Vidya and avidya! | Shanti-Parva-Section-308 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 135)
பதிவின் சுருக்கம் : வித்தை மற்றும் அவித்தை குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {கராளனிடம்}, "நான் இவ்வளவு நேரம் சாங்கிய தத்துவம் குறித்து உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி வித்யை (அறிவு) எது, அவித்யை (அறியாமை) எது என்று ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொல்லப்போகிறேன், கேட்பாயாக.(1) படைப்பு மற்றும் அழிவு எனும் குணங்கள் நிறைந்த பிரகிருதி அவித்யை (அறியாமை) என்றழைக்கப்படுவதாகவும்; அதே வேளையில் படைப்பு மற்றும் அழிவு ஆகிய குணங்களில் இருந்து விடுபட்டவனும், இருபத்துநான்கு {24} காரியங்கள் அல்லது கோட்பாடுகளைக் கடந்தவனுமான புருஷன் வித்யை (அறிவு) என்றழைக்கப்படுவதாகவும் கல்விமான்கள் சொல்கின்றனர்.(2) சாங்கிய தத்துவத்தில் அடுத்தடுத்து விளக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் வித்யை எது என்று உனக்கு முதலில் சொல்கிறேன் கேட்பாயாக.(3) அறிவு மற்றும் செயற் புலன்களில் {ஞானகர்மேந்திரியங்களில்}, அறிவுப் புலன்களே {ஞானேந்திரியங்களே} வித்யையாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அறிவுப்புலன்கள் மற்றும் அவற்றின் பொருட்களுக்கிடையில் முன்னதே {ஞானேந்திரியங்களே} வித்யையைக் கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.(4) புலன் நுகர் பொருட்கள் மற்றும் மனத்திற்கிடையில் மனமே வித்யையாக இருக்கிறதென ஞானிகள் சொல்கின்றனர். மனம் மற்றும் நுண்பூதங்கள் {சூக்ஷ்ம பூதங்கள்} ஐந்துக்கிடையில், ஐந்து நுட்பமான பூதங்களே வித்யையாக அமைகின்றன.(5)
ஐந்து நுண்பூதங்கள் மற்றும் நனவுநிலைக்கிடையில் {அகங்காரத்திற்கு இடையில்}, நனவுநிலையே {அகங்காரமே} வித்யையாக அமைகிறது. நனவுநிலை மற்றும் மஹத்-க்கு இடையில், ஓ! மன்னா {கராளா}, மஹத்தே வித்தையாகும்.(6) மஹத் முதலிய அனைத்துக் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் மற்றும் பிரகிருதிக்கிடையில், புலப்படாததும், உயர்ந்ததுமான பிரகிருதியே வித்யை என்றழைக்கப்படுகிறது. பிரகிருதி மற்றும் விதி என்றைழக்கப்படும் உயர்ந்ததற்கிடையில், பின்னதே {விதியே} வித்யை என்றறியப்பட வேண்டும்.(7) பிரகிருதியைக் கடந்திருக்கும் (புருஷன் என்றழைக்கப்படும்) இருபத்தைந்தாவதானது வித்யை என்றறியப்பட வேண்டும். ஓ! மன்னா, ஞானங்கள் அனைத்திலும், எது ஞானத்தின் பொருளாக இருக்கிறதோ, அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது[1].(8) மேலும், ஞானம் புலப்படாதது என்றும், ஞானத்தின் பொருள், இருபத்துநான்கை {24 கோட்பாடுகளைக்} கடந்தது என்றும் சொல்லப்படுகிறது. மீண்டும் ஞானம் புலப்படாததென்றும், அறிபவன் {ஞேயன்} இருபத்துநான்கையும் கடக்கிறான் என்றும் சொல்லப்படுகிறது. நான் இப்போது வித்யை மற்றும் அவித்யை குறித்த செய்தியை உனக்குச் சொன்னேன்.(9) அழிவற்றவை மற்றும் அழியத்தக்கவை ஆகியவற்றைக் குறித்த அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் அழிவற்றவை என்றும், அவை இரண்டும் அழியத்தக்கவை என்றும் சொல்லப்பட்டுள்ளன.(10)
[1] எனவே, புலப்படாதது என்றழைக்கப்படுவதை அறிந்து கொள்வதன் மூலம் ஒருவன் அனைத்தையும் அறிந்தவன் என்ற நிலையை அடைய இயலும் என்று உரையாசியர் விளக்குவதாகக் கங்குலி இங்கே சொல்கிறார்.
இதன் காரணத்தை நான் புரிந்து கொண்டவாறு சரியாக உனக்குச் சொல்கிறேன். ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும், அல்லது அழிவும் அற்றவையாகும். (படைப்பின் காரியத்தில்) அவை இரண்டும் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.(11) அவை இரண்டும் காரியங்கள் அல்லது கோட்பாடுகள் என்றழைக்கப்படவேண்டும் என்று ஞானம் கொண்டவர்கள் சொல்கிறார்கள். படைப்பு மற்றும் அழிவு (எனத் தொடரும்) குணங்களின் விளைவால் புலப்படாதது (அல்லது பிரகிருதி) அழிவற்றது என்று அழைக்கப்படுகிறது.(12) கோட்பாடுகளை உண்டாக்கும் நோக்கத்திற்காகப் புலப்படாதது மீண்டும் மீண்டும் மாறுதலுக்கு உட்படுகிறது.(13) மஹத் முதலிய கோட்பாடுகள் புருஷனாலும் உண்டாக்கப்படுவதாலும், புருஷனும், புலப்படாததும் {பிரகிருதியும்} ஒன்றையொன்று சார்ந்திருப்பதன் விளைவாலும், இருபத்தைந்தாவது {தத்துவமான} புருஷன் க்ஷேத்திரம் (அக்ஷரம் அல்லது அழிவற்றவன்) என்றும் அழைக்கப்படுகிறான்[2].(14) யோகியானவன் விடுபட்டு, புலப்படாத ஆன்மாவில் (அல்லது பிரம்மத்தில்) கோட்பாடுகள் அனைத்தையும் கலக்கும்போது, இருபத்தைந்தாவதும் (ஜீவன் அல்லது புருஷனும்) அந்தக் கோட்பாடுகள் அனைத்துடன் அதற்குள் மறைகிறான்.(15)
[2] "புலப்படாதது, அல்லது பிரகிருதி மாறுதலின் மூலம், மஹத்தையும், பிற கோட்பாடுகளையும் உண்டாக்குகிறது. ஆனால் அத்தகைய படைப்புக்கு புருஷனும் அவசியம் தேவைப்படுகிறான். ஏனெனில் புருஷன் இல்லாமல் பிரகிருதியால் ஒன்றும் செய்ய முடியாது. புருஷனாலும் பிரகிருதி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. மஹத் மற்றும் எஞ்சியவற்றின் கோட்பாடுகள் புருஷன் மற்றும் பிரகிருதியாலேயே தோன்றுகின்றன. தவிரவும் இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், பிரகிருதியை க்ஷரம் என்றால் புருஷனையும் அவ்வாறு அழைக்கலாம் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கோட்பாடுகள் அதனதன் மூலங்களுக்குள் கலக்கும்போது, பிரகிருதி மட்டுமே எஞ்சுகிறது. ஓ மகனே, க்ஷேத்ரஜ்ஞனும் (ஜீவன் அல்லது ஆத்மாவும்) தன்னை உண்டாக்கிய காரணத்திற்குள் கலக்கும்போது,(16) (பிரம்மம் மட்டுமே எஞ்சியிருப்பதால்) பிரகிருதியானவள் கோட்பாடுகள் அனைத்துடன் சேர்ந்து க்ஷரமாகி (அல்லது அழிவடைந்து), கோட்பாடுகள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்ததன் விளைவால் குணங்களற்ற நிலையையும் அடைகிறாள்.(17) இவ்வாறே க்ஷேத்ரஜ்ஞன், க்ஷேத்திரத்தைக் குறித்த ஞானம் மறையும்போது, தன் இயல்பால் குணங்களற்றவனாகிறான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(18) அவன் க்ஷரமாகும்போது குணங்களை ஏற்கிறான். எனினும், அவன் தன் சொந்த இயல்பை அடையும்போது, தன்னுடைய குணங்களற்ற உண்மை நிலையைப் புரிந்து கொள்வதில் வெல்கிறான்.(19) பிரகிருதியைக் கைவிட்டு, அவளிடம் இருந்து தான் வேறுபட்டவன் என்று உணரத் தொடங்கும் புத்திமானான க்ஷேத்ரஜ்ஞன் அப்போது தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாகக் கருதப்படுகிறான்.(20) ஜீவன் பிரகிருதியுடன் ஒன்றாகக் கலந்திராத போது, அவன் பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுகிறான். எனினும், அவன் பிரகிருதியுடன் கலந்திருக்கும்போது, பிரம்மத்தில் இருந்து வேறுபட்டவனாகத் தெரிகிறான்.(21) உண்மையில், ஜீவன் பிரகிருதியிடமும், அவளது கோட்பாடுகளிடமும் எந்தப் பற்றும் காட்டாதபோது, அவன் பரமனைக் காண்பதில் வெல்கிறான், ஒருமுறை அவனை {பரமனைக்} கண்டதும் அந்த இன்பநிலையில் இருந்து வீழ்ந்துவிட அவன் விரும்புவதில்லை.(22)
உண்மையின் அறிவு தோன்றும்போது, ஜீவன் இவ்வகையில் அழுகிறான்: ஐயோ, வலையில் அகப்பட்ட மீனைப் போல, பிரகிருதியால் அமைந்த இந்த உடலில் அறியாமையால் வீழ்ந்ததன் மூலம் மடமையைச் செய்துவிட்டேன்.(23) ஐயோ, அறியாமையின் மூலம் மீனானது தன்னால் நீரில் மட்டுமே வாழ முடியும் என்று நினைத்து நீருக்கு நீர் மாறுவதைப் போலவே நான் உடலைவிட்டு உடல் மாறி வருகிறேன்.(24) உண்மையில், நீரைத் தவிர வேறு எதையும் தன் பூதமாக அறியாத மீனைப் போலவே, நானும் பிள்ளைகள் மற்றும் மனைவிகளைத் தவிர வேறு எதையும் என்னுடையதாக ஒருபோதும் அறியவில்லை.(25) (பரமாத்மாவைக் குறித்த) மறதியுடனும், அறியாமையின் மூலமும் மீண்டும் மீண்டும் உடல்விட்டு உடல் மாறிக் கொண்டிருக்கும் எனக்கு ஐயோ.(26) பரமாத்மா மட்டுமே என் நண்பனாவான். அவனுடன் நட்பு கொள்ளும் இயல்திறம் எனக்குண்டு. என் இயல்பு என்னவாக இருந்தாலும், நான் யாராக இருந்தாலும், நான் அவனைப் போல ஆகத் தகுந்தவனே, அவனைப் போன்ற நிலையை அடையவும் தகுந்தவனே.(27) நான் அவனுடனான ஒப்புமையைக் காண்கிறேன். உண்மையில், நான் அவனைப் போன்றவனே. அவன் களங்கமற்றவன். நானும் அதே இயல்பைக் கொண்டவன் என்பது தெளிவாகத் தெரிகிறது.(28)
அறியாமையாலும், திகைப்பினாலும் {மயக்கத்தினாலும்} நான் அசைவற்ற {உயிரற்ற ஜட} பிரகிருதியோடு தொடர்பையடைந்தேன். உண்மையில் பற்றில்லாதவனாக இருந்தாலும், பிரகிருதியுடனான பற்றுநிலையிலேயே நான் நீண்ட காலத்தைக் கடத்தியிருக்கிறேன்.(29) ஐயோ, இஃதை அறிய இயன்றவனாக இருந்தாலும், இவ்வளவு காலம் நான் அவளாலேயே {பிரகிருதியாலேயே} அடக்கப்பட்டேன். பிரகிருதியானவள் உயர்ந்த, நடுத்தரமான, இழிந்தவையான {வகைகளில்} பல்வேறு வடிவங்களை ஏற்கிறாள். ஓ!, நான் எவ்வாறு இந்த வடிவங்களில் வசித்தேன்?(30) நான் எவ்வாறு அவளோடு சேர்ந்து வாழ்ந்தேன்? என் அறியாமையின் விளைவால் மட்டுமே நான் அவளது {பிரகிருதியின்} துணை கொண்டேன். நான் இப்போது (சாங்கியத்திலோ, யோகத்திலோ} நிலைத்திருப்பேன்.(31) நான் இனியும் அவளது துணையைத் தக்கவைத்துக் கொள்ள மாட்டேன். அவளோடு சேர்ந்து {இவ்வளவையும்} கடந்து வந்த நான், இவ்வளவு காலம் அவளால் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில், உண்மையில் மாற்றமற்றவனான என்னால், மாறுதலுக்கு உட்படும் துணையை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்?(32) இதற்கு அவளைப் பொறுப்பாக்க முடியாது. பரமாத்மாவிடம் இருந்து திரும்பி, நானே அவளோடு பற்றுக் கொண்டேன் என்பதால் பொறுப்பு என்னுடையதே.(33) அந்தப் பற்றின் விளைவால் உண்மையில் வடிவமற்ற நான் பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டியிருந்தது. உண்மையில் இயல்பாக வடிவமற்றவனாக இருப்பினும், மமதையின் விளைவால் பல்வேறு வடிவங்களை ஏற்று அவமதிப்பையும், துயரையும் அடைந்தேன்.(34)
பிரகிருதியுடைய விளைவுகளின் தொடர்பில் ஏற்பட்ட என் மமதையால் நான் பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்படைந்தேன். ஐயோ, உண்மையில் மமதையற்றவனாக இருப்பினும், நான் பிறவி எடுத்த வகைகளில், ஞானமனைத்தும் தொலைந்த ஆன்மாவைக் கொண்டனாகத் தீய இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்ததன் விளைவால் {மமதையெனும்} பாதிப்பை அடைந்தேன். நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரமாக இருப்பவனிடமும் {சித்தத்திடமும்}, பல்வேறு துண்டுகளாய் தன்னைப் பிரித்துக் கொண்டு, அவற்றோடு என்னைச் சேர்க்க முனைபவளிடமும் {பிரகிருதியிடமும்} இனி எனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. இப்போதுதான் நான் இயல்பாகவே மமதையற்றவன் என்றும், அனைத்திலும் என்னை ஈடுபடுத்தும் பிரகிருதியின் வடிவங்களை உண்டாக்கும் நனவுநிலை {அகங்காரம்} அற்றவன் என்றும் புரிந்து கொண்டு விழிப்படைந்திருக்கிறேன்[3].(35-37) எப்போதும் நனவுநிலையின் {அகங்காரத்தின்} சாரத்தால் செய்யப்பட்ட இந்த மமதையைக் கைவிட்டு, இந்தப் பிரகிருதியையே கைவிட்டு மங்கலமானவனை {அழிவற்ற பரமாத்மாவை} நான் புகலிடமாகக் கொள்வேன்.(38) நான் அவனிடமே கலந்திருப்பேன்; அசைவற்ற {ஜட} பிரகிருதியோடு கலந்திருக்க மாட்டேன். நான் அவனோடு கலந்திருந்தால் அஃது எனக்கு நன்மையை உண்டாக்கும். இயல்பிலேயே நான் பிரகிருதியில் இருந்து வேறுபட்டவன்" {என்று ஜீவன் அழுகிறான்}.(39) இருபத்தைந்தாவதாக இருப்பவன் (ஜீவன்), இவ்வாறு பரத்தைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அழியத்தக்கவற்றைக் கைவிட்டு, மங்கலமான அனைத்தின் சாரமாக இருக்கும் அழிவற்றதோடு {பரமாத்மாவோடு} சேர்த்துத் தன்னை அடையாளம் காண்கிறான் {அந்த ஜீவாத்மாவானவன் பரமாத்மாவோடு ஒன்றுகலக்கிறான்}.(40) உண்மை இயல்பில் குணங்களற்றவனும், உண்மையில் புலப்படாதவனுமான ஜீவன், புலப்படுபவையுடன் கூடி குணங்களை ஏற்கிறான். ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, குணங்களற்றதும், புலப்படாததன் தோற்றுவாயுமான அதை {பரம்பொருளைக்} காண்பதில் அவன் வெல்லும்போது, அதனிலேயே அவன் தன்னை அடையாளம் காண்கிறான் {அதனுடன் நீக்கமறக் கலக்கிறான்}.(41)
[3] கும்பகோணம் பதிப்பில், "மமதையில்லாதவனான எனக்கு அறிவிழந்ததாயிருக்கிற சித்தத்தினாலே அந்த அந்தப் பிறவிகளில் மமதையையுண்டுபண்ணி என்ன காரியம் செய்யப்பட்டது? தன்னை அநேகமாகச் செய்து கொண்டு என்னை மறுபடியும் அவைகளில் சேர்ப்பிக்கிறதும், (என்னுடைய) ஆத்மாவை அகங்காரத்திலுட்படுத்தியதுமான இந்தப் பிரகிருதியினாலே இகத்தில் எனக்கு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. மமதையில்லாதவனும், அகங்காரமில்லாதவனுமான நான் இப்பொழுது விழித்துக் கொண்டேன்" என்றிருக்கிறது.
நான், என் அறிவுக்குத் தக்க வகையிலும், சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடியும் அழிவற்றது, அழியத்தக்கது ஆகியவற்றின் குறியீடுகளை இப்போது உனக்குச் சொன்னேன்.(42) நுட்பமானதும், களங்கமற்றதும், நிச்சயமானதுமான ஞானம் எவ்வாறு எழுகிறது என்பதை நான் கேள்விப்பட்டவாறே இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(43) சாங்கிய மற்றும் யோக அமைப்புகளுக்குரிய சாத்திரங்களின் படி அவற்றின் குறியீடுகளை நான் ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். உண்மையில், சாங்கிய ஆய்வுகளில் விளக்கப்பட்டிருக்கும் அறிவியலும், யோக சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றன.(44) ஓ! ஏகாதிபதி {கராளா}, சாங்கியர்கள் சொல்லும் ஞானமானது அனைவரையும் விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டதாகும். சாங்கிய சாத்திரங்களின் ஞானமானது, சீடர்களின் நன்மைக்காகவே மிகத்தெளிவாக மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது.(45) இந்தச் சாங்கிய அமைப்பு மிகப் பரந்து விரிந்தது என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். யோகிகள், அந்த அமைப்பிலும், வேதங்களிலும் பெரும் மதிப்பை வைத்திருக்கிறார்கள்.(46) சாங்கிய அமைப்பில், இருபத்து நான்கைக் கடந்த எந்தக் காரியத்தையோ கோட்பாட்டையோ ஏற்பதில்லை. உயர்ந்த காரியம் அல்லது உயர்ந்த கோட்பாடு எனச் சாங்கியர்கள் கருதுவது முறையாக (என்னால்) விளக்கப்பட்டிருக்கிறது.(47) யோக தத்துவத்தில், இருமையற்ற {இரண்டற்ற} அறிவின் சாரமான பிரம்மமானது, அறியாமை கொள்வதாலேயே ஜீவனாகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, யோக சாத்திரங்களில் பிரம்மம், ஜீவன் ஆகிய இரண்டும் பேசப்படுகின்றன {சாங்கியத்தில் பிரம்மம் பேசப்படுவதில்லை}" என்றார் {வசிஷ்டர்}.(48)
சாந்திபர்வம் பகுதி – 308ல் உள்ள சுலோகங்கள் : 48
ஆங்கிலத்தில் | In English |