The philosophy of the Sankyas! | Shanti-Parva-Section-316 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 143)
பதிவின் சுருக்கம் : சாங்கிய அமைப்பைக் குறித்து ஜனக குல மன்னன் தேவராதனுக்கு விளக்கிச் சொன்ன யாஜ்ஞவல்கியர்...
யாஜ்ஞவல்கியர் {ஜனக மன்னன் தேவராதனிடம்}, "ஓ! மகனே, குணங்கள் அற்ற ஒன்றை, அதன் குணங்களைச் சுட்டி ஒருபோதும் விளக்கமுடியாது. எனினும், எது குணங்களைக் கொண்டதென்றும், எது அவை அற்றதென்றும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) செம்மலரைப் பிரதிபலிக்கும் படிகத்தைப் போலவே, புருஷனானவன் குணங்களை ஏற்கும்போது, அவன் குணங்களைக் கொண்டவனாக அழைக்கப்படுகிறான்; ஆனாலும் பிரதிபலிப்பில் இருந்து விடுபட்ட படிகத்தைப் போல அவன் குணங்களில் இருந்து விடுபடும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்த தன் உண்மையான இயல்பில் அவன் காணப்படுகிறான் என்று தத்துவங்கள், அல்லது கோட்பாடுகள் அனைத்தின் உண்மையை அறிந்த உயர் ஆன்ம முனிவர்கள் சொல்கிறார்கள்[1].(2) புலப்படாத பிரகிருதியானவள், தன் இயல்பிலேயே குணங்களைக் கொண்டவளாக இருக்கிறாள். அவளால் அவற்றைக் கடக்க முடியாது. இயல்பிலேயே புத்தியற்றவளான அவள், குணங்களுடன் பிணைக்கப்பட்டவளாகவே இருக்கிறாள்.(3) புலப்படாத பிரகிருதியால் எதையும் அறிந்து கொள்ள முடியாத அதே வேளையில், புருஷனோ, "என்னைவிட உயர்ந்தது ஏதுமில்லை" என்று எப்போதும் தன் நினைவில் கொண்டிருக்கும் ஞானத்தைத் தன் இயல்பாகவே கொண்டிருக்கிறான்.(4)
[1] "இந்த ஸ்லோகத்தின் பொருளை விளக்குவதற்காக நான் இஃதை விரிவாக்கியிருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்புப் பொருளற்றதாகப் படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தத்தவத்தையுணர்ந்தவர்களும், மகாத்மாக்களுமான முனிவர்கள், ‘குணங்களையுடையவன் குணவானாகவே இருக்கின்றான். அப்படியே நிர்க்குணனும் குணமற்றவனாகவே இருக்கின்றான்’ என்று இவ்விதம் சொல்லுகின்றார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் தொடக்கத்திலேயே "இந்த அத்தியாயத்தில் உள்ள சில ஸ்லோகங்கள் புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாக இருப்பதால் சற்று விரிவாக்கப்பட்டிருக்கிறது" என்று ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. மேலும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில், "உண்மையைக் கண்ட பேரான்மாக்களான தவசிகள், குணங்களைக் கொண்டதன் குணங்களைக் குறித்தும், குணங்களற்றதால் அடையப்படாத குணங்கள் குறித்தும் சொல்லியுள்ளனர்" என்றிருக்கிறது.
இந்தக் காரணத்தால், புலப்படாதவளாக இருப்பவள் (அல்லது பிரகிருதி), இயல்பிலேயே அசைவற்றவளாகவும் {உயிரற்றவளாகவும்}, புத்தியற்றவளாகவும் இருந்தாலும், நித்தியமானவனும், அழிவற்றவனுமான புருஷனுடன் சேரும் விளைவால், தன் இயல்பில் அழியத்தக்கவளாகவே இருந்தாலும், அசைவுள்ளவளாகவும் {உயிருள்ளவளாகவும்}, புத்தியுள்ளவளாகவும் ஆகிறாள்[2].(5) {இந்த} அறியாமையின் மூலம் புருஷன் மீண்டும் மீண்டும் குணங்களுடன் தொடர்பு கொண்டு, தன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளத் தவறி, விடுதலையை {முக்தியை} அடைவதிலும் தவறுகிறான்.(6) புருஷன், பிரகிருதியில் இருந்து தோன்றும் கோட்பாடுகளுக்குத் தலைமை தாங்குவதன் விளைவால், அவன் அந்தக் கோட்பாடுகளின் இயல்பைக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. படைப்புக் காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் படைக்கும் குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான்.(7) யோக காரியத்தில் அவனது இயக்கத்தின் விளைவால் அவன் யோக குணத்தைக் கொண்டவனாகவும் சொல்லப்படுகிறான். பிரகிருதிய என்றறியப்படும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கு {தத்துவங்களுக்குத்} தலைமை தாங்குவதால் அவன் பிரகிருதியின் இயல்பைக் கொண்டவன் எனவும் சொல்லப்படுகிறான்.(8)
[2] "இது மிகக் கடினமான ஸ்லோகமாகும். நான் இதைச் சரியாகப் புரிந்திருக்கிறேனா என்ற உறுதிப்பாடு எனக்கில்லை. உண்மையில் புத்தியற்றதும், அனுபவிக்கவோ, தாங்கிக்கொள்ளவோ இயலாததுமான பிருகிருதி, புத்தியுடன் கூடிய புருஷனுடன் கலப்பதன் விளைவால் புத்தி அடைந்து, அனுபவிக்கவோ, தாங்கிக்கொள்ளவோ இயன்றதாக மாறுகிறது என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது. இவ்வாறே உடலுக்கு ஆன்மா தலைமை தாங்கும்போது மட்டுமே, இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ உரிய உணர்வுகள் உணரப்படும்போது உடலால் அதை உணர முடிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(பிரகிருதியுடன் கூடினவன் அறிவதில்லை) என்கிற இந்தக் காரணத்தினால் பிரகிருதி ஜடமாகும். (பிரகிருதியைச் சேர்ந்த புருஷன்) நித்தியனும், நாசமில்லாதவனுமாயிருப்பதாலும், (பிரகிருதி) நாசமுடையதாயிருப்பதாலும் அது ஜடத்தன்மைக்கு வேறாகிறதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்தக் காரணத்தினாலேயே புலப்படாதவன் {பிராகிருதப்புருஷன்} நினைவற்றவனாக இருக்கிறான். அவன் எப்போதும் அழிவற்றவன் என்றே சொல்லப்படுகிறான். இருப்பினும் அவன் அழியத்தக்கதுடன் {பிரகிருதியுடன்} கலப்பதும் உண்மையே" என்றிருக்கிறது.
(அசைவற்ற பொருட்கள் அனைத்தின்) வித்துகளைப் படைக்கும் காரியத்தில் உள்ள அவனது இயக்கத்தின் விளைவால், அவன் அந்த வித்துகளின் இயல்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். பல்வேறு கோட்பாடுகள் அல்லது குணங்களை வாழ்வில் உண்டாக்கும் காரணத்தால் (அந்தக் கோட்பாடுகளே அழியத்தக்கன என்பதால்} அவன் சிதைவுக்கும், அழிவுக்கும் ஆட்படுவதாகச் சொல்லப்படுகிறான்.(9) மேலும், அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதன் விளைவாலும், தன்னைத் தவிர வேறு எதுவும் இல்லாததன் விளைவாலும், பிரகிருதியுடன் தன்னை அடையாளம் காணும் தன் நினைவின் விளைவாலும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், அத்யாத்மாவை அறிந்தவர்களும், அனைத்து வகை நோயில் இருந்தும் விடுபட்டவர்களுமான யதிகள், தன்னைத் தவிர இரண்டாமவன் இல்லாதவனும், மாற்றமில்லாதவனும், (காரணத்தின் வடிவில்) புலப்படாதவனும், நிலையற்றவனும், (விளைவுகளின் வடிவில்) புலப்படுபவனுமாக அவனை {புருஷனைக்} கருதுகிறார்கள்.(10) இதையே நாம் கேள்விப்படுகிறோம். எனினும் ஞானத்தை மட்டுமே (தங்கள் விடுதலைக்கு {முக்திக்கு}) சார்ந்திருப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களுமான சாங்கியர்கள், பிரகிருதி ஒன்றே, புருஷர்கள் பலர் என்று சொல்கிறார்கள்[3].(11) உண்மையில், நிலையற்றதாக இருந்தாலும், நிலையாகத் தோன்றும் பிரகிருதியில் இருந்து புருஷன் வேறுபட்டவனாக இருக்கிறான். நாணற்குச்சியானது, வெளிப்புற உறையில் {தர்ப்பையில்} இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே புருஷனும் பிரகிருதியில் இருந்து வேறுபட்டிருக்கிறான்.(12)
[3] "இஃது ஆத்திகர்களாக இருக்கும் சாங்கியர்களின் கருத்தைக் குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸித்தி பெற்றவர்களும், ஆத்மஜ்ஞானிகளும் மனக்கவலை நீங்கினவர்களுமான யதிகள் குணங்களுக்கு உற்பத்திஸ்தானமும் லயஸ்தானமுமாயிருப்பதாலும் உதாஸீனனாயிருப்பதாலும் இரண்டற்றவனாயிருப்பதாலும் குணங்களில் அபிமான மாத்திர ஸம்பந்தமுடையவனாயிருப்பதாலும் ஆத்மாவை நிர்க்குணனாக நினைக்கிறார்கள். இந்தப் பிரகிருதியை (ஞானமில்லாதவரையில்) நித்தியமாயும் (ஞானத்தால்) நசிப்பதாயும் (காரணரூபத்தால்) அவ்யக்தமாயும் (கார்யரூபத்தால்) வியக்தமாயும் இருப்பதாகக் கேட்டிருக்கிறோம். எல்லாப் பிராணிகளினிடத்திலும் தயையுடைவர்களும், ஞானத்தையே அடைந்தவர்களுமான புருஷர்கள் (இவ்விதம் அபிமானத்தால்) அவ்யக்தத்துடன் ஐக்யத்தையும் (ஸ்வபாவமாக) பேதத்தையும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது.
உண்மையில், அத்திக்குள் பதுங்கியிருக்கும் புழுவானது, அத்தியில் இருந்து வேறுபட்டதாகவே அறியப்பட வேண்டும். அந்தப் புழுவானது அத்திக்குள் இருந்தாலும், அஃது ஒரு போதும் அந்த அத்தியின் ஒருபகுதியாகக் கருதப்படுவதில்லை.(13) மீனானது, தான் வாழும் நீரில் இருந்து வேறுபட்டது, அதே போல நீரும், தன்னில் வாழும் மீனில் இருந்து வேறுபட்டதாகும். மீனும், நீரும் ஒன்றாகவே இருந்தாலும் அஃது ஒருபோதும் நீரால் நனைக்கப்படுவதில்லை.(14) மண்கடாயில் {உகையில்} உள்ள நெருப்பானது அந்தக் கடாயில் இருந்து வேறுபட்டது, அந்தக் கடாயும் தான் கொண்டிருக்கும் நெருப்பிலிருந்து வேறுபட்டதாகும். நெருப்பு அந்தக் கடாயில் இருந்தாலும், அஃது ஒருபோதும் அதன் பகுதியாகக் கருதப்பட முடியாது.(15) நீரில் மிதக்கும் தாமரை இலையானது, தான் மிதக்கும் நீரில் இருந்து வேறுபட்டதாகும். நீருடன் அஃது உடனுறைந்திருந்தாலும், அஃது ஒருபோதும் நீரின் ஒருபகுதியாகாது.(16)
இவ்வாறு குறிப்பிடப்படுபவை அந்தந்தப் பொருட்களில் நிலையாக உடனிருப்பது, சாதாரண மக்களால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை[4].(17) பிரகிருதியையும், புருஷனையும் வேறு எவ்வொளியிலும் காண்போர், பார்வைப்பிழை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயங்கர நரகில் நிச்சயம் மூழ்குகிறார்கள்.(18) அனைத்துப் பொருட்களையும் சரியாக உறுதி செய்யும் சிறந்த அறிவியலான சாங்கியர்களின் தத்துவத்தையே நான் உனக்குச் சொன்னேன். சாங்கியர்கள், புருஷன் மற்றும் பிரகிருதியின் இயல்பை இவ்வழியில் உறுதி செய்து கொண்டே விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(19) அண்டத்தின் பெருங்கோட்பாடுகளை அறிந்த பிற அமைப்புகளைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இனி நான் யோகிகளின் அறிவியலைக் குறித்து உனக்குச் சொல்கிறேன்" என்றார் {யாஜ்ஞவல்கியர்}.(20)
[4] கும்பகோணம் பதிப்பில், "பிராகிருதஜனங்கள் நித்யமாயிருக்கிற இந்தக் குணங்களுடைய ஸஹவாஸத்தையும் அவைகளினிருப்பிடத்தையும் எந்நாளும் உண்மையாகப் பார்க்கிறதில்லை" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 316ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |