Universal Destruction! | Shanti-Parva-Section-313 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 140)
பதிவின் சுருக்கம் : அண்டம் அழிக்கப்படும் முறை குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "நான் ஒன்றன்பின் ஒன்றாகப் படைப்பின் முறையை, அவற்றின் மொத்த எண்ணிக்கை, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அவை ஒவ்வொன்றின் காலக்கணக்கீட்டுடன் உனக்குச் சொல்லிவிட்டேன். அவற்றின் அழிவைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) நித்தியமானவனும், சிதைவற்றவனும், தொடக்கமும், முடிவும் இல்லாதவனுமாக இருப்பவன், மீண்டும் மீண்டும் பொருட்கள் அனைத்தையும் எவ்வாறு படைத்து அழிக்கிறான் என்பதைக் கேட்பாயாக.(2) அவனது பகல் முடிந்து, இரவு வந்ததும் அவன் உறங்க விரும்புகிறான். அத்தகைய வேளையில் புலப்படாதவனான {அவ்யக்தனான} அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}, (உலகை அழிப்பதற்கான) தன் பெரும் சக்திகளை அறிந்தவனான {அஹங்காரபிமானியான} மஹாருத்திரன் என்று அழைக்கப்படுபவனைத் தூண்டுகிறான்.(3)
புலப்படாதவனால் தூண்டப்பட்ட அவன் {மஹாருத்திரன்}, நூறாயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனின் வடிவை ஏற்று, சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பனிரெண்டு பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்கிறான்.(4) ஓ! ஏகாதிபதி, பிறகு அவன் பாலூட்டிகள், முட்டையிட்டு குஞ்சுபொறிப்பவை, {வியர்வை உள்ளிட்ட} கழிவில் பிறப்பவை, தாவரங்கள் எனப் படைக்கப்பட்ட நால்வகை உயிரினங்களையும் எந்தத் தாமதமும் செய்யாமல், தன் சக்தியின் மூலம் எரிக்கிறான்.(5) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வாறு அழிக்கப்படுவதால், பூமியானது ஆமை ஓட்டைப் போல வெறுமையாகிறது.(6)
பூமியின் முகப்பில் உள்ள அனைத்தையும் எரித்தபிறகு, அளவிலா வலிமை கொண்ட ருத்திரன், விரைவாக அந்த வெற்று பூமியை பெரும் சக்தி கொண்ட நீரால் நிரப்புகிறான்.(7) பிறகு அவன் (பூமி மூழ்கியிருக்கும் அந்த) நீரை வற்றச் செய்வதற்காக யுக நெருப்பைப் படைக்கிறான். நீர் மறைந்ததும், நெருப்பெனும் பெரும்பூதம் சுடர்மிக்கதாய் சீற்றத்துடன் தொடர்ந்து எரிகிறது.(8) பிறகு, ஆழ்ந்த சக்தியைக் கொண்டதும், ஏழு தழல்களைக் கொண்டதும், அனைத்து உயிரினங்களிலும் வெப்பமாக இருப்பதுமான அந்தச் சுடர்மிக்க நெருப்பை, அளவிலா சக்தியும், வலிமையும் கொண்ட காற்று {வாயு} விரைவாக விழுங்குகிறது. அந்நெருப்பை விழுங்கிய காற்றானது, மேல்நோக்கி, கீழ்நோக்கி, குறுக்குவெட்டாக என அனைத்துத் திசைகளிலும் திரிகிறது.(9,10)
பிறகு ஆழ்சக்தி கொண்ட அக்காற்றை, அளவிலா இருப்பைக் கொண்ட வெளியானது விழுங்குகிறது. மனமானது, அந்த அளவற்ற வெளியையும் உற்சாகமாக விழுங்குகிறது.(11) பிறகு அனைத்தின் ஆன்மாவாக இருப்பதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான நனவுநிலை {அகங்காரம்}, அந்த மனத்தை விழுங்குகிறது. பிறகு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த மஹத் ஆன்மாவானது அந்த நனவுநிலையை {அகங்காரத்தை} விழுங்குகிறது.(12)
ஒப்பற்ற மஹத் ஆன்மா அல்லது அண்டமானது, அனைத்துப் பொருட்களின் தலைவனும், அனிமா, லகிமா, பிராப்தி முதலிய யோக குணங்களைக் கொண்டவனும், இயல்பாகவே உள்ளீர்ப்பவனும், மாற்றமில்லாத தூய ஒளியைக் கொண்டவனும், பரமனாகக் கருதப்படுபவனுமான சம்புவால் {சிவனால்} விழுங்கப்படுகிறது.(13)
ஒப்பற்ற மஹத் ஆன்மா அல்லது அண்டமானது, அனைத்துப் பொருட்களின் தலைவனும், அனிமா, லகிமா, பிராப்தி முதலிய யோக குணங்களைக் கொண்டவனும், இயல்பாகவே உள்ளீர்ப்பவனும், மாற்றமில்லாத தூய ஒளியைக் கொண்டவனும், பரமனாகக் கருதப்படுபவனுமான சம்புவால் {சிவனால்} விழுங்கப்படுகிறது.(13)
அவனது கைகளும், கால்களும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிகின்றன; அவன் கண்களும், தலையும், முகமும் எங்குமிருக்கின்றன; அவனது காதுகள் ஒவ்வொரு இடத்தையும் அடைகின்றன, அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(14) அனைத்து உயிரினங்களின் இதயம் அவனே; அவன் கட்டைவிரல் அளவுள்ள அணுவாக இருக்கிறான். அனைத்தின் தலைவனும், எல்லையற்றவனும், பரமாத்மாவுமான அவன் இவ்வாறே அண்டத்தை விழுங்குகிறான்.(15) இதன்பிறகு, சிதைவற்றவனும், எவ்வகைக் களங்கமும் அற்றவனும், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உண்டாக்குபவனும், முற்றிலும் களங்கமற்றவனுமான அந்த மாற்றமற்றவன் {சிவன்} மட்டுமே எஞ்சியிருக்கிறான்.(16)
ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அழிவை {பிரளயத்தைக்} குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டேன். இனி அத்யாத்மா, அதிபூதம், அதிதெய்வம் ஆகியவற்றைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 313ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |