Twenty Bhutas! | Shanti-Parva-Section-312 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 139)
பதிவின் சுருக்கம் : அவ்யக்த முதலியவற்றின் காலக்கணக்கையும், படைப்பையும் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்..
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, புலப்படாததை (அல்லது பரம புருஷனைப்) பொறுத்தவரையிலான காலக்கணக்கை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக. பத்தாயிரம் {10000} கல்பங்கள் அவனுடைய ஒரு பகல் என்று சொல்லப்படுகிறது.(1) அவனது இரவின் காலமும் அதே அளவு {10000 கல்பங்கள்} கொண்டதாகும். ஓ! ஏகாதிபதி, அந்த இரவு முடிந்ததும் அவன் முதலில் உடல் கொண்ட உயிரினங்கள் வாழ்வதற்கான செடி கொடிகளைப் படைக்கிறான்.(2) பிறகு அவன் தங்க முட்டையில் இருந்து எழும் பிரம்மனைப் படைக்கிறான். அந்தப் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் வடிவமாவான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு முழு வருடம் அந்த முட்டைக்குள் இருந்தவனும், பெரும் தவசியும், பிரஜாபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றும் அழைக்கப்படுபவனுமான பிரம்மன் அதைவிட்டு {அந்த முட்டையை விட்டு} வெளியே வந்து, மொத்த பூமியையும், மேலுள்ள சொர்க்கத்தையும் படைத்தான்.(4)
பிறகு அந்தத் தலைவன் {பிரம்மன்}, வானத்தை இடையில் வைத்து சொர்க்கத்தையும், பூமியையும் பிரித்தான்.(5) பிரம்மனின் ஒரு பகல் ஏழாயிரத்து ஐநூறு {7500} கல்பங்களாகும்.(6) அத்யாத்ம அறிவியல் அறிந்த மனிதர்கள், அவனது இரவும் அதே அளவைக் கொண்டது என்று சொல்கிறார்கள். மஹான் என்றழைக்கப்படும் அந்தப் பிரம்மன், பிறகு பூதம் என்றழைக்கப்படுவதும், சிறந்த சாரத்தைக் கொண்டதுமான நனவுநிலையை {அகங்காரத்தைப்} படைக்கிறான்[1].(7) பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் உட்பொருள்களில் இருந்து எந்த உடலையும் படைப்பதற்கு முன்னால், தவங்களுடன் கூடிய மஹான் அல்லது பிரம்மன், அவனது மகன்கள் என்றழைக்கப்படும் நால்வரை படைத்தான்[2].(8)
[1] "இங்கே சொல்லப்படும் ரிஷி என்பது மஹான் அல்லது பெரிய என்ற பொருளைத் தரும். நனவுநிலை சிறந்த சாரத்தைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மேலும் எண்ணிக்கையில் ஐந்தான பெரும்பூதங்களை உண்டாக்கும் வல்லமை கொண்டிருக்கும் காரணத்தால் அது பூதம் என்றும் அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இவை, மனம், புத்தி, நனவுநிலை மற்றும் சமஷ்டிக்குப் பதிலாக வியஷ்டி என்று கருத்தப்படும் சித்தம் ஆகியனவாகும் என உரையாசிரியர் விளக்குகிறார். இவற்றில் இருந்தே மஹாபூதங்கள் பிறந்தன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! ஏகாதிபதி, நான்கு உள் இயக்கங்களோடு கூடிய (அறிவுப்) புலன்கள் {ஞானேந்திரியங்கள்} பித்ருக்களில் (பித்ருக்கள் என்றழைக்கப்படும் பெரும்பூதங்களில்) இருந்து உண்டாகின. அசைவன மற்றும் அசையாதவற்றைக் கொண்ட இந்த மொத்த அண்டமும் அந்தப் பெரும்பூதங்களாலேயே நிறைந்திருக்கிறது[3].(9) பலமிக்க நனவுநிலையே {அகங்காரமே} ஐம்பூதங்களையும் படைத்தது. அவை பூமி, காற்று, வெளி {ஆகாயம்}, நீர் மற்றும் ஒளியென்று எண்ணிக்கையில் ஐந்தாக இருக்கிறது.(10) மூன்றாம் படைப்பான (பெரும் பூதமான) இந்த நனவுநிலை {அகங்காரம்}, தன் இரவுக்கு ஐயாயிரம் {5000} கல்பங்களையும், பகலுக்கு அதே கால அளவையும் கொண்டிருக்கிறது.(11) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை, மணம் ஆகிய இந்த ஐந்தும் விசேஷங்கள் {தன்மாத்திரைகள்} என்றழைக்கப்படுகின்றன. அவை ஐம்பெரும் பூதங்களுக்குள் பொதிந்திருக்கின்றன.(12)
[3] "தேவா என்பது புலன்கள் மற்றும் நான்கு உள் இயக்கங்கள் என உரையாசரியரால் விளக்கப்படுகிறது. தேவாய என்பது பூதங்களைக் குறிப்பதாக அவர் கருதுகிறார். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் அது, "தேவர்கள் பித்ருக்களின் பிள்ளைகள்; அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் தேவர்களால் மறைக்கப்படுகின்றன" என்ற பொருளைத் தரும். ஆனால் உரையாசிரியரின் வழிகாட்டலைப் புறக்கணிப்பதும் பாதுகாப்பாகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா, இந்த ஐந்தாலும் உடனே படர்ந்தூடுருவப்படும் {நீக்கமற நிறைக்கப்படும்} பூதங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று தோழமையை விரும்பி, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன;(13) ஒன்றையொன்று சவாலுக்கழைத்து, ஒன்றையொன்று கடந்திருக்கின்றன; மாற்ற முடியாத மயக்கக் கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் உயிரினங்கள் ஒன்றையொன்று கொன்று, எண்ணற்ற இடைநிலை வகை உயிரினங்களில் புகுந்து இவ்வுலகில் திரிகின்றன.(14) அவற்றின் ஒருபகல் மூவாயிரம் {3000} கல்பங்களாகும். அவற்றின் இரவும் அதே அளவைக் கொண்டதாகும்.(15) ஓ! மன்னா {தேவராதா}, மனமானது {மூளையானது} புலன்களால் வழிகாட்டப்பட்டு அனைத்துப் பொருட்களிலும் திரிகிறது. புலன்கள் எதையும் உணர்வதில்லை. மனமே அவற்றின் மூலம் எதையும் உணர்கிறது.(16)
கண்ணானது, மனத்தின் {மூளையின்} துணையால் வடிவங்களைப் பார்க்கிறதேயன்றி தன்னாலல்ல. மனத்தின் கவனம் திரும்புகையில், கண்ணின் முன்பு ஒரு பொருள் இருந்தாலும் அதைக் காணத் தவறுகிறது.(17) புலன்கள் உணர்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. புலன்களின் மூலம் மனமே உணர்வதால் இதில் உண்மையில்லை.(18) மனத்தின் செயல்பாடு நிறுத்தப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து புலன்களின் செயல்பாடும் நின்று போகிறது. மனச்செயல்பாட்டின் நிறுத்தமே புலன்களின் செயல்பாட்டை நிறுத்தும். எனவே ஒருவன் புலன்கள் மனத்தின் ஆளுகையில் இருப்பதாகக் கருத வேண்டும்.(19) உண்மையில் மனமே, புலன்கள் அனைத்தின் தலைவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பெரும்புகழ் கொண்டவனே, அண்டத்தில் இருக்கும் இருபது பூதங்கள் இவையே" என்றார் {யாஜ்ஞவல்கியர்}[4].(20)
[4] கும்பகோணம் பதிப்பில், "மனம் ஒழிவடைந்தபொழுது இந்திரியங்களுக்கு ஒழிவு ஏற்படும். இந்திரியங்கள் ஒழிவடைந்தபொழுது மனத்திற்கு ஒழிவு ஏற்படாது. இவ்விதம் இந்திரியங்கள் மனத்தைப் பிரதானமாகவுடையவைகளென்று கருத வேண்டும். எல்லா இந்திரியங்களுக்கும் மனம் தலைமையாகச் சொல்லப்படுகிறது. மிக்கப் புகழுள்ளவனே, இவ்வுலகத்தில் எல்லாப் பூதங்களும் இந்த மனத்தில் பிரவேசிக்கின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருபது என்ற எண்ணிக்கை சுட்டிக்காட்டப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 312ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |