Fit and unfit! | Shanti-Parva-Section-309 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 136)
பதிவின் சுருக்கம் : பிரம்மம், சாங்கியம், யோகம் குறித்த அறிவுரையைப் பெறத்தக்கவர், தகாதவர் ஆகியோரைக் குறித்து ஜனக மன்னன் கராளனுக்கு விளக்கிச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {மன்னன் கராளனிடம்}, "புத்தம் (பரமாத்மா) மற்றும் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களின் வகைமுறையான அபுத்தம் (ஜீவன்) ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்பாயாக. (மாயையின் ஆதிக்கத்தில்) பல வடிவங்களை ஏற்கும் பரமாத்மா, ஜீவனாகி அந்த வடிவங்கள் அனைத்தையும் உண்மையாகக் கருதுகிறான்[1].(1) அத்தகைய மாறுபாடுகளின் (அவற்றைத் தானாகவே கருதும்) விளைவால், (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) குணங்களைக் கொள்ளும் ஜீவனானவன், படைப்பவனும், தான் படைத்தவற்றைத் தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்பவனுமான பரமாத்மாவைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) ஓ! ஏகாதிபதி {கராளா}, இடைவிடாமல் விளையாட்டாக மாறுதலடையும் ஜீவன், புலப்படாததன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவல்லவனாக இருக்கும் காரணத்தால், புத்யமானன் (புரிந்து கொள்பவன்) என்றழைக்கப்படுகிறான்[2].(3) குணங்களுடன் வெளிப்படும் பிரம்மமானது உண்மையில் குணங்களற்றது என்பதைப் புலப்படாததால் அல்லது பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே பிரகிருதியானது புத்தியற்றதாகச் சொல்லப்படுகிறது[3].(4) எப்போதாவது பிரகிருதியால் இருபத்தைந்தாவதை (ஜீவனை) அறியமுடியுமென்றால், அப்போது அந்தப் பிரகிருதியானது (ஜீவனிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அறியப்படாமல்) அதனோடு கலந்திருக்கும் ஜீவனாகவே அடையாளம் காணப்படும் என்று ஸ்ருதிகளில் ஒரு தீர்மானம் இருக்கிறது. (எனினும், கலப்படமில்லாததும், தொடர்பற்றதும், இருபத்தைந்தாவதைக் கடந்திருப்பதுமான பரமாத்மாவைப் பிரகிருதியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது). இதன் விளைவால் புலப்படாதவனும், உண்மையான இயல்பின்படி மாற்றமில்லாதவனுமான ஜீவன், அல்லது புருஷனானவன், விழிப்பற்றவன் அல்லது அறியாமை கொண்டவன் என்று அழைக்கப்படுகிறான்.(5)
[1] "இங்கே புத்தம் என்பது போதம் அல்லது தூய அறிவாக இருக்கிறது. அபுத்தம் என்பது புத்தத்தின் எதிர்மறையாகும். பரமாத்மாவானது அறிவாகவும், ஜீவனானது அறியாமையாகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இனி, ஜடமான அவ்யக்தத்தையும், இந்தக் குணவிதியையும் கேள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விழிப்பு நிலை மற்றும் குணங்கள் அனைத்தையும் படைக்கும் புலப்படாதவன் ஆகியவற்றைக் குறித்துக் கேட்பாயாக" என்றிருக்கிறது.[2] "ஜீவன் பிரகிருதியுடன் கலப்பதாலோ, பற்றுகொள்வதாலோ உண்டாகும் விளைவால், ஜீவன் இப்பொருளை ஒரு பாத்திரமாக எடுத்துக் கொண்டு, அப்பொருளை ஒரு மலையாகவும், மற்றொன்று மூன்றாவதாகவும் எடுத்துக் கொள்கிறது. ஞானம் நேரும்போது, தன் உணர்வுகள் அனைத்தும் பிழையானவை, புறவுலகம் என்பது தன்மாறுதல் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்வதில் வெல்கிறான். இதை ஜீவன் புரிந்து கொள்ளவல்லவனாக இருப்பதால், அவன் புத்தியமானன் அல்லது புரிந்து கொள்பவன் என்று அழைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்தப் பிரகிருதி குணங்களைப் போஷிக்கிறது; படைக்கிறது; அழிக்கிறது. அரசனே, எப்பொழுதும் இவ்வுலகில் விளையாட்டிற்காகத் தன்னைப் பலவாகச் செய்து விகாரத்தையடைகின்றது. ஜீவனானவன் அவைகளையே பார்க்கிறான். இவ்விதம் வேறுபாட்டையடைவதான இஃதை அறிகிறதில்லை. வ்யக்தமில்லாமல் அறிவதினாலே தான் அறிகிறகவனாகவும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "{புலப்படாதவன்} விளையாட்டிற்காகத் தன்னைத்தானே பல பகுதிகளாகப் பிரித்து மீண்டும் அவற்றைத் திரட்டிக் கொள்கிறான். இந்தச் செயல்பாட்டைப் புரிந்து கொள்பவன், உண்மையில் புரிந்து கொள்வதில்லை. புலப்படாததைப் புரிந்து கொள்ள வல்லவனாக இருப்பதால் அவன் புத்யமானன் என்றழைக்கப்படுகிறான்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "அவ்யக்தம் {பிரகிருதி} ஒருபோதும் குணத்துடன் கூடின விகாரத்தையும் நிர்க்குணமான பரமாத்மாவையும் அறிகிறதேயில்லை. அதனாலேதான், இஃதை அறிவில்லாத ஜடமாகச் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது.
உண்மையில், இருபத்தைந்தாவதால் {ஜீவனால்} புலப்படாததை {அவ்யக்தத்தைப்} புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவன் புத்யமானன் என்றழைக்கப்படுகிறான். எனினும், களங்கமானதும், இருமையற்ற அறிவானதும், அளக்க முடியாததும், நித்தியமானதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அவனால் உடனே புரிந்து கொள்ள முடியாது. இருபத்தாறாவதால் {பிரம்மத்தால்} இருபத்தைந்து மற்றும் இருபத்து நான்காவதாக இருக்கும் ஜீவன் மற்றும் பிரகிருதி ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ள முடியும்.(6,7) ஓ! பேரொளி கொண்டவனே, புலப்படாததும், காணப்படுவது, காணப்படாதது ஆகிய அனைத்தின் உண்மை இயல்பையும் உட்பொதிந்திருப்பதும், அண்டத்தில் எச்சார்பும் அற்ற ஒன்றேயொன்றுமான பிரம்மத்தை அறிந்து கொள்வதில் ஞானம் கொண்ட மனிதர்கள் மட்டுமே வெல்கிறார்கள்.(8) ஜீவன் தன் உண்மை இயல்பில் இருந்து வேறுபட்டவனாகத் தன்னைத் தானே கருதிக் கொள்ளும்போது (அதாவது, தன்னைப் பருத்தவன், மெலிந்தவன், வெளுத்தவன், கருத்தவன், பிராமணன் அல்லது சூத்திரன் என்று கருதிக் கொள்ளும்போது), அவன் பரமாத்மாவையும், தன்னையும், தான் கலந்திருக்கும் பிரகிருதியையும் (அவள் தன்னில் இருந்து வேறுபட்டவள் என்பதையும்) அறிந்து கொள்ளத் தவறுகிறான்.(9) ஜீவன் பிரகிருதியைப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, அவன் தன் இயல்புக்கு மீண்டவனாகச் சொல்லப்படுகிறான். மேலும் அவன் (பிரம்மம் தொடர்பான) களங்கமற்றதும், தூய்மையானதும், உயர்ந்ததுமான புத்தியை அடைகிறான்.(10)
ஓ! மன்னர்களில் புலியே {கராளனே}, அந்தச் சிறந்த புத்தியை ஜீவன் அடையும்போது, இருபத்தாறாவதாக (அல்லது பிரம்மமாக) அழைக்கப்படும் (இருமையற்ற) தூய அறிவை அடைகிறான். பிறகு அவன் படைப்பு மற்றும் அழிவுக்குரிய குணங்கள் நிறைந்த புலப்படாதது அல்லது பிரகிருதியைக் கைவிடுகிறான்.(11) புத்தியற்றதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதுமான பிரகிருதியை அறிந்து கொள்வதில் ஜீவன் வெல்லும்போது, அவன் குணங்களற்றவனாகிறான். இவ்வாறு புலப்படாததை {பிரகிருதியை} (தன்னில் இருந்து வேறுபட்டதாக) புரிந்து கொள்வதன் விளைவால் அவன் பரமாத்மாவின் இயல்பை அடைவதில் வெல்கிறான்.(12) (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) குணங்களில் இருந்து அவன் விடுபட்டு, பரமாத்ம இயல்பில் கலக்கும்போது, ஜீவன் அந்தப் பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படுகிறான் {பரமாத்மாவாகவே காணப்படுகிறான்}. பரமாத்மா, சிதைவு மற்றும் அழிவைக் கடந்த தத்துவமற்ற தத்துவம் என்றழைக்கப்படுகிறான்.(13) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஆன்மாவானது, (உடலின்) புலப்படும் கோட்பாடுகளைத் தன் ஓய்விடமாகக் கொண்டிருந்தாலும், அந்தக் கோட்பாடுகளின் இயல்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. (ஜீவாத்மாவையும் சேர்த்து) மொத்தம் இருபத்தைந்து கோட்பாடுகள் (தத்துவங்கள்) உள்ளதாக ஞானிகள் சொல்கிறார்கள்.(14) உண்மையில், ஓ! மகனே, ஆன்மாவானது (மஹத் உள்ளிட்ட) கோட்பாடுகள் எதையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதில்லை. புத்தியுடன் கூடிய அது {ஆன்மா}, கோட்பாடுகளைக் கடந்து நிற்கிறது. அறியும் (அல்லது விழிப்படையும்) ஒருவனுடைய குறியீடாக இருக்கும் கோட்பாட்டையும் அது விரைவில் கைவிடுகிறது[4].(15)
[4] "’நான் பிரம்மம்" என்பதே அந்தக் குறியீடு. அத்தகைய அறிவும் விழிப்படைந்த இருப்பத்தாறாமவனால் {பிரம்மத்தால்} கைவிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜீவன், சிதைவும் அழிவும் அற்ற இருபத்தாறாவதாகத் தன்னைக் கருதும்போது, அவன் தன் சக்தியால் இருபத்தாறாவதோடான ஒப்புமையை அடைகிறான்.(16) தூய புத்தியான இருபத்தாறவதால் விழிப்படையச் செய்யப்பட்டாலும், ஜீவன் அறியாமையை அடைகிறான். ஸ்ருதிகள் மற்றும் சாங்கிய சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளபடி இந்தக் காரணத்தினாலேயே ஜீவன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான்.(17) சேதனம் (மற்றும் புத்தியற்ற பிரகிருதி ஆகியவற்றுடன்) கூடிய ஜீவன், தன் நனவு அனைத்தையும் இழக்கும்போது, அவன் பல்வேறு வடிவங்களை இழந்து மீண்டும் ஒருமையை அடைகிறான்.(18) ஓ! மிதிலையின் ஆட்சியாளா {கராளா}, இன்ப துன்பங்களுடன் கலந்தவனாகக் காணப்படுபவனும், தன் நனவில் இருந்து அரிதாகவே விடுபடுபவனுமான ஜீவன், புத்தியைக் கடந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒப்புமையை அடைவதில் வெல்லும்போது, அவன் அறம் மற்றும் மறத்தில் {தர்ம அதர்மங்களில்} இருந்து விடுபடுகிறான்.(19) உண்மையில் ஜீவன், பிறப்பற்றதும், பலமிக்கதும், பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டதுமான இருபத்தாறாவதை {பிரம்மத்தை} அடைந்து, அதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் வெல்லும்போது, தானே பலமிக்கவனாகி, புலப்படாதது, அல்லது பிரகிருதியை முற்றாகக் கைவிடுகிறான்.(20)
ஜீவனானவன், இருபத்தாறாவதைப் புரிந்து கொண்டதன் விளைவால், இருபத்து நான்கு கோட்பாடுகளும் அவனுக்கு உண்மையற்றவையாகவோ, மதிப்பற்றவையாகவோ ஆகிறது. ஓ! பாவமற்றவனே, புத்தியற்றது (அல்லது பிரகிருதி), ஜீவன், தூய அறிவு (பரமாத்மா) ஆகியவற்றை ஸ்ருதிகளில் குறிப்பிட்டுள்ளபடியும், உண்மைக்கு ஏற்புடைய வகையிலும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். பன்மையும், ஒருமையும் சாத்திரங்களின் வழிகாட்டலின்படி இவ்வாறே புரிந்துகொள்ளப்படுகின்றன.(21,22) கொசுவுக்கும், உடும்பரத்திற்கும் {அத்திக்கும்} இடையில் உள்ள, அல்லது மீனுக்கும் நீருக்கும் இடையிலான வேறுபாடுகள், ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றன[5].(23) இவ்விரண்டின் {ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின்} பன்மை மற்றும் ஒருமை இவ்வழியிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. புத்தியற்ற, அல்லது புலப்படாத பிரகிருதியில் இருந்து வேறுபட்ட ஒன்றைக் குறித்த இந்தப் புரிதலே, அல்லது தன்னறிவே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படுகிறது.(24) உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது}, புத்தியைக் கடந்திருக்கும் புலப்படாததை அல்லது பரமாத்மாவை அறிந்து விடுதலை {முக்தியை} அடைய வேண்டும்.(25)
[5] "இந்த உதாரணங்கள் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாட்டை விளக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. உடும்பரம் {அத்திமரத்தின்} கனி பழுத்து உடையும்போது, உள்ளே காணப்படும் வெற்றிடத்தில் முழுமையாக வளர்ந்த கொசுக்கள் காணப்படுகின்றன. அக்கனியில் கொசுக்கள் வாழ்ந்தாலும் அவை அக்கனியல்ல, மீன் நீரில் வாழ்ந்தாலும், நீரதன் இல்லமாகாது. ஜீவனும் அதே போலவே பரமாத்மாவில் வாழ்ந்தாலும், அது பரமாத்மா ஆகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அத்திப்பழமும் அதனுள்ளிருக்கும் கீடமும் போலவே இருபத்துநான்காவதற்கும் இருபத்தைந்தாவதற்கும் பேதம். மத்ஸ்யத்துக்கும் ஜலத்துக்கும் போலவே இவைகளுக்கும் பேதமானது அறியப்படுகிறது. இப்படிப்போலவே இவைகளுக்கு அனேகத்தன்மையும் ஏகத்தன்மையும் அறியத்தக்கன" என்றிருக்கிறது.
உண்மையில், இருபத்தைந்தாவதானது {ஜீவாத்மாவானது} இவ்வழியில் மட்டுமே விடுதலையை அடையவல்லதாக உள்ளதேயன்றி, வேறு எவ்வழிமுறைகளினாலும் அல்ல என்பது உறுதியானதாகும். தற்சமயம் தான் வசிக்கும் க்ஷேத்திரத்தில் இருந்து உண்மையில் வேறுபட்டவனாக இருப்பினும், அதனுடன் கலந்திருப்பதன் விளைவால் அவன் {ஜீவன் / க்ஷேத்திரஜ்ஞன் அந்த} க்ஷேத்திரத்தின் இயல்பையே அடைகிறான்.(26) தூய்மையானதுடன் சேர்ந்து அவன் தூய்மையடைகிறான். புத்தியுடன் சேர்ந்து அவன் புத்திமானாகிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, விடுதலையடைந்தவனுடன் {முக்தனுடன்} சேர்வதன் மூலம், அவன் விடுதலையடைகிறான்.(27) அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனுடன் சேர்வதன் மூலம் அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். விடுதலையை அடைய முனைபவனுடன் சேர்வதன் மூலம், அவனது தோழமையின் இயல்பால் ஈர்க்கப்பட்டு, தானும் விடுதலை அடைய முனைகிறான்.(28) தூய செயல்களைச் செய்பவனுடன் சேர்வதன் மூலம் அவன் தூய்மையான செயல்களைச் செய்பவனாகவும், சுடர்மிக்க ஒளியைக் கொண்டவனாகவும் தூயனாகிறான். களங்கமற்ற ஆன்மா கொண்டவனுடன் சேர்வதன் மூலம் அவனும் களங்கமற்ற ஆன்மா கொண்டவனாகிறான்.(29) சார்பற்ற ஒரே ஆன்மாவுடன் சேர்வதன் மூலம் அவன் ஒருவனாகவும், சார்பற்றவனாகவும் {சுதந்திரனாகவும்} ஆகிறான். தன்னான்மாவின் சார்பு கொண்ட ஒருவன், அதே இயல்பினனாகி சார்பற்ற {சுதந்திர} நிலையை அடைகிறான்.(30)
ஓ! ஏகாதிபதி {கராளா}, முற்றான உண்மையாக இருக்கும் அனைத்தையும் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன். நித்தியமான, களங்கமற்ற, தொடக்ககாலப் பிரம்மத்தைக் குறித்து நான் ஒருசார்பின்றி நேர்மையாக உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(31) ஓ! மன்னா, வேதங்களை அறியாதவனாக இருந்தாலும், பணிவானவனும், பிரம்ம அறிவை அடைவதில் விருப்பமும், ஆவலும் கொண்ட ஒரு மனிதனுக்கே ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த அறிவைப் புகட்டலாம்.(32) பொய்மையையே புத்தியாகக் கொண்டவனுக்கோ, வஞ்சகனுக்கோ, ஒழுக்கமற்றவனுக்கோ, மனோபலம் அற்றவனுக்கோ, கோணல் புத்தி கொண்டவனுக்கோ, ஞானிகளிடம் பொறாமை கொண்டவனுக்கோ, பிறருக்குத் துன்பம் அளிப்பவனுக்கோ இஃது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. இந்த ஞானத்தைப் பாதுகாப்பாக யாருக்கெல்லாம் புகட்டலாம் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(33) நம்பிக்கையுடன் கூடியவனுக்கோ, தகுதி {புண்ணியம்} உடையவனுக்கோ, பிறரைக் குறித்துத் தீயன பேசுவதை எப்போதும் தவிர்ப்பவனுக்கோ, தூய நோக்கங்களில் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவனுக்கோ, அறிவும், விவேகமும் கொண்டவனுக்கோ, வேள்விகள் மற்றும் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்பவனுக்கோ, மன்னிக்கும் மனோநிலை கொண்டவனுக்கோ, அனைத்து உயிரினுக்கும் நன்மை செய்பவனுக்கோ, கருணை கொண்டவனுக்கோ,(34) தனியொருவனாகத் தனிமையில் வசிக்க விரும்புபவனுக்கோ, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களை அனைத்தையும் செய்ய விரும்புபவனுக்கோ, சண்டை சச்சரவுகளை வெறுப்பவனுக்கோ, பெரும் கல்விமானுக்கோ, ஞானம் கொண்டவனுக்கோ, மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, ஆன்ம அமைதி ஆகியவற்றைக் கொண்டவனுக்கோ இது கொடுக்கப்படலாம்.(35)
இத்தகைய குணங்கள் இல்லாதவனுக்குப் பிரம்மத்தைக் குறித்த இந்த உயர்ந்த அறிவு உபதேசிக்கப்படக்கூடாது. இதைத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த கொள்ளிடம் கொண்டவரெனக் கருதப்பட முடியாத எவருக்கும் இந்த அறிவைப் புகட்டுவன் மூலம் எந்தப் பயனோ, நற்கனியோ எழுவதில்லை எனச் சொல்லப்படுகிறது.(36) எந்த நோன்புகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாத ஒருவன், அனைத்து வகைச் செல்வங்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மொத்த பூமியையும் {இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதற்காக} பரிமாறிக் கொள்ள முன்வந்தாலும், அவனுக்கு இந்த உயர்ந்த அறிவானது ஒருபோதும் புகட்டப்படக்கூடாது. எனினும், ஓ! மன்னா, புலன்களை வென்ற ஒருவனுக்கு இது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.(37) ஓ கராளா, நீ இன்று என்னிடமிருந்து உயர்ந்த பிரம்மத்தைக் குறித்த அனைத்தையும் கேட்டிருப்பதால் இனியும் நீ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தொடக்கமும், நடுநிலையும் (முடிவும்) இல்லாததும், அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கவல்லதும், உயர்ந்ததும், புனிதமானதுமான பிரம்மத்தைக் குறித்து நான் உனக்கு முறையாகச் சொல்லிவிட்டேன்.(38) ஓ!மன்னா, மங்கலம் நிறைந்ததும், அனைத்து அச்சங்களையும் போக்கவல்லதும், உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதும், பிறப்பு இறப்பை அகற்றவல்லதுமான பிரம்மத்தைக் கண்டும், அறிவனைத்தின் சாரத்தை அடைந்தும் பிழை மற்றும் திகைப்பனைத்தையும் {மோஹத்தை} இன்றே கைவிடுவாயாக.(39) ஓ! மன்னா, மிக மேன்மையான ஆன்மா கொண்ட பெரும்பூதமும், நித்தியமானவனுமான ஹிரண்யகர்ப்பனைக் கவனமாக நிறைவு செய்ததால், அவனிடம் இருந்தே இந்த அறிவை நான் அடைந்தேன். ஓ! ஏகாதிபதி, இன்று உன்னால் கேட்கப்பட்டதும், என் ஆசானிடம் இருந்து நான் பெற்றதைப் போலவே அந்தப் பிரம்ம அறிவை உனக்குப் புகட்டியிருக்கிறேன். உண்மையில், விடுதலையை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக உள்ள இந்த உயர்ந்த அறிவை, நான் பிரம்மனிடம் இருந்து பெற்றதைப் போன்றே சரியாக உனக்குப் புகட்டியிருக்கிறேன்" என்றார் {வசிஷ்டர்}".(40,41)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "எதை அடைவதன் மூலம் இருபத்தைந்தாவது (அல்லது ஜீவன்) ஒருபோதும் திரும்ப வேண்டியதில்லையோ அந்த உயர்ந்த பிரம்மத்தைக் குறித்து (ஜனக குலத்தைச் சேர்ந்த மன்னன் கராளனிடம்) பெருமுனிவர் (வசிஷ்டர்) சொன்னதற்கு ஏற்புடைய வகையிலேயே நானும் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(42) சிதைவிற்கும், மரணத்திற்கும் உட்படாத பரமாத்மாவை உண்மையில் அறியாததன் விளைவால், ஜீவன் மீண்டும் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பும் கடப்பாடு உண்டாகிறது. எனினும், அந்த உயர்ந்த அறிவை அடைவதில் ஜீவன் வெல்லும்போது, அவன் மீண்டும் திரும்ப வேண்டியதில்லை.(43) ஓ! மன்னா, ஓ! மகனே, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம் இருந்து} நான் கேட்டதும், உயர்ந்த நன்மையை உண்டாக்க வல்லதுமான உயர்ந்த அறிவை நான் உனக்குப் புகட்டியிருக்கிறேன்.(44) இந்த அறிவானது உயர் ஆன்மா கொண்ட முனிவர் வசிஷ்டரால் ஹிரண்யகர்ப்பனிடம் இருந்து பெறப்பட்டதாகும். முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரிடம் இருந்து அது நாரதரால் பெறப்பட்டது.(45) நித்தியமான பிரம்மத்துடன் உண்மையில் அடையாளங்காணப்படும் அந்த அறிவை நாரதரிடம் இருந்தே நான் அடைந்தேன். ஓ! குருக்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறந்த வார்த்தைகள் நிறைந்ததுமான இந்த உரையைக் கேட்ட நீ, இதற்கு மேலும் துன்ப வசப்படக்கூடாது.(46)
க்ஷரம் மற்றும் அக்ஷரம் ஆகியவற்றை அறிந்த மனிதன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உண்மையில், ஓ! மன்னா, இந்த ஞானத்தை அடையாதவனே அச்சத்தை வளர்ப்பான்.(47) மூட ஆன்மா கொண்ட மனிதன், (பிரம்மத்தைக் குறித்த) அறியாமையின் விளைவால், இந்த உலகத்திற்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறான். உண்மையில், இந்த வாழ்வில் இருந்து அகன்றதும் {இறந்ததும்}, மரணத்தையே கதியாகக் கொண்ட ஆயிரமாயிரம் பிறவி வகைகளில் அவன் பிறக்க வேண்டியிருக்கும்.(48) தேவர்களின் உலகிலும், மனிதர்களின் உலகிலும், இடைநிலை வகை {உயிரினங்களின்} உலகிலும் அவன் மீண்டும் மீண்டும் தோன்றவேண்டியிருக்கும். காலப்போக்கில் அவன் தான் மூழ்கிய அறியாமை எனும் பெருங்கடலைக் கடப்பதில் வென்று, மொத்தமாக மறுபிறவியைத் தவிர்ப்பதிலும் வென்று, பரமாத்மாவுடன் அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான்.(49) அறியாமையெனும் பெருங்கடல் பயங்கரமானதாகும். அடியற்ற அது புலப்படாதது என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, நாளுக்கு நாள் உயிரினங்கள் அந்தப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்குவது காணப்படுகிறது.(50) ஓ! மன்னா, நித்திமானதும், அளவற்றதுமான அறியாமையெனும் பெருங்கடலில் இருந்து நீ விடுபட்டதால், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் இருந்தும் விடுபடுவாய்" என்றார் {பீஷ்மர்}.(51)
சாந்திபர்வம் பகுதி – 309ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |