Attributes and end! | Shanti-Parva-Section-315 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 142)
பதிவின் சுருக்கம் : குணங்களும், வினைகளும் அடையும் கதிகளைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனகமன்னன் தேவராதனிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) இந்த மூன்றும் பிரகிருதியின் குணங்களாகும். இவை அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுடனும் தொடர்புடையவையாகவும், அவற்றை எப்போதும் உள்ளீர்ப்பவையாகவும் இருக்கின்றன.(1) யோக குணங்கள் ஆறைக் கொண்ட புலப்படாத {அவ்யக்தமான} புருஷன் (இந்த முக்குணங்களைத் தழுவுவதன் மூலம்) நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான வடிவங்களாகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறான்.(2) அத்யாத்ம அறிவியலை அறிந்தவர்கள் சத்வ குணம் அண்டத்தில் உயர்ந்த இடத்திற்கும், ரஜஸ் நடுநிலைக்கும், தமஸ் இழிந்த இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.(3) கலப்பில்லாத அறத்தின் துணையின் மூலம் ஒருவன் (தேவர்களுக்குரிய) உயர்ந்த கதியை அடைகிறான். பாவத்துடன் கலந்த அறத்தின் மூலம் ஒருவன் மனித நிலையை அடைகிறான். அதே வேளையில் கலப்பில்லாத பாவத்தின் மூலம் (விலங்காகவோ, தாவரம் முதலியவையாகியோ) ஒருவன் இழிந்த கதியை அடைகிறான்.(4)
ஓ! மன்னா {தேவராதனா}, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கலவைகளைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக.(5) சிலவேளைகளில் ரஜஸானது சத்வத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. தமஸ் ரஜஸுடன் இருக்கிறது. தமஸுடன் சத்வமும் காணப்படுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் சம அளவில் கலந்திருப்பதும் காணப்படுகிறது. அவை புலப்படாதவளாக, அல்லது பிரகிருதியாக அமைகின்றன.(6) புலப்படாதவன் (அவ்யக்தமான புருஷன்) சத்வத்துடன் சேரும்போது அவன் தேவர்களின் உலகங்களை அடைகிறான். சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்போது, அவன் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பெடுக்கிறான்.(7) ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, அவன் இடைநிலை உயிரினங்களில் பிறப்பெடுக்கிறான். மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என அனைத்தையும் கொண்டிருப்பவன், மனிதன் என்ற நிலையை அடைவான்.(8)
அறம் {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டையும் கடந்த உயர் ஆன்ம மனிதர்கள், நித்தியமானதும், மாற்றமில்லாததும், சிதைவற்றதும், அழிவற்றதுமான இடத்தை {கதியாக} அடைகிறார்கள்.(9) ஞானிகள், மிக மேன்மையான பிறவிகளை அடைந்து, களங்கமற்றதும், சிதைவற்றதும், புலன்களின் அறிவுக்கு எட்டியதைக் கடந்ததும், அறியாமையில் இருந்து விடுபட்டதும், பிறப்பு இறப்புக்கு மேலானதும், அனைத்து வகை இருளையும் விலக்கும் முழு ஒளி உள்ளதுமான இடத்தை {கதியாக} அடைகின்றனர்.(10) புலப்படாதவளில் {பிரகிருதியில்} வசிக்கும் பரமனின் (புருஷனின்) இயல்பைக் குறித்து நீ என்னிடம் கேட்டாய். நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, கேட்பாயாக. பிரகிருதியில் வசிக்கும்போது, பிரகிருதியின் இயல்பை ஏற்காமல் தன்னியல்பிலேயே அவன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.(11) ஓ! மன்னா, பிரகிருதியானவள் அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருக்கிறாள். புருஷனால் தலைமை தாங்கப்படும்போது மட்டுமே, அவளால் படைக்கவும், அழிக்கவும் முடியும்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(12)
ஜனகன் {தேவராதன்}, "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இருவரும் தொடக்கமும், முடிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வடிவமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டும் சிதைவற்றவர்களாக இருக்கிறார்கள்.(13) அவர்கள் இருவரும் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அவர்களில் ஒருவர் அசைவற்றவள் {உயிரற்றவள்}, புத்தியற்றவள் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் மற்றொருவர் அசைவுள்ளவன் {உயிருள்ளவன்}, புத்தியுள்ளவன் என்று எவ்வாறு சொல்லப்படுகிறார்? மேலும் பின்னவன் ஏன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான்?(14) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, விடுதலையறம் {மோக்ஷதர்மம்} குறித்து முற்றும் அறிந்தவர் நீர். அந்த விடுதலை அறத்தை உம்மிடமிருந்து நான் முற்றாக அறிய விரும்புகிறேன்.(15)
புருஷனின் இருப்பு, அவனது ஒருமை, பிரகிருதியில் இருந்து தனிப்பட்டிருக்கும் அவனது தன்மை, உடலுடன் தொடர்புடைய தேவர்கள்,(16) உடல்படைத்த உயிரினங்கள் இறந்ததும் செல்லும் இடம், காலப்போக்கில் அவை இறுதியாகச் சென்றடையக்கூடிய இடம் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக.(17) சாங்கிய அமைப்பிலும், யோக அமைப்பிலும் விளக்கப்படும் ஞானத்தைத் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, மரணம் குறித்த முன்னெச்சரிக்கை குறியீடுகளைக் குறித்தும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியங்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல நீர் நன்குஅறிந்திருக்கிறீர்" என்று கேட்டான் {ஜனக குல மன்னன் தேவராதன்}.(18)
சாந்திபர்வம் பகுதி – 315ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |