Yajnavalkya! | Shanti-Parva-Section-311 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 138)
பதிவின் சுருக்கம் : பிரகிருதி மற்றும் படைப்புமுறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கடமையில் இருந்து விடுபட்டதும், அதற்கு மாறானதும் {தர்ம அதர்மங்களில் இருந்து விடுபட்டதும்}, அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டதும், பிறப்பு, இறப்பு, அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகியவற்றைக் கடந்திருப்பதும், மங்கலமானதும், நித்திய அஞ்சாமையும், நித்தியமானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததும், எப்போதும் தூய்மையானதும், கடும் உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டதும் எதுவோ, அதைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1,2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் யாஜ்ஞவல்கியர் மற்றும் ஜனகன் {ஜனககுல மன்னன் தேவராதன்} ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில், கேள்விகள் அனைத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்தவனும், புகழ்பெற்றவனுமான ஜனக குல மன்னன் தேவராதன், முனிவர்களில் முதன்மையான யாஜ்ஞவல்கியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.(4)
ஜனகன் {தேவராதன், யாஜ்ஞவல்கியரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, புலன்கள் எத்தனை வகைப்படும்? பிரகிருதி எத்தனை வகைப்படும்? புலப்படாதது {அவ்யக்தம்} எது? உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} எது? பிரம்மத்தைவிட உயர்ந்தது எது?(5) பிறப்பும், இறப்பும் எது? கால அளவுகள் என்னென்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது அருளைப் பெற்று உம்மிடம் நான் வேண்டும் இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(6) நானோ அறியாதவன், நீரோ ஞானப் பெருங்கடல். எனவே, உண்மையில் கேட்க விரும்பியே இக் காரியங்கள் குறித்து உம்மைக் கேட்கிறேன்" என்றான்.(7)
யாஜ்ஞவல்கியர் {தேவராதனிடம்}, "ஓ! ஏகாதிபதி, உன் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறேன் கேட்பாயாக. யோகிகள் மதிப்பதும், சாங்கியர்களிடம் உள்ளதுமான உயர்ந்த ஞானத்தை நான் உனக்குச் சொல்கிறேன்.(8) நீ அறியாதது ஏதுமில்லை. இருந்தும் என்னைக் கேட்கிறாய். எனினும், கேள்வி கேட்கப்படுபவன் பதிலளிக்க வேண்டும். இதுவே நித்திய நடைமுறையாம்.(9) பிரகிருதி என்ற பெயரில் எட்டுக் {8} கோட்பாடுகள் அழைக்கப்படுகின்றன, அதே வேளையில் மாறுபாடுகள் என்று பதினாறு {16 விகாரங்கள்}அழைக்கப்படுகின்றன. புலப்படாதவை {அவ்யக்தம்} ஏழாகும் {7}. இவையே அத்யாத்ம அறிவியலை அறிந்தோரின் கருத்துகளாக இருக்கின்றன.(10) புலப்படாதது (அல்லது மூலப் பிரகிருதி {அவ்யக்தம்}), மஹத், நனவுநிலை {அகங்காரம்}, பூமி, காற்று, வெளி, நீர், ஒளி(11) ஆகிய நுட்பமான ஐந்து பூதங்கள் உள்ளிட்ட இந்த எட்டும் பிரகிருதி என்ற பெயரில் அறியப்படுகின்றன. மாறுபாடுகள் {விகாரங்கள்} என்றழைக்கப்படுபவற்றின் பட்டியலை இப்போது கேட்பாயாக. காது, தோல், கண், நாக்கு, மூக்கு;(12) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம், வாக்கு, இரு கரங்கள், இரு கால்கள், குதம் மற்றும் இன்பஉறுப்புகள் {மற்றும் மனம்} ஆகியவையே அவை[1].(13)
[1] "மனம் உள்ளிட்ட இவையே விக்ருதி அல்லது பிரகிருதியின் மாறுபாடுகள் என்றழைக்கப்படும் பட்டியலில் பதினாறு உள்ளடக்கங்களாக அமைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவற்றில் ஒலி முதலிய பத்தும், ஐம்பெரும் கோட்பாடுகளில்[2] பிறப்பவையும் விசேஷங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஓ! மிதிலையின் ஆட்சியாளா, அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும் சவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன.(14) அத்யாத்ம அறிவியலை அறிந்த மனிதர்கள் மனத்தைப் பதினாறாவதாகக் கருதுகிறார்கள். இஃது உன் கருத்துகளுக்கும், கோட்பாடுகள் குறித்த உண்மைகள் அறிந்த பிற கல்விமான்களுக்கும் இணக்கமானதே ஆகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து மஹத்-ஆன்மா {ஹிரண்ய கர்ப்பனின் நான்கில் ஒரு பங்கு} உண்டாகிறது. பிரதானம் (அல்லது பிரகிருதி) தொடர்பான முதல் படைப்பு இஃது எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(16) ஓ! மனிதர்களின் மன்னா, மஹத்திலிருந்து நனவுநிலை {அஹங்காரம்} உண்டாகிறது. புத்தியைத் தன் சாரமாகக் கொண்ட இஃது இரண்டாம் படைப்பு என்றழைக்கப்படுகிறது[3].(17) நனவுநிலையில் {அஹங்காரத்தில்} இருந்து ஒலியைத் தன் சாரமாகக் கொண்ட மனமும், வெளியின் {ஆகாயத்தின்} குணங்களைக் கொண்ட பிறவும், எஞ்சியவையும எழுந்தன. இது நனவுநிலை தொடர்பானது மூன்றாம் படைப்பு என்று சொல்லப்படுகிறது.(18) ஓ! மன்னா, மனத்தில் இருந்து (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்கள் உண்டாகின. மனோநிலை {மானஸம்} என்று நான் சொல்வது போல அழைக்கப்படும் இதை, நான்காம் படைப்பாக அறிவாயாக.(19) (அடிப்படை) பெரும் பூதங்களின் தொடர்புடைய ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகியவை ஐந்தாம் படைப்பு எனப் பூதங்களை அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(20)
[2] "இவை நுண்கோட்பாடுகள் அல்லது தன்மாத்திரைகளாகும், திரள் பூதங்கள் அல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "மஹத் சில வேளைகளில் புத்தி என்றுமழைக்கப்படுகிறது. எனவே, மஹத்திலிருந்து உண்டான நனவுநிலையும் புத்தி தொடர்புடைய படைப்பாகவே இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காது, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியவற்றின் {அறிவுப்புலன்களின் / ஞானேந்திரியங்களின்} படைப்பு ஆறாவதாகவும், எண்ணப் பன்மையின் சாரத்தைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.(21) பிறகு, ஓ! ஏகாதிபதி, காது முதலியவற்றுக்கு அடுத்து வரும் புலன்கள் (செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} எழுகின்றன. ஏழாம் படைப்பு என்றழைக்கப்படும் இவை {இந்தச் செயற்புலன்கள் / இந்தக் கர்மேந்திரியங்கள்} அறிவுப்புலன்களுடன் {ஞானேந்திரியங்களுடன்} தொடர்பு கொள்கின்றன.(22) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகே மேல் நோக்கிய மூச்சுக் காற்றும் (பிராணனும்) குறுக்காக ஏழும் (சமானன், உதானன், வியானன் உள்ளிட்ட) மூச்சுக்காற்றுகளும் உண்டாகின்றன. எட்டாம் படைப்பான இஃது ஆர்ஜவம் என்றழைக்கப்படுகிறது[4].(23) அடுத்து உடலின் கீழ்ப்பகுதிகளில் குறுக்காகச் செல்லும் (சமானன், உதானன் மற்றும் வியானனும்) மூச்சுக்காற்றுகளும், கீழ்நோக்கிச் செல்லும் அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றும் வருகிறது. ஓ! மன்னா, ஒன்பதாம் படைப்பான இதுவும் ஆர்ஜவம் என்றே அழைக்கப்படுகிறது.(24) ஓ! ஏகாதிபதி, இந்த ஒன்பது வகைப் படைப்புகளும், இந்த இருபத்துநான்கு கோட்பாடுகளும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அறிவிக்கப்படுகின்றன.(25) ஓ! மன்னா, இதன் பிறகு, இந்தக் கோட்பாடுகள் அல்லது குணங்களைப் பொறுத்தவரையில் கல்விமான்களால் குறிப்பிடப்படும் கால அளவை உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(26)
[4] "ஆர்ஜவன் என்பது "நேரான பாதைகள் அல்லது போக்குகள்" என்ற பொருளைக் கொண்டதாகும். காற்று அல்லது மூச்சுக்காற்றின் நேரான போக்கை இது குறிக்கிறது. இந்த மூச்சுக்காற்றுகளைக் குறிப்பிடுவதால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றைத் தவிர உடல் அமைப்பில் உள்ள பிற உறுப்புகளின் படைப்பும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 311ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |