்) அறிகிறவனுமான பரமாத்மா இருதயத்திலிருக்கிறான்" என்று சொல்லுவான். அப்படியே ஆத்மாவானவன் புகையில்லாத அக்கினி போலவும், கிரணங்களுள்ள ஸூர்யன் போலவும், ஆகாயத்தில் மின்னலுடைய ஜோதிபோலவும் தன்னிடத்தில் காணப்படுவான். மஹாத்மாக்களும், தைரியமுடையவர்களும், வித்வான்களும் ப்ரம்மத்தைத் தெரிவிக்கின்ற சாஸ்திரத்தில் நிஷ்டையுள்ளவர்களுமான பிராம்மணர்கள் ஜனனமரணமற்ற ஆத்மாவை நன்றாகப் பார்க்கின்றார்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "பிறகு அவன் காணவேண்டியதைக் காண்கிறான். கண்டபிறகு பேசாமல் இருக்கிறது. நம்மைப் போன்ற மனிதர்கள், அறிபவன், அறியப்பட வேண்டியது, ஆத்மா ஆகியவை ஒன்றானதாகச் சொல்கிறோம். அவன் ஏழு தழல்களைக் கொண்ட புகையற்ற நெருப்பைப் போல இருக்கிறான். அவன் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போல இருக்கிறான். அவன் வானத்தில் உள்ள நெருப்பு மின்னலைப் போல இருக்கிறான். அவன் ஆத்மாவைத் தானாகவே {தன்னைப் போன்றதாகவே} காண்கிறான். உயர் ஆன்மா கொண்டவர்களும், புத்திமான்களும், கல்விமான்களுமான பிராமணர்கள் இவ்வழியிலே இதைக் காண்கிறார்கள்" என்றிருக்கிறது.
பிறப்பற்றதும், அமுதச் சாரமும், புத்தி மற்றும் ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்களால் காணப்படுவதுமான பரமாத்மாவானது,(21) நுட்பத்திலும் நுட்பமானதாகவும், பெரிதிலும் பெரிதானதாகவும் இருக்கிறது. ஆத்மாவானது, அனைத்து உயிரினங்களிலும் வசித்தாலும், அஃது அவற்றால் காணப்படுவதில்லை.(22) உலகங்களைப் படைத்தவன், மனமெனும் விளக்கின் துணையுடன் புத்தியெனும் செல்வம் கொண்ட மனிதனால் மட்டுமே காணப்படுகிறான். அவன் அடர் இருளின் அடுத்தக் கரையில் வசித்து, அதைக் கடந்திருப்பவன் ஈஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(23) வேதங்களை அறிந்தவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களுமான மனிதர்கள், அவனை இருளை விலக்குபவன், களங்கமற்றவன், இருளைக் கடந்திருப்பவன், குணங்கள் அற்றவன், அவற்றை {குணங்களைக்} கொண்டவன் என்று அழைக்கிறார்கள்.(24)
இதுவே யோகிகளின் யோகம் என்றழைக்கப்படுகிறது. யோகத்தின் குறியீடாக இருப்பது வேறெது? யோகிகள் இத்தகைய பயிற்சிகளின் மூலம் அழிவையும், சிதைவையும் கடந்த பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறார்கள்.(25) யோக அறிவியல் காரியங்களைக் குறித்து இந்த அளவுக்கு விளக்கமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.
இனி, பிழைகளைப் படிப்படியாக அழிப்பதன் மூலம் பரமாத்மாவைக் காணும் சாங்கிய மெய்யியல் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(26) பிரகிருதியில் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்ட சாங்கியர்கள், புலப்படாததான பிரகிருதியே முதன்மையானது எனச் சொல்கிறார்கள். ஓ!ஏகாதிபதி, பிரகிருதியில் இருந்து மஹத் என்றழைக்கப்படும் இரண்டாம் கோட்பாடு உண்டாவதாக அவர்கள் சொல்கிறார்கள்.(27) மஹத்திலிருந்து நனவுநிலை {அகங்காரம்} என்றழைக்கப்படும் மூன்றாம் கோட்பாடு தோன்றுவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆன்ம பார்வையால் அருளப்பட்ட சாங்கியர்கள், அந்த நனவுநிலையில் இருந்து ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் ஐந்து {5} நுட்பமான சாரங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்.(28) இந்த எட்டையும் {8} அவர்கள் பிரகிருதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த எட்டின் மாறுபாடுகள் {விகாரங்கள்} எண்ணிக்கையில் பதினாறாக {16} இருக்கின்றன. அவை {அந்தப் பதினாறு விகாரங்கள்} வெளி {ஆகாயம்}, ஒளி, பூமி {நிலம்}, நீர் மற்றும் காற்று ஆகிய திரள் பூதங்கள் ஐந்தும், அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள்} பத்தும் {10}, மனமும் ஆகும்.(29) சாங்கிய பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அதன் விதிகள் மற்றும் வகைமைகளை அறிந்தவர்களுமான ஞானிகள், இந்த இருபத்துநான்கு {24} காரியங்களையும் {தத்துவங்களையும்} மொத்த சாங்கிய விசாரணையின் எல்லையைத் தழுவியவையாகக் கருதுகிறார்கள்.(30)
இனி, பிழைகளைப் படிப்படியாக அழிப்பதன் மூலம் பரமாத்மாவைக் காணும் சாங்கிய மெய்யியல் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்.(26) பிரகிருதியில் கட்டப்பட்ட அமைப்பைக் கொண்ட சாங்கியர்கள், புலப்படாததான பிரகிருதியே முதன்மையானது எனச் சொல்கிறார்கள். ஓ!ஏகாதிபதி, பிரகிருதியில் இருந்து மஹத் என்றழைக்கப்படும் இரண்டாம் கோட்பாடு உண்டாவதாக அவர்கள் சொல்கிறார்கள்.(27) மஹத்திலிருந்து நனவுநிலை {அகங்காரம்} என்றழைக்கப்படும் மூன்றாம் கோட்பாடு தோன்றுவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆன்ம பார்வையால் அருளப்பட்ட சாங்கியர்கள், அந்த நனவுநிலையில் இருந்து ஒலி, வடிவம், ஊறு {தீண்டல்}, சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் ஐந்து {5} நுட்பமான சாரங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள்.(28) இந்த எட்டையும் {8} அவர்கள் பிரகிருதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த எட்டின் மாறுபாடுகள் {விகாரங்கள்} எண்ணிக்கையில் பதினாறாக {16} இருக்கின்றன. அவை {அந்தப் பதினாறு விகாரங்கள்} வெளி {ஆகாயம்}, ஒளி, பூமி {நிலம்}, நீர் மற்றும் காற்று ஆகிய திரள் பூதங்கள் ஐந்தும், அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள்} பத்தும் {10}, மனமும் ஆகும்.(29) சாங்கிய பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அதன் விதிகள் மற்றும் வகைமைகளை அறிந்தவர்களுமான ஞானிகள், இந்த இருபத்துநான்கு {24} காரியங்களையும் {தத்துவங்களையும்} மொத்த சாங்கிய விசாரணையின் எல்லையைத் தழுவியவையாகக் கருதுகிறார்கள்.(30)
எது உண்டாக்கப்பட்டதோ, அது படைக்கப்பட்ட காரணத்திலேயே கலக்கிறது. பரமாத்மாவால் ஒன்றன்பின் ஒன்றாகப்படைக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், நேர்மாறான வரிசையில் அழிக்கப்படுகின்றன.(31) ஒவ்வொரு புதிய படைப்பின்போதும் குணங்கள் (மேற்சொன்ன வகையில்) மையம் விலகி வெளிநோக்கி இருப்புக்கு வருகின்றன. கடலில் பிறக்கும் அலைகள் அந்தக் கடலில் மறைவதைப் போலவே (அவை ஒவ்வொன்றும் அழிவடையும்போது அதன் மூலத்திற்குள்) நேர்மாறான வரிசையில் கலக்கின்றன.(32) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிரகிருதியின் படைப்பும் அழிவும் இவ்வாறே நடைபெறுகிறது. அண்டப் பேரழிவின் போது பரம்பொருள் மட்டுமே எஞ்சுகிறான்; மீண்டும் உயிர்கள் படைக்கப்படும்போது அவனே பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(33) ஓ! மன்னா, ஞானிகளும் இவ்வாறே இஃதை உறுதி செய்கிறார்கள். மேலோங்கும் புருஷனைப் பிரகிருதியே இவ்வாறு பன்மையை ஏற்கவும், மீண்டும் ஒருமைக்குத் திரும்பவும் வைக்கிறாள். பிரகிருதியே கூட இதே குறியீடுகளையே கொண்டிருக்கிறாள்.(34) விசாரணை தத்துவங்களின் இயல்பை முழுமையாக அறிந்தவன், பிரகிருதியும் அதே வகைப் பன்மையையும், ஒருமையையும் ஏற்கிறாள் என்று அறிவான். ஏனெனில், அழிவின் போது அவள் ஒருமைக்குத் திரும்புகிறாள், படைப்பின் போது மீண்டும் அவள் பன்மையை ஏற்கிறாள்.(35)
உற்பத்தி அல்லது வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கொண்ட பிரகிருதியை ஆன்மாவே பல்வேறு வடிவங்களை ஏற்கச் செய்கிறது. பிரகிருதி க்ஷேத்திரம் (அல்லது மண் {நிலம்}) என்றழைக்கப்படுகிறது. பெரியதான ஆன்மா, இருபத்துநான்கு காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்திருக்கிறது. அஃது அந்தப் பிரகிருதி அல்லது க்ஷேத்திரத்திற்குத் தலைமை தாங்குகிறது.(36) எனவே, ஓ பெரும் மன்னா, யதிகளில் முதன்மையானோர், ஆன்மாவே தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்று சொல்கின்றனர். உண்மையில், க்ஷேத்திரங்கள் அனைத்தையும் ஆன்மா தலைமை தாங்குவதன் விளைவாகவே அவன் {ஆத்மா} தலைமை தாங்குபவன் {அதிஷ்டாதா} என்றழைக்கப்படுகிறான்.(37) அவன் {ஆத்மா} புலப்படாத க்ஷேத்திரத்தை அறிந்திருக்கிறான். எனவே, அவன் க்ஷேத்திரஜ்ஞன் {க்ஷேத்திரத்தை அறிந்தவன்} என்றும் அழைக்கப்படுகிறான். புலப்படாத க்ஷேத்திரத்திற்குள் (உடலுக்குள்) ஆன்மா நுழைவதன் காரணமாக அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான்.(38) க்ஷேத்திரம் என்பது க்ஷேத்திரஜ்ஞனிலிருந்து வேறுபட்டதாகும். க்ஷேத்திரம் புலப்படாததாகும். இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவே அறிபவன் {ஞாதா} என்று அழைக்கப்படுகிறான்.(39) அறிவும், அறியப்படும் பொருளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். மேலும் அறிவானது, புலப்படாததெனச் சொல்லப்படுகிறது, அதே வேளையில் அறியப்படும் பொருளானது இருபத்து நான்கு கோட்பாடுகளைக் கடந்த ஆன்மாவாகும்.(40)
புலப்படாதது க்ஷத்திரம் என்றும் சத்வம் (புத்தி) என்றும், ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன்) என்றும் அழைக்கப்படுகிறது; அதே வேளையில் இருபத்தைந்தாவது {25} கோட்பாடான புருஷன் தனக்கு மேம்பட்ட எதையும் கொண்டிராததால் (அனைத்துக் கோட்பாடுகளைம் கடந்து வழக்கத்திற்காக மட்டுமே கோட்பாடாக அழைக்கப்படுவதால்) கோட்பாடாக இருப்பதில்லை.(41) ஓ! மன்னா சாங்கிய தத்துவம் இவ்வளவே. சாங்கியர்கள், அண்டத்தின் காரணத்தைப் பிரகிருதி என்றழைத்து, திரள் கோட்பாடுகள் அனைத்தையும் சித்-க்குள் கலந்து பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(42) பிரகிருதியோடு சேர்ந்து இருபத்து நான்கு காரியங்களையும் {கோட்பாடுகளையும்} சரியாகக் கற்கும் சாங்கியர்கள், அவற்றின் உண்மையான இயல்பை உறுதி செய்து கொண்டு, அந்த இருபத்துநான்கு கோட்பாடுகளையும் கடந்திருப்பதை {கடந்திருக்கும் அதை [ஆன்மாவைக்]} காண்கிறார்கள்.(43) பிரகிருதியைக் கடந்திருப்பதும், இருபத்துநான்கு காரியங்களுக்கும் அப்பாலிருப்பதுமான ஆன்மாவே உண்மையில் ஜீவனாகும். அவன் {ஜீவன்}, பிரகிருதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பரமாத்மாவை அறிவதில் வெல்லும்போது, பரமாத்மாவாகவே அடையாளம் காணப்படுகிறான்.(44) சாங்கிய அமைப்பைக் குறித்து உண்மையில் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இந்தத் தத்துவத்தை அறிந்தவர்கள் அமைதியை அடைவதில் வெல்கிறார்கள்.(45)
அந்நிலையை அடைவதில் வென்றவர்கள், தங்கள் உடல்கள் அழிந்த பிறகு இவ்வுலகத்திற்கு ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லை; அதே வேளையில் அவர்கள், அழிவற்ற இயல்பை அடைந்ததன் விளைவால், இப்பிறவியில் இருந்து விடுபட்டவர்களாக, பலமடைந்ததாக, சமாதியின் இன்பநிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறார்கள்.(48) இந்த அண்டத்தை (ஒன்றாகச் சீராகக் காண்பதற்குப் பதிலாக) பலவாகக் காண்பவர்கள் தவறாகக் காண்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மனிதர்கள் பிரம்மத்தைக் காணாத குருடர்களாக இருக்கிறார்கள். ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, அத்தகைய மனிதர்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகத்திற்கு வந்து (பல்வேறு வகை உயிரினங்களின் மத்தியில்) உடல்களை ஏற்கின்றனர்.(48) மேலாகச் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிந்தவர்கள், இவ்வுடலைக் கடந்து, அதற்கு மேலும் எந்த உடற்கட்டுகளையும் ஏற்கும் கட்டாயதிற்கு உள்ளாகாத போதே அனைத்தையும் அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(49) அனைத்துப் பொருட்களும் (அல்லது மொத்த அண்டமும்) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} விளைவென்று சொல்லப்படுகிறது. இருபத்தைந்தாவதான ஆன்மா அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கிறது. ஆன்மாவை அறிந்தவர்களுக்கு இவ்வுலகத்திற்குத் திரும்ப வேண்டிய அச்சம் கிடையாது" என்றார் {வசிஷ்டர்}.(50)
சாந்திபர்வம் பகுதி – 307ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |